Saturday, August 26, 2017

''நாம் வாய்மூரில் இருக்கிறோம் தொடர்ந்து வா''











யாத்ரா விபரம் - J.K. SIVAN

''நாம் வாய்மூரில் இருக்கிறோம் தொடர்ந்து வா''

சப்த விடங்க க்ஷேத்ரங்களில் திருநள்ளார், நாகப்பட்டினம், வேதாரண்யம், திருக்குவளை ஆகிய நாலு க்ஷேத்ரங்களை பற்றி உங்களிடம் சொல்லியாகி விட்டது. இன்று திருவாய்மூர் சென்று தரிசித்ததை எழுதுகிறேன். இன்னும் ரெண்டு பாக்கி இருக்கிறது. திருக்காரவாசல் மற்றும் திருவையாறு விடங்க தியாகராஜர் பற்றி பிறகு சொல்வேன்.

அழகிய வயல் சூழ்ந்த சாலைகளில் திருக்குவளையிலிருந்து ஐந்து கி.மீ. தூரம், எட்டுக்குடியிலிருந்து 3 கி.மீ. பயணித்தால் திருவாய்மூர் செல்லலாம். காவிரி தென்கரை 276 தேவார பாடல் பெற்ற சிவ ஸ்தலங்களில் இது 124வது. முக்கியமானது. ரெண்டு ஏக்கர் நிலத்தில் மூன்று நிலை ராஜ கோபுர வாசல்.வாய்மூர்நாதர் ஸ்வயம்பு. கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அம்பாள் க்ஷீரோபவசனி. பாலினும் மென் மொழியாள் . ஸ்தல விருக்ஷம் பலா மரம். சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலம். சம்பந்தர் திருநாவுக்கரசரால் தரிசிக்கப்பட்ட தேவார ஸ்தலம். பங்குனி 12 - 13 தேதிகளில் சூரிய கிரணம் நீராக சிவன் பாதத்தில் விழுந்து தரிசிப்பதை பார்க்கலாம். சூரியன் தரிசித்ததால் இங்கு சூரிய தீர்த்த புஷ்கரணி. அஷ்ட பைரவர் சந்நிதி உள்ளது. திருவாய் மூர் முற்காலத்தில் லீலாஹாஸ்யபுரம் என பெயர் கொண்டிருந்தது. இங்கு சிவன் அப்பர் தேவாரங்களில் மகிழ்ந்து "வாய்மூரில் இருப்போம் தொடர்ந்து வா" என்று அப்பர் பெருமானை அழைத்துச் சென்றதாக ஒரு அற்புத விஷயம் இங்கே உள்ளது. இன்னொரு விஷயம். கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ரிஷபாரூடனாக திகழ்கிறார்.

இங்கும் நவகிரஹங்கள் ஒரே வரிசையில்.

இந்த விடங்க க்ஷேத்ரத்தில் தியாகராஜரின் பெயர் நீல விடங்கர். நடராஜரின் நடனம் கமலநடனம். ஆசனம் ரத்ன ஸிம்ஹாஸனம்.

சம்பந்தர் கொஞ்சும் தமிழ், அப்பரின் எளிய வசீகர தேவாரம் ஒவ்வொன்று வாய்மூர் நாதரை அவர்கள் எப்படி ஆண்டு ஆனந்தித்தவர்கள் என்று புரிந்து கொள்ள கீழே தருகிறேன்.

"வெந்தழல் வடிவினர் பொடிப்பூசி
விரிதரு கோவண உடை மேலோர்
பந்தஞ் செய்து அரவசைத்து ஒலிபாடி
பலபல கடைதொறும் பலிதேர்வார்
சிந்தனை புகுந் தெனக்கு அருள் நல்கிச்
செஞ்சுடர் வண்ணர்தம் அடிபரவ
வந்தனை பலசெய இவராணீர்
வாய்மூர் அடிகள் வருவாரே". (சம்பந்தர்)


எங்கே யென்னை இருந்திடந் தேடிக்கொண்டு
அங்கே வந்தடை யாளம் அருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனர தென்கொலோ.

"பாடி அடியார் பரவக் கண்டேன்
பத்தர்கணங்கண்டேன் மொய்த்தபூதம்
ஆடல்முழுவம் அதிரக் கண்டேன்
அங்கை அனல்கண்டேன் கங்கையாளைக்
காடல் அரவார் சடையிற்கண்டேன்
கொக்கின் இதழ் கண்டேன் கொன்றைகண்டேன்
வாடற்றலையன்று கையிற் கண்டேன்
வாய்மூர் அடிகளை நான் கண்டவறே". (அப்பர்)

இந்த ஆலயத்தில் தரிசன நேரம் அணுக தொலைபேசி : 97862 44876 : 6.00 am to 11.00 am , 4.00pm to 8.30 pm




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...