Monday, September 11, 2017

பாரதியும் பாரதனும்




பாரதியும் பாரதனும் -J.K. SIVAN

உலகம் புகழும் அமர கவி, தேசிய கவி, புரட்சி கவி, பாரதியார் நினைவு நாள் இன்று. இறந்த நாள் என்று சொன்னால் தவறு. அவர் எங்கே இறந்தார்? எப்போதும் நம் நெஞ்சில் வாழ்கிறாரே .

அவர் வாழ்ந்த ஒவ்வொரு கணமும் அபூர்வமானவை. யார் யாரோ மனதிற்கு தோன்றியபடி எல்லாம் மகான்களை, அமரத்துவம் வாய்ந்தவர்களை பற்றி ருசிகர தகவல் தருகிறேன் என்ற எண்ணத்தில் கண்டதையும் சொல்லி, எழுதி கொச்சைப்படுத்துவது கொலை செய்வதைவிட கொடூரம். அது தாராளமாக நமது நாட்டில் நடப்பது.

ஒரு பெண் எங்கள் இல்லத்தில் பாரதியார் எங்கள் தாத்தாவுடன் வந்து பேசுவார், தாத்தாவோடு மாமிச உணவை ரசித்து சாப்பிடுவார் ''என்று எழுதியதாக பாரதியார் குடும்பத்தினரே வருந்தி இருக்கிறார்கள். பாரதியார் பக்கா சைவம். பசித்தாலும் புல்லைத்தின்னாத புலி.

இப்போது வெளிவரும் விபரங்களின் நிலவரத்தை பார்த்தால் மகா பெரியவா பரமாச்சாரியார் பற்றியும் எண்ணற்ற செய்திகள் வருகின்றனவே அவற்றில் எது உண்மையிலேயே நடந்தது என்ற கேள்விக்குறி பெரிதாக வளர்ந்து
கொண்டே போகப்போகிறது! இதற்கு எது, ஏது ரிஷிமூல, நதி மூல ஆதாரம்?

முண்டாசு கவிஞன் ஒரு வர கவி. வாக்தேவியின் அருள் பிரசாதம். தேசபக்தர், சமுதாய முன்னேற்ற கனா கண்டவர். பல மொழிகளில் வல்லுநர். ஆங்கில கவி ஷெல்லி ரசிகர்.

வெள்ளைக்காரன் தொட முடியாத பாண்டிச்சேரியில் பத்து வருஷங்கள் வாழ்ந்து சுதந்திர கனலை பரப்பியவர். அப்போது தான் அவருக்கு அரவிந்தர், குள்ளசாமி, குவளைக் கண்ணன், கோவிந்த ஞானி. மிளகாய்ப்பழ சுவாமி, பீச் சுவாமி, யாழ்ப்பாண சுவாமி என்று பலர் பரிச்சயமானார்கள்.

பல ரிக்ஷா வண்டிக்காரர்கள் இலவசமாகவே அவரை வண்டியில் ஏற்றுக் கொண்டு செல்ல விரும்பினார்கள்.அவர் வாழ்த்தும் ஆசிர்வாதமும் அவரது மேல் துண்டும் போதும் என்று போற்றினார்கள்.

பணத்தை லக்ஷியம் பண்ணாத பட்டினிக் கவிஞன் பாரதியார். இருப்பதை வாரி வழங்கும் பரந்த இதயம் கொண்ட வள்ளல். ஒரு மாதம் சம்பளம் வாங்கிக்கொண்டு ரிக்ஷாவில் ஏறியவர் அப்படியே சம்பளம் முழுதும் அந்த ஏழை வண்டிக்காரனிடம் கொடுத்து விட்டு வெற்று பர்ஸுடன் வீட்டுக்கு சென்று செல்லம்மாவிடம் வாங்கி கட்டிக்கொண்டவர். யாரோ ஒரு பத்திரிகை ஆசிரியர் அவர் கவிதைகளுக்கு சன்மானம் மணி ஆர்டரில் அனுப்பி அந்த பணத்தை பெற்றுக் கொண்ட பாரதியார் சிரித்துக்கொண்டே அந்த ரூபாய் நோட்டுகளை காற்றில் பறக்கவிட்டவர்.

