Wednesday, August 30, 2017

சிலேடைக்கோர் ஆசுகவி




சிலேடைக்கோர் ஆசுகவி - J.K. SIVAN

ஒரு மாத காலமாகவே இருமல் சில்மிஷம் பண்ணுகிறது. வாய் ஓயாமல் இருமி பேச முடியாமல் செய்கிறது. நாட்டு வைத்தியம் காட்டு வைத்தியம் இங்கிலிஷ் வைத்தியம் பண்ணி அப்பப்போது சொஸ்தம் ஆகிறாற்போல் அடங்கி திடீர் திடீர் என்று தலை தூக்குகிறது. இன்று சற்று அதிகம்.

ஒன்று கவனித்திருப்பீர்கள் . கொஞ்சம் உடம்பு சரியில்லை என்று சொன்னால் போதும். நண்பர்கள் தெரிந்தவர்கள் பலர் பிலுபிலுவென்று ஆளுக்கு ஆள் ஒரு வைத்தியம் சொல்வார்கள். அத்தனையும் செய்து பார்க்க வழியில்லை. வயதில்லை
.

இன்று ஒருவர் ''சார் அதிமதுரம் சாப்பிடுங்கள்.உடனே குணமாகும்'' என்கிறார். மருந்துக்கடையில் அதி மதுரம் வாங்கிவரச்சொன்னேன். அப்போது தான் இந்த அதிமதுரம் பற்றி காளமேக ஆசுகவி இயற்றிய ஒரு பாடல் நினைவுக்கு வந்தது. அடாடா இதை பற்றி நண்பர்களுக்கு சொல்லவில்லையே என்று இப்போது சொல்கிறேன். இருமிக்கொண்டே எழுதுகிறேன்.

நாகப்பட்டினத்தை அடுத்த திருமலைராயன் பட்டணம். TR பட்டினம் என்றால் அநேகருக்கு தெரிகிறது. திருமலைராயன் என்ற சிற்றரசன் ஒருகாலத்தில் அதை ஆண்டு வந்தான். காலம் கி.பி 1455-1468. தமிழ்ப்புலவர்கள் பலரைத் தன் அவையிலே வைத்து ஆதரித்தவன். காளமேகத்துக்கு அவனை சந்தித்து தாமும் பாடி, பரிசில் பெற எண்ணம். ராஜா சபையில் அறுபத்து நான்கு புலவர்கள் தண்டிகைப் புலவர்கள் என்ற சிறப்போடு இருந்தனர். புலமை கர்வம். அரசனின் உதவியை நாடி வரும் பல புலவர்களை எல்லாம் வஞ்சகமாக மடக்கித் தலைகவிழச் செய்து, விரட்டுவதில் மகிழ்ச்சி.

இந்த தண்டிகைப் புலவர்களின் தலைவர் அதிமதுர கவிராயர். காளமேகம் TR பட்டினம் அடைந்தபோது ஒரு ஊர்வலம். மங்கல பேரிகைகள் முழங்க, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்ட பல்லக்கிலே அதிமதுர கவிராயர் ஊர்வலம். மற்ற அறுபத்து மூன்று பல்லக்குகளிலும் புலவர்கள் ஊர்வலத்துக்கு முன்னால் ஒரு கட்டியக்காரன் ''அதிமதுர கவிராய சிங்கம் வருகிறார் பராக் !'' என்று கூவ அனைவரும் ''பராக் பராக் '' என்றனர்.

சாலை ஓரம் காளமேகம் நின்று கவனித்தார். பராக் சொல்லவில்லை. ஒரு காவலாளி பார்த்து விட்டான். அருகே வந்தான்.

''நீ மட்டும் ஏன் சும்மா நிற்கிறாய்? ''கத்து பராக் என்று' என கோபித்தான்.

சிரிப்பு வந்தது காளமேகத்துக்கு. மாபெரும் ஆசுகவி அல்லவா.! அடுத்த கணமே அதிமதுர கவிராயர் காது பட உரக்க பாடினார்

''அதிமதுரம் என்றே அகிலம் அறியத்
துதி மதுரமாய் எடுத்துச் செல்லும் புதுமையென்ன
காட்டுச்சரக்கு உலகில் காரமில்லாச் சரக்கு
கூட்டுச் சரக்கு அதனைக் கூறு.'

என்ன அர்த்தம். அட அசடே,! அதிமதுரம் என்பது ஒரு சாதாரண காட்டுச் சரக்கு (நாட்டு மருந்து. எதற்கு அதைப்போய் போற்றி முழங்க வேண்டும் ?''

அதிமதுர கவிராயனுக்கு கடுங்கோபம் ராஜாவிடம் வத்தி வைத்து காளமேகத்தை இழுத்து வந்து ராஜா முன்னாலே நின்றார்.

