Sunday, August 13, 2017

புரிசை ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள் ஆலயம்




யாத்ரா விபரம் - J.K. SIVAN

புரிசை ஸ்ரீ கரிய மாணிக்கப் பெருமாள் ஆலயம்

“ஒண் சுடரோடு இருளுமாய் நின்று ஆறும்
உண்மையோடு இன்மையை வந்து
என் கண் கொளாவகை நீ கரந்து
என்னைச் செய்கின்றன

என் கொள் சிந்தையுள் நைகின்றேன்
என் கரிய மாணிக்கமே என் கண்கட்குத்
தின் கொள்ள ஒரு நாள் அருளாய், உன் திரு உருவே”
தமிழகத்தை பொறுத்தவரை மூன்று இடங்களில் இடறி கீழே விழவே முடியாது. அந்த மூன்று இடங்கள் காஞ்சிபுரம், கும்பகோணம், வளர்ந்து கொண்டே வரும் நங்கநல்லூர்.அப்படி விழுந்தால் அது ஒரு கோவிலின் மேல் தான் இருக்கும். கோவில் மீது கால் படக்கூடாது அல்லவா. எனவே எங்கு இடறி விழுந்தாலும் தமிழகத்தில் மட்டும் இடறி விழவே வேண்டாம். விழாமலேயே நமது இடர் தீர்ந்துவிடும்.

சில மாதங்களுக்கு முன்பு கூரம் மதுராந்தகம் சூணாம்பேடு எல்லாம் சென்று கோவில்களை பார்த்தபோது அதிகம் புரிசை பற்றி எழுதவில்லை என்ற ஒரு குறை இருந்தது. அதை இப்போது நிவர்த்தி செய்து கொள்கிறேன். நான் புரிசை சென்றபோது ஆலயம் பூட்டி இருந்தது. என்னுடன் மதுராந்தகம் ஸ் . ரகுவீர பட்டாச்சாரியார் அவர்கள் வந்திருந்தார். கும்பாபிஷேகம் அண்மையில் நடந்த சுவடு தெரிந்தது. குளம் அழகாக இருந்தது. அதை பார்த்துவிட்டு கோவிலை வலம் வந்து திரும்பினேன். மாலை ஐந்து ஆறு மணிக்கு கூட யாரும் வந்து கோவிலை திறக்க வழி செய்யக்கூடாதா?

மேலே சொன்னபடி, காஞ்சியில் இடறி விழுந்தால் கோவில் என்று சொல்லுமளவுக்கு நிறைய பெரிய, சிறிய கோவில்கள் உள்ளன. பெரிய கோவில்கள் பல நல்ல இதயங்களின் கண்ணில் பட்டு சீர் செய்யப்பட்டு செப்பனிடப்பட்டு மிளிர்கையில் சில புராதன கோவில்கள் இன்னும் புதுப்பிப்பாரின்றி தேய்ந்து வருவது காலத்தின் கொடுமை என்று சொல்வதை விட நமது கவனக் குறைவினாலேயே என்பது சாலப் பொருத்தமானது. நாம் வாழும் வீட்டை நாம் செப்பனிட்டு சீரமைப்பதில் காட்டும் பரிவும் ஆதங்கமும் நம்மை இந்த உலகில் வாழ விட்டிருக்கும் அந்த மாலவனின் ஆலயத்தை, நமது முன்னோர் நம் நலனுக்காக அழகாக அருளியதை நாம் நமக்கடுத்து வரும் தலைமுறைக்கு இன்னும் மேம்பாடுடன் தராவிட்டாலும் நம் முன்னோர் விட்டுப்போன நிலையிலாவது தரவேண்டும் என்ற உணர்ச்சி வரவேண்டாமா? இன்னும் நமக்கு அந்த பொறுப்புணர்ச்சி வரவில்லை என்பது மனவேதனை அளிக்கிறது .

