Thursday, August 10, 2017

புஜங்கராவ் என்ன சிந்திக்கிறார்??


புஜங்கராவ் என்ன சிந்திக்கிறார்??
J.K. SIVAN

ஒன்றும் செய்யாமல், தனிமையில் ஒரு மரத்தடியிலோ அல்லது மொட்டை மாடியிலோ அமர்ந்து தெருவை பார்த்துக்கொண்டு போவோர் வருவோரை ரசிப்பது புஜங்க ராவுக்கு அடிக்கடி பழக்கம்.

அவர் மனத்தில் ஓடும் எண்ணங்களை அறியும் சக்தி நமக்கு உண்டானால் இன்று அவர் இதைப் பற்றி சிந்திக்கிறார் என்பதை தான் கீழே கொடுத்திருக்கிறேன். என்னையே புஜங்கராவாக உருவகித்து இதை தெரிந்துகொண்டாலும் எனக்கு சந்தோஷம் தான்.

''உலகத்தில் கண்ணில் தென்படுகிற, தென் படாத எண்ணற்ற ஜீவன்களை சிருஷ்டி பண்ணுவது அந்த பகவான் தானே. ஒரு சிறு புல்லையாவது உயிரோட்டத்தோடு நம்மால் படைக்க முடியுமா. நான் காணும் இயந்திரங்கள் உயிர் வாழும் ஜீவராசிகளாகுமா?'உயிறற்ற ஜடம் தானே ?

ஏன் அப்படி எல்லாம் படைத்த பகவான் மனிதனுக்கு மட்டும் பிரத்யேகமாக சில சலுகைகளை தந்தான்?

கொஞ்சம் யோசிக்கவேண்டாமா?

இறைவனின் மற்ற படைப்புகளை விட மனிதர்களாகிய நமக்கு பிரத்யேகமாக உணர்வுகளை வெளிப்படுத்தும் சக்தியை அவர் கொடுத்திருப்பதில் தான் வித்யாசமே உருவாகிறது. அப்படி ஸ்பெஷலாக நமக்கு கொடுக்கப்பட்ட இந்த சக்தியை சரியாக உபயோகிப்பதில் வேறு படுகிறோம். நமது உணர்வுகள் பிறருக்கு பயன் படுமாறு, அவர்களை நல்வழியில் செலுத்துமாறு, நடத்துமாறு செய்கிறோமா? எங்கிருந்தோ சுயநலம் உள்ளே வந்து புகுந்து விடுகிறது. எதிலும் ''தான், நான், எனது '' என்பதெல்லாம் நிறைய வந்து சேர்ந்து நம்முள் வியாபித்து விடுகிறது.

மனித ஜீவன் ஒவ்வொருவரும் இப்படி அந்த சக்தியை உபயோகிக்க உரிமை இருக்கிறது என்பதால் தனிக்காட்டு ராஜாவாக, தனித் தனித் தீவாக வாழ்கிறோம் .

இப்படி விட்டேத்தியாக தனி மரமாக சுய நலத்தோடு வாழ்ந்தால் அன்பு எங்கே யிருந்தய்யா வரும் . விட்டுக்கொடுக்கும் தன்மை, பாசம், பரிவு, கருணை, தியாகம் இதெல்லாம் ஏதாவது சினிமாவில் காசு கொடுத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான். எல்லோருமே இப்படி இல்லை என்று திருப்தி அடைவோம்.

சிலர் தனக்கென வாழா பிறர்க்குரியாளர்கள். எதையாவது யாருக்காவது (நல்லதையே மட்டும்) செய்பவர்கள் இன்னும் இருக்கிறார்கள். பிறருக்கு எந்த விதத்திலாவது உபயோகமாக இருக்கவேண்டும் என்று எண்ணுபவர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்கள் மனம் விசாலமானது. நிறைய இடம் விசாலமாக இருப்பதால் தான் இறைவனும் அங்கே கை கால் நீட்டி வசதியாக படுக்க முடிகிறது, அங்கேயே தங்கி சௌகர்யமாக அவன் வசிக்க வசதியாக இருக்கிறது.

நமது மனம் அன்ரிசெர்வ்ட் (UN RESERVED) ரயில் பெட்டியாக இருந்தால் -- அதாவது சுய நோக்கம், சுய திருப்தி,சுய நலம், பேராசை, பொறாமை, ஆங்காரம், நிரம்பி இருந்தால் இறைவனுக்கு அங்கே இடமே யிலையே எப்படி இருப்பான்? சுக வாழ்க்கை பிரயாணம் எப்படி?

