Friday, September 8, 2017

ஒரு ஊரிலே ஒரு ராஜா

''ஒரு ஊரிலே ஒரு ராஜா.. -- J.K. SIVAN ..

சின்ன வயதிலிருந்தே ஒரு பழக்கம். ''ஒரு ஊரிலே ஒரு ராஜா....

இந்த வார்த்தையைக் கேட்டதும் எங்கிருந்தாலும் ஓடி வந்து அருகில் உட்கார்ந்து கொள்வோம். பாட்டியோ, வேறு யாரோ கதை சொல்லப் போகிறார்கள் என்பது சொல்லாமலேயே புரிந்துவிடும்.

எந்தவூர், எந்த ராஜா, கிழவனா, குமாரனா, இதெல்லாம் முக்யமாக தோன்றாது. அந்த ராஜா என்ன செய்தான், அவனுக்கு என்ன ஆனது? இது ஒன்றே விறுவிறுப்புக்கு ஆதாரம்.

அப்போதெல்லாம் யார் வீட்டிலும் மின்சாரம் இல்லை. தெருவில் தான் விளையாடுவோம். தெருவில் அதிக வண்டி நடமாட்டம் இல்லை. தூரத்தில் குதிரை வண்டி வரும் சத்தம் கேட்டால் ஒதுங்கி விடுவோம். நிலா ஒளியிலே, வாசலில் எண்ணெய் தெரு விளக்கு வெளிச்சத்தில், முற்றத்தில் ஹரிக்கன் லைட் ஒளியில், கொல்லையில் மரத்தடியில் நிறைய கதையைக் கேட்டு நானும் பெரியவனாகி, கற்பனைக் குதிரையை தட்டி விட்டு குழந்தைகளுக்கு அமோகமாக கதைகள் சொல்லி இருக்கிறேன். அது இப்போதும் என்னை விடவில்லை என்னை சுற்றி நிறைய வாண்டுகள் என் குடும்பத்தில், அக்கம் பக்கத்தில் வீடுகளில் இருந்தெல்லாம் உள்ள 5 முதல் 15 வயது வரை ரேஞ்சில் (RANGE ) குழந்தைகள் பல காதைத் தீட்டிக் கொண்டு வாயைப் பிளந்து கொண்டு காத்திருக்கும்.

நான் கேட்ட கதைகளுக்கும் சொன்ன கதைகளுக்கும் வித்யாசம் உண்டு. என் கதைகளில் கொஞ்சம், இதிகாசம், கொஞ்சம் ஆங்கில, இந்திய கதைகள், மீதி சொந்த சரக்கு. இப்படியே கலந்து கட்டியாக ஒரு உருவம் கொடுத்து கதை நீளும். நங்கநல்லூரில் எங்கள் வீட்டு வாசல் அப்போது ஒரு பெரிய வேப்ப மரம் இருந்தது, அதன் கிளையில் தான் தாம்புக்கயிறு ஊஞ்சல் கட்டி ரயி விளையாட்டு விளையாடுவார்கள். மொட்டை மாடி போகும் வழியில் மாடிப்படி, வெயில் இல்லை யென்றால் மொட்டை மாடி, இல்லையேல் பின்னால் தோய்க்கிற கல் அருகே (தோய்க்கிற கல் தான் என் ஆசனம்) என் ரசிகர்கள் எப்போதும் என்னை சுற்றிலும் அமர்ந்திருப்பார்கள்.

நான் சொல்லும் சில கதைகள் நாட் கணக்கில் நீளும். எனக்கே என்ன சொன்னோம் என்பது மறந்து விடும். அவர்கள் எடுத்துக் கொடுப்பார்கள். அப்பறம் அப்பாதுரை எப்படி அந்த திருடர்களை பிடித்தான்? ஓடும் ரயிலில் இருந்து எப்படி பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தான். முதலை துரத்தியதா?

இந்த ஒரு நுனி போதும் எனக்கு. மேலே கற்பனை தொடரும். விறுவிறுப்பு அதிகரிக்கும்.

அந்த நாட்கள் இனி வரப்போவதில்லை.

அப்போது டிவி இல்லை, ரேடியோ எல்லோர் வீட்டிலும் இருக்கவில்லை. இருந்தாலும் அதில் கதை கிடையாது. கதை இருந்தாலும் அதைக் கேட்க முடியாது. தொட்டால் ஷாக் அடிக்கும் வால்வ் இதயம் கொண்டம் பெரிய AC DC ரேடியோக்கள். திருப்பினால் கொரகொர சப்தம் ஒன்றே அதிகம். யார் வீட்டிலும் குழந்தைகளுக்கு கதை புத்தகங்கள் வாங்கி கொடுக்கும் வழக்கமில்லை. புத்தகங்களும் அதிகம் கிடையாது. எனவே எனக்கும் என் கதைகளுக்கும் அதிகம் டிமாண்ட் இருந்தது என்று இப்போது புரிகிறது.

