Friday, September 29, 2017

ஒரு வீர சேர ராஜாவின் விஷ்ணு பக்தி - (4)

அமுதன் ஈந்த ஆழ்வார்கள். - J.K. SIVAN

ஒரு வீர சேர ராஜாவின் விஷ்ணு பக்தி - (4)

இதுவரை மூன்று அத்தியாயங்களை நான் சொன்ன சுவாரசியமான வீர சேர ராஜாவான குலசேகர ஆழ்வார் யார் என்று தெரிந்து கொள்ளவேண்டாமா??

குலசேகர ஆழ்வார் 8வது நூற்றாண்டு மலையாள விஷ்ணு பக்தர்.

பிறந்த இடம்: திருவஞ்சிக் களம் .

வேறு பெயர்கள்: கொல்லிக் காவலன். கூடல் நாயகன். கோயிக் கோன், வில்லவர் கோன், சேரலர் கோன் .

வருஷம் /மாதம் பிரபவ வருஷம், மாசி மாதம்.

பிறந்த நக்ஷத்ரம் : புனர் பூசம் - ராமர் நக்ஷத்ரம், அதனால் தான் ராமர் மேல் அளவுகடந்த பாசமும் பக்தியோ? பெருமாளையே ராமனாக பார்க்கிறார் ''பெருமாள் மொழியில் ராமர் மேல் அருமையான 105 பாசுரங்கள். ஒரு முறை முடிந்தால் அவற்றை சேர்ந்து நாம் அனுபவிப்போம்.

அம்சம் : விஷ்ணுவின் கௌஸ்துபம் (கழுத்தில் ஹாரம்)

தாய் தந்தையர் பெயர் : திட வ்ரதன், நாத நாயகி, (சேரநாட்டு ராஜா ராணி )

ராகவனை த்தூங்க வைக்க ''ராகவனே தாலேலோ'' பாடிய அதிசய ஆழ்வார் இவர். கிருஷ்ணனை விடுவாரா?பால கிருஷ்ணன் செய்த சேஷ்டிதங்களை, தாங்க முடியாத அளவுக்கு பண்ணின விஷமங்களைப் பொறுத்துக் கொண்டு வளர்த்த யசோதையை நினைவில் கொண்டு இதெல்லாம் பெற்றவளுக்கு கிடைக்கைவில்லையே என்ற ஏக்கத்தில் தான் ''தொல்லை இன்பம்'' என்ற அபூர்வ பாசுரம் உருவானது. தவறாமல் படிக்கவேண்டிய ஒரு காவியம் இது.

பெருமாள் திருமொழியில் வரும் ஒரு பாசுரத்தில் ஆழ்வார் இப்படி விளக்குகிறார்:

கண் பனிசோர, மெய் சிலிர்த்து, அவன் நினைவில் இளைத்து, ஏங்கி, அவனிருக்கும் திக்கெல்லாம் விழுந்து வணங்கி, கும்பிட்டு எழுந்து, ஆடி, பாடி, என் அப்பனே, அரங்கா, என்னை ஏற்றுக்கொள் என்று கெஞ்சும் அடியார்கள் அவனுக்கே பித்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் பித்தர்கள் அல்ல. இப்படி இல்லாத மற்ற ஆசாமிகள் தான் முழுசான பித்தர்கள்.

ராமனைக் குழந்தையாய் தொட்டிலிலிட்டு தாலேலோ பாடுகிறார்.

''மன்னு புகழ் கோசலை தன் மணி வயிறு வாய்த்தவனே'' எனும் அற்புத பாசுரத்தை நீலாம்பரியில் கேளாத காது இருந்தென்ன பயன் ? அதன் ருசி அறியாத செவியென்ன செவியே? இந்த பாடல் நிறைய தடவை கேட்டிருந்தும் இன்னும் காதில் ஒலிக்கிறது. என் அண்ணாவின் முதல் மகள் குழந்தையாக (எங்கள் குடும்பத்தில் முதல் குழந்தை) இருந்த போது என் தாயார் தூளி ஆட்டும்போது இதை அற்புதமாக பாடுவது இன்னும் காதில் ஒலிக்கிறது. இப்போதைய தாய்மார்கள் ''புத்தி சிகாமணி பெத்த பிள்ளை....'' பாடுகிறார்கள். சில குழந்தைகள் சினிமா பாட்டு கேசட்டு கேட்டு வளர்ந்தவர்கள்.

