Saturday, August 12, 2017

அழகன் சௌந்தர ராஜன்



யாத்ரா விபரம் J.K. SIVAN
அழகன் சௌந்தர ராஜன்

நாகப்பட்டினம் சென்ற ஒரு ஹிந்து பக்தன் சௌந்தரராஜ பெருமாளை பார்க்காவிட்டால் அவன் ஒரு பெரிய ஆனந்த அனுபவத்தை இழந்தவன் என்று சொல்லலாம். எனக்கு ரெண்டு முறை நாகப்பட்டினம் சென்றபோதும் அந்த அழகனை பார்க்க இயலவில்லை. அவனது அழகிய ஆலய கோபுர தரிசனம் மட்டுமே கிட்டியது.

( ''பரவாயில்லை அடுத்த முறை சீக்கிரமே ஆலய நேரத்துக்குள் வந்து சேருங்கள்'' என்று அப்போது திவ்யமாக சுடசுட வீட்டு சமையலை பரிமாறினார் ஆலயத்திற்கு எதிரே இருக்கும் லட்சுமி மெஸ் மாமா.

அவர் குடும்பமே இந்த கைங்கர்யத்தில் ஈடுபட்டு காலை சுட சுட இட்டலி, பொங்கல், வடை, உப்புமா, தோசை, பூரி எல்லாம் கிடைக்கும். சில நிமிஷங்களில் மாயமாகிவிடும். மத்தியானம் கீரை கூட்டும், மோர் குழம்பு, வற்றல் குழம்பு, மசியல் என்றெல்லாம் மற்ற ஓட்டல்களில் கிடைக்காத அயிட்டங்கள் நிறையவே இவர்கள் கொடுப்பார்கள். அதிகமாக கட்டணமும் இல்லை. இவர்கள் பெயர் சென்னையில் மற்ற பெரிய நகரங்களில் இருப்பவர்களுக்கும் தெரிந்திருப்பதால் யாருக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதோ அவர்களுக்கு ருசியான வீட்டு சாப்பாடு கிடைக்கும் படியான ஏற்பாடு.

லட்சுமி மெஸ் என்று ஒரு சிறிய பெயர் பலகை கொண்ட ஒரு பழைய ஒட்டு வீடு. உள்ளே சென்றால் கூடத்தில் ஒனறிரண்டு மேசைகள் அதன் பின் நீள பெஞ்சு. அது தான் சீட்.. வாசலில் ரேழியில் ஒரு சில பெஞ்சுகள், உள்ளே ஒரு சிறிய அறையில் ரெண்டு பக்கம் மூன்று மேசைகள். ஒரே சமயம் பத்து ஒல்லி ஆசாமிகள் நெருக்கி அமர்ந்து அந்த அறையில் சாப்பிடலாம். அங்கே சென்ற முறை எங்கள் க்ரூப் அப்படி தான் அங்கே சாப்பிட்டது நினைவிற்கு வந்தது.)

இந்த முறை லட்சுமி மெஸ் போவதற்கு முன்பே ஆலயத்தில் லட்சுமி மணாளனை தரிசிக்கும் பாக்யம் கிடைத்தது.

ஆழவார்களால் பாடப்பட்ட ஒரு திவ்ய தேசம் நாகபட்டணம் சௌந்தர்ராஜ பெருமாள் ஆலயம். தாயார் இங்கே சௌந்தரவல்லி. அழக னுக்கேற்ற அழகி.

இது எட்டாம் நூற்றாண்டு கோவில். தஞ்சாவூர் யார் செய்த புண்யமோ நாயக்க மன்னர்களால் சில காலம், அவர்களை தொடர்ந்து மராத்திய மன்னர்கள் சிலரால் ஆளப்பட்டு அந்த கால கட்டத்தில் எண்ணற்ற கோவில்கள் பழைய சோழர்கள் பல்லவர்கள் காலத்தில் கட்டி சிதிலமடைந்த கோவில்கள் எண்ணற்றவை மீண்டும் புத்துரு பெற்றன. இந்த ஆலயத்தில் கம்பீரமாக காண்பது ஐந்து நிலை 90அடி உயர ராஜ கோபுரம். சுற்றிலும் கருங்கல் சுவர்கள் இந்த கோவிலை தற்கால ஆட்கள் விழுங்காமல் காப்பாற்றி வருகிறது. வெளியே இருந்து பார்த்தால் கோவில் இருப்பதே தெரியவில்லை. அந்த அளவுக்கு கான்க்ரீட் கட்டிடங்கள் கோவில் கோபுரத்தையே மறைத்துள்ளன. நாகப்பட்டினம் பெரிய ஊர் என்று இப்படித்தான் தெரிந்து கொள்ளவேண்டுமா? இங்கு சித்திரை தேர் திருவிழா வெகு விசேஷம்.

ஓடம்போக்கி நதிக்கு விருத்த காவேரி என்றும் ஒரு பெயர். கோவிலுக்கு அருகே ஓடுகிறது. அதிகம் தண்ணீர் இல்லாமல்.
திரேதாயுகத்தில் சுந்தர ஆரண்யம் என்ற காடாக இருந்த இடம். துருவன் வந்து தவம் செய்தன. நாக ராஜன் ஆதிசேஷன் விஷ்ணுவை வழிபட்ட ஊர் என்பதால் நாக(ர்)பட்டினம்.

இந்த ஆலயத்தில் விசேஷமாக தரிசிக்கவேண்டியவர் அஷ்ட புஜ நரசிம்மர். ஆறு கரங்கள் இரண்யகசிபுவை கிழிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒன்று பிரகலாதனை ஆசிர்வதிக்க, மற்றொன்று நமக்கு அபய முத்திரை கொடுக்கிறது.

நாயக்க நாலுகால் மண்டபம் தேர் வடிவத்தில் வெளியே சக்கரம் தெரிய கட்டப்பட்டு அழகாக இருக்கிறது. மண்டப வாயிலில் எட்டடி உயர சும்ப நிகும்பர்கள்.

“பொன் இவர் மேனி மரகதத்தின் பொங்கு இலன்
ஜ்யோதி யகலதரம் அச்சோ ஒருவர் அழகிய வா …”

ஆச்சர்யத்தோடு தன்னை ஒரு இள மங்கையாகவும் சௌந்தர்ராஜனை நாயகனாகவும் பாவித்து பத்து பாசுரங்களை அருளியிருக்கிறார் திருமங்கை ஆழ்வார்.

நின்ற, அமர்ந்த வீற்றிருந்து கோலத்தில் பெருமாள் இந்த ஆலயத்தில் நாகராஜன் ஆதிசேஷனுக்கு காட்சி தந்த ஆலயம் . இந்த ஆலயத்தில் அற்புதமான வண்ண மூலிகை ஓவியங்களை பார்த்த ஞாபகம் வருகிறது.

temple Time : 730am-12noon and 530pm-9pm











எதிரே லட்சுமி மெஸ்ஸில் காலை உணவு அருந்திவிட்டு வேதாரண்யம் சென்றோம்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...