Thursday, September 21, 2017

ஒரு ''பெரிய்ய்ய' ஆழ்வார்.



அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN
ஒரு ''பெரிய்ய்ய' ஆழ்வார்.

கருவிலே திருவுடையவர்கள் என்று சிலரைச் சொல்லும்போது அந்தச் சிலர் ஆழ்வார்கள் தான் என்பதில் துக்குணியூண்டு கூட சந்தேகம் வேண்டாம். அவர்கள் தமிழை வளர்த்தவர்கள். தமிழ் மொழியைத் தேன் மொழியாக்கி படிப்போர்க்கு அதன் தீஞ் சுவையை ஊட்டியவர்கள். பாக்களை இயற்றி ''மாலை''யாக்கி அதால் திரு'மாலை'ப் போற்றி மகிழ்ந்து அம்மகிழ்ச்சியில் பூவில் வண்டு தேனில் அமிழ்ந்தவாறு, தம்மையே ஆழ்ந்த பக்தியில் இழந்தவர்கள் ஆழ்வார்கள்.

இவர்கள் எழுதியவை பாக்கள் என்று சொல்வதை விட பாசுரங்கள் என்று பெருமையாக சொல்வது அவற்றின் இனிமையை செவி வழியாக மனதிற்குள் செல்லும் இயல்பை குறிக்கும்.
ஆழ்வார்கள் இப்படியென்றால் அவர்களுள் பெரியவர் என்று ஒருவரை மற்றவர்கள் கொண்டாடும் பெரியாழ்வார் என்று போற்றப்பட்ட விஷ்ணுசித்தரைப் பற்றி நான் சில தெரிந்த விஷயங்களையே மீண்டும் சொல்லி ஞாபகம் தான் படுத்த முடியும்.

நம்மாழ்வார் 16 ஆண்டுகள் கல்வி ஏதும் கல்லாது மாலருளால் செந்தமிழ் செய்தவர்!
பெரியாழ்வார் என்கிற விஷ்ணுசித்தர் வேதக்கல்வியே இன்றி விஷ்ணுவின் பால் வைத்த சித்தத்தாலேயே வேத வேதாந்த உபநிஷதங்களை விளக்கி திருமாலே பரம்பொருள் என்று உணர்த்தியவர்.

பொருள் என்றால் நாம் புரிந்து கொள்வது ஏதோ ஒரு கண்ணுக்குத் தெரிந்த வஸ்து. ஒன்றிலிருந்து மற்றொன்றாக உருவாவது. உலகின் எல்லா வஸ்துக்களிலும் பெரும் பொருள் எது தெரியுமா? அவை உருவாகக் காரணமான பரம் பொருள். அதுவே விஷ்ணு. எல்லா ஆத்மாக்களின் ஒட்டு மொத்த கூட்டுச் சேர்க்கையான பரமாத்மா. இத்தகைய பரமாத்மா விஷ்ணுவின் கல்யாண குணங்களான சாகரத்தில் ஆழங்கால் பதித்தவர்கள் ஆழ்வார்கள்.

விஷ்ணுவை ஒரு மனித உருவாக பாவித்தால் அந்த முழு அவயவமும் நம்மாழ்வார்.
பூதத்தாழ்வார் திருமுடி.
பொய்கை ஆழ்வார் கண்கள்.
பெரியாழ்வார் தான் முகம்.
திருமழிசையாழ்வார் கழுத்து.
குலசேகரர் /திருப்பாணாழ்வார் இரு கைகள்.
தொண்டரடிப் பொடியாழ்வார் மார்பு.
திருமங்கை ஆழ்வார் தொப்புள்.
மதுரகவி ஆழ்வார் திருவடி.
ஆண்டாள்??
ஜீவனாகத்தான் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...