Tuesday, September 26, 2017

ஆயிரம் வாசல் இதயமா...?​







​​
ஆயிரம் வாசல் இதயமா...?​ J.K. SIVAN

இதற்கு முன் காரைக்குடிக்கு நான் சென்றதில்லை. அது ஒரு பெரிய நகரம். செட்டிநாட்டில் இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு உள்ளே தனி​ நாடு.​ அபூர்வ பாரம்பரிய கட்டிட கலை மலிந்த அற்புத நாடு செட்டிநாடு​. உலகப் புகழ் பெற்றவை அவை. காரைக்குடி, புதுக்கோட்டை நகரங்களைச் சுற்றிக் குறிப்பிட்ட மக்கள் குடியேறிய 96 ஊர்களும் ​ சேர்ந்ததுதான் "செட்டிநாடு"​

​தேவ கோட்டை எனக்கு பரிச்சயம். அங்கு தான் என் அண்ணனுக்கு திருமணமானது. போன வருஷம் மீண்டும் ​ஆலய யாத்திரைக்கு தேவகோட்டை சென்றேன். போகும் வழியெல்லாம் பல பிரபல பெயர்களை பலகைகள் தாங்கி நின்றன. படிக்கவே பெருமையாகவும் அருமையாகவும் இருந்தது. தேவகோட்டை காரைக்குடி தவிர கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர், ஆத்தங்குடி, அரியக்குடி, கண்டரமாணிக்கம், பாகனேரி, நாட்டரசன்கோட்டை, ஒக்கூர், வேந்தன்பட்டி, பொன்னமராவதி​ பகுதிகள் நாட்டுக்கோட்டை​ என்பவை.

​''​ஆயிரம் ஜன்னல் வீடு​''​ செட்டிநாட்டில் மிகவும் பிரபலம். செட்டிநாட்டிலுள்ள வீடுகள் எல்லாம் 1875ஆம் ஆண்டு முதல் 1950ஆம் ஆண்டு வரை கட்டப்பெற்றதாகும். எல்லா வீடுகளுமே 80அடி முதல் 120 அடிவரை அகலமும்,160 அடி முதல் 240 அடிவரை நீளமும் கொண்டவையாக இருக்கும். வீடுகள் எல்லாம் பர்மாவிலிருந்து கொண்டு வரப்பட்ட தேக்குமரங்களால் இழைத்துக் கட்டப்பெற்றவையாகும்.


ஒரு வீடு கட்டி முடிக்க 3 முதல் 5 ஆண்டுகள் வரை காலம் பிடித்திருக்கிறது. இந்திய சுதந்திரத்திற்கு முன்பு சுமார் 8,000 வீடுகள் இருந்தனவாம். இப்போது சுமார் 6,000 வீடுகள் உள்ளன. அதில் மிகவும் கலையம்சமான வீடுகள் 500 அல்லது 600 வீடுகள் இருக்கலாம்.

​கவனிக்கவோ பராமரிக்கவோ படாமல் சிதிலமான வீடுகள் ​ ஜாஸ்தி. அருமையான மரத் தூண்களும், மரச் சாமான்களும், ரவிவர்மாவின் ஓவியங்களும்,லண்டன் லாந்தர், மற்றும் சாண்ட்லியர் விளக்குகளும், மற்றும் பல அரிய கலைப் பொருட்களும் இன்று இந்தியாவெங்கும் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் வியாபித்திருக்கின்றன அல்லது வெளி மாநிலங்களில் உள்ள பெரும் பணக்காரர்கள் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

செட்டிநாடு வீடுகள் ​முக்கால்வாசி தரையிலிருந்து ஐந்தடி உயரத்துக்கு மேலே தான் கட்டப்பட்டவை. வருஷாவருஷம் பொங்கல் போது நம்மைப் போல் வீடுகளுக்கு வெள்ளை அடி​ப்பது கிடையாது. சுண்ணாம்பு கலவை, கருப்பட்டி, கடுக்கா​ய் ,முட்டை வெள்ளைகரு​ இதெல்லாம் தான் சிமெண்ட் அந்த காலத்தில். அதனால் தான் பங்களா​க்கள் பளபள வென்றும் உறுதியாகவும் உள்ளனவோ?​ சிறிய பங்களா 40 அடி அகலம், 120 அடி நீளத்திலும், அரண்மனை போன்ற பங்களா 60 அடி அகலம், 200 அடி நீள இடத்தில் கலைநயத்துடன் கட்டப் பட்டுள்ளது. ​குளுகுளு வசதி எதுவுமே வேண்டாம். அருமையான இயற்கை தென்னண்டை காற்று மதி மயக்கம் தருமே.