ஜாதி வித்யாசம் பாரத அற்புத கலைஞர். எல்லோரிடமும் பழுகுவார். இதனால் தானோ அவர் மரண ஊர்வலத்தில் பன்னிரண்டு பேர் மட்டுமே !!!

பாரதியாரை நினைவு கூறுகிறேன்:
இன்றைய மெரினா கடற்கரை ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னாலும் அங்கே தான் இருந்தது. ஆனால் நிறைய வாகனங்களோ, கடைகளோ, வியாபாரிகளோ ஏன் மக்கள் கூட்டமோ இல்லாத காலம். வெண்ணிற மணலில் இரவு ஏழுமணிக்கு சில்லென்ற காற்றில் ஒரு முண்டாசு கட்டிய மீசைக்காரர் கையை முழங்காலில் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தார் . சில்லென்ற காற்று உடலில் பட்டாலும் அவர் உள்ளம் கொதித்துக் கொண்டிருந்தது. நாடு அடிமையாக இருந்து வருகிறதே என்ற துயரம், அவரை வாட்டி எடுத்தது.

வறுமை, வயிற்றுப்பசி, தீராத சுதந்திர தாகம், கண்ணன் மேல் மோகம். இதெல்லாம் அவருக்கு இலட்சியம் இல்லை. இன்று அவனைக்காணாமல் தூங்கப்போவதில்லை என்று ஒரு உறுதி நெஞ்சில் எழுந்தது.

''கண்கள் உறங்கவொரு காரண முண்டோ,
கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே? ''

வாய் முணுமுணுப்பில் நெஞ்சில் ஊறிய சொற்கள் கவிதையாக வெளிவந்தது. அந்த முண்டாசு மீசைக்காரர் தனது வழக்கமான உணர்ச்சி வசப்படும் தன்மையைக் கொட்டிக்கொண்டிருந்தார். ''ஓ'' வென்ற பேரிரைச்சலோடு ஓயாத அலைகள் கரையை மோதி சாதுவாக திரும்பின.

நிமிர்ந்து அமர்ந்துகொண்டு வலது கையை உயர்த்தி எச்சரிக்கை செய்தார் முண்டாசு.

''வெள்ளையா, நீ உன் அதிகார டாம்பீகத்தை விட்டு சாதுவாகவே திரும்பிப்போ'' . அவர் சொன்னது யாரை?
நீலக்கடலில் அலைகள் வெண்ணிற திவலைத்தொப்பி போட்டுக்கொண்டு கரையை நோக்கி ஆரவாரமாக வந்ததையா? அல்லது இந்தியாவை ஆண்டுகொண்டு சர்வ அதிகாரத்தோடு அக்ரமம் பண்ணிக் கொண்டிருந்த வெள்ளைக்காரனையா?

அலைகள் சப்தம் ஓய்ந்து சல சளவென்று நீரோடை போல கரையிலிருந்து கடல் நோக்கி ஓடின.

திடீரென்று முண்டாசின் கவனம் ஏனோ கிருஷ்ணன் மீது போயிற்று. எங்கோ இருந்து பறந்து வந்து ஒரு கடல் காக்கை அவருக்கு சற்று தூரத்தில் அமர்ந்தது.

வெள்ளைக்காரன் ஆட்சி ஒழிந்து இந்தியத்தாய் சுதந்தர தேவதையாக சுடர்விட்டு வருவாளா? சூரியன் கடல் மீது உயர்ந்து ஒளிவீசி திகழ்வானா?

''கிருஷ்ணா நீ இந்த கடல் மீதே சூரியனாக எழுந்து வா -- எண்ணம் பாட்டாக மாறியது. பாடினார் அந்த முண்டாசு மனிதர்

''எழுவாய் கடல்மீ தினிலே-எழுமோர் இரவிக் கணையா உளமீ தினிலே
தொழுவேன் சிவனாம் நினையே-கண்ணா! துணையே அமரர் தொழும் வானவனே!

இவரையே கவனித்துக்கொண்டிருந்த அந்த கடல் காக்கை இன்னும் கொஞ்சம் தைரியத்தோடு அவர் அருகில் வந்து நின்றது.

வெள்ளைக்காரனை வெறுத்த அவருக்கு கருப்பு நிறக் காக்கையை பார்த்தவுடன் ரொம்ப மகிழ்ச்சி உண்டாயிற்று. கல கலவென முண்டாசுக்கே உரிய அட்டகாச சிரிப்பு.

