Wednesday, August 30, 2017

'' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''





அமுதன் ஈந்த ஆழ்வார்கள் - J.K. SIVAN

'' அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''

மிக உன்னதமான ஞானிகள், அற்புத மனித அவதாரங்கள் ஏனோ இந்த பூவுலகில் நீண்ட நாள் வாழவில்லை என்று சரித்திர பக்கங்கள் சொல்கிறதே ஏன்?

அதிக நாள் வாழ்ந்து ஒன்றும் செய்யாமல் பூமிக்கு பாரமாக இருப்பதை விட இந்த உலக வாழ்க்கையில் செய்யவேண்டியதை சீக்கிரமே செய்து முடித்து திரும்புவது தான் காரணமோ? சங்கரர், விவேகானந்தர், நம்மாழ்வார் போன்றோர் அதனால் தான் அதிக நாட்கள் உலகில் வாழவில்லை.

பதினாறு வயது வரை வாய் பேசாதிருந்துவிட்டு மதுரகவியாரைச் சந்தித்ததும் தன் திருவாய்மொழியின் ஆயிரம் பாடல்களையும் செஞ்சொற் கவிகளாக அவருக்குச் சொல்லியிருக்கிறார்.

மொத்தம் பதினோரு பாடல்கள்தான் எழுதியிருந்தாலும் மதுரகவியின் பாடல்களைத் திருமந்திரத்தின் நடுப்பதமான "நமோ" என்பதின் விளக்கம் என்று சொல்கிறார்கள்.

"கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெருமாயன் என் அப்பனில்
நண்ணி்த் தென்குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே."
நுட்பமான கண்ணிகளால் ஆன சிறிய கயிற்றினாலே கட்டப்பட்ட கண்ணபிரானைக் காட்டிலும் தென்குருகூர் நம்பி என சடகோபனை அழைக்கும்போது என் நாக்கில் தித்திக்கும் (அண்ணிக்கும்) அமுது ஊறும். பெருமாளைவிட அடியார் முக்கியம் என்பது வைணவத்தின் ஆதாரக் கருத்துகளில் ஒன்று.

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மையாகக் கருதுவர் ஆதலின்
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே"

படித்தவர்கள் என்னைச் சிறியவனாகக் கருதலாம். அதனால் என்ன, என் அன்னையும் தந்தையும் அவன்தான். அவன்தான் என்னை ஆட்கொள்கிறான், சடகோபன் என்னும் நம்பி.அவனே என் குரு தாய் தந்தை எல்லாம் என்கிறார்.

சங்கப் பலகையில் ஆழ்வாரின் பாடலை வைத்து அதன் ஏற்றத்தை நிரூபித்தவரும் மதுரகவிகள்தான்.

'ஓம் நமோ நாராயணாய' என்பது எட்டெழுத்து திருமந்திரம். அஷ்டாக்ஷர மந்திரம். அதில் ஓம் என்பது முதல் பதம், நமோ என்பது மையப் பதம், நாராயணாய என்பது மூன்றாவது பதம். இதில் ஓம் என்பது பகவானுக்கு அடிமைப் பட்டிருப்பதைச் சொல்கிறது என்கிறார்கள். இரண்டாம் பதம் (ஆச்சாரியனுக்குத்) தொண்டு செய்வதை வலியுறுத்து வதாகச் சொல்கிறார்கள்.

மதுரகவியின் 'கண்ணி
நுண் சிறுத்தாம்பு' பாசுரங்களை திருமந்திரத்தின் மத்தியப் பதமாகவே எண்ணி அதைப் பிரபந்தத்தின் நடுவே வைத்திருக்கிறார்கள். மிக ஆச்சரியமாக இது அமைந்துள்ளது.

பதினோரு பாடல்களை 12,000 தடவை சேவித்தவர்களுக்கு நம்மாழ்வார் காட்சி தருவார் என்று ஒரு ஐதீகம் இருக்கிறது. நாதமுனிகள் தான் நான் பார்த்தேனே என்கிறாரே.

இந்த ஆழ்வார் பதினொரு பாசுரங்கள் மட்டுமே எழுதினார் என்பதைவிட அவர் செய்த மாபெரும் சேவை வைணவ உலகம் மறக்க முடியாததொன்று. நம்மாழ்வாரின் அனைத்து திருவாய் மொழி பாசுரங்களையும் 1102 ஐயும் பிரதி எடுத்து, சிறப்பித்து, உலகறியச் செய்தவர் என்ற ஒன்றே போதாதா!.

