Thursday, September 21, 2017

மஹாபெரியவா தபஸ் பண்ண சிவா ஸ்தானம்















பேசும் தெய்வம்   j.k. sivan 
மஹாபெரியவா தபஸ் பண்ண சிவா ஸ்தானம். 
17.9.17 அன்று நாங்கள் நங்கநல்லூரிலிருந்து வள்ளுவபுரம் என்கிற கிராமத்துக்கு ஆலயவழிபாட்டுக்குழு என்ற அமைப்பில் சென்றதைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தது நினைவிருக்கலாம். படித்திருப்பீர்கள்.
திரும்பி வரும் வழியில் காஞ்சிபுரத்திற்கு அருகே தேனம்பாக்கம் என்கிற கிராமம் இருக்கிறதே அதையும் பார்த்து விட்டு செல்வோம் என்று முடிவெடுத்தோம்.
சின்ன காஞ்சிபுரத்துல, வரதராஜபெருமாள் ஸ்வாமி கோயிலில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவுல, தென்கிழக்கே, வேகவதி ஆற்றுக்கும் பாலாற்றுக்கும் இடையிலே இருக்கிற சிற்றூர்தான் தேனம்பாக்கம். காஞ்சிபுரம் ஜில்லாவில் உள்ளது. அய்யம்பேட்டை அருகே உள்ள கிராமம். அங்கே பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் என்று பழங்கால சிவன் கோயில் சிதிலமடைந்து இருந்தது. மஹா பெரியவாள் முயற்சியால் அது ஜீர்ணோத்தாரணம் செய்யப்பட்டு இன்று அற்புதமாக இருக்கிறது. பிரம்மபுரீஸ்வரர் சிவலிங்கத்தின் பின்னே சுவற்றில் சிவன், பார்வதி, கணேசன் சிலாரூபமாக வடிக்கப்பட்டுள்ள கோவில். அம்பாள் இங்கேயும் காமாட்சி தான். காஞ்சி எல்லை வரையில், காமாட்சியைத் தவிர வேறு அம்பாளே கிடையாதே .
இங்குள்ள தக்ஷிணாமூர்த்தி விகிரஹத்தில் முகத்தில் புன்னகை அற்புதமாக செதுக்கப்பட்டிருக்கிறது. தன்னைப் பார்க்க வரவா கிட்டே எல்லாம், பெரியவா ‘கொஞ்சம் கிட்டே போய் தக்ஷிணாமூர்த்தி முகத்தைத் தரிசனம் பண்ணிட் டுப் போங்கோ!’ என்பார் .
மஹா பெரியவா ஸ்தாபித்த ''சந்திரசேகர கணபதி''சந்நிதி உள்ளது.இந்த பழைய கோவில் மற்ற பழங்கோயில்களைப்போல கஜப்ருஷ்ட விமானம் (தூங்கானை) வடிவம் கொண்டது.
ஒரு சிறு பத்துக்கு பத்து அறையில் இங்கே மகா பெரியவா ஒரு வருஷம் போல் தவம் இருந்தார். ஒருநாள் கூட வெளியே வரவில்லை. அவர் அறையை ஒட்டி ஒரு சிறு கிணறு. ''இது தான் என் இடம்'' என்று அவரே சொன்னது. அறையில் ஒரு பழைய ஒற்றை கயிற்று கட்டில் , அவர் உபயோகித்த மேனா (பல்லக்கு) ஒரு பீடம் இதெல்லாம் நான் பார்த்தேன். அந்த அறையில் கட்டிலை ஒட்டி ஒரு ஜன்னல். அதன் வெளியே தான் எல்லோரும் அவரை தரிசித்தனர். ஜன்னலின் உள்ளே அவர் இருந்து கொண்டு தான் இந்திரா காந்தியை, மற்ற வெளிநாட்டு உள்நாட்டு பிரபலங்களை எல்லாம் சந்தித்தார்.