மனதில் இறைவனோடு ஒன்றவேண்டும் என்ற எண்ணம் காலம் காலமாகவே நம்முள் இருக்கிறது. ஆன்மீக பாதை தேடி மனம் உருகி ஆற்று நீர் கடலில் கலந்து தன்னை இழப்பது போல் நெடும்பயணத்துக்குப் பிறகு அவனில் கரைந்தவர் பலர்.

மனதில் இறைவனைப் பற்றிய ஒரு சிறு எண்ணம் தோன்றுவதே ஆன்மீக நுழைவுக்கு ஆதாரம். திடீரென்றும் இது தோணலாம். படிப்படியாகவும் உள்ளத்தில் வேரூன்றலாம். அவரவர் மன நிலை பக்குவத்தை பொருத்தது.

மேலே மேலே கஷ்டங்கள் வாழ்க்கையில் அனுபவிக்கும்போது மட்டும் ஒருவனுக்கு வேதாந்தம் பேச்சில் உருவாகும். ஏன் என்றால் உணர்ச்சி கொந்தளித்து நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி தான் நம்மை ஆட்டுவிக்கிறது என்று தோன்றும். இதனால் பக்தி உண்டாகும். அது சிறிது சிறிதாக நம்பிக்கையை மனதில் துளிர்க்க வைக்கும்.

அதனால் தானே குந்தி ''கிருஷ்ணா எனக்கு சுகம் வேண்டாம், துன்பமும் கஷ்டமும் மேலே மேலே கொடு, அப்போது நான் உன்னையே நினைப்பேன், நீயும் என்னிடம் வருவாய், இருப்பாய். '' என்றாள் .

மற்றும் சிலர் ஆன்மீக வாழ்வில் விருப்பம் கொண்டு யாரேனும் ஒரு பொருத்தமான பெரியவரிடம் தீக்ஷை பெறுவார்கள். அவரே குரு. ஒரு சிலரது ஆன்மீக அனுபவம், சாதாரணமாக காய் கனிந்து பழமாவது போல். கொஞ்சம் கொஞ்சமாக தம்மை ஆத்மார்த்த எண்ணங்களில் ஈடுபடுத்தி முன்னேறுவது. கோவில்கள், பஜனைகள், சத்சங்கம் இது மாதிரியான வழி முறைகள் இதற்கு உதவும்.

ரொம்பவே கெட்டுப்போனவன் ஒரே நாள் ராத்திரியில் ஆன்மீகவாதியாவது ஏதோ ஒரு வித சுனாமி EFFECT என்று சொல்லலாம். இப்படியும் நடப்பது உண்டு. கண்ணதாசன், அருணகிரி நாதர் உதாரணங்களே போதுமே. ஆனால் அது ரொம்ப ரொம்ப ரொம்ப அபூர்வமானது, அதீதமானது. மொத்தத்தில் ஆன்மிக உணர்வு ஒருவனின் மன நிலையின் வளர்ச்சி சம்பந்தப்பட்டது.

ஆன்மீக சிந்தனை ஆரம்பத்தில் சில மணி நேரங்கள், சில நாட்கள் மட்டுமே இருப்பது கூட ஒருவிதத்தில் தொடர்ந்து அவ்வித எண்ணங்கள் சிந்தனைகள் மனதை ஆட்கொள்ள உதவலாம். உணவில் நாட்டம் குறைவது , ஆன்மீக புத்தகங்கள் படிப்பது, பிரசங்கங்களில் ஈடுபாடு, தூக்கம் குறைவது, தனிமையில் நாட்டம், பேச்சு குறைவது, நல்லோர் இணக்கம் இதெல்லாம் ஆத்ம விசார அறிகுறிகள்.

