Thursday, August 24, 2017

' கும்மிருட்டில் கொட்டும் மழையில்...?'



அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN

' கும்மிருட்டில் கொட்டும் மழையில்...?''

திருக்கோவலூர் எங்கே இருக்கிறது என்றே தெரியாதவர்களுக்கு சொல்கிறேன். அதற்கு முன்பு உங்களிடம் அங்கே ஒரு அதிசயம் நடந்ததே அதையாவது தெரியுமா என்று ஒரு கேள்வி.

நிறைய பேர் தெரியுமே என்று கட்டாயம் சொல்வார்கள். இது எப்படி சாத்தியமாகும்?. ஊரே எங்கே இருக்கிறது என்று தெரியாவிட்டால் என்ன அங்கு நடந்த அற்புதம் ஏன் தெரியாது? நிறைய பேர் காசி போனதில்லை, அங்கே கங்கை இருக்கிறது, அதில் ஸ்நானம் செய்தால் பாப நிவர்த்தி என்று தெரியாதா என்ன? அது போல் தான் இதுவும். சிகாகோ எங்கே இருக்கிறது அரக்கோணம் பக்கத்திலேயா என்று கேட்டாலும் அங்கே விவேகானந்தர் பேசியது தெரியுமே! அதே தான் இது.

அப்போது அடை மழைக்காலம். எப்போதும் இருட்டிக்கொண்டே இருந்த வானம் இடியும் மின்னலும் சேர்ந்து தாக்கிய ஒரு மாலைப் பொழுதில் அந்த சாயங்கால நேரமே கும்மிருட்டு ஆனது. காற்று வேறு சுழன்று சுழன்று வேகமாக வீசியதில் விளக்கொளி எங்குமே எவர் வீட்டிலும் இல்லை. தெருவில் விளக்கு அப்போதும் இல்லை. மழை வலுத்தது.

ஒரு ஞானி. பரம வைஷ்ணவர். பொய்கை ஆழ்வார் என்று பெயர் கொண்டவர். திரிவிக்ரமன் மேல் அடங்கா அன்பும் பக்தியும் கண்டு அவனைத் தரிசிக்க அந்த ஊருக்கு வந்தவர். மழை பெய்து வலுத்தது. எங்கெல்லாமோ சுற்றியலைந்த பொய்கை ஆழ்வார் கொட்டும் மழைக்கு ஒதுங்க இடம் தேடியபோது அவருக்குக் கிடைத்தது ஒரு சிறு திண்ணை. சிறு திண்ணை தான் எனினும் சந்தோஷமாக அதில் தஞ்சம் அடைந்தார். ஒருவர் கால் நீட்டி படுக்க மட்டுமே அதில் இடம் இருந்தது. நாராயணனை மனதில் தாங்கியவாறே, துதி செய்துகொண்டு படுத்தார். நேரம் நழுவியது.

மழையில் நனைந்தவாறே எங்கிருந்தோ மற்றொருவர் அங்கே வேகமாக வந்து சேர்ந்தார். ஆச்சர்யமாக அவரும் அந்த ஊருக்கு பெருமாள் தரிசனத்துக்கு வந்தவர். பூதத்தாழ்வாருமா மழைக்கு ஒதுங்க இந்த திண்ணையையே நோக்கி ஓடிவரவேண்டும்.? படுத்திருந்த பொய்கை ஆழ்வார் எழுந்திருந்து அவரும் உட்கார இடம் அளித்தார். இருவர் அமர முடிந்த இடம்.

இது என்ன அதிசயம்? இன்று என்ன தான் நடக்கிறது இங்கே ?

பேயாழ்வாரும் கம்பு ஒன்றை ஊன்றிக்கொண்டு அங்கே வந்து சேர்ந்தார். திருக்கோவலூர் திரிவிக்கிரம தரிசனம் தேடி வந்தவர் மழையினின்றும் தப்ப அதே திண்ணையையே நம்பி வந்தார். நிற்பதானால் மூவருக்கும் இடம் இருந்தது அந்தச் சிறு திண்ணையில். மழை விடும் வரை நிற்கலாம் என்று மூவரும் நின்று கொண்டே இருந்தனர்.

அடாது இடித்து விடாது பெய்தது மழை. இருள் நன்றாகவே கவ்வி இருந்ததில் ஒருவரை ஒருவர் முகம் பார்த்து அறிந்து கொள்ள இயலவில்லை. கும்மிருட்டு. வைணவ ஆழ்வார்கள் அல்லவா?. மாரியிலும் மாலவனையே காண்பவர்கள் ஆயிற்றே. ஆழி மழைக் கண்ணனை அந்த மழையிலும் கண்டு புளகாங்கித்து பாட ஆரம்பித்தார்கள் அந்த மூவரும்.

ஏதோ ஒரு நெருடல். மற்றுமோர் ஆசாமியும் நெருக்கியடித்துக் கொண்டு அவர்களோடு நான்காவதாக அங்கு நிற்கின்றாற் போல் தோன்றியது. யாரும் அணுக வில்லையே. யாராக இருக்கும்? ஒருவரும் வரவுமில்லை, குரலும் கேட்கவில்லை. மூன்று பேருக்கு மேல் நிற்கக்கூட முடியாத அந்த சிறு இடத்தில் எப்படி புதிதாக மற்றொருவர்?இருட்டில் ஒன்றும் புரியவில்லை. யார் என்று ஒருவர் மற்றொருவருக்குத் தெரியாத காரிருள்.

எண்ணத்தில் இது தோன்றினாலும் மனத்திலே அந்த மாயவன் குடிகொண்டதால் பொய்கை ஆழ்வாருக்கு ஒரு பாசுரம் தோன்றி லயித்துப் பாடினார்.

''வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை
இடராழி நீங்குகவே என்று''

ஒரு கற்பனை செய்து பார்க்கலாமா? இந்த மாபெரும் பூமண்டலமே ஒரு அகலாகி , அதைச் சூழ்ந்த சமுத்ரங்களின் நீரெல்லாம் தீபத்துக்கு நெய்யாகி அந்தப் பெரிய அகலை நிரப்பி, அந்த அகலின் தீபமாக சூரியனே ஒளி வீச, அந்த தீபத்தால் சங்கு சக்ரதாரி ஸ்ரீமன் நாராயணனுக்கு தீபாராதனை செய்து ''துன்பக்கடலிலிருந்து, சம்சார சாகரத்திலிருந்து, என்னை மீட்பாய்'' என்று வேண்டத் தோன்றியது பொய்கை ஆழ்வாருக்கு. புறவிருள் நீங்கப் பாடினார் பொய்கை ஆழ்வார்.

இந்த மாபெரும் தீப ஒளியிலும் அந்த நான்காவது ஆசாமி புலப்படவில்லை அவர்களுக்கு.

பூதத்தாழ்வார் சும்மா இருப்பவரா. அவருக்கு ஆர்வம் பிறந்தது. அவர் ஒரு பாசுரம் மூலம் இன்னொரு விளக்கேற்றினார்..

''அன்பே தகளியாய் ஆர்வமே நெய்யாக,
இன்புறு சிந்தை இடு திரியாக
நன்புருகி ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்''.

பூதத்தாழ்வார் வேறுமாதிரியாக யோசித்தார். ஏன் நாராயணனின் மேல் எனக்கிருக்கும் அன்பையே அகலாக்கினால் என்ன?, அவன் புகழ் பாடும், கேட்கும் படிக்கும் ஆர்வத்தையே நெய்யாக்கி அதை நிரப்பி, என் மனத்தையே திரியாக்கி அந்த விளக்கின் தீபத்தை நாராயணனுக்கே ஆரத்தியாகக் காட்டி, வணங்கி என் பாசுரத்தையே நைவேத்யமாக கொடுத்தால்..."? அக இருள் நீங்கினால் தான் நல்லது என்கிறார் பூதத்தாழ்வார்..

அசாத்தியமான கற்பனை, பக்தி வெள்ளம்.

இந்த இரு ஆழ்வார்களின் பக்திப் பாசுரம் அவர்களது ''அக'' தீப ஒளியில் மெதுவாக அங்கிருந்த நான்காவது ஆளைக் காட்டிக் கொடுத்து விட்டது. அது யார் என்று முதலில் பார்த்தவர் மூன்றாவதாக வந்த பேயாழ்வார்.

அட இது என்ன ஆச்சர்யம்.?

அவரை அறியாமலே அவர் வாயிலிருந்து ஒரு பாசுரம் அமுதமென புறப்பட்டது. அதில் விளக்குகிறார் யார் அந்த நான்காவதாக அவர்களுடன் நின்றவர் என்று.

''திருக்கண்டேன் திருமேனி கண்டேன் திகழும்
அருக்கனணி நிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன் புரி சங்கம் கைக்கண்டேன்
என்னாழி வண்ணன் பால் இன்று

''தெய்வமே உன் தரிசனம் கண்டேன். உன் பிராட்டியோடு கூடின திருமேனியைக் கண் குளிரக் கண்டேன். நீலமேக சியாமள வண்ணனைக் கண்டேன். பொன்னையும் பழிக்கும் திவ்ய ஒளி படைத்த உன் திரு முகம் கண்டேன். பளபளக்கும் உன் சுதர்சன சக்ரம் கண்ணுக்குத் தெரிகிறதே. மற்றொரு கரத்தை அலங்கரிக்கும் பால் நிற பாஞ்சஜன்ய சங்காயுதம் தரிசித்தேன். இன்று என் வாழ்நாள் மகத்வமானது. புனிதமடைந்தேன். என்னைப் பறிகொடுத்தேன் புண்ணியா உன்னடி என் என் மனத்தே வைத்து என்று பரவசமானார்.

பரந்தாமனுக்கு பக்தனைப் பிடிக்கும். அவன் பாடினால் ரொம்பவுமே பிடிக்கும். தேன் தமிழ் பாசுரத்தையே இயற்றிய ஆழ்வார் என்றால் ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒன்றுக்கு மூன்று ஆழ்வார்கள் ஒன்றாக அபூர்வமாக சேர்ந்து இருக்கும் இடம் என்றால் கேட்கவா வேண்டும். மழையையே லக்ஷ்யம் செய்யாமல், அந்தச் சிறு திண்ணை இடத்தையே தான் வசிக்கும் வைகுண்டமாகக் கருதி அவர்கள் தோளோடு தோள் தொட சந்தோஷமாக நிற்கப் பிடிக்காதா அந்த நாராயணனுக்கு? தன்னைத் தரிசிக்க அவர்கள் வருவதற்கு முன் தானே அவர்களைத் ''தரிசிக்க'' மூவுலகும் ஈரடியால் அளந்த அந்த ''திரி'' விக்ரமன் ''திரி'' (three கூட) ஆழ்வார்களைச் சந்திக்க தானே அங்கு இருட்டில் வந்து அவர்களுடன் திண்ணையில் நின்றான்.

இது கதையென்று கொள்ள வேண்டாம். தூய பக்திக்கு மாயவன் எப்படி அடிமையாகிறான் என்று புரிந்து கொள்ள இது உதவினால் போதும்.

.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...