இந்திரா காந்தி வந்தபோது பெரியவா பேசவே இல்லே. முதல்ல இந்திராகாந்தியை உட்காரச்சொன்னார். ஆனா, பெரியவா உட்கார்ந்த அப்புறம்தான் உட்காரு வேன்னு நின்னுண்டிருந்தார் இந்திராகாந்தி. கையை உயர்த்தி ஆசீர்வாதம் பண்ணினார் பெரியவா. அதுவே தனக்குக் குறிப்பா ஒரு செய்தி சொல்றாப்பல இருந்துது இந்திராகாந்திக்கு. அதுவரை பசுமாடு – கன்று சின்னம் வச்சுண்டிருந்தார் தன்னோட காங்கிரஸ் கட்சிக்கு. அதைத்தான் முடக்கிட்டாளே! அதனால பெரியவா ஆசிர்வாதம் பண்ணின கை மனசுல பதிஞ்சு போகவும், கையையே தன் கட்சிக்குச் சின்னமா வச்சுட்டார். அவர் வந்து உட்கார்ந்திருந்த இடத்திலே அடையாளமா ஒரு சிவப்புக் கல் பதிச்சு வைக்கத் தீர்மானிச் சிருக்கோம் அவர் காட்டிய அபய ஹஸ்தத்தை தான் இந்திரா காந்தி தன்னுடைய கட்சி சின்னமாக வைத்து வெற்றியும் பெற்றார். அங்கே இப்போது ஒரு வேத பாடசாலை நடக்கிறது. சிறு குழந்தைப் பையன்களை குடுமியோடு, ஒற்றைப் பூணலோடு, இடுப்பிலே துண்டு, நெற்றி மார்பு கைகளில் விபூதி, கழுத்தில் உத்ராக்ஷத்தோடு முகத்தில் தேஜஸோடு கண்டு ஆனந்தித்தேன். ஒரு சிலரை படம் பிடித்தேன். இணைத்திருக்கிறேன்.அன்று பிரதோஷம். நந்திகேஸ்வரனுக்கு அலங்காரம் பூஜை, ப்ரதக்ஷிண ஊர்வலம்.
முதலில் பெரியவா இங்கே வந்து பார்த்தபோது, கோயிலைச் சுற்றி காடாக இருந்தது. ‘நான் இங்கயேதான் தங்கப் போறேன்’னு தீர்மானமா சொல்லிட்டார், பெரியவா. கோயிலைச் சுத்தம் பண்ணி, சின்னதா ரூம் ஒண்ணு கட்டி, கொட்டகையும் போட ஏற்பாடு ஆச்சு. அப்போது தேனம்பாக்கத்தில் பெரியவா இருந்த இடம் எந்த நிலையில் குடிசையாக இருந்தது என்பதை இத்துடன் இணைத்த படத்தில் பார்க்கலாம். 1954-ல், ஜெயேந்திரர்கிட்ட மடத்துப் பணிகளை ஒப்படைக்கிறவரைக்கும், அடிக்கடி தேனம்பாக்கம் வந்து போய்க் கொண்டிருந்தா பெரியவா. அதுக்கப்புறம் கிட்டத்தட்ட இருபது வருஷம் போல, அங்கேயேதான் பெரியவா தங்கியிருந்தார்! ஒரு குளம் கோவிலை ஒட்டி. பிரம்மா ஸ்நானம் பண்ணின பிரம்ம தீர்த்தம். அதுலதான் பெரியவா தினமும் ஸ்நானம் பண்ணுவார். அங்கேயே தங்கிண்டு, அனுதினமும் ஈஸ்வர தரிசனம் பண்ணிண்டு இருக்கிறதுன்னு பெரியவா தீர்மானம் பண்ணிட்டார்.
அந்த இடம் அப்போ குருக்கள் ஆதீனத்தில் ஆதிக்கத்தில் இருந்த பிரம்மபுரீஸ்வரர் ஆலய பாத்யதையை, அதாவது உரிமையை சங்கர பக்த ஜன சபா பேரில் பெரியவா ரிஜிஸ்தர் பண்ணிட்டார். அங்கே நித்திய பூஜைக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க ஒரு டிரஸ்ட்டும் அமைச்சார். இரண்டு கால பூஜை, அன்னாபிஷேகம் எல்லாம் ஒழுங்கா பண்ற மாதிரி ஏற்பாடு பண்ணினார்.
அங்கே ஒரு கதவைத் திறந்தால், பிள்ளையாரை தரிசிச்சுடலாம். ஒரு கவுன்ட்டர் மாதிரி சின்ன இடம் பண்ணி இருந்துது. அது வழியாத்தான் பெரியவாளுக்கு நித்யம் பிட்சை கொடுப்பார்கள். ஆகாரம் பண்ணிட்டு, பிட்சைப் பாத்திரத்தை அங்கே கவுன்ட்டரில் வச்சுடுவார்.