''அதிமதுரம், இளக்காரமாக, அகங்காரத்தோடு ''என்னய்யா புலவரா நீர்? என்னைப் போல
உன்னால் அடுத்த கணமே விரைவாக கவிபாட முடியுமா? அரிகண்டம் பாடி எம்மை வெற்றி பெறச் சம்மதமா? என்றவுடன் காளமேகம்

''அரிகண்டமா, அப்படி என்றால் என்ன? என்று விவரமாக சொன்னால், நான் ஒப்புக் கொள்கிறேன்''

'' கழுத்திலே கத்தியைக் கட்டிக் கொள்ள வேண்டும், கேட்கும் குறிப்புப்படி உடனுக்குடன் செய்யுள் சொல்ல வேண்டும். சொற்பிழை, பொருட்பிழை, இலக்கணப் பிழை கூடாது. பிழைபட்டால் கழுத்து வெட்டப்படும். வென்றால் பாராட்டும் பரிசும் உண்டு. இது தான் அரிகண்டம்'' என்றார் அதிமதுரம்.

காளமேகம் சிரித்தார். ''பூ, இவ்வளவு தானா உங்கள் அரிகண்டம். நான் எமகண்டமே பாடி உன்னை வெல்வேனே ''

அதிமதுரத்திற்கு வியர்த்தது. ''எமகண்டம் என்று ஒன்று இருக்கிறதா? தெரியாதே . அது என்ன?

' அது ஒன்றும் பெரிசோ கஷ்டமோ இல்லை. பதினாறு அடி நீளம், பதினாறு அடி அகலம், பதினாறடி ஆழம் ஒரு பெரிய குழி வெட்டி, அதன் நாலு மூலையிலும் பதினாறடி உயரமுள்ள இரும்புக் கம்பங்கள் நட்டு, அதன் மேல் நாலு பக்கமும் சட்டமிட்டு, அந்தச் சட்டத்தின் நடுவே ரெண்டு குறுக்குச் சட்டம். இந்தக் குறுக்குச் சட்டங்கள் சந்திப்பதும், குழிக்கு நடுவே மேலே இருப்பதுமான பகுதியிலே இரும்புச் சங்கிலியால் ஒரு உரி தொங்கவிட்டு அதை மேலும் கீழுமாக இறங்குவார்கள். குழிக்குள் நல்ல காய்ந்த கட்டைகளை நிரப்பி, அதன் மேல் ஓ ரு பெரிய எண்ணெய்க் கொப்பரை. கட்டை தீப்பற்றி கப கப என்று கொழுந்து விட்டு எரிய எண்ணெய் கொப்பளித்து கொதிக்கும்.

என்னோடு எமகண்ட போட்டியில் நீங்கள் அந்த உரியில். பளபளவென்று தீட்டிய எட்டுக் கத்திகளை சங்கிலியில் கோத்து, உங்கள் கழுத்தில் நான்கு வயிற்றில் நாளும் கட்டுவோம். . குழியின் நான்கு முனைகளிலும் நட்ட தூண்கள் அருகே நாலு யானைகள். கத்திகள் கோத்த சங்கிலிகளை அவை இழுக்கு. அப்போது நான் கொடுக்கும் குறிப்புகளின்படி நீங்கள் அரை நொடி அளவிற்குள்ளாக ஏற்ற செய்யுட்களை சொல்லவேண்டும் . செய்யுளில் தப்பு இருந்தால், அல்லது அரைநொடிக்குள் செய்யுளைக் கூறத் தவறினாலோ, யானைகள் சங்கிலியை இழுக்கும். கூரான கத்திகள் கழுத்தை வயிற்றை துண்டிக்கும். அப்புறம் என்ன நீங்கள் கொதிக்கும் என்னை கொப்பரைக்குள் அப்பளம். இதுதான் எமகண்டம் பாடுவது. நீங்கள் தான் மஹா பெரிய புலவராயிற்றே இது என்ன சுண்டைக்காய்.

அதிமதுரத்திற்கு ஹார்ட் அட்டாக். எமகண்டம் நினைக்கவே பயமாக இருக்காதா? இருந்தாலும் உம்மால் முடியுமா?

'' முடியுமே. பல முறை பலரை வென்றிருக்கிறேனே. நான் ரெடி. நீங்க ரெடியா?''

அப்படியே ஒரு போட்டி நடந்தது. அதிமதுரம் கொடுத்த அத்தனை குறிப்புகளையும் வைத்து காளமேகம் குறித்த நேரத்தில் பாடி வென்றார்.



இப்போது நீங்கள் என்று காளமேகம் சொன்னபோது அங்கே அதிமதுரம் இல்லை. அந்த ஊரை விட்டே ஓடி அரைமணி ஆயிருந்தது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...