rain harvest திட்டம் அவர்கள் ஏற்கனவே போட்டது தான். பங்களா​க்களின் மேற்கூரையி​ன் லண்டன் ஓடுகள் மூலம் மழைக்காலத்தில் சேகரமாகும் மழை நீரை விரையமாக்காமல் ஆள்உயர அண்டாவில் சேகரித்த​வர்கள்.

செட்டிநாட்டு வீடுகளின் ​மெயின் வாசல் மரக் கதவுகள் ​பிரம்மாண்டமான நிலை கதவுகள். இரட்டைக் கதவுகள்​. கதையிலும், நிலைகளின் இரு பக்கங்களிலும் நேர்த்தியான சிற்பங்கள்​ தத்ரூபமாக செதுக்கி இருக்கிறார்கள். எல்லாமே 3D வெரைட்டி. கிளி​, மற்ற பறவைகள், மிருகங்கள், செடிகொடிகள், தாமரை, கடவுள்கள், கஜலட்சுமி, இலட்சுமி, ரதிமன்மதன் ​எல்லாமே பார்க்கலாம் கதவில்.

பதினாறு - பதினேழாம் நூற்றாண்டின் நாயக்கர் காலச் சிற்ப​ங்களை பார்த்துதான் செட்டி நாட்டு நகரத்தாருக்கும் கலைஞர்களுக்கும்​ இம்மாதிரி தாம் கட்டிய மற்றும் புதுப்பித்த கோயில்களி​லும் சிற்பங்கள் ​வேண்டும் என்று தோன்றி இருக்கும். ​

​சைவர்கள் அதிகம் நகரத்தாரில். ​ இராமர், சீதை பட்டாபிடேகக் காட்சியும் கத​வுகளில் சிற்பமாக​ இருக்கிறது. கணபதி, கருடன் மீது அமர்ந்துள்ள விஷ்ணு, முருகன் ஆகியோரின் உருவங்களும் கதவுகளில் ​ பார்க்கலாம்.

​​அநேக வசதி படைத்த நகரத்தார் ஊர், தமிழ் பாசம் கொண்டவர்கள், தமிழை வளர்த்த பல பரம்பரைகள் உண்டு, தெய்வீக பணியில் ஈடுபாடு கொண்டவர்கள் என்று தான் தெரியும். நகரத்தார் வீடுகள் ஒவ்வொன்றும் பிரம்மாண்டமான மாளிகைகள்.கடல் கடந்து வாணிபம் செய்தவர்கள் என்றும் அறிவேன். சா. கணேசன் என்று கம்பர் விழா நடத்திய ஒருவரை பற்றி கொஞ்சம் படித்ததுண்டு.

15.8.17 அந்த ஊரில் உள்ள தமிழ்நாடு பிராமண சங்கம் என்னை ராமானுஜர் பற்றி பேச அழைத்தபோது அந்த ஊரை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது. ஆயிரம் ஜன்னல் வீடு என்று ஒன்றை​ பற்றி கேள்விப்பட்டு பார்க்க ஆசைப்பட்டேன். நேரமில்லை.
​​
​காரைக்குடிக்கு வந்த நான் பார்க்க முடிந்தது அங்கிருந்து திருமெய்யம் சைவ வைணவ ஆலயத்தை. அதைப்பற்றி தான் உடனேயே உங்களுக்கு எழுதிவிட்டேன். காரைக்குடியில் 100 பிள்ளையார் கோவில் ஒன்று. கொப்புடை அம்மன் ஆலயம் என்ற அழகிய சிற்பம் நிறைந்த கோவில் அவ்வளவு தான். இந்த ரெண்டும் பற்றி அடுத்து எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...