காஞ்சி என்றதும் நினைவுக்கு வருவது பட்டு என்றால் ஆன்மீகப்பயணம் நீண்டு தொடரவேண்டும். புராணங்களில் மற்றும் புண்யக்ஷேத்ரங்களில் "நகரங்களில் சிறந்தது" என போற்றப்படும் காஞ்சிபுரம் பட்டுக்கு மட்டுமல்ல. பண் 'பட்ட' புனித ஆச்சார்யர்களின் திருவடி 'பட்ட' க்ஷேத்ரமும் என்பது தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு தகவல்.

புரிசை என்கிற அழகிய அமைதியான கிராமம் எங்கு உள்ளது?

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் பாதை இப்போது நன்றாகவே உள்ளது.கரடு முரடு இன்றி வேகமாகவே ஊர்தியில் செல்ல வாய்ப்பு உள்ளது. அந்த பாதையில் சென்றால் கூரம் என்னும் பிரசித்தமான கூரத்தாழ்வான் ஆலயமும் உள்ளது. திருமால்பூர் என்னும் திருமால் தனது ஒருகண்ணை தாமரை மொட்டாக அர்ச்சித்த பிரசித்தமான ஆலயமும் உண்டு. இவற்றிற்கு வெகு அண்மையில் தான் புரிசை உள்ளது. இது ஒரு பல்லவர்கள் கட்டிய 16வது நூற்றாண்டு கால கோவில்

புரிசையில் வீற்றிருக்கும் கரிய மாணிக்கப்பெருமாளை தரிசித்து விட்டு அருகில் இருக்கும் பல புகழ் வாய்ந்த க்ஷேத்ரங்களுக்கும் செல்ல ஏற்றாற்போல் இந்த ஆலயத்தைச் சுற்றிலும் மதுர மங்கலம் (எம்பார் க்ஷேத்ரம், ந்ருசிம்ஹ சுவாமி ஆலயம்,). தக்கோலம்

( விசித்திர தக்ஷிணா மூர்த்தி ஆலயம்), பேரம்பாக்கம் ( லக்ஷ்மி நரசிம்ஹன் ஆலயம்) , கணபதிபுரம் மற்றும் பல்லூர் போன்ற ஊர்கள் பக்தர்களுக்கு மனமகிழ் ஆன்மீக சுற்றுலா விருந்து அளிக்க அருகிலேயே உள்ளன.

புரிசை கரிய மாணிக்கப்பெருமாள் ஆலயம் 16ம் நூற்றாண்டில் பல்லவ அரசர்களால் நிர்மாணிக்கப்பட்ட அற்புதமான ஆலயம். கரிய மாணிக்கப் பெருமாளோடு இந்த ஆலயத்தில் ஸ்ரீமத் ராமானுஜர் ஸ்ரீமத் நம்மாழ்வார், ஸ்ரீமத் மணவாள மாமுனிகள் ஆகியோர் திவ்ய தரிசனம் தருகிறார்கள். நாம் அவர்களை புறக்கணித்து விட்டோமோ? என்று நம் நெஞ்சு சுட்டாலும் அவர்கள் கருணைக் கடாக்ஷம் நம் மீது பரிபூர்ணமாகவே இருப்பதற்கு சான்றாக நமது மனத்தைக் கொள்ளை கொள்ளும் அழகோடு, புன்சிரிப்போடு, இன்றும் ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் உத்சவ விக்ரஹமாக திவ்ய தரிசனம் தருவதை எழுதிப்படிப்பதை விட நேர்ல் சென்று அனுபவிப்பது முக்கியம்.

புரிசை கிராமம் விவசாயத்தில் ஈடுபடும் ஏறக்குறைய 3000 மக்கள் நிரம்பிய கிராமம்.