இந்த குலசேகரர் ஒரு அபூர்வ கலைஞர். கவிஞர். யாருக்கும் தோணாதது அவருக்கு தோன்றும். பிறந்த மறுகணமே முகம் கூட சரியாக பார்க்காமல் தேவகி கண்ணனைப் பிரிந்தாள். ஒருத்தி மகனாய்ப் பிறந்து பிறத்தி மகனாய் அவன் கோகுலத்தில் யசோதையிடம் வளர்ந்தான். அவன் சிறிய கைகளால் பிறர் வீட்டு சட்டிகளில் துழாவி வெண்ணெய் திருடி தின்ற அழகு, அவன் சிறிய தாமரைக் கரங்களையும் அவன் விஷமம் தாங்கமுடியாமல் அவன் இடுப்பில் ஒரு தாம்பு, மணிக்கயிறு கொண்டு உரலோடு கட்டியதையும், அடி வாங்கியதையும், ''ஏண்டா கிருஷ்ணா நீ இன்னார் வீட்டில் வெண்ணை, தயிர் திருடினாயா?'' என்று கேட்டபோது ''நானா எனக்கு அவர்கள் வீடு எங்கே என்றே தெரியாதே'' என்று கண் மலர்ந்து முகம் அப்பாவித்தனமாக பொய்யான பதில் சொன்னாலும் கன்னத்தில் இதழ் ஓரத்தில் தயிர் வெண்ணை துளிகள் நிறைய இருக்கும். வெள்ளையாக அவை, அந்த குறுகுறுப்பான கரு நிற முகத்தில் இருந்து அவனைக் காட்டிக்கொடுத்த போது யசோதை கோபம் மறந்து அவனழகில் மயங்கி சிரித்து களித்ததும், பொய் அழுகை அவன் அழுது, கண் சிவந்து, வாய் நெளிந்து '' அது நான் இல்லை '' என்று தலை ஆட்டிய அழகும், அப்படி அவள் கண்டு பிடித்தாலும் ''இல்லை அம்மா இனி அவ்வாறெல்லாம் செய்யமாட்டேன்'' என்று போலி வாக்கு கொடுத்து வேண்டிய அழகும் ---- இதெல்லாம் அந்த தேவகி, அவனைப் பெற்றவளின் ''தொல்லை இன்பத்தை''க் காணக் கொடுத்து வைக்கவில்லையே'' -- ஆழ்வார் தானே யசோதையாகி குமுறுகிறார்.

என்ன பக்தி பவ்யம் இருந்தால் ஸ்ரீரங்கத்தில் அரங்கன் ஆலயத்தில் வைஷ்ணவ அடியார்கள் பதித்த காலடிப் பொடியில் புரண்டு உருண்டு பேரின்பம் பெற ஆசை மனதில் தோன்றும்.

உறையூர் வாழ் அழகிய மணவாள பெருமாள் (அரங்கனின் மற்றொரு பெயர் ) மீது மட்டற்ற காதல். எனக்கு திருவேங்கடத்தில் பிறந்தாலே போதும் அதுவே தான் வைகுண்டம் என்கிறார். திருமலையில் ஆலய வாசலில் ஒரு கல் படியாக இருப்பதில் அவருக்கு உண்டான சந்தோஷத்தை மேலே விளக்கியிருக்கிறேன். அருமையான நிகரற்ற ஒரு திவ்ய பாசுரம் அது. அதனால் தான் இன்றும் பெருமாளின் சந்நிதியின் முன்பு இருப்பது ''குலசேகர படி.''

சிதம்பரத்தில் கோவிந்தராஜனை ராமனாக பார்த்து கட கடவென்று 11 பாசுரங்களில் ராமாயணத்தை பொழிந்திருக்கிறார் குலசேகரர்.

கிருஷ்ணன் மீது முகுந்த மாலை என்கிற சம்ஸ்க்ருத ஸ்லோகம் எழுதிய ஒரே தமிழ் ஆழ்வார் இவர் தான்.

அதில் ஒரு ஸ்லோகம் 33வது இது:

கிருஷ்ணா த்வதீய பாத பங்கஜா பஞ்சராந்தம்
அத்யைவ மே விஸது மானஸ ராஜ ஹம்ஸ :
பிராண பிரயாண ஸமயே கப வாத பித்தை:
கண்டவரோதன விதொள ஸ்மரணம் குதஸ்தே?