கதா நாயகன் ஒரு ஆபத்தில் சிக்கி இருக்கிறான். எந்த நேரமும் அவன் உயிருக்கு ஆபத்து. அவனுக்கு அவசர உதவி தேவை. எப்படி சமயோசிதமாக அங்கே காற்றில் மேலே இருந்து ஒடிந்து விழுந்த ஒரு மரக்கிளையை 'சரக்'கென்று பிடித்து எதிரிகளை சமாளித்தான் என்று சொல்லும்போது, கவலையோடு என்னை பார்த்துக் கொண்டிருந்த கண்களில் திடீரென்று ஒரு ஒளி தோன்றும். ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொள்வார்கள். சந்தோஷம் கரை புரண்டு ஓடும். சுரேஷ் எழுந்து கை தட்டி குதிப்பான். கதாநாயகனாகவே மாறிவிடுவான். கண்ணுக்கு தென்படாத எதிரிகளை கைகளை வீசி தாக்குவான். தாவித்தாவி காற்றில் எதிரியை சாடுவான்.

இதெல்லாம் இந்த காலக் குழந்தைகள் ரசிக்க முடியாது. அவர்கள் திசையே வேறு. எதிர்பார்ப்பே வேறு. இது பழைய புராண கதைகளை குழந்தைகள் கேட்க விருப்பமில்லாத காலம். ''பார்பி டால், ஹார்ரி பாட்டர், பேட் மேன், சூப்பர் மேன்'' தினங்கள். வீடியோ கேம் உலகம் இது . எங்கள் உலகம் வேறு.

காரணம் விஞ்ஞான வளர்ச்சி. அது அவர்களை, அவர்கள் எண்ணங்களை, எதிர்பார்ப்புகளை மாற்றி அமைத்துவிட்டது. பெரியவர்களும் கதை சொல்லும் மனோ நிலையில் இப்போதெல்லாம் இல்லை. கதைகளும் சொல்லத் தெரியாது. பொறுமையே கிடையாதே. எந்த வித இயற்கை சக்தியையும், முறையையும் மீறிய கதைகள் சொன்னாலும் அதை அப்படியே நம்பி கேட்கக் கூடிய குழந்தைகளும் இல்லையே. இப்போதைய சிறுவர்கள் ஆயிரம் கேள்விகள் குறுக்கே கேட்டு மடக்குவார்கள். சமாளிக்க ஞானம் வேண்டும். சமயோசிதம் வேண்டும். இரண்டுக்கும் இப்போது பஞ்சம்.

எனக்கு ஒரு நப்பாசை. நமது பழைய .கதைகளில் புராணங்களில், இதிகாசங்களில் தெய்வ அவதாரங்களில் குழந்தைகளுக்கு அந்த அளவு ஈர்ப்பு வர வேண்டும் என்று பிரயாசைப் பட்டு தான் என் கதைகள் வண்ணப் படங்களோடு புத்தகங்களாக வெளியிடப்பட்டு இலவசமாகவே பள்ளிச் சிறார்களுக்கு சென்றடைகிறது. வெளிநாடுகளிலும் கூட நிறைய பெற்றோர் அந்த கதைகளை படித்து குழந்தைகளுக்கு சொல்கிறார்கள் என்று அறியும்போது எனக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? கிருஷ்ணன் அனுகிரஹத்தில் இதுவரை இந்த கைங்கர்யம் திருப்திகரமாகவே நடந்து வருகிறது. கிருஷ்ணன் ராமன் பாண்டுரங்கன் கதைகளை விட இப்போதைய வீடியோ கேம் சிறந்தது என்று கனவில் கூட என் மனம் ஏற்காது.

எங்கள் காலத்தில் விஞ்ஞான விதிகள், இயற்கை நியதிகள் எல்லாம் எங்களுக்கு லட்சியம் இல்லை. அதில் அக்கறையுமில்லை.

