Saturday, September 9, 2017

ஹஸ்தாமலகர்




ஹஸ்தாமலகர்  j.k. sivan 

இந்த காலத்தில் மராத்தான் என்று கொஞ்ச தூரம் ஓடுகிறார்கள், நடக்கிறார்கள், அதற்கு தொப்பி, காலில் ஷூ, வசதிகள் போட்டோ, மொபைல் , தண்ணீர் பாட்டில் இத்யாதி.  அக்காலத்தில் காடு மலை  வனம்  வனாந்திரம் என்று மஹான்கள் இந்தியா பூரா  நடந்திருக்கிறார்கள்.  

இப்படி ஆதி சங்கரர்  நடந்து  கர்நாடக தேசத்தில் உடுப்பி பக்கம் போனபோது ஒரு கிராமம்  ஸ்ரீ பலி, (ஷிவல்லி என்றும் சொல்கிறார்கள்)எனும் கிராமத்தில் பிரபாகரன் எனும் ஒரு பிராமணரை சந்திக்கிறார். அவருக்கு ஒரு பிள்ளை  13வயது. பூரண  தேஜஸ். வாய் திறந்து பேச மாட்டான். அவனது குணாதிசயம் தெரியாதவர்கள் அவனை ஒரு முட்டாள் என்று லேபிள் குத்தி விட்டார்கள்.  பிராமணன் பிரபாகர் சங்கரரை வரவேற்று உபசரித்து தனது வாய் பேசா பிள்ளைக்கு அருள் புரியுமாறு வேண்டினார்.

சங்கரர் அந்த வீட்டில் நுழையும்போது அந்த பையன் கண்ணில் பட்டான். வாசலில் திண்ணையில் கையை முழங்கால் மேல் கட்டிக்கொண்டு அவரை உற்று பார்த்தான். என்ன தோன்றியதோ அவரை பார்த்தவன்  வாசற்படியில் அவர் வரும்முன்பு  அப்படியே  தரையில் விழுந்து வணங்கினான். அவருக்கு தெரிந்து விட்டது ஞான திருஷ்டியில்.  இவன் ஒரு விவேகமான  உயர்ந்த நிலையில் உள்ள ஆத்மா  என்று.

''குழந்தே, என்னோடு பேசமாட்டாயா?''

'' எதைப்  பற்றி?''  --  இதுவரை எவரோடும் பேசாதவன் பேசினான். 

''எதைப்பற்றி பேசவேண்டுமோ அதை பற்றி''

''பேசி என்ன பயன். வார்த்தையால் பேசி உணர முடியாதை பேச்சால் அறிய முடியுமா?'' என்றான் பையன்.

"ஆமாம். வாஸ்தவம் தான்.  நீ  யார் என்று சொல்லேன்?''


''ஆஹா''   என்று  பையன்  ஆத்ம ஞானத்தை பற்றிய வேதாந்த சாரத்தை   12 ஸ்லோகங்களில்  சொல்கிறான். 

பிறகு என்ன? பையனின் விருப்பப்படி, சங்கரர் அவன் பெற்றோர் அனுமதியுடன் சீடனாக ஏற்கிறார். அடுத்த ஊர் செல்கிறார்.  காலம் செல்கிறது. சங்கரர்  ஸ்தாபித்த  நான்கு மடங்களில் ஒன்றான துவாரகா மடத்திற்கு  பேசாத பையனாக இருந்த ஹஸ்தாமலகர் பொறுப்பேற்கிறார். ஆத்ம சம்பந்தமான நூல்கள் எழுதுகிறார். ஹஸ்தாமலகர்  நூல்களுக்கு அவரது குரு சங்கரர் வியாக்யானம் எழுதுகிறார். ஹஸ்தம் என்றால் கை . ஆம்லா என்றால் நெல்லிக்கனி. உள்ளங்கை நெல்லிக்கனி போன்று சகல சாஸ்திரங்களையும்  ரெடியாக எடுத்து உரைப்பவர்  ஹஸ்தாமலகர் என்ற பெயர் பெற்றதில் என்ன ஆச்சர்யம். நிஜப்பெயர் யாருக்கு தெரியும்?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...