Sunday, May 13, 2018

PUNNAINALLUR









புன்னை நல்லூர் மாரியம்மன்- J.K. SIVAN

நான் அடிக்கடி மனதளவில் காசு செலவில்லாமல் தஞ்சாவூர் போயிருக்கிறேன். வண்டியில் காரில் போக முடிந்தது எப்போதாவது தான். ஒரு சிவராத்திரியை ஒட்டி நண்பர் ஸ்ரீனிவாசன் தம்பதிகளோடு ஒரு சில இடங்கள் க்ஷேத்ராடனம் செய்தபோது அதிருஷ்டவசமாக தரிசித்தது புன்னை நல்லூர் முத்து மாரி அம்மன் ஆலயம்.

1680 வாக்கில் மராட்டிய ராஜா வெங்கோஜி சமயபுரம் மாரியம்மன் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய சென்றார். ப்ரம்மானந்தமாக தரிசனம் செய்து அன்றிரவு அங்கே தாங்கினார். ராத்திரி கனவில் சமயபுரம் காளி தோன்றினாள்.

''அடே வெங்கோஜி, நீ இருக்கும் தஞ்சாவூருக்கு வெளியே மூன்று மைல் தூரத்தில் ஒரு காட்டில் நான் இருக்கிறேனே. என்னை அங்கே பார்க்காமல் இவ்வளவு தூரம் வந்தாயே. முதலில் அங்கே வந்து என்னைப் பார்'' என்ற அம்மன் குரல் கேட்டு ராஜா வெங்கோஜி தன் ஊருக்கு ஓடினான். அவள் சொன்ன இடத்தில் ஒரே புன்னை மரக் காடு. வெட்டி வீழ்த்தினான் . வெள்ளெறும்பு புற்று உருவில் காளியை கண்டு பிடித்தான். இப்போது நாம் தரிசிக்கும் முத்து மாரி அங்கே கோவில் கொண்டாள். பின்னால் வந்த அரசர்களில் துளஜா மகாராஜாவின் பெண், நோயில் கண்ணை இழந்தவள், இங்கே அம்மனை வேண்டி கண் பெற்றாள். அக்காலத்தில் இந்த ஊர் பெயர் மாரியம்மா புரம்.

மகா தவ யோகி அவதூதர் சதாசிவ பிரம்மேந்திரர் ('மானஸ சஞ்சரரே'' பாடியவர்) அந்த புற்றை மாரியம்மனாக உருமாற்றினார். ஜனாகர்ஷணம் சக்ரம் பிரதிஷ்டை செய்தார். வெள்ளமாக பக்தர்கள் வருகிறார்கள்.

தஞ்சாவூர் நாகப்பட்டினம் சாலையில் ஐந்து கி.மீ தூரத்தில் பிரம்மாண்டமான புன்னைநல்லூர் முத்துமாரியம்மன் ஜே ஜே என்று கும்பலோடு வரும் பக்தர்களுக்கு ஆசி அருள்கிறாள். அங்கே அற்புத தரிசனத்துக்கு வழி செய்து கொடுத்தவர் எனது அருமை நண்பர் கரந்தை பிரபல மன நல மருத்துவர் டாக்டர் கே. தியாகராஜன் அவர்கள். ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் சேவா சொசைட்டி நூல்கள் வெளியிட நிறைய உதவியர். தர்மிஷ்டர். இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை எனக்கு அளித்தவன் ஸ்ரீ கிருஷ்ணன் தான்.

தனது மனைவி தீக் குளித்து மறைந்ததற்கு காரணம் அவள் தந்தையின் அலட்சியம் என்று கோபம் கொண்ட சிவன் தக்ஷனை அழித்தார். கோபத்தில் இறந்த பார்வதியின் உடலை தோளில் சுமந்து ஆடினார். அவள் உடலை 51 பாகங்களாக ஸ்ரீ விஷ்ணு பாரத தேசமெங்கும் விழச்செய்து அவை உயர்ந்த சக்தி பீடங்களாயின. அவற்றில் ஒன்று சமயபுரம் மாரியம்மன்/புன்னைநல்லூர் முத்துமாரி அம்மன் ஆலயம்.

மாரி அம்மன் தமிழ் மக்களை வாழவைக்கும் காக்கும் தெய்வம். மாரி= மழை. மண்ணையும் மக்கள் மனமும் குளிர வைக்கும் மழை தரும் கருணை தெய்வம். வேப்பிலைக்காரி. வேப்பிலை கிருமி நாசினி. வியாதிகளை அண்டவிடாது. எத்தனையோ லக்ஷ மக்கள் மனம் மகிழ வைப்பவள் . அருள்மாரி பொழிபவள்.

