Sunday, August 27, 2017

சைவ வைணவ ஆலயங்கள் ஒரே மலையை குடைந்து



யாத்ரா விபரம் - J.K. SIVAN

சைவ வைணவ ஆலயங்கள் ஒரே மலையை குடைந்து... !


ஒவ்வொருவருக்கும் மனதில் எத்தனையோ ஆசைகள். அவை அத்தனையும் வாழ்நாளில் நிறைபெறுவது எங்கோ ஒரு சிலருக்கு மட்டும் என்றால் ஒன்று அந்த ஆசைகள் சர்வ சாதாரணமானவை அல்லது அவர் இறையருள் பெற்ற பாக்கியசாலி. நான் அடையமுடியாதவற்றுக்கு ஆசைப்பட்டதில்லை. கால தாமதமாகவோ எதிர்பாராத வேளையிலோ சில ஆசைகள் நிறைவேறியிருப்பதும் அந்த கிருஷ்ணன் அருளே.

அவற்றில் ஒன்று தான் திருமெய்யம் ஆலயத்தை சென்று பார்க்கும் ஆசை. ஒரு முக்ய காரணம் அமரர் கல்கி ஊமையன் கோட்டை சுனை என்று வீரபாண்டிய கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரை இங்கே வந்து ஒளிந்து வெள்ளையர்களை வெல்வதற்கு படை திரட்ட முயற்சித்தது பற்றிய அற்புத கதை.

பல தடவை அதை கடந்து போனபோதெல்லாம் பார்க்கவேண்டும் என்ற விருப்பம் நிறைவேறவில்லை. இந்த தடவை ஆகஸ்ட் 15ம் நாள், காரைக்குடி சென்றபோது நண்பர் ஸ்ரீ ஸ்ரீனிவாசன் எனும் ஒய்வு பெற்ற உதவி கலெக்டர் என்னை வாருங்கள் எங்கள் ஊருக்கு அருகே உள்ள திருமெய்யம் ஆலயம் அழைத்து போகிறேன் என்று காரில் அழைத்து போனார். மிக்க மகிழ்ச்சி எனக்கு. சிறு குழந்தை போல் தாவி அவர் காருக்குள் ஏறினேன்.

திருமெய்யம் கோட்டை பிரம்மாண்டமான ஒரு பெரும் சிவப்பு நிற குன்று. அதன் உச்சியில் பீரங்கிமேடை. அதனை மையமாக கொண்டு வட்டவடிவில் ஏழுசுற்று கற்கோட்டை. அதற்குள் மூன்று மலையைக் குடைந்து செதுக்கப்பட்ட அற்புத கோவில்கள். குடைவரைக் கோயில்கள். அவற்றைச் சார்ந்து ஒரு சின்ன ஊர். புதுக்கோட்டையில் இருந்து 20 கி.மீ தூரம். செட்டிநாட்டின் எல்லையில் கண்ணைப் பறிக்கும் திருமெய்யம் கல் கோட்டை.

என்ன தோன்றியதோ அந்த ராஜாவுக்கோ, அவனுடைய சிற்பிக்கோ,தெரியவில்லை. ''இந்த பெரிய கல் பாறையின் வயிற்றை குடைந்து மூன்று கோவில் உண்டாக்குவோம் சைவ வைணவ ஆராதனைக்கு. அவற்றில் உள்ள மூல விக் கிரஹங்களையும் அதே மலையில் ஒரே கல்லில் குடைந்த ஒரே கல்லில் செதுக்கிவிடுவோம் என்று தீர்மானம் போல் இருக்கிறது.

அற்புதமானவன் அந்த பல்லவ ராஜா. அருமையானவன் அவன் சிற்பி. பரந்த மனது. மலையைக் குடைந்தவன் அதை மூன்று தனி கோவிலாக செதுக்கிஇருக்கிறான். தெற்குப்பக்கம் பாறையை குடைந்து சிவன். பிரம்மாண்டமான விஸ்வரூப லிங்கம். மெய் மலையான். சத்யகிரீசன்.