ஏன் தமிழ் படங்களில் கூட MGR மேலே ஒரு கயிற்றில் தொங்கிக்கொண்டே 20 பேரை வீழ்த்தியதை நம்பினோமே. குட்டிக்கரணம் அடித்துக்கொண்டே சண்டை போட்டு ஜெயிப்பதை ரசித்தோமே. ஒரு யானை போன்ற மனிதனை மேலே தூக்கி சக்கரமாகச் சுற்றி பத்தடி தூரம் வீசியதை ரசித்தோமே. ஒரு ஆசாமி பல பேரை ஆயுதம் இல்லாமலேயே தாக்கி இடுப்பை ஓடித்ததை ரசித்து விசில் அடித்தோம்,எழுந்து கை தட்டினோம். இன்றும் எத்தனையோ தமிழ், தெலுங்கு, கன்னட, ஹிந்தி படங்களில் கதாநாயகனின் குதிரை மட்டும் அவன் மேலே எங்கிருந்தோ குதிக்கும் போது தயாராக நின்று அவனை ஏற்றிக்கொண்டு மற்ற குதிரைகளுக்கு ''தண்ணி'' காட்டி விட்டு வேகமாக பறக்கிறது. மற்றவர்களை விட ஹீரோ பலசாலி, அழகன், விஷயம் தெரிந்தவன். வீரன், பாடுவான், நடிப்பான், ஆடுவான்.அடிப்பான். பிடிக்கத்தொட்டு தானே இன்னும் அந்த பழைய படங்கள் ஓடுகிறது. நல்லவனாகவே, நாலு பேருக்கு உதவுபவனாகவே, ஆபத்பாந்தவனாகவே அக்கால ஹீரோக்கள் படங்களில் வருவார்கள். எங்கள் கால கதாநாயகன் கடவுளுக்கு சமானமாக இருந்தவன். சகல கலா வல்லவன்.

ஐம்பது வருஷங்களுக்கு முன்னாள் என்னைச்சுற்றி இருந்த மழலைப் பட்டாளம் நான் கதை சொல்வதற்காக எனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய காத்திருந்தது. ஒருவன் ஓடிப்போய் ஒரு பலகை கொண்டு வருவான் உட்கார, ஒருவன் விசிருவான். ஒருத்தி குடிக்க நீர் கொண்டு வந்து தருவாள். என் அருகே யார் உட்காருவது என்று அவர்களுக்குள் சண்டையே மூளும்.

ராஜா கதைகளில் '' ஒரு ஊரிலே ஒரு ராஜா'' வைத் தொடர்ந்து அடுத்த வாக்யம் ''அவனுக்கு ஒரு ராணி....''

அந்த ஊரிலே திடீர்னு ஒரு பெரிய காட்டு யானை மதம் பிடித்து ஓடி வந்து விட்டது. ராணி வெளியே கோவிலுக்கு போய்விட்டு வந்து கொண்டிருந்தவளை யானை பார்த்து விட்டது. யானை ஓடி வந்தது. அவளால் ஓட முடியவில்லை. அருகே ஒரு பெரிய குளம் அதில் விழுந்து விட்டாள். ஆனால் அவளுக்கு நீந்த தெரியாதே. அந்த குளத்தில் வெகுகாலமாக ஒரு ஆமையும் முதலையும் குடும்பத்தோடு வசித்தது.

அப்புறம் என்ன நடந்தது என்று நிறுத்துவேன்.

இதோடு கதையை விட்டால்..ரசிக குழந்தைகள் யோசிக்கும். என்னன்ன நடக்க ஹேது?
ஒன்று யானை தண்ணீரில் இறங்கி அவளை காப்பாற்றியிருக்கும். அல்லது அவளை அங்கேயிருந்து தூக்கி வெளியே போட்டு மிதித்திருக்கும். ராணி நீரில் மூழ்கி இருக்கலாம். அல்லது அவள் புடவை அருகே ஒரு மரக் கிளையில் மாட்டி அதை பிடித்து கொண்டு வெளியே வந்திருக்கலாம். முதலை பசியோடு அவளை உண்ண வரலாம். ஆமை அவளை தனது முதுகில் ஏற்றி அக்கரையில் கொண்டு சேர்க்கலாம். ராஜா அந்த பக்கமாக வந்து அவளைக் காப்பாற்றி யிருக்கலாம். கோவில் யானைப் பாகன் வீடு குளத்தின் பக்கம் என்பதால் அவன் யானையை விரட்டி அவளை காப்பாற்றி யிருக்கலாம்.

எப்படி யெல்லாம் மனதில் தோன்றுகிறதோ அப்படி யெல்லாம் கதையை ஒடித்து, மடித்து, முறுக்கி, சுருக்கி, நீட்டி கொண்டு போகலாம்.

அவர்கள் ஆவலாக காத்திருப்பார்கள். மறுபடியும் அவர்களைச் சந்திக்கும் போது எனக்கு என்ன தோன்றியதோ அதுவே கதையின் முடிவு. இனி அந்த காலம் வருமா சொல்லுங்கள் ?உங்கள் வாழ்க்கையிலும் இந்த சந்தர்ப்பங்கள் இல்லாமலா இருந்திருக்கும். நினைவுக்கு வரவில்லையா? இனி அவை மீண்டும் வருமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...