Saturday, September 30, 2017

மழலைச் செல்வம்


மழலைச் செல்வம்.-- J.K. SIVAN

ஒவ்வொருவரும் தமது வாழ்வில் மனமார விரும்புவது புத்ர பாக்யம். பேரன் பெயர்த்தி பிறந்த சந்தோஷம் பெரிசுகளிடம் பார்க்க வேண்டுமே! குழந்தைகளில் ஆண் பெண் வித்யாசமே கிடையாது. என்னை பெண்ணாக்கி தெருவில் நடக்க விட்டிருக்கிறார்கள் என் சின்ன வயதில். எத்தனை வீடுகளுக்கு வெட்கம் தெரியாமல் பாவாடை சட்டை, கவுன் போட்டுக்கொண்டு கன்னி மையோடு கையில் வளையலோடு சென்றிருக்கிறேனோ!

குழந்தை ஆண் தான். சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை. இருந்தும் செல்லம் கொஞ்சும் போது நாம் ஆணைப் பெண்ணாக்கி பெண்ணை ஆணாக்கி அழைத்து மகிழ்கிறோம். இதையும் மீறி குழந்தையை செல்ல நாய்க்குட்டி, கிளி, என்றும் சில பேர் அக்றிணைப் பொருளாகக் கூட கொஞ்சுவது அதீத ப்ரேமையால். இது இயற்கையாக ஒவ்வொரு வீட்டிலும் நடக்கும் உண்மை அல்லவா?

எனக்கு தெரிந்த ஒருவர் ஸ்ரீ குருவாயூரப்பனை தனது செல்லக் குழந்தையாக ஏற்றுக்கொண்டு வீடெங்கும் எங்கு நோக்கினும் குட்டி கிருஷ்ணனின் பல வித ரூப தரிசனம். அவர் வீட்டில் நானும் என் நண்பர் சுந்தரம் ராமச்சந்திரனும் இந்தக் கண் கொள்ளாக் காட்சியில் மகிழ்ந்து திளைத்தோம். அவர் படுக்கையில் அருகே ஒரு சிறு குட்டிக் கட்டில் (தொட்டில்) , அதில் மெத்தை, போர்வை, தலையணை, அதில் குட்டி கிருஷ்ணன் படுத்துக்கொண்டிருப்பான். அவனுக்கென்று தனி உடைகள், ஆபரணங்கள். பார்த்து பார்த்து ஊர் ஊராக சென்று வாங்கி சேர்த்து வைத்திருக்கிறார் அந்த கிருஷ்ண ப்ரேமி. அவரோடு அவனும் சாப்பிடுவான். இருவரும் பேசிக்கொண்டிருப்பார்கள்.

வீட்டில் ரேஷன் கார்டில் இல்லாத, வாக்காளர் பட்டியலில் இல்லாத, ஒரு குடும்ப நபர் அந்த குட்டி கிருஷ்ணன். வெளியே எங்கு போனாலும் அவனிடம் சொல்லிக்கொண்டு போவது. அவனுக்கும் ஏதாவது வாங்கி வருவது.... இதுபோன்று

வேறு சில நண்பர்களையும் நான் அறிவேன்.
அவர்கள் தெய்வங்களையே தம்மோடு இணைத்துக்கொண்டு வாழ்பவர்கள். அவர்கள் அனைவருக்கும் சாஷ்டாங்க நமஸ்காரங்கள்.

நம்மில் பலரோ, கோவிலுக்கே செல்லாதவர்கள், கோவிலுக்கு போனாலும் மனதை வெளியே உள்ள செருப்பில் நிலைத்து நிறுத்தி, வெங்கடேசன் முன் நின்று கொண்டு அடுத்த கணமே ஜருகண்டி என்று பிடித்து தள்ளப்படுவதற்கு முன் அவனைப் பார்க்கக் கிடைத்த சில நிமிஷங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு இயந்திரமாக கை கூப்புபவர்கள்.

ஒருவருக்கு கண்ணன் குழந்தையாக அதுவும் பெண் குழந்தையாக தோன்றினான்..அவர் அவனைக் கொஞ்சுவதைப் பார்ப்போமா ?

