Wednesday, September 27, 2017

ஒரு வீர சேர ராஜாவின் விஷ்ணு பக்தி - (2)


அமுதன் ஈந்த  ஆழ்வார்கள். J.K. SIVAN 

      ஒரு வீர சேர ராஜாவின் விஷ்ணு பக்தி - (2)

குலசேகர ஆழ்வார் பல க்ஷேத்ரங்களுக்கும் ஸ்தலங்களுக்கும் சென்றார். ராமனிடம் தன்னை இழந்தார். அவனுக்கு ''ராகவனே தாலேலோ'' என்று தாலாட்டு பாடி உறங்க வைத்தார். தான் உறங்கவில்லை. 

''அடே கிருஷ்ணா, நீ கல் நெஞ்சன், அங்கே பார்த்தாயா? உன்னைப் பெற்ற உன் தாய், உன் லீலைகளையெல்லாம் காணாமல் கேளாமல் ஏங்குகிறாளே தெரியவில்லையா? அவள் மனக் கிடக்கையை நானே உனக்கு சொல்கிறேன் '' என்று பல பாசுரங்கள் பாடினார். ''தொல்லை இன்பம்'' இப்படித்தான் உருவானது.
                           
ஆழ்வார் மிகவும் இளகிய நெஞ்சர் . திருப்பதிக்குச் சென்றவர் நம்மைப்போல் வரிசையில் டிக்கெட்டோடு நின்று கடியாரத்தைப் பார்த்துக்கொண்டு தரிசனம் எவ்வளவு நேரம் என்று விசாரிக்கவில்லை. வேங்கடவன் கோவிலின் கல் வாசல் படிகளைப் பார்த்ததுமே அவருக்கு என்ன தோன்றியது தெரியுமா? 

''அடடா இவை எவ்வளவு பாக்கியம் செய்தவை. இதோ இந்தக் குளத்தில் வளைய வரும் மீன் எவ்வளவு அதிருஷ்டம் செய்திருக்கிறது. இதோ பாரேன், இந்த செண்பக மரத்தின் கர்வத்தை. கோவில் வாசலில் கம்பீரமாக நின்று நிழல் கொடுக்கிறது பக்தர்களுக்கு.  கோவிலின் உள்ளேயும் அடிக்கடி எட்டிப்பார்த்து தரிசனம் வேறே.

இந்த பெரும் பாறை மட்டும் லேசானதா? இங்கிருந்து எவரும் இதை அசைக்கக்கூட முடியாதே. ஜம்மென்று இங்கிருந்தே அதற்கு பெருமாள் தரிசனம் உண்டே.

அந்த வைஷ்ணவரைப் பாருங்களேன். பெருமாள் எதிரே சதா சர்வ காலமும் தங்க பாத்திரத்தில் பெருமாள் வாய் கொப்புளிக்க நீரோடு, பல் துலக்கி பெருமாள் துப்பும் நீரை அந்த பாத்திரத்தில் தினமும் ஏந்த,எந்த ஜன்மத்தில் என்ன புண்யம் பண்ணினவரோ.!

ஒரு ராஜா, மஹா பராக்கிரம வீரன். எப்படி குழந்தையாக மாறிவிட்டார்,  பெருமாள் பித்தராக ஆகி விட்டார்  கவனித்தீர்களா? ஒன்றுமில்லாத நாம் என்னமாய்த் துள்ளுகிறோம்!! அதனால் தான் அவர் ஆழ்வார். நாம் தாழ்வார்.

ஆழ்வார் 67 வருஷ காலம் பூலோக வாசம் இருந்தார். அவர் மகள் இளையும் அவரோடு சேர்ந்து வைகுண்டம் ஏகி இருவருமே பெருமாள் திருவடிகளை அடைந்தார்கள்

ஆழ்வாரின் பாசுரங்களை கொஞ்சம் படித்தேன். மகிழ்ந்தேன். இதை உங்களுக்கு பரிமாறுகிறேன். இதோ மாதிரிக்காக ஒரு அருமையான பாசுரம். உடனே மனப்பாடம் செய்யுங்கள் மகிழுங்கள்:

''ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற் சூழ 
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்.
தேனார்ப் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில் 
மீனாய்பிறக்கும் விதியுடையேன் ஆவேனே''

இந்த திருப்பதியில் குளக்கரையில் ஒரு கொக்காகவோ ஒரு பறவையாகவோ பிறக்காமல் போனேனே? அது சரிஇல்லை. புத்தி ஒருவேளை மாறி, வேறெங்காவது பறந்து போய்விடுவேனே.
பேசாமல் குளத்திலேயே மூழ்கிக்கிடக்கும் ஒரு மீனாகவாவது இந்த திருப்பதி குளத்தில் பிறந்திருக்கலாமே? அதுவும் சரியாக இருக்காது என்று தோன்றுகிறதே. ஒரு வேளை கொக்கு போன்ற பறவை மீனைக் கவ்வி விழுங்கி விடுமே.

நல்ல யோசனை. இதோ இந்த செண்பக மரமாக நிற்பது தான் சாலச் சிறந்தது. கொஞ்சம் நீண்டநாள் உயரமாக நின்று எவர் தலையும் மறைக்காமல் பெருமாளைப் பார்த்துக்கொண்டே நிற்கலாம். அடியார்களுக்கு நிழலையும் தரலாம். ஆனால் அதிலும் ஒரு சங்கடம். இந்த பக்தர்கள் என்னிடம் பூக்களைப் பறித்துக்கொண்டு எங்கோ மலையடிவாரத்துக்கு போய் விட்டால் என்ன செய்வது?.

ஒருக்கால் இப்படி செய்வது உசிதமோ? பேசாமல் ஒரு கூரான முள் மரமாக காட்டில் இங்கேயே ஒரு ஓரத்தில் நின்றால்? ஆஹா அது தான் புத்திசாலித்தனம்.. ச்சே, அவசரப்பட்டு விட்டேனே. மரமாக இருந்தால் எவராவது வந்து வெட்டி அடுப்பில் போட்டு விடுவார்கள். அப்புறம் எப்படி இந்த வேங்கடேசனைப் பார்ப்பது?

நல்ல உபாயம் ஒன்று தோன்றுகிறதே. இந்த ஏழு மலைகளில் ஒன்றின் சிகரமாகவே ஆகிவிட்டால் என்ன? எவனும் அசைக்க மாட்டானே. நாமும் காலம் காலமாக இங்கேயே அசையாமல் நின்று பெருமாளை திவ்யமாக தரிசிக்கலாமோ? அடடா, ரொம்ப சுயநலம் இதில் கலந்து விட்டதே. பெரிய உயர சிகரமாக இருந்தால் பக்தன் மலை ஏற மாட்டானே. பகவானைக்காட்டிலும் அவனுடைய பக்தன் பாத ஸ்பர்சம் ஸ்லாக்கியமாச்சே.  ஆனால் அது கிடைக்காதே.

ஒரு வழி தோன்றுகிறது. அந்த உயரிய மலைமீதிருந்து வீழும் நீர் வீழ்ச்சியாகவோ, நதியாகவோ, காட்டாராகவோ இருந்தால் கூட பரவாயில்ல. பக்தர்கள் பாத கமலங்களைத் தொடும் புண்ணியம் அதிகம் கிடைக்கலாமே. இரு இரு. இது போகாத ஊருக்கு வழி., சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறேனோ. நீராக மாறினாலும், என் மீது பக்தர்களுக்கு கால் வைக்க எண்ணம் தோன்றினால் தானே என் ஆசை நிறைவேறும்?.

இத்தனை யோசித்தால் தான் ஒரு சுலப வழி கடைசியில் தோன்றுகிறது. இது தான் சிறந்தது.. இந்த கோவில் வாசல் எதிரேயே இருக்கிறதே. அதை மறந்தே போனேனே!! வெங்கடேசன் கோவில் வாசலில் ஒரு பெரிய பாறையாக இருந்துவிடுவோம். என்னை மிதித்துக்கொண்டு தானே எல்லா பக்தர்களும் உள்ளே சென்று பெருமாளைக் காண முடியும். இதுவே சரியான முடிவு. -- எப்படி குலசேகர ஆழ்வார் யோசனை?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...