Tuesday, September 12, 2017

பாட்டி சொல் தட்டாதே - 3




பாட்டி சொல் தட்டாதே - 3 J.K. SIVAN

ஒரு பழைய பாட்டு நினைவுக்கு வருகிறது. ''அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே...''. நன்றி எங்கே இருக்கிறது? . தீட்டிய மரத்தில் கூர் பார்க்கிறவர்கள் நாம். நாம் எல்லோரும் உடனே தென்னை மரம் வீட்டில் இருந்தால் பின் பக்கம் ஓடுவோம். இல்லையேல் எங்காவது தென்னைமரம் கண்ணில் பட்டால் அங்கே தடால் என்று கீழே விழுந்து என் தவறை மன்னித்துவிடு என்று கேட்போம். கிழவி அற்புதமாக நமக்கு நினைவூட்டுகிறாள். என்றைக்கோ சாக்கடைக்கு போகும் நீரை சிறிய பாத்தியாக கட்டி தென்னைமரத்துக்கு நீர் வார்த்தால் அது என்ன செய்தது. நன்றாக அதை நினைவில் கொண்டு, கொஞ்சம் வளர்ந்து ''இந்தா நீ என் கால் அருகே அளித்த சாக்கடை நீர்க்கு என் தலையால் நான் தரும் பதில் மரியாதை'' என்று தேனினும் இனிய சுவை கொண்ட இளநீரை ரெண்டு டம்பளர்க்கு மேலாக ஒரு காயில் தருகிறது. இதை எதற்காக கிழவி சொல்கிறாள் தெரியுமா? யாரோ எப்பவோ செய்த ஒரு சிறு சமய சஞ்சீவி காரியத்தை மறக்காமல் அதற்கு பலமுறை நன்றி சொல்வது செய்வது. உரிய நேரம் வர காத்திருந்து சந்தோஷமாக நாம் அதை திருப்பி அளிக்கவேண்டாமா? நல்ல பழக்கம் தானே நாம் தவறாமல் செய்யவேண்டாமா?

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந் நன்றி
'என்று தருங்கொல்?' என வேண்டா- நின்று
தளரா வளர் தெங்கு தாள் உண்ட நீரைத்
தலையாலே தான் தருதலால்.

கிழவி இன்னொன்றும் ஞாபகப்படுத்துகிறாள். தீய மனிதர்கள், கெட்ட ஆசாமிகள் சகவாசம் கூடாது. அவனுக்கு ஆதரவு கொடுத்து (இது அரசியல் சம்பந்தமானது இல்லை!) உதவினால், அவன் அடுத்த நிமிடமே மறந்து போவதுமட்டும் அல்ல, நமக்கு பதில் மரியாதையாக எண்ணற்ற துன்பங்களைத் தருவான். நன்றி என்பது அவனுக்கு தண்ணீர் மேல் எழுதிய நாலு பக்க கட்டுரை போல. இதே உதவியை ஒரு நல்லவனுக்கு (இப்போது யாரேனும் இருப்பதாக தோன்றினால்) செய்தால் அவன் அதை என்றும் மறக்கமாட்டான். எப்போது நமக்கு பிரதி உபகாரம் செய்யமுடியும், எப்படி அதை செய்யலாம் என்று நினைத்துக்கொண்டே இருப்பான். அது கல்லில் பொறித்த கல்வெட்டு போல அழியாமல் அவன் நெஞ்சில் இருக்கும்.

பலே கிழவி. உன்னுடைய அற்புதமான இந்த பாடலை நான் பலமுறை கேட்டு எத்தனையோ வருஷங்கள் அனுபவித்து இருக்கிறேன். இதோ இன்னுமொரு தரம்:

''நல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்
கல்மேல் எழுத்துப் போல் காணுமே- அல்லாத
ஈரமிலா நெஞ்சத்தார்க்கு ஈந்த உபகாரம்
நீர் மேல் எழுத்துக்கு நேர்.2''

கொடிது கொடிது வறுமை கொடிது. பசி வந்தால் பத்தல்ல பதினாயிரமும் பறந்து போகும். அந்த அளவு வறுமையை சின்னவயதில், தாங்கமுடியும் வயதில் எதிர்கொண்டாலே மிக வருத்தம். எதை பார்த்தாலும் அது துன்பம் தான் தரும் என்று ஆகிவிடும் நிலைமை.