''என் கண்ணம்மா, குழந்தை, நீ சின்னஞ் சிறு கிளியடி, , எனது செல்வக்களஞ்சியம். அம்மம்மா. எத்தனை கஷ்டங்களடி துன்பங்கள், அவை எல்லாவற்றிலிருந்தும் நான் தேறி, விடு பட்டு, வாழ்வில் அடுத்த கட்டம் முன்னேற வைத்தவளே நீ தான்.

கண்ணம்மா, உன்னை நான் எப்படிப்பார்க்கிறேன் தெரியுமோ? என் கனி அமுதாக. என்னுடன் பேசுகின்ற தங்கப் பதுமையாக. அழகான ஓவியமாக. நான் ''வாடி, வாடி என்னருகே என்று உன்னைத் தேடி தேடி வருவேன். உன்னை அள்ளி அப்படியே மார்புற அணைத்துக் கொள்ள நெஞ்செல்லாம் ஆசையோடு வருவேன். நீ என்ன செய்வாய் தெரியுமா? ஆடிக்கொண்டே என்னருகே வருவாய். என் தேனினும் இனிமையான சுவையே''

கண்ணம்மா என்று கூப்பிடுவேனே, நீ ஓடி வருவாயே, அதைப் பார்த்து என் உள்ளம் எப்படியெல்லாம் பனிமலை மேல் இருப்பதுபோல் குளிரும் தெரியுமா?

எங்காவது வெளியே சென்று வீடு திரும்புவேன். என் கண் உன்னைத் தான் முதலில் தேடும். நீ விளையாடிக் கொண்டிருப்பாய் எங்காவது. நான் உன்னை நெருங்குவதற்கு முன்னரே, என் மனம் ஆவி எல்லாம் அங்கே ஓடிப் போய் உன்னைக் கட்டித் தழுவுமே.''

உச்சி முகர்தல் ஒரு சிறந்த அனுபவம். எத்தனை பெற்றோர்கள் அதனை அனுபவித்திருக்கிறார்கள் . அது கொடுக்கும் இன்பம் ஷாம்பூ வாசனைக்கும் அப்பாற்பட்டது . என் பேரன், என் பேத்தி, என்று பாட்டி தாத்தா ஒரு புறம் உரிமை கொண்டாடட்டும். தந்தை தாய்க்கு கிடைக்கும் இன்பம் எவ்வளவு அவர்களை பெருமிதத்திலும் யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே என்ற கர்வத்திலும் உயர்த்திக் காட்டும்.

''சார் உங்க பையன், ரொம்ப ஸ்மார்ட் பெல்லோ, படு கெட்டிக்காரன். ஒரு கணக்கு கொடுத்தேன். பளிச்சுன்னு பதில் சொன்னான் சார். அசந்து போய்ட்டேன். ஐ க்யூ ஜாஸ்தி அவனுக்கு. எப்படி சார் உங்க பையனை இப்படி வளர்த்தீர்கள்?'' ரொம்ப அறிவாளி உங்க பையன், ரொம்ப வினயமானவன், அழகன், ஆள் மயக்கி, படிப்பு விளையாட்டு எல்லாத்திலேயும் உங்க பையன் தான் சார் முதல்'' என்று ஊரில் பலர் மெச்சும்போது நான் இந்த உலகத்தில் இல்லை. வானுலகில் மிதந்தேன்.

''கண்ணம்மா உன் பட்டுக் கன்னத்தில் முத்தமிடுவது எனக்கு மிகவும் பிடித்த ஒரு ரகசியம். இழுத்து பிடித்து அணைத்து இச் சென்று ஒரு கன்னத்தில் முத்தம் பதிக்கும்போது காசு கொடுக்காமலேயே, டாஸ்மாக் போகாமலேயே நிறைய கள் வெறி என் நெஞ்சில் ஏற்பட்டு விடுமே. அப்படி ஒவ்வொரு தரமும் உன்னை இருக்கிப் பிடித்து அணைத்துக் கொள்ளும் போதேல்லாம் என் கண்ணம்மா, எனக்கு நினைவே அழிந்து விடும். நான் யார், என்ன பெயர், எந்த ஊர், என்ன உலகம் என்றே தெரியாத ஒரு உன்மத்தத்தின் உச்சியில் ஒரு இன்ப போதை எனக்கு தானாகவே லயித்துவிடும். எனக்கு அதிலேயே இருக்க ரொம்ப ரொம்ப ஆசை கண்ணம்மா.