''கிருஷ்ணா நீயும் தானே இதெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருக்கிறாய்? என்று காக்கையிடம் பேசினார். கருப்பாக இருக்கிறாயே காக்கையே. நீ கிருஷ்ணன் தான்.

''காக்கைச்சிறகினிலே நந்தலாலா'' என்ற அழிவற்ற பாடல் அங்கு தோன்றியது.

கிருஷ்ணன் என்றால் அவருக்கு அவ்வளவு பிரியம் பாசம். இரவு நேரம். கடல் காற்று குளிர்ந்து வீசியது. அதிலும் கிருஷ்ணனைப் பார்த்தார் முண்டாசு.

''காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீ கனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!''

என்னவோ தெரியவில்லை, ஜனசஞ்சாரம் இல்லாத அந்த வேளையில் கிருஷ்ணனும் முண்டாசுக்காரரின் முன்னே தோன்றி சிரித்தான்.
கண்ணனைக் கண்டதும் களிப்பு அந்த கவிஞனுக்கு.

''கண்ணா நீயா?''.

''ஆமாம் நீ தானே கூப்பிட்டாய் மறந்துவிட்டாயா. நீ தானே இப்போது ''திரைகடலில், ஆகாயத்தில், வெள்ளை நுரையோடு வரும் அலையில்'' என்னைக்கண்டவன். அந்த முண்டாசுக் கவிஞனின் பாடலை கண்ணன் பாடினான்:

“நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்; நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்; திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;

''ஆமாம் ஆமாம்'' நானே தான் பாடினேன். நான் தான் உன்னை எங்குமே காண்பவன் ஆயிற்றே கண்ணா ''

கண்ணன் சிரித்தான்.

''ஏன் சிரிக்கிறாய் கிருஷ்ணா ? என் விரல்களைப் பார் உன்னையே நினைத்து எழுதுபவை இவை. இந்த நாட்டின் பெருமையை, இந்நாட்டு மன்னர்கள் எம் சகோதரர்கள் சகோதரிகளை, எம் தாய் தந்தையை போற்றி எழுதுபவை.....''

''கவிஞனே, அதெல்லாம் விட, நீ '' தீக்குள் விரலை விட்டு என்னைத் தீண்டிய இன்பத்தை'' நான் ரசிப்பவன்.

''நான் எளிதில் உணர்ச்சி வசப்படுபவன் கண்ணா''

'' நீ என்று அமைதியாயிருந்தாய் பாரதி. உன்னுடைய சிறப்பே, உன்னுடைய அலாதி மதிப்பே, உன் உணர்ச்சி வசப்படும் தன்மையும் நியாயமான கோபமும் தான்.? தூக்கி எறிவதில் நீ சமர்த்தனாயிற்றே''.

''உன்னை விடவா?''

அப்படிச் சொல்லாதே பாரதி. நான் அமைதியாக, பொறுமையாக, இருந்த சமயங்கள் தான் அதிகம். உனக்குத் தெரிந்ததுதானே அது பாரதி?

'''கிருஷ்ணா உன்னை நான் அறிவேன், உன் மேல் எனக்கு ஒரு அலாதி அபிமானமும் தனி மதிப்பும் அளவற்ற பிரியமும் கூட எனக்கு அதானால் தான்.'

''பாரதி, உனக்கும் எனக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதால் தான் நாம் ஒருவரை ஒருவர் நேசிக்கிறோம்?''

''எப்படி கிருஷ்ணா நீ சொல்கிறாய். நீ கடவுள், நான் மனிதன், எவ்வாறு நமக்குள் ஒற்றுமை?

''பாரதி உனக்குப் புரியும்படியாகவே சொல்கிறேன். வியாபாரம் செய்ய வந்து, வஞ்சித்து, மித்ரபேதம் பண்ணி கிளர்ச்சி, கலகம் உண்டாக்கி பிரிவினை உண்டாக்கி, நம்மையே ஆண்டவன் வெள்ளைக்காரன் என்று சொல்வாயே. அவனை அரக்கன் என்பாயே. அவனை நீ வெளியேறு எங்கள் நாட்டை விட்டுப்போ என்று எதிர்த்தாய். நான் அக்ரமம், அநீதி இழைத்த கம்சனையும் மற்ற அரக்கர்களையும் நாட்டை விட்டு என்ன, இந்த உலகத்தை விட்டே அழித்தவன் ''

''ஆஹா. அப்பறம்''.