கிபி 630-688ல் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது தான் திருமெய்யம். கருவரையுடன் கூடிய குடைவரைக் கோவிலை மட்டும் தான் பல்லவர்கள் கட்டியுள்ளார்கள்.

சத்யகிரீஸ்வரர் குடைவரைக் கோயில் வாசல் தெற்கு நோக்கியுள்ளது. தரையிலிருந்து 3 அடி உயரத்திற்கு பாறையே மேடை. மேடையின் எதிரே ரெண்டு பெரிய சதுர முனை உள்ள தூண்கள். ரெண்டு சின்ன தூண்கள். அஷ்ட பாக தூண்கள். தாமரை இதழ் செதுக்கப்பட்ட எட்டு பட்டை தூண்கள். உருண்டை இல்லை. இருக்கிறது. தூண்கள் குடையப்பட்ட பாறையின் மேல் பகுதியில் சேரும் இடத்திலும் அற்புத சிற்ப வேலைப்பாடுகள்.

நான்கு சின்ன தூண்கள் மேடையின் வடக்கே அதே தாமரை இதழ்கள் செதுக்கப்பட்டு நிற்கின்றன. நடுவில் மேற்கு பார்த்தபடி அழகாக தத்ரூபமாக ஒரு நந்தி அமர்ந்தவாறு செதுக்கப்பட்டு இருக்கிறது. நந்தி அமர்ந்திருக்கிறது. நந்திக்குப் பின் புறம் மேற்கு நோக்கியவாறு லிங்கோத்பவர் பாதி உடல் தெரிய காட்சி அளிக்கிறார். அவரது வலக்கரம் வரத ஹஸ்தம். இடக்கரம் இடுப்பை தாங்கி யுள்ளது.

வயிற்றில் இடைவார். தலையில் கிரீடம். லிங்கோத்பவரின் ரெண்டு பக்கத்திலும் அக்னி ஜ்வாலைகள்
செதுக்கியுள்ளான் அந்த அமர சிற்பி. கல்மேடையின் பின்னால் கர்பகிரஹம் குடைந்துள்ளான். துவாரபாலகர்கள் அழகாக பாறையில் சிலைகளாக நிற்கிறார்கள். அழகிய உருவங்கள்.

கிழக்கு பக்கம் குடைந்து இரு உருவங்கள் இரு சந்நிதியில். ஒன்றில் ஏழு ஆதி உயரமாக நிற்கும் சத்யமூர்த்தி , . . இன்னொன்றில் பள்ளிகொண்ட பத்மநாபன். மெய்யான் . எனவே திரு மெய்யம் என்றால் சத்ய க்ஷேத்ரம். தமிழ் ஆர்வம் கொண்ட நகரத்தார் நிறைந்த ஊர் என்பதால் தமிழ்ப்பெயர் திரு மெய்யம் என்பது நிலைத்து விட்டது.
பத்மநாபன் உறையும் அடுத்த கற் பாறை குடைவரைக் கோவிலில் மண்டபம் எதுவும் கிடையாது. பாறையில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டு இருக்கிறது. இங்கு தான் தீ ஜ்வாலையாக விஷம் கக்கும் ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் நாராயணன் பிரம்மாண்டமாக காட்சி தருகிறார். பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல் இருக்கிறது. நல்லவேளை இங்கே ஜருகண்டி ஆட்கள் இல்லை. வலதுகையை தலைக்கு மேலே உயர்த்தித் தொங்கவிட்டு, இடது கையால் பாற்கடலில் உதித்த மஹா லக்ஷ்மியை அணைத்தவாறு கிடந்த கோலம். தாயார் பெயர் உஜ்ஜீவன தாயார்.