கண்ணை மூடிக்கொண்டு ஒரு நிமிஷம் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்வோம் .
அவ்வப்போது விசேஷ உற்சவ பண்டிகை காலங்களில் விசிஷ்டாத்வைதத்தை அருளிய ஸ்ரீமத் ராமானுஜர் எண்ணற்ற வேத விற்பன்னர்களோடு கரிய மாணிக்கப் பெருமாள் முன் நின்று பாசுரங்கள் பாடி, பெருமாளின் வைபவம் அவர்கள் திரு வாய் மொழியாக எங்கும் எதிரொலிக்க திருமஞ்சன சேவை நடத்தியது கண் கொள்ளாக் காட்சியாக எப்படி யிருந்திருக்கும்?? அவற்றில் ஒரு சிறு பகுதியாவது நாம் நடத்திப்பார்க்க வேண்டாமா?. செய்வோமா? நானூறு வருடங்களாக கரிய மாணிக்கபெருமாள் நமக்காக காத்திருக்கிறாரே? நாம் உடனே செல்ல வேண்டாமா?. இடிபாடுகள் நீக்கி மூலவரையும், பூட்டு சாவிக்குள் கட்டுப்பட்டு கவனிப்பாரின்றி காத்திருக்கும் மூர்த்திகளையும், ஆலய புனருத்தாரணம் செய்து தக்க சந்நிதிகளில் ஏற்றி வைத்து தரிசிக்க வேண்டாமா?. அடுத்த தலைமுறை கேள்வி கேட்குமே நீங்கள் என்ன செய்தீர்கள் என்று? பதில் என்ன?.

இந்த புண்ய காரியத்திற்கு 2011ல் பூனைக்கு மணி கட்டியவர்கள் புரிசை பெற்றெடுத்த புண்ய புருஷர் மதிப்பிற்குரிய திரு P.S. ரங்காச்சாரி ( புஷ்பவல்லி டிரஸ்ட் நிறுவனம் உரிமையாளர்).

திருமலா திருப்பதி பெரிய கோயில் கேள்வியப்பன் ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் நல்லாசியுடன் 20.02. 2011 அன்று புனருத்தாரண நிர்மாண துவக்கப்பணி பாலாலயத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. பணி துவங்கியவுடன் ஊர் மக்கள் மற்றும் ஆன் மீகப் பணிக்கு ஆதரவாளர்கள் சிலரால் நிதி உதவியும் வந்து சேர்ந்தது . ஆகம விதிப்படி ஆலய புனருத்தாரணம் நடைபெற்று வருகிறது

ஸ்ரீ புரிசை கரிய மாணிக்கப் பெருமாள் ஆலய புனருத்தாரண கும்பாபிஷேகம் திருமலா திருப்பதி பெரிய ஜீயர் மற்றும் சின்ன ஜீயர் ஆகியோர் ஈடுபாடுடன் அற்புதமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.

புரிசை கரிய மாணிக்கப் பெருமாள் ஆலய மகா த்வாரம், ராஜ கோபுரம் , மூலஸ்தான கர்ப்ப கிருஹம், பெரிய, சிறிய திருவடிகள் ஆழ்வார்கள் தனித் தனி சந்நிதிகள், ஆலய புஷ்கரணி ஆலயத்தின் சுவற்றுக்கு உள்ளேயே நிர்மாணிக்கப்பட்டு பக்தர்களுக்கு புண்யம் சேர்க்கும் சுற்றுப்புற நலனுக்கேற்றவகையிலும், பிணி தீர்க்கவல்ல மருத்துவ சக்தி வாய்ந்த மூலிகை செடி கொடி மரங்கள் ஆலயத்தில் எங்கும் காண முடிகிறது.

நாம் வாழ வழி காட்டும் கரிய மாணிக்கப் பெருமாளைக் காண புறப்படுவோம் புரிசைக்கு - வழி இதோ :
சென்னையிலிருந்து 105 கி.மீ தூரம். பஸ் வசதி இருக்கிறது.

1. திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிலோ மீட்டர் (ஷேர் ஆட்டோ 25 ரூபாய் மட்டுமே)
2. காஞ்சிபுரத்திலிருந்தும் அரக்கோணத்திலி ருந்தும் பேருந்து வழியில் 20 கிலோ மீட்டர்
3. பேரம்பாக்கம், தக்கோலம் வழியே வந்தால் 8 கிலோமீட்டர்

.




No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...