Monday, August 7, 2017

ராஜாவின் ஞான வேட்கை.

பத்திரகிரியார் புலம்பல்: J.K. SIVAN
ராஜாவின் ஞான வேட்கை.

இம்மைதனிற் பாதகனா யிருவினைக்கீ டாயெடுத்த
பொம்மைதனைப் போட்டுன்னைப் போற்றிநிற்ப தெக்காலம்.

இப்பிறவியில் பொழுது விடிந்தால் தொடங்கிவிடுகிறது நான் செய்யும் கணக்கற்ற பாவங்கள் செய்தவனாய், இருப்பதால் தான் என் நன்மை தீய செயல்களுக்கு தக்கபடி இந்த உடலில் எனக்கு ஒரு உடல் கிடைத்திருக்கிறது. ஒரு மண் பொம்மை. இது எப்போது தானாக ஒரு நாள் உடையுமோ? யாராவது தள்ளி விழுந்து உடையுமோ? எல்லாமே அநித்தியம். இந்த பொம்மை உடலை விட்டு எப்போது பகவானே பாவமேதும் செய்யாமல் உன்னை போற்றி நிம்மதி பெறுவேன்?

உப்பிட்ட பாண்ட முடைந்துகருக் கொள்ளுமுன்னே
அப்பிட்ட வேணியனுக் காட்படுவ தெக்காலம்.

பத்திரகிரி ராஜாவை பொறுத்தவரை நமது உடல் ஒரு உப்பு கொட்டி வைக்கும் பானை. இது அழிந்து மீண்டும் நான் ஏதோ ஒரு கருவறையில் ஒழியுமுன்னே கங்காதரனாகிய சிவனை வழிபட்டு அடிமைப்படுவது, அதாவது அவன் தாளில் சரணடைவது எக்காலம் என்று தெரியவில்லையே?

சேவை புரிந்து சிவரூபக் காட்சிகண்டு
பாவை தனைக்கழித்துப் பயனடைவ தெக்காலம்.

சிவனே, உன் திவ்ய ரூபத்தை மனதில் நிறுத்தி, என் மனதில் ஒட்டிக்கொண்டிருந்த பெண்ணாசையை நீக்கி உன் சுந்தரரூபத்தில் லயித்து மகிழ்வது எப்போதப்பா?

"நீரில் குமிழ்ப்போல் நிலையற்ற வாழ்வை விட்டு உ ன்
பேரில் கருணைவெள்ளம் பெருக்கெடுப்ப தெக்காலம்?

தண்ணீரில் எத்தனை கொப்புளங்கள். பளபளவென்று பல வித வர்ண ஜாலங்களோடு சூரிய ஒளியில் மின்னல் போல் மின்னி, அழகை காட்டி அதே வேகத்தில் அழிந்தும் போகும். என்னுடைய இந்த பூலோக வாழ்க்கை நிலையற்ற வாழ்க்கை. இதை நம்பி திசை கெட்டு சென்று தவித்து அப்புறம் உன்னை நாடிவருவதை விட இப்போதே உன் பேரில் கருணை வெள்ளம் பெருக்கெடுக்க, கண்களில் ஆனந்த கண்ணீர் பக்தி மேலீட்டால் பெறுக நாடிவருவது எப்போது?

அன்பைஉருக்கி, அறிவை அதன் மேல்புகட்டித்
துன்ப வலைப்பாசத் தொடர் அ றுப்ப தெக்காலம்?
மனதை ஒரு வில்லாக்கி, வான் பொறியை நாணாக்கி
எனதறிவை அம்பாக்கி, எய்வதினி எக்காலம்?

ஒரு அருமையான உபமான உபமேய பாடல் இது. என் உள்ளே இருக்கின்ற அன்பை தேடிப்பிடித்து எங்கும் எவர் மேலும் செலுத்தாமல் கெட்டியாக உறைந்த அதை உருக்கி, என் சிந்தனை, எண்ணங்களை, அறிவை அந்த அன்பின் மேல் செலுத்தி, என்னை சுற்றி இருக்கும் பந்த பாச உறவை துண்டித்து உன்னையே அன்பின் ஸ்வரூபமாக உணர்ந்து, சகலமும் துறந்தவனாவது எப்படி, என்றைக்கு ?

என் மனது இருக்கிறதே அது ஒரு வில். உலக வாதனைகள் என்னும் இயந்திரங்களில் சிக்காமல், என் அறிவாகிய அம்பை தொடுத்து உன்னை நோக்கி செலுத்தி உன்னை சேர்வது எப்போதப்பா மகாதேவா?

ஐஸ் க்ரீம் போல கொஞ்சம் கொஞ்சமாக ருசிப்பது பத்திரகிரி ராஜாவின் அருமையான "தேடல்கள்" நம்மை சிறிது சிறிதாக மகிழ்விக்கின்றன. இன்னும் கொஞ்சம் அடுத்த இதழில் வரட்டும். ராஜா நிறையவே சொல்லி இருக்கிறான்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...