Wednesday, September 27, 2017

எனக்கு தெரிந்த கொலு




எனக்கு தெரிந்த கொலு - J.K. SIVAN

கொலு வைப்பது நவராத்திரி சமயத்தில் எல்லோர் வீட்டிலும் ஒரு உற்சாகமான வரவேற்பு. சந்தோஷ விருந்து. எத்தனையோ வருஷங்கள் கழிந்து விட்டன. இன்னும் அந்த உற்சாககம் குறையவே இல்லை.

மார்க்கண்டேய புராணத்தில் தன் எதிரிகளை எப்படி ஜெயிக்கலாம்? என்று ராஜா சுரதா தனது குரு சுமதா வைக் கேட்கிறான் .

''நீ அதோ தெரிகிறதே அந்த பரிசுத்தமான ஆற்று மணலில் ஒரு காளி பொம்மை செய்து பூஜை பண்ணு '' என்கிறார் சுமதா. ராஜா காளி பொம்மை பண்ணி அலங்கரித்து, உபவாசம் இருந்து, மனதாலும் மெய்யாலும் வேண்டுவதால் அம்பிகை அவன் எதிரிகளை அழைக்கிறாள் என்று வரும்.

அதனால் மண் பொம்மைக்கு மவுஸு அதிகம். இப்போதெல்லாம் பேப்பர் மெஷ், பிளாஸ்டிக், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் என்று என்னென்னவோ வகையில் பொம்மைகள் வந்துவிட்டன. ''மண் பொம்மை யால் என்னைப் பூஜி.உனக்கு சகல சுகங்களையும், சௌபாக்கியங்களையும் அளிக்கிறேன் '' என்கிறாள் அம்பிகை. இதனால் தான் நவராத்திரியில் கொலு வைத்து அம்மனை பூஜிக்கிறோம்.

கொலு என்றால் அழகு என அர்த்தம். அந்த கால ராஜாக்கள் கொலு வீற்றிருந்தார்கள் என்றால் பொம்மை மாதிரி சும்மா உட்கார்ந்து இருப்பது என்று கூட சிலர் அர்த்தம் எடுத்துக் கொள்ளலாம். மழை பெய்கிறதா என்று கூட மந்திரி தான் சொல்லவேண்டும்.
கொலு வைப்பதற்கு முன்பு வீட்டை சுத்தம் செய்து, ஐந்து அல்லது ஏழு அல்லது ஒன்பது படிகளுடன் கொலு வைக்கப்படும்.[1] கடவுள் படங்கள் மற்றும் பொம்மைகள் மட்டுமின்றி பிற விவசாயி, காவல்துறை உள்ளிட்ட பல பொம்மைகளும் வைக்கப்படும்.

புரட்டாசி வருவதற்கு முன்பே வீட்டில் கொலு பத்தி பேச்சு அடிபடும். அப்பா பரண் மேல் ஏறி பெட்டிகளை இறங்குவார். எல்லாம் பழங்கால பொம்மைகள். வர்ணம் போனவை . அதெல்லாம் எடுத்து துடைத்து வைக்கவேண்டிய வேலை. அந்த பேட்டிகள், பெஞ்ச், மேஜை, ஜன்னல் மேடை, ஸ்டூல், இரவல் வாங்கிய செங்கல்கள், பலகைகள், இதெல்லாம் ஒன்று சேர்ந்து கொலுப்படி தயாராகும். அப்பாவின் அத்தனை வேஷ்டிகளும் அதன் மேல் போர்த்தி அங்கங்கே பின் குத்தி ஒட்டு மொத்தமாக உறை. 7, 9, 11 என்று ஒற்றைப்படை படிகள். எங்கள் வீட்டில் எப்போதும் 9. படி கட்டும் திறமை அப்போது எல்லா அப்பாக்களுக்கும் இருந்தது.
கொலு வைக்க அதிக சிரத்தை ,பக்தி இருந்தது. மிக்சி, கிரைண்டர் இல்லாத காலத்தில் தினமும் வீட்டில் வித வித பக்ஷணங்கள் தயாராகும். அண்டை அசல் வீடுகள், உறவினர்கள் கட்டாயம் வருவார்கள். சுண்டல் பரிமாற்றம் ஜரூராக நடக்கும். பெரிய மாமிகள், பாட்டிகள் கூடி நிறைய பேசி, தினமும் மஞ்சள் குங்குமம் கொடுப்பதும் பெறுகின்றதும் வழக்கம். சுண்டல்களை நாங்கள் கவனித்துக் கொள்வோம். யார் வீட்டில் என்ன பக்ஷணம் என்று செய்தி கிடைத்துவிடும். சுற்றிக்கொண்டே இருப்போம். பண்டிகைகள் உறவுகளை இணைத்தது. ஒற்றுமை நிலவியது. குழந்தைகளுக்கும் கலாச்சாரம் புரிந்தது. வளர்ந்தது. முக்கியமாக அப்போது பெண்கள் வேலைக்கு போகவில்லை. ஹார்மோனியத்தோடு ஸ்வரமாகவோ அபஸ்வரமாகவோ பாடினார்கள். பத்து நாட்கள் பண்டிகை ஒரு விறுவிறுப்போடு அமைந்தது. உடலிலும் உள்ளத்திலும் ஏனோ தானோ என்ற சலிப்பு கிடையாது. பணம் முக்யத்வம் பெறவில்லை. மன நிறைவு இருந்தது . பூக்களை வீட்டிலேயே செடியில் பிரித்து தொடுத்தார்கள். ஒரு கால் நீட்டி தூணிலே சாய்ந்து கொண்டு அத்தைகள் பாட்டிகள் பெரியம்மாக்கள் சித்திகள் தொடுத்தார்கள். முழம் என்று சொல்லி அரையோ முக்காலோ முழமாக்கி நாற்பது ரூபாய் கேட்கவில்லை.