நம்மாழ்வார் பேச்சின்றி இருந்தவர் பிறந்தது முதல். ஒரு புளியமரத்தின் உட் பகுதியில் அமர்ந்திருந்தவர். அவர் முதலில் பேசியது மதுர கவியிடம் மட்டும் தான்.

அதன் பின்னே ஒரு கதை உலாவுகிறதே. ஏற்கனவே சொன்னேனே. ஒரு நாள் மதுரகவி தனது வட இந்திய யாத்ரையில் சரயு நதி யில் ஸ்நானம் செய்துகொண்டிருந்தபோது அவர் எதிரே வானில் பளிச் சென்று ஒரு ஒளி தோன்ற, எங்கே என்று அண்ணாந்து பார்த்தவர், அது அவரையே நோக்கி காந்த சக்தியாக ஈர்க்க அதையே தொடர்ந்து சென்றார். அது தென் திசைநோக்கி பயணித்தது. அதைப் பார்த்துக்கொண்டே தெற்கே நகர்ந்தவர், அந்த ஒளி எங்கே நின்றது என்று பார்க்கும்போது அது ஆழ்வார் திருநகரியைக் கடந்து ஒரு பெரிய புளியமரத்தடியில் நின்று மறைந்தது. ஒளி இருந்த இடத்தில் ஒரு சிறுவன் அமர்ந்திருந்தான். 16 வருடங்களாக கண் மூடி, வாய் பேசாமல், காது கேளாமல் த்யானத்தில் இருந்தவன். மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று உணர ஆழ்வாருக்கு வெகு நேரம் ஆகவில்லை. அந்த பால யோகியின் அருகே சென்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கிறார்.

'செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?''

பிறந்தது முதல் இதுவரை பேசாமல், பார்க்காமல் உண்ணாமல் இருந்த அந்த யோகி உடனே பதில் சொல்கிறார்

'அத்தைத் தின்று அங்கே கிடக்கும்''

இந்த வாசகம் மிக ஆழமானது. எத்தனையோ அர்த்தங்களை உள்ளே அடக்கியது. அழிவே சாஸ்வதமான இந்த உடலில் உள்ளே தொன்று ஆத்மா என்கிற ஜீவன் எதை உட்கொண்டு ஜீவிக்கும்? என்ற பொருள் கொண்டால் ஜீவாத்மா சம்சாரத்தில் உழலும்போது அதாவது எண்ணற்ற உடல்களில் உட்புகுந்து அதன் கர்மாக்களின் பலநாள் கட்டுண்டு அதன் பலனில் கட்டுண்டு கிடக்கும். சம்சார பந்தங்களிலிருந்து விடுபட்டு ஜீவன் பரமாத்மாவை நாடி வைகுண்டம் சேரும்.

அப்படியே சாஷ்டாங்கமாக கீழே விழுந்து சரணடைந்தார். நம்மாழ்வாரைக் குருவாகக் கொண்டார்.

பிறகு நடந்ததை எல்லாம் சரித்திரம் கூறுகிறதே.

ஆழ்வார் பாசுரங்கள் வைஷ்ணவ சிந்தாந்தம் வேதாந்தம் நிறைந்தவை. சைவமும் வைணவமும் தக்க சமயத்தில் அவதரித்து, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சியில் வேகமாக பரவி வந்த ஜைன புத்த மதத்தை தடுத்து நிறுத்தியது. இதில் ஆழ்வார்களின் பங்கு இன்றியமையாதது.

1879ம் ஆண்டு மதுரகவி ஆழ்வாரின் கண்ணிநுண் சிறுத்தாம்பு பாசுரங்களுக்கு ''பெரிய வாச்சான் பிள்ளை வியாக்யானம் , ஸ்ரீ ராமனுஜரின் அரும்பதம், பிரசுரிக்கப்பட்டது. இந்தப் புத்தகம் PDF ரூபத்தில் என்னிடம் உள்ளது. (உங்களால் புரிந்து கொள்ள முடியாத நீண்ட மணிப்ரவாள நடையாக இருந்தாலும் - வேண்டும் என்பவர் என்னை அணுகவும். EMAIL இணைப்பாக அனுப்பினால் காசா பணமா, அல்லது நான் குறைந்து போய்விடுவேனா? (email: jksivan@gmail.com) கட்டாயம் அனுப்புகிறேனே.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...