1954் சிவராத்திரி அன்னிக்கு ஒரு சம்பவம். இதை சொல்பவர் பெரியவாவுடன் இருந்த அணுக்க தொண்டர் இந்த கோவில் நிர்வாகி. ஸ்ரீ வைத்யநாதய்யர்.
'' ஓம் ராமச்சந்திர அய்யர்னு ஒரு பக்தர்… அகஸ்தியர் நாடி ஜோஸ்யத்தில் அவருக்கு ரொம்பவே நம்பிக்கை. அவர் அங்கே வந்து நாடியைப் படிச்சுட்டு, ‘பெரியவா அன்னிக்கே அங்கே சமாதி ஆகிடுவா’ அப்படின்னார்.
பெரியவா உடனே, ‘நீங்கபாட்டுக்கு அங்கே பூஜை பண்ணிண்டிருங்கோ. நான் இன்னிக்குச் சாயங்காலத்துக்குள்ளே செத்துப் போயிடுவேன்னு இவர் சொல்றார். நான் இதோ, இங்கேயே இருக்கேன்!’ அப்படின்னு அங்கேயே உட்கார்ந்துட்டார். நாங்கள்லாம் பதறிப் போயிட்டோம். ஆனா, நல்ல காலம்… அப்படியெல்லாம் விபரீதமா ஒண்ணும் நடக்கலே. பெரியவா அதுக்கப்புறம், 40 வருஷ காலம், 94-ஆம் வருஷம் வரை நம்மோடு இருந்து, நமக்கெல்லாம் அனுக்கிரஹம் பண்ணினார். அந்த இடத்திலே, பெரியவா ஸித்தியானப்புறம் சின்னதா ஒரு கோயில் கட்டியிருக்கோம். கருங்கல்லிலேயே கட்டினது. உள்ளே பெரியவாளோட மார்பிள் விக்கிரகம். அதற்கும் கும்பாபிஷேகம் நடத்தியாகி விட்டது. பெரியவாளுக்கு குலதெய்வம், சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமி. பெரியவாளின் பூர்வாஸ்ரமப் பெயரும் சுவாமி நாதன்தானே! அதனால, அங்கே ஸ்ரீசுவாமிநாத ஸ்வாமிக்கும் ஒரு கோயில் கட்டி, கும்பாபிஷே கமும் பண்ணிட்டோம். பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கும் அஞ்சு தடவை கும்பாபிஷேகம் பண்ணிட்டோம்.
மகா சுவாமிகளுக்கு மனசுக்கு ரொம்பவும் பிடிச்ச இடம், தேனம்பாக்கம். இன்னும் நிறைய விசேஷங்கள் நடந்திருக்கு இங்கே. ஒவ்வொண்ணா சொல்றேன்!’ என்றார் வைத்தியநாதன்.
காஞ்சி மஹான் – மஹா பெரியவா – பரமாச்சாரியார் – சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா அவரின் மனம் கவர்ந்த தேனம்பாக்கம் பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்தில் வெகு விமரிசையாக.
மஹா பெரியவா இங்கு வசிப்பதை பெரிதும் விரும்பி 1972 முதல் 1978 வரை வசித்து வரும் காலத்தில் அவர் விருப்பத்திற்கு ஏற்ப வேத பாடசாலை 1978 இல் தேனம்பாக்கத்தில் தொடங்கப்பட்டு இன்றளவும் எண்ணற்ற வேத பண்டிதர்களை ஆண்டுகள் தோறும் உருவாக்கி வருகின்றனர்.
இங்கு இவருக்கு தனி சன்னதி அவர் தங்கியிருந்த அறைக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்வாண்டு அவரது ஜெயந்தி வெகு விமரிசையாக 27 நாள் வேத பாராயணம் – ரிக் வேதத்தில் ஜட, யஜுர் வேதத்தில் கணம், சாம வேத பாராயணம் ஆகியவை மே 1 முதல் 27 முடிய கொண்டாடப்படுகிறது. இவ்வகையில் கடந்த 13 அன்று தெப்ப உற்சவம் கொண்டாடப்பட்டது. மஹா பெரியவா ஜெயந்தி மே 22 வைகாசி அனுஷம் ஆகும்.''
இரவு நேரமாகி விட்டதால் நங்கநல்லூர் திரும்ப வேண்டுமே என்று மனதை தேனம்பாக்கத்தில் விட்டுவிட்டு மனமின்றி திரும்பினேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...