''நான் என் கீதையில் ''ஸ்திதப்ரஞனாக இரு. தைர்யம் கொள், பலனெதிற்பாராமல் உன் கடமையைச் செய் என்றேன். நீயும் அதையே சொன்னவன்.
''நானா ?''
''ஆமாம் பாரதி, ''அச்சமில்லை அச்சமில்லை'' என்று பாடினாய்.
''ஆஹா. மேலே ?''
''நான் தர்மம் காக்கப் படவேண்டும் என்று சொன்னவன். நீயும் 'சூது கவ்வினாலும் தர்மம் எப்போதும் வெல்லும்' என்று ''சபதம்'' செய்தவன் .
''பலே கிருஷ்ணா, அப்பறம் என்ன?''

'' நான் வாயால் சொன்னேன், என் வார்த்தையில் அழுத்தம், நீதி. பொதுநலம், இருந்ததைப்போலவே நீ எழுதிய எழுத்திலும் வேகம், அழகு, சுத்தம், தன்னலமற்ற தியாகம், மக்கள் மேல் அன்பு, என் மேல் பாசம், தேச பக்தி எல்லாம் ஒன்றுமே குறையாமல், என்றுமே அழியாமல் எழுதியிருக்கிறாய். நான் சொன்னவன், நீ எழுதினவன்.''

''அடடே, கிருஷ்ணா ஆச்சர்யமாக சொல் விளையாட்டு விளையாடுகிறாய். என்ன சொல்லப்போகிறாய் இன்னும் ?

''பாரதம் என்னால் நடந்தது. 'பா' ரதம் உன்னால் ஓடியது. பாடலுக்கு பாரதி என்று பெயர் எடுத்த அமர கவி அல்லவா.நீ ''

''ஓஹோ. நம்மைப் பெருமைப் படுத்துகிறாய். சபாஷ் பாண்டியா ''

''இதைக்கேள். சிரிக்காதே.

நான் சிறையிலிருந்து உயிர் தப்ப மதுராவிலிருந்து கோகுலம் இடையர் சேரிக்கு சென்றேன். நீ ஆங்கிலேயன் சிறையிலிருந்து தப்ப மதராசிலிருந்து பிரெஞ்சுக்காரன் நாடான புதுச்சேரிக்கு சென்றவன் '

''கிருஷ்ணா, உன் பேச்சு உன்னைப் போலவே கவர்ச்சியாக இருக்கிறது.' உனக்கு மதுரா, எனக்கு மதராஸ், நீ இடைச்சேரி, நான் புதுச்சேரி -- பிரமாதம். மேலே சொல் '

''பாரதி கேள், நான் பெண்மையைக் காப்பாற்ற திரௌபதிக்கு உதவினேன். நீயும் பெண்ணுரிமை பற்றி பாடிய முதல் கவிஞன். நான் சங்கை ஊதினேன். நீ கும்மியும் முரசும் கொட்டினாய்.

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போ மென்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார் (கும்மியடி))

நீ சொன்னதது தானே இது பாரதி? கண்ணன் பாடிக்காட்டினான்.

''கிருஷ்ணா இன்னும் உண்டா. என் பாட்டை எவ்வளவு மனப்பாடம் பண்ணியிருக்கிறாய்.''

''பாரதி நீயே என் மனதில் இருக்கும் போது உன் பாட்டு என் மனத்தில் பாடமாகி இருக்காதா? கேள் சொல்கிறேன். நிறையவே இருக்கிறது, உனக்கும் எனக்கும் ஒற்றுமை. சாதிகளை நான் உண்டாக்கவில்லை. தொழில்வழி சமுதாயத்தை உருவாக்கு என்றேன். நீயும் என்போல் 'ஜாதிகள் இல்லையடி பாப்பா' என்றாய். நான் தான் சகல உயிர்களிலும் உள்ளவன் என்றேன். நீயும், 'காக்கை குருவி எங்கள் ஜாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்' என்று சொன்னவன். உனது இந்தப்பாடல் நான் சொன்னது போலவே பாடியிருக்கிறாய்.