சமயபுரம் செல்ல விழைந்தோம். சமீப கும்பாபிஷேக கூட்டம் ஆலயத்தை அணுக வாய்ப்பை தரவில்லை. காவல் துறையினர் தெருவையெல்லாம் மடக்கி வாகனங்களை கிட்டே வராமல் விரட்டி அடித்தனர். நடக்க வழியில்லை. அடுத்த முறை அம்மன் வரவழைப்பாள் என்ற நம்பிக்கை மனதில் உண்டு.சமயபுரத்தாளே புன்னைநல்லூர் மாரியம்மன் அம்சம் தானே.

இந்த கோவில் `மராட்டிய சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் வம்சம் தஞ்சைக்கு வந்த காலத்தில் ( ஏகோஜி காலம்:1676-1684) கட்டப்பட்டது என்கிறார்கள்.

கிழக்கு பார்த்த சந்நிதி. ஐந்து கோபுரங்கள். நாலு பிரகாரங்கள். கோவிலில் முகப்பில் ஒரு நுழைவாயில் கோபுரம். பிரபல நடிகை வைஜயந்திமாலா காட்டிக்கொடுத்தது. நல்ல காரியங்களை நடிகை நடிகைகளும் செய்யும்போது வணங்குகிறோம். ரெண்டாம் சிவாஜி காலத்தில் கல்லும் காரையுமாக இருந்த கோவில். இப்போது 7 நிலை ராஜகோபுரம் கம்பீரமாக நிற்கிறது.

ஒரு ஆதி சைவ சிவாச்சாரியார் குடும்பம் துக்கோஜி மஹாராஜா காலத்திலிருந்து வழிபாட்டை திறம்பட நடத்தி வருகிறது. நிறைய குருக்கள் இந்த தலைமுறையில் தொடர்ந்து வழிபாடு செயதுவருகிறார்கள்.

மாரியம்மனோடு பேச்சியம்மனும் ஒரு சந்நிதியில் இருக்கிறாள். சரஸ்வதி அவதாரம். தஞ்சாவூர் பகுதியில் குழந்தைகள் உடல் நலத்த்திற்கு இன்றும் சிறந்த டாக்டர் பேச்சியம்மன் தான். . தஞ்சாவூரில் மட்டுமல்ல, மற்றும் இவளைத் தெரிந்த எண்ணற்ற குடும்பங்களுக்கும் இவளே டாக்டர். நம்பிக்கை தானே வாழ்க்கை.

அம்மன் ஸ்வயம்பு. புற்று வடிவமாக இருந்தவள். ஐந்து வருஷங்களுக்கு ஒரு தரம் ஒரு மண்டல காலம் சாம்பிராணி தைல காப்பு.

நாங்கள் புன்னைநல்லூர் மாரி அம்மனை தரிசித்த அன்று அமாவாசை. எங்களை தற்போதைய ஆதிசைவ சிவாச்சாரியார் அருமையான தரிசனம் செய்வித்தார். கணீர் குரல் அவருக்கு. கர்பகிரஹத்தில் அம்மனுக்கு தமிழில் அர்ச்சனை செய்தது அர்த்தம் புரிந்தது. கண்கொள்ளா காட்சி. ஆலயத்தில் அருகே இருந்த அவர் இல்லத்திற்கு அழைத்து சென்று பசிவேளையில் சுடச் சுட இட்லி, மிளகாய்ப்பொடி, தேங்காய் சட்னியோடு அளித்தது ஒரு எதிர் பாராத சம்பவம். புன்னைவன மாரியம்மன் எனது குல தெய்வம் என்று அறிந்தேன். நிறைய பேருக்கு குலதெய்வங்கள் தெரியாததற்கு ஒன்று அவர்கள் அசிரத்தை, மற்றொன்று மூத்தவர்களின் அலட்சியம்.

அவரது தகப்பனார், பாட்டனார் படங்கள் வீட்டில் முதலிய தலைமுறையை நினைவு படுத்தின. அவர் தகப்பனார் தென்னிந்திய அர்ச்சகர் சங்க தலைவராக இருந்திருக்கிறார்.

தஞ்சை சென்றால் தரிசிக்க வேண்டியவள் புன்னைநல்லூர் மாரியம்மன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...