யாராவது ஏதாவது உன்னைச் சொன்னாலோ, உனக்கு எங்காவது அடிபட்டாலோ, உனக்குப் பிடிக்காதது ஏதாவது நடந்து விட்டாலோ, நீ விசனத்தோடு பொங்கி வரும் அழுகையோடு, முகம் சிவப்பாக நிற்பதைக் கண்டால் எனக்கு உலகமே சுற்றுமடி கண்ணம்மா. என்னன்னவோ பயங்கரமான எண்ணங்கள் நெஞ்சில் தோன்றி என்னை அடியோடு குலைத்து விடும். உன் ஒரு நெற்றிச் சுருக்கத்தில் என் நெஞ்சு பதினாயிரம் சுக்கலாக வெடித்து விடுமே. பித்தம் பிடித்தவனாகி விடுவேனே. வேண்டாம், அந்த அனுபவம், வேண்டவே வேண்டாம் கண்ணம்மா அந்த துன்பம் .

அந்த மாதிரி ஒரு கணம் நீ துன்பத்தில் ஆழ்ந்து உன் கண்ணிலிருந்து முத்துக் களாக கண்ணீர் வந்தது என்றால் நான் தொலைந்தேன். அங்கே சொட்டுவது உன் கண்ணீராக இருக்காது கண்ணம்மா, அங்கே என் உதிரம், என் ரத்தம் கொதித்து ஆறாக நெஞ்சிலிருந்து பொங்கி எழுந்து வெள்ளமென பெருகி ஓடும்.
உன்னைப் பொத்தி பொத்தி வளர்க்கிறேன் கண்ணம்மா. என் கண்ணின் பாவை மட்டுமல்ல பார்வையும் கூட நீ தானடி தெய்வமே.

எனக்கு என்று தனியாக ஒரு உயிர் இருக்கிறது என்று யாரேனும் நினைத்தால் அவர்களைப் போல் விஷயம் அறியாதவர்கள் உலகத்திலேயே கிடையாது. எனக்கு உயிர் இருக்கிறது ஆனால் அது என்னிடம் இல்லையே. அதைத் தான் உன் உயிர் என்று நான் உன்னுள் வைத்திருக்கிறேனே.

நீ மழலையில் பேசும் போதெல்லாம் நான் மயங்கிப்போய் விடுவேனே. எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள் என்னை வாட்டும். தூக்கமின்றி தவிப்பேன். அப்போதெல்லாம் உன் ஒரு பேச்சு, மழலை மொழி, என் அத்தனை துன்பங்கள், துயரங்கள் அனைத்தையும் தூக்கி வெளியே எறிந்துவிடுமே.

விடியற்காலையில் பூக்கள் மலிந்த தோட்டத்தில் உலாவிய அனுபவம் உண்டா?. பூக்களைப் பிடித்தவர்கள் யாராவது இருக்கிறீர்களா?. உங்களுக்குத் தெரியுமே, சிறு மொட்டாக நேற்றுப் பார்த்து, காத்திருந்து, அது இன்று காலை கண்கள் தேடும்போது அழகாக விரிந்து ''என்னைப் பார்த்தாயா, நான் அழகா இல்லையா?'' என்று கேட்டிருக்குமே?

அப்போது இருக்கும் மன நிலை தான் உனது முல்லைச் சிரிப்பில் கண்ணம்மா. நெஞ்சில் ஈவு இரக்கம் இல்லாதவனையும் அந்த முல்லை மலர் முன் கொண்டு நிறுத்துங்கள். அவன் மூர்க்கம் அனைத்தும் தொலைந்து அவன் சன் மார்க்கம் பெறுவானே. நான் சந்தோஷப்படுவதில் என்ன ஆச்சர்யம்.