''என் கிருஷ்ணா, இதைக் கேள். இந்தக் கணமே, இந்த க்ஷணமே, என் மனம் எனும் அன்னம் உன் திருவடித் தாமரையை நாடட்டும். அப்பறம் அப்பறம் என்று தள்ளிப் போட்டுவிட்டால், என் மரண காலத்தில், என் குரல் கெட்டு , பித்த வாத கபம் நெஞ்சை இறுக்கி, பேச்சு நின்று, மூச்சு திணறும்போது, வாய் குழறி உன்னை எப்படியப்பா அழைப்பேன், நினைப்பேன்?. எனவே தான் இந்த எமெர்ஜென்சி வேண்டுகோள்.''

ஒரு ஆழ்வார் ரொம்ப கெட்டிக்காரர் அதனால் தான் ''அப்போதைக் கிப்போதே சொல்லி வைத்தேன் நாராயணா'' என்றார். அவரைப் பற்றியும் தான் பார்க்கப்போகிறோமே.

பாற்கடலில் பைந் நாகப் பாயின் மேல் பள்ளி கொண்ட ரங்கநாதா, எப்போது உன்னை கண்குளிரக் காண்பேன்?. என்றைக்கு உன் புகழ் என் வாய் மணக்கபாடுவேன்? உன் அடியவர் கூட்டத்தில் என்று நானும் ஒருவனாக சேர்வேன்? கை நிறைய மலர்களை எடுத்து திருப் பாதத்தில் தூவும் நாள் என்றோ? உன் பாதார விந்தத்தில் சிரம் வைத்து பணியும் நாள் என்றோ? என் நெஞ்சு ஒரு பாறை, அதை உருக வைக்கும் சக்தி உன்னிடம் தானே ரங்கா இருக்கிறது. அதை உருக வையேன்? அப்பா ரங்கா, உன்னை கண் குளிர காணும்போது அந்த ஆனந்த பரவசத்தில் கண்கள் குளமாகுமே ,அந்த அனுபவம் எனக்கு வேண்டும். கொடுப்பாயா ?' நான் ஊழ்வினைப்பயனால் உன்னை அணுக ஒண்ணாதவனாகி விட்டேனோ?. என் ஊழ்வினையை அழித்து, அறுத்து உன் அருகில் என்னைச் சேர்ப்பாயா?'

இந்த பூமியில் உன் பாதத்தின் அடியில் புரளும் நாள் எந்நாளோ? உன் அடியார் திருக்கூட்டத்தில் நானும் ஒருவனாக கூடி மகிழும் நாளை விரைவில் தருவாயா?

நான் மேற் சொன்ன ''தொல்லை இன்ப '' பாசுரத்தில் தேவகியின் வார்த்தைகள் :

''ஹே கிருஷ்ணா . நான் உன்னைப் பெற்றவள். அவ்வளவே. ஆனால் அந்த மற்றவள்? அவளைப்போல் நான் உன்னை அனுபவிக்கக் கொடுத்து வைக்காத ''மலடி'' யாகி விட்டேனே.

உன்னைக் கையிலேந்தினேனா? மடியில் இட்டேனா? கன்னத்தில் முத்தமிட்டேனா? இரவு பகல் கண் விழித்தேனா? பேருக்கு த்தானே நான் தாய் என்ற பேய் . என்னைப்போல இவ்வளவு துர்பாக்யசாலி உலகில் எங்கேனும் உண்டா? உன்னை இட்டு ஆட்ட ஒரு தொட்டிலுண்டா? ஒரு தாலாட்டு? ஹுஹும். உன் அன்றாட வளர்ச்சியைக் கண்டு களித்தேனா? மழலையில் மயங்கினேனா ? பாலூட்டும் பாக்கியம் கூட இல்லாத ஒரே தாய் நானே. நீ வளர்ந்து செய்த சேஷ்டிதங்களை பிறர் சொல்லிக் கேட்ட ஒரு வேடிக்கைத் தாய் நான். எனக்காக மீண்டும் அவற்றையெல்லாம் ஒரு தடவையாவது செய்து காட்டுவாயா கண்ணா?????

குலசேகர ஆழ்வார் மங்களாசாசனம் பண்ண திவ்ய தேச க்ஷேத்ரங்கள் :

1.திருவரங்கம் 2. திருக்கண்ண புரம் 3. திருச் சித்ர கூடம் 4. திரு வித்துவக்கோடு 5.திருவேங்கடம். 6.திரு அயோத்யா.7.திருப்பாற்கடல் .

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...