இந்த ரெண்டு கோவில்களிலும் ஆங்காங்கே இராசராச சோழன், இராசேந்திர சோழன், மாறவர்மன் சுந்தரபாண்டியன், சடாவர்மன் வீரபாண்டியத்தேவன், விஜயநகர கிருஷ்ண தேவராயர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. படிக்க இன்னொரு ஜென்மம் எடுக்கவேண்டும்.


“மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேத்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே.”

(பெரிய திருமொழி, 2016, 11-7-5)யில் திருமங்கையாழ்வார் மங்களாசாஸனம் செய்த மெய்யான் எனும் சத்யமூர்த்தி பெருமாள் ஆலயம் 108ல் ஒரு திவ்ய தேசம்.

ஐந்து தலைகளை உடைய ஆதிசேஷன் மீது சயனத்தில் பெருமாள் காட்சியளிக்கிறார். பள்ளிகொண்ட பரமனின் காலடியில் பூமாதேவி, மார்பினில் திருமகள், இடமிருந்து வலமாக கருடன், தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலதுகோடியில் மது,கைடபன் முதலான அரக்கர்கள் என அழகாக செதுக்கப்பட்டுள்ளது. பத்மநாபனின் வயிற்றில் தோன்றும் தாமரையில் பிரம்மதேவன். முப்பது அடிநீளமாக ஸ்ரீ ரங்கம் அரங்கநாதனை விட பெரிய திருமேனியோடு அற்புதமாக காட்சியளிக்கிறார்.

ஆரம்பத்தில் ஒன்றாக இணைந்திருந்த சத்யகிரீஸ்வரர் சிவாலயமும் சத்யமூர்த்தி பெருமாள் கோவிலும் சைவ வைணவ வேற்றுமை காரணமாக எப்போதோ பிரிக்கப்பட்டு தடுப்பு சுவர் ரெண்டு ஆலயங்களாக இது காண்கிறது.

திருமெய்யம் ஆலயத்தில் உள்ளேயே சத்திய தீர்த்தம் .தாமரை மலர் தோற்றத்தில் எண்கோண வடிவில் எட்டுத்துறைகள் கொண்டது ..

பெயரை எதற்கு மாற்றவேண்டும். திரு மெய்யம் திருமயம் என்று கொட்டையாக ஏன் பெயர் மாற்றம்?

இந்த பழைமையான எட்டாம் நூற்றாண்டு கோவில்களை பிற்காலத்தில் ஆண்ட சோழர்கள் கொஞ்சம் பெரிய கோவிலாக கட்டிஇருக்கிறார்கள். இப்போது ஐந்து நிலை ராஜகோபுரம் அழைக்கிறது.

இந்த இரண்டு கோவில்களில் கொஞ்சம் அளவில் பெரியது சத்யமூர்த்தி எனும் ''மெய்யானின்'' விஷ்ணு கோவில்.

சரித்திர புகழ் வாய்ந்தது இந்த திருமெய்யம் கோட்டை. ராமநாதபுரம் சேதுபதி கட்டிய மலை கோட்டை.

கி.பி. 1799 ஆம் ஆண்டில் கப்பம் கட்ட மறுத்து ஆங்கிலேயரை எதிர்த்த பாஞ்சாலங்குறிச்சி ராஜா கட்டபொம்மனும் ஊமைத்துரையும் புதுக்கோட்டையில் கைதுசெய்யப்பட்டு ஜாக்சன் துரை சிறை வைத்தான். பின்னர் பாளையங்கோட்டை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தப்பிய ஊமைத்துரை திருமெய்யம் கோட்டைக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதால் இது ஊமையன் கோட்டை என்றும் பெயர் பெற்றது.

பராமரிப்பு போதாது. ஏழு சுற்றுகளைக்கொண்ட கோட்டை இடிந்தது போக நான்கு சுற்றுகளோடு இப்போது நிற்கிறது. அகழிகள் தூர்ந்து போய் பரிதாபமாக காண்கிறது.

நான் மலை மேல் ஏறாததால் அதை பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. நேரம் கிடைக்கவில்லை.















No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...