Tuesday, May 22, 2018

POONDI SAMIYAR



சித்தர்கள்:  J. K. SIVAN 


                       
பூண்டி சாமியார். 5


 " சுவாமி தங்களைப்பற்றிய  அதிக விவரங்கள் கிடைத்தால் அதை எல்லாம் தொகுத்து எழுத விருப்பம். தாங்கள் அருகிலே  காஞ்சி, கடலாடி போன்ற கிராமங்களில் எல்லாம் சென்று தங்கியதாக சொல்கிறார்களே. அங்கெல்லாம் சென்று மேலும் சில விபரங்களை அறிகிறேன். 

"போய்  விசாரி. அங்கே  காஞ்சி சங்கராச்சார்யர்  மடம்  கூட இருக்கு.''

காஞ்சி கிராமம் வேறு. காஞ்சிபுரம் வேறு.  சாமியார்  காஞ்சிபுரம் சங்கரமடத்தை சொல்கிறாரோ? காஞ்சி கிராமம் 10  மைல் .காஞ்சிபுரம்  60 மைலுக்கு மேலே  தூரத்தில் இருக்கிறது.

"சுவாமி,  நீங்கள்  அந்த  பெரிய  காஞ்சிபுரத்தை  சொல்கிறீர்களா?''

'' இல்லே,  இந்த சின்னது  காஞ்சி கிராமம் பற்றி தான் சொல்றேன்.  அங்கே செங்கல் சுண்ணாம்பு கட்டிடம் ஒண்ணு. மேஸ்திரி கட்டினது இருக்குது. "

"சுவாமி  அங்கே  கோவில் ஏதாவது இருக்கா?''

" ஒ. ஆமாம்.  ஆமாம்.  நீயே  போய்  பார். மூணு லிங்கம்.  நாராயணசாமி செட்டியாரை கேளு. எல்லாத்தையும் சொல்வார்''

"சுவாமி, யார் அந்த நாராயணசாமி செட்டியார்?''"

"கோயில் தர்ம கர்த்தா''
கடலாடி ரொம்ப சின்ன கிராமம். காஞ்சியும்  அது போலவே ஒரு குக் கிராமம்.  அங்கே எதுவும்  மடம் இருப்பதாக தெரியவில்லை.  சாமியார்  எதைபற்றி  சொன்னார்?  பரணீதரன் சுற்றி அலைந்து ஒரு  பெரிய  பழைய வீட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்த ஒரு பெரியவரை அணுகி கேட்டார்:   அந்த பெரியவர்  மேல் துண்டால் உடம்பை விசிறிக்கொண்டிருந்தார். அன்றைய பொழுது  அவருக்கு அப்படி போய்விடும்போல் இருந்தது !  சுற்று முற்றும் வீடுகளை காணோம். சில சிறிய குடிசைகள். வெட்ட வெளி. மாடுகள் நிழலில் அமர்ந்திருக்க  வண்டிகள் சாய்த்து மாடுகள் இன்றி  மரங்களின் நிழலில் நிறுத்தப்பட்டிருந்தன. ஒரு பெரிய வைக்கோல் போர் அதன் அருகே. 

''பெரியவரே,  இங்கே  சங்கராச்சார்யர் மடம் எங்கே இருக்கிறது ?''.

"இங்கே  மடம் கிடம் எதுவுமே இல்லையே.  சங்கர நிலையம் என்று ஒன்று தான் இருக்கிறது.  அரைகுறையாக படுத்துக்கொண்டிருந்தவர் திண்ணையில் எழுந்து உட்கார்ந்தார்.

"அது எங்கே இருக்கிறது?''

" இது தான் அது. நான் தான் அதை பார்த்துக்கிறவன்.  

''இதுவா?  அப்புறம்''

ஒருசமயம் காஞ்சி சங்கராச்சாரியர் இங்கே வந்த போது  ''இங்கே ஒரு இடம் கிடைத்தால்  அதை குழந்தைகளுக்கு  வேதம் எல்லாம் சொல்லிக்கொடுக்கிற பாடசாலையாக செய்யுங்கள்'' அப்படின்னு சொன்னாராம்.  ஊர்க்காரங்க ஒத்துழைச்சு இந்த கட்டிடம் வாங்கி போட்டது. 

'' உள்ளே வாங்க. வந்து பாருங்க'' 

''ஆச்சர்யமாக இருக்கே. இங்கேயே வந்து உங்களையே அது பத்தி கேட்டிருக்கேன்'' 

உள்ளே  பெரிய கூடம்.  அதில் சங்கராச்சார்யர் படம் சுவற்றில் மாற்றியிருந்தது. நமஸ்கரித்தார் பரணீதரன்.   யாரும் பாடசாலையில் இல்லை.  மாணவர்களோ உபாத்தியாயர்களோ  கிடையாது.  இதை தான் பூண்டி சாமியார் சொல்லியிருக்கிறார்.  ''செங்கல் சுண்ணாம்பு கட்டிடம் மேஸ்திரி கட்டினது''  இது தானோ?.

அந்த சின்ன ஊரில் ஒரு சிவன் கோயில்.  கர கண்டேஸ்வரர். அந்த பக்க கிராமங்களில்  ஆறு கர கண்டேஸ்வரர் சிவன் கோவில்கள் இருக்கிறதாம். எல்லாமே செய்யாற்றங் கரையிலே.  கடலாடி,  மாம்பாக்கம், மதிமங்கலம், ஏலத்தூர் ,பூண்டி, குருவிமலை.  இந்த ஏழு கோவில்களையும் சேர்த்து மொத்தமாக  சப்த கரைக்கண்டம் என்பார்கள் என்று தெரிகிறது. ஒரு முறை  சென்று பார்க்கவேண்டும். 

இங்கே  சிவனை  சுப்பிரமணியர் வழிபட்டதாக வரலாறு.

பரணீதரன் சென்று விசாரித்த காலத்தில்  நாராயணசாமி செட்டியார் என்ற தர்மகர்த்தா காலமாகி பல வருஷங்கள் ஆகியிருந்தது.  அந்த பெரியவர்  அப்போது தர்மகர்த்தாவாக இருந்த   வெங்கட்ராம செட்டியாரை போய் பார்க்க சொன்னார்.  ஊரில் அவரை எல்லோரும்  ''குள்ளப்பா'' என்று தான் அழைப்பார்கள்.

குள்ளப்பாவை சென்று  பார்த்தபோது ஆசாமி  ஒடிந்து விழுவது போல் இருந்தார்.  வார்த்தைகளை விட இருமல் தொடர்ச்சியாக வந்தது.  அப்படி பேசினாலும்   சங்கராச்சார்யர் பற்றி ஒன்றும் விஷயம் தெரியவில்லை.  ஏதோ சில பழைய  கிராம வாசிகள்  பெயர் மட்டும் சொன்னார். .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...