'ஜாதி மதங்களைப் பாரோம் - உயர் ஜன்மம்இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே -அன்றி வேறு குலத்தின ராயினும் ஒன்றே'

எல்லாவற்றிலும் நான் வியாபித்துள்ளேன் என்று நான் சொன்னதைபோலவே நீ வெகு எளிமையாக,

'விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியினுள் உயிரெலாம் நான்' என்று பாடினவன்.

''என்னை எல்லோரும் கடவுளாகப் பார்த்தார்கள். நீ ஒருவன் தான் என்னை சேவகனாகவும், சீடனாகவும், தாயாகவும், காதலனாகவும், தோழனாகவும் பெண்ணாகவும் கூட ஆசையோடு கண்ணம்மா என்று வாய்நிறைய அழைத்தவன் 'நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்த நேரமும் நின்தனைப் போற்றுவேன்'' என்றவன். உன்னை எப்பவுமே எனக்குப் பிடிக்குமே.

கடற்கரையில் யாரும் இல்லை முண்டாசுக் கவிஞரைத் தவிர. ஆங்கிலேய அரசு போலீஸ்காரன் வந்து விரட்டினான் 'தனியாக கடல்கரையில் உட்காராதே எழுந்து போ' என்று ஏனெனில் முன்னிரவு முடிந்து பின்னிரவு தலைதூக்கும் நேரம். பாரதி எழுந்தான். கிருஷ்ணன் மறைந்தான்.
கிருஷ்ணன் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்த பாரதி கண்களில் நீர் துளிர்த்தது.

'' கண்ணா, என்னம்மா, நான் என்றோ உன்னைச்சரணடைந்துவிட்டேன். 'நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்!'

பாரதிக்கு அலுத்து விட்டது இந்த பூலோக வாழ்க்கை. உன்னை நான் அடைவதெப்போது என்று ஓர் பாடலாக அதை பாடினார்.. அவர் தான் எதையுமே கவிதையாகத்தானே சொல்லுவார்.

'எளியனேன் யானெனலை எப்போது போக்கிடுவாய்,இறைவனே!இவ்வளியிலே, பறவையிலே, மரத்தினிலே, முகிலினிலே, வரம்பில் வான
வெளியிலே, கடலிடையே, மண்ணகத்தே, வீதியிலே, வீட்டி லெல்லாம் களியிலே, கோவிந்தா! நினைக்கண்டு நின்னொடுநான் கலப்ப தென்றோ? -- நான் உன்னுடன் வந்துவிடுகிறேனே. என்னை உன்னோடு சேர்த்து வைத்துக்கொள்ளேன் என்று வேண்டினார் பாரதி.

இதற்குக் கண்ணன் சொன்னதுதான் பாரதியின் கண்ணில் நீர்க்குளத்தை அமைத்தது.

'பொறு 'பாரதி, உன்னுள் நான் உண்டு உன் பாக்களில் நான் உண்டு.உன் பா ரதத்தையும் நான் தானே ஓட்டுகிறவன். என்னருகிலே நீ எப்போதும் இருக்கவேண்டும். நீயும் நானும் அடிக்கடி சந்திக்கவேண்டும் என்ற என் விருப்பத்துக்காகவே, உன்னை என் பக்தர்கள் கட்டிய பார்த்தசாரதி கோவில் எதிரிலேயே நான் உன்னைப் '' பார்த்துக்கொண்டே'' இருக்க வைத்துக்கொண்டேன். புரியவில்லையா. அதானால் நான் உன்னைப் ''பார்த்த'' சாரதி. நீ என்றோ என்னோடு சேர்ந்துவிட்டாயே. கலந்து விட்டாயே.

அங்கேயிருந்து தான், பாரதியை 39 வருஷங்கள் நம்மிடையே நடமாட விட்டு விட்டு, தனக்காக தன்னுள் பொக்கிஷமாக கண்ணன் ஐக்கியப்படுத்திக் கொண்டான் கண்ணன். கஜேந்திரனையே காக்க வந்தவன் அந்த கஜேந்த்ரனையே காரணமாக காட்டி கவிஞன் பாரதியை தன்னுள் கலக்க வைத்து பாரதியின் விருப்பம் நிறைவேற்றினான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...