Monday, September 25, 2017

​ 'நான்'




​​
​ ​ 'நான்'' - J.K. SIVAN

''நான்யார் நான்யார் நீ யார், நாலும் தெரிந்தவர் யார் யார்? அலறிய டிவியை ஓடிவந்த்து அணைக்க வந்தவன் சட்டென்று நின்றேன். டிவியை அணைத்துவிடலாம். ஆனால் அந்த TMS பாடலில் ​கேட்ட கே ள்விக்கு என்ன பதில் என்று தேடவேண்டாம்? சிந்திக்க வைக்கும் ​இதை எப்போது எங்கே ஆரம்பிக்கலாம் என்று சுற்று முற்றும் தேடினேன். அலமாரியில் திருமூலர் தெரிந்தார். எடுத்து புத்தகத்தை பிரித்தேன். நான் யார் என்பதில் முதலில் இந்த உடம்பை பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள திருமூலர் சொல்வது என்ன
என்று பார்க்கலாம்.

''உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்தேன்.
உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே.''

சுவாமி, உண்மையிலே எனக்கு இந்த உடம்பை பற்றி தெரிந்ததெல்லாம் சொல்பம் தான். ஏதோ சுகமாக வெந்நீரில் குளித்து, நிறைய பவுடர், வாசனாதி திரவியம் அணிந்து, நல்ல பளபள பாட்டாடைகள் அணிந்து அதற்கு அங்கங்கே ஆபரணங்கள் பூட்டி கண்ணாடியையே சுற்றி வந்து அதன் அழகை முன்னும் பின்னும் பார்த்து இதற்கு ''நான்'' என்று ஒரு பெயரும் சூட்டி அடிக்கடி கலர் கலராக போட்டோ வில் ''நான்'' என்னையே பார்த்துக்கொண்டு ''அச்சில் வரும் ''என்னை'' --அதாவது என் பெயரையே--திரும்ப திரும்ப படித்துக்கொண்டிருக்கிறவன். ​என் பெயரோ படமோ பத்திரிகையில் வந்தால் அதை வெட்டி ஒட்டி வைத்துக்கொண்டிருந்த காலமும் உண்டு. ​

இந்த உடம்பை பற்றி அப்பப்போ கொஞ்சம் பய​மு​ம் உண்டு. வயோதிகம், வியாதி, நரை திரை, வழுக்கை., சுருக்கம் இதெல்லாம் பயமுறுத்தும்போது ஏதாவது சினிமா பாட்டு பாடிக்கொண்டு மறந்து விடுவேன்.

என்னவோ தெரியவில்லை. மேலே ​சொன்ன திருமூலர் மந்திரம் ( திருமூலரின் நான்கு வரிப்பாடல்கள் திருமந்திரம் எனப்படும்) என்னை அடியோடு கவிழ்த்துப் போட்டுவிட்டதே.

உடம்பு என்றால் ஏதோ ஒரு அசுத்தமான ஒன்று அதை அடிக்கடி சுத்தம் செய்து வாசனையாக வைத்துக்கொள்ளவேண்டும், வியாதி, வயோதிகம், நரை திரை, உள்ளது என்று தான் நினைத்தேன். அதற்குள்ளே இதுவரை ''நான்'' அறியாத ஏதோ ஒன்று இருப்பதை கண்டுகொண்டேன்.

அடடா இது ''நான்'' அல்ல, இது இன்னொருத்தன் -- ''பெரும்-ஆள்'' ​(பெருமாள்) ​இருக்கும் இடம் போல இருக்கிறதே என்று புரிந்து கொண்டேனா​?​. அதற்கப்புறம் என்ன ஆச்சர்யம். நான் கோவிலுக்கு போகவில்லை சார்..... இந்த உடம்பையே அவன் ஆலயமாக கருதி என்னுள்ளே அவனை வணங்கிக் கொண்டிருக்கிறேன்.

இத்தனை கழுதை வயதிலும்​ (எங்கள் காலத்தில் பரமேஸ்வர வாத்யார் யாரைப் பார்த்தாலும் அவனுக்கு நாலு கழுதை வயது, எட்டு கழுதை வயது என்று தான் சொல்வார். அவருக்கு எத்தனை கழுதை வயது இருக்கலாம் என்று எனக்கு தெரியாத வயது)​ தெரியாத இந்த சிறிய நாலு வரி மந்திரத்தை எனக்கு ஒரு பழைய புத்தகக் கடையில் ரெண்டு ரூபாவுக்கு அட்டை போன கிழிசலாக வந்த திருமூலர் அல்லவோ உபதேசித்தார். இனி அவரை விடுவதில்லை. அவர் சகலருக்கும் அல்லவோ குரு. அவர் நிறைய சொல்கிறாரே. அதை உங்களுக்கும் சொல்லவா​? உங்களுக்கு பிடித்தால் திருமூலர் உங்களை தினமும் இங்கே சந்திப்பார். எப்படி சௌகரியம்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...