நிறைய பூக்கள் இருக்கிறது. அவற்றை பறித்து மாலையாக கட்டி தலையில் சூட முடியாத நிலையில் உள்ள பெண்ணுக்கு அதால் துன்பம் தான் வரும் அல்லவா? .அந்த மலரால் அப்போது என்ன பயன்? அதுபோல் தான் அப்பா, அப்படி தன்னை அனுபவிக்க முடியாத ஆண் இல்லாத பெண்ணின் வனப்பும் அழகும், வாழ்க்கை நிலையும், என்கிறாள் கிழவி. பாவம் தனது வாழ்க்கையில் என்ன துன்பங்கள் அனுபவித்தாளோ . எனக்கு தெரிந்து, அதாவது நான் படித்து தெரிந்து கொண்டவரை, அவள் சிறுவயதிலேயே முதுமைக்கோலம் வரம் பெற்றுக் கொண்டு கிழவியானவள்.

இன்னா இளமை வறுமை வந்து எய்தியக் கால்
இன்னா அளவில் இனியவும்- இன்னாத
நாள் அல்லா நாள் பூத்த நன் மலரும் போலுமே
ஆள் இல்லா மங்கைக்கு அழகு.3

இது இன்னுமொரு அற்புத பாடல். பாலை சுண்டக் காய்ச்சினால் அதன் சுவை கூடுமே தவிர குறையாது. மாறாது. நாம் தேடி சம்பாதித்த நண்பர்கள் அப்படி இருக்கவேண்டும். அவர்கள் நமக்கு துன்பம் வந்த காலத்தில் இன்னும் நெருக்கமாக அணுகி நம்மை துன்பத்தில் இருந்து மீட்பார்கள். உனக்கு துன்பம் வரும்போது உன்னோடு இருப்பவன் தான் உண்மை நண்பன். மற்றவன் மெதுவாக கழண்டு கொள்வான். அட்ரஸே இருக்காது அப்புறம். இவர்களை ஒப்பிட்டு கிழவி ஒரு அருமையான உதாரணம் சொல்கிறாள். வெள்ளை வெளேர் இன்று பால் நிறத்தில் இருக்கும் சங்கும் கிளிஞ்சலும்
நன்றாக சுட்டுப் பொடிசெய்து நீரில் கரைத்து சுவற்றில் பூசினாலும் வெள்ளை நிறத்தையே அல்லவா தரும். அதுபோல் தான் நல்ல நண்பர்கள் என்ன துன்பம் வந்தாலும் இன்னும் அதிக அன்போடு நட்போடு நம்மோடு கூட இருப்பார்கள். மேன்மக்கள் அப்படிப்பட்டவர்கள். மாறவே மாட்டார்கள். அயோக்கியர்களை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவேண்டிய தேவையில்லை.

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.4

மாஞ்செடி நட்டுவிட்டு ஒவ்வொரு வாரமும் காய்க்கிறதா என்று பார்ப்பவர்கள் நிறைய பேர் உண்டு. எவ்வளவு உயர்ந்த மரமானாலும் தக்க பருவத்தில் தான் காய்க்கும் பழுக்கும். காத்திருக்க வேண்டும். இதை கிழவி ஏன் சொல்கிறாள் என்றால் காரியங்கள் என்னதான் அகட விகட சாமர்த்தியமாக செய்தாலும் அது எப்போது பலன் அளிக்கவேண்டுமோ அப்போது தான் ஐயா அதன் பலனைஅனுபவிக்க முடியும். தலைகீழே நின்றாலும் பயனில்லை. காலம் ஒன்றே கனிய வைக்கும் பலன் தரும். பயன் பெற முடியும்.
எவ்வளவு பெரிய ஓங்கி உயர்ந்த மரமானாலும் அதன் பருவ காலத்தில்தான் பழுக்கும். அதுபோல அடுத்தடுத்து முயன்றாலும் செயல் நிறைவேற வேண்டிய காலம் வந்தால்தான் நாம் எடுத்துத் தொடுத்த (தொடங்கிய) செயல் நிறைவேறும்.

அடுத்து முயன்றாலும் ஆகும் நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா.5

உற்ற இடத்தில் உயிர் வழங்கும் தன்மையோர்
பற்றலரைக் கண்டால் பணிவரோ?-கல்தூண்
பிளந்து இறுவது அல்லால் பெரும் பாரம் தாங்கின்
தளர்ந்து விளையுமோ தான்.6

கிழவியைப் பின் தொடர்வோம்.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...