முதல் படியில் கலசம் பின் ஆண்,பெண் மரப்பாச்சிக்களுடன் ஆரம்பித்து மனித குல வளர்ச்சியோடு படிகள் மேலே மேலே சென்று உச்சிப்படியில் தெய்வங்கள் முக்கியமாக முத்தேவிகள், ப்ரம்மா விஷ்ணு மஹேஸ்வரன்.

சில வீடுகளில் இருப்பதை அடுக்கி வைத்தனர். வண்ணான் இடுப்பில் வேஷ்டி, முதுகில் மூட்டை, தலைப்பாகையோடு, அருகே வண்ணாத்தி இடுப்பில் குழந்தையோடு, ஒரு கையில் கஞ்சி கலயம்.
செட்டியார் செட்டியாரம்மா எதிரே பாத்திரங்களில் அரிசி பருப்பு வகைகள். போஸ்ட் பாக்ஸ். கையில் ஒரு கஞ்சிரா மாதிரி ஒரு வாத்யத்தோடு டான்ஸ் பண்ணும் வெள்ளைக்கார வடக்கத்தி கிராப் பெண்கள். நாய் குட்டி பக்கத்தில் நாரதர். சல்யூட் அடிக்கும் நேதாஜி. அவர் பக்கத்தில் அனந்த சாயனர் ஆதிசேஷனோடு. யானை பொம்மைகள்! சில பொம்மைக
ள் ஜோடியாக அந்த பக்கம் ஒன்று இந்தப்பக்கம் ஒன்று என்று வைத்திருப்போம். பார்ஸிக்காரி, மான், தொப்பி போட்ட பையன், கருப்பு வெளுப்புநாய்கள் இதுபோல் பல ஜோடி இருந்தது. காந்திஜி, நேருஜி பொம்மை நிறைய வீட்டில் இருந்தது

தசாவதாரம் செட். எம தர்மன் தர்பார், சிவபெருமான் கைலாச மலை பூத கணங்கள் செட். கல்யாண ஜான் வாச ஊர்வலம் செட் பொம்மைகள் ரொம்ப பிரபலம். எங்கே அதெல்லாம் இப்போது ?

பார்க் என்று ஊறப்பட்ட மண் கொட்டி கலர் பௌத்தர்கள் திட்டு திட்டாக காண, புல் நட்டு பிளாஸ்டிக் மண் பொம்மைகளை நிரப்பினர். இதில் குழந்தைகள் பங்கு ரொம்பவே அதிகம். ரெண்டு பக்கமும் குத்து விளக்கேற்றி கோலங்கள் போட்டு தட்டில் வெற்றிலை பாக்கு பழங்கள். நிறைய பேர் தேவி பாகவதம் படிப்பார்கள். அபிராமி அந்தாதி ஒப்பிப்பார்கள். நிறைய கேட்டிருக்கிறேன்.

எதிர் வீடு கொஞ்சம் பெரியது. வாசலில் பூவரச மரம் வீட்டின் மேல் சாய்ந்து இருக்கும். திண்ணை ரேழி தாண்டி போனால் மித்தம். அதற்கு வலது பக்கம் பெரிய ஹால் மாதிரி ஓபனாக இருக்கும். வெளிச்சம் உண்டு. எதிரும் புதிரும் ரெண்டு இருட்டு அறைகள். கதவு நாதாங்கியிலிருந்து சங்கிலி கதவு மேல் வாசல்கால் நிலையில் ஹூக் ஒன்றில் மாட்டியிருக்கும். வீட்டுக்காரர் குப்பு மாமா போஸ்ட் மாஸ்டர். நிறைய சின்ன பல்புகள் மேல் கலர் காகிதம் சுற்றி பளிச் பளிச் என்று ஒளி விட செய்வார். எலக்ட்ரிக் விஷயங்கள் கொஞ்சம் அத்துபடி போஸ்மாஸ்டருக்கு.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...