ஒரு குழந்தையை அதன் தந்தை 'தனது நண்பருக்கு அறிமுகம் செய்து வைத்தார். ''அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டு.'' ஆறு வயது ''அம்பி மாமாவை பார்த்தான். சிரித்தான்.

அம்பி மாமாவுக்கு இந்தி பேசி காட்டுடா. சீக்கிரம் ''.

''அம்பி பேசுடா பயலே நான் கேட்க காத்திருக்கிறேன்'' என்றார் அந்த மாமாவும்.
அம்பி பேசினான். '' மாமா மர்கயா'' அம்பியின் அப்பாவுக்குஇந்தி தெரியாது. சந்தோஷமாக மாமா பக்கம் திரும்பும்போது மாமா வெளியே சென்று வெகு நேரமாயிருந்தது. காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

கண்ணம்மா, உன் பேச்சுக்கள் எனக்கு இன்பக் கதைகள். எத்தனை பெரிய பெரிய ஆசிரியர்களின் புத்தகம் படித்தாலும் உன் வார்த்தை போல் அவை எனக்கு இனிக்கவில்லையடி. புத்தகம் அறிவைத் தந்தது. அன்பைத் தரவில்லை. நீ அன்பையே புத்தகமாக தருகிறாயே கண்ணம்மா. அன்பே தெய்வம் என்பது உன்னில் நான் அறிந்த பாடம்.

நான் நகைகள் நிறைய வாங்கி நெஞ்சில் மார்பு மறைக்க அணிவதில் விருப்பமில்லாதவன். விருப்பமிருந்தாலும் அதை ஆசை நிறைவேற வசதி இல்லாதவன். எனக்கு இப்படிப்பட்ட நகைகள் தரக்கூடிய பெருமை, இன்பம், சுகம், எல்லாமே, உன்னை மார்புறத் தழுவும்போது கிடைக்கும் போது நான் அனுபவிக்கிறேனே அதற்கு கால் தூசியாகுமா? எனக்கு வாழ்வில் பெருமிதம் உறுவதற்கு, சுகமடைய, ஈடிணை அற்ற நான் பெற்ற சங்க நிதி பத்ம நிதி எது தெரியுமா, நீ, நீ, நீயே கண்ணம்மா. என் செல்வமே.


இது வரை நீங்கள் படித்தது என் கற்பனையல்ல. நான் ரசித்து மகிழ்ந்த மகாகாவி சுப்ரமணிய பாரதியாரின் கண்ணம்மா என் குழந்தை என்று கண்ணனை குழந்தையாக பாவித்து அனுபவித்த மகா காவியம். இதோ அது:

8. கண்ணம்மா - என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!
செல்வக் களஞ்சியமே!
என்னைக் கலி தீர்த்தே - உலகில்
ஏற்றம் புரிய வந்தாய்! ... 1

பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே - என் முன்னே
ஆடி வருந் தேனே! . ... 2

ஓடி வருகையிலே - கண்ணம்மா!
உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்
ஆவி தழுவு தடீ! ... 3

உச்சி தனை முகந்தால் - கருவம்
ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ! ... 4

கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்
கள்வெறி கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மா!
உன்மத்த மாகுதடீ! ... 5

சற்றுன் முகஞ் சிவந்தால் - மனது
சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்கு
நெஞ்சம் பதைக்கு தடீ! ... 6

உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்
உதிரம் கொட்டு தடீ!
என்கண்ணிற் பாவையன்றோ? - கண்ணம்மா!
என்னுயிர் நின்ன தன்றோ? ... 7

சொல்லு மழலையிலே - கண்ணம்மா!
துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலே - எனது
மூர்க்கந் தவிர்த்திடு வாய். ... 8

இன்பக் கதைகளெல்லாம் - உன்னைப்போல்
ஏடுகள் சொல்வ துண்டோ ?
அன்பு தருவதிலே - உனைநேர்
ஆகுமோர் தெய்வ முண்டோ ? ... 9

மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்
வைர மணிக ளுண்டோ ?
சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்
செல்வம் பிறிது முண்டோ ? ... 10

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...