இதில் ருசி கண்டவன் இதை விட்டு விலகமாட்டான். இறைவனை அருகிலேயே காண துடிப்பான். நான் இன்னும் தகுதி அடையவில்லை என்ற எண்ணம் எப்போதும் அவன் மனதில் அவனை உறுத்தும். அவனை மேலும் மெருகிடும். தன் செயலை, சொல்லை, எண்ணத்தை ஆராய முயல்வான். குறைகள் நீங்கும். உள்ளும் புறமும் சுத்தமாகி பளபளக்கும். உணவு வெறுக்கும். உபவாசம் இருப்பான். விரதம் மேற்கொள்வான். ஸ்புடம் போட்ட தங்கமாவான். அவனை விட்டு வம்பு, வீண் பேச்சு, அக்கப்போர் எதுவுமே எப்போதோ ஓடி இருக்கும். நேரம் தியானத்தில் கழியும். அவன் பார்வையில், முகத்தில், பேச்சில், ஞானம் சொட்டும்.

இது சாதாரண மனிதருக்கு ஏதோ பேத்தல் என்றோ, பொழுது போகாத செயல் என்றோ, தோன்றுவதில் தவறே இல்லை. இறை அனுபவம் எளிதில் யாருக்கும் கிட்டிவிட்டால் அதற்கு மதிப்பேது?.
ஒரு கிலோ தங்கம், ஒரு கிலோ உப்பின் விலையில் கிடைத்தால் அதற்கு மதிப்பு ஏது? யார் வாங்குவார்கள், அணிவார்கள்?

தங்கம் அப்படி கிலோ பதினைந்து ரூபாயில் கிடைத்தால் எவன் கஷ்டப்பட்டு மோட்டார் சைக்கிளில் வந்து அதை அறுத்துக்கொண்டு ஓடுவான். எட்டாத கனிக்கு மதிப்பு அதிகம். எளிதில் கிடைக்காத மனிதனுக்கும் அப்படித்தான் எப்போதுமே மதிப்பும் மரியாதையும் அதிகம். எட்டி எட்டி பார்த்தும் எட்டாதவன் தான் அந்த கால கதையில் வரும் நரி. ' இந்த பழம் புளிக்கும்' ஜாதி.

முயன்றால் முடியாததில்லை. முதலில் நாட்டம் தேவை. பிறகு தான் படிப் படியாக ஈடுபாடு, விடாமல் தொடர்வது, முன்னேற்றம் தரும்.

கடவுள் தனக்கு பிடித்தவர்களைத் தான் சோதிப்பார். நமக்கு பிடித்த தக்காளியைக் கூட அமுக்கிப் பார்த்து தானே வாங்குகிறோம். கெட்டியாக இருந்தால் மட்டுமே, நமது கூடைக்குள் செல்கிறது. கடவுள் தனக்குப் பிடித்ததை அமுக்கக் கூடாதா?

ஞானிகள், தமக்கு ஞானம் வந்து விட்டது என்று தெரிந்து நிறுத்திக் கொள்கிறார்களா? இறை தாகம் மேலும் மேலும் அவனைத் தேடவே செய்கிறதே .இந்த தேடலில் புலன்களின் மேல் பூரண கட்டுப்பாடும் தானாகவே வந்துவிடும். ரொம்ப கடின பயிற்சி இது.

இன்னும் கொஞ்சம் உயர்ந்தால் தான் ''தன்னையே'' மறக்கும் ஸ்திதி உண்டாகும். அப்போது தான் ஒருவன் சைதன்யர், ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆகிறான். தான் வேறு , இறைவன் வேறு என்று அறியாத நிலை அது. சிதானந்தம். அது வெகு வெகு தூரம் நமக்கு.

முதலில் இறைவன் இருக்கிறான் என்று உணர்வோம், பிறகு அவனை அடைய பிரயத்தனப் படுவோம், நம்மை அவனை நோக்கி செல்லாதவாறு பிடித்து இழுப்பவற்றை ஒவ்வொன்றாக விடுவோம். பாரம் குறைந்தால் பறப்பது சுலபம். பறப்போம், மேலே மேலே பறப்போம், லக்ஷியத்தோடு ஒன்றிவிடுவோம். அப்புறம் தான் , அவன் தான் நாம், நாம்தான் அவன் என்று ஆகமுடியும்.

ஒரு குறிப்பு. இதற்கு எத்தனையோ பிறவிகள் தேவையாகலாம். அபூர்வ மனிதர்கள் ஒரே பிறவியில் இதை அடைந்து இருக்கிறார்கள். ராமலிங்க சுவாமிகள் அவர்களில் ஒருவரோ? நமக்கு என்ன தெரியும் அவருக்கு அது எத்தனையாவது பிறவியோ? நாம் முயற்சிக்க வேண்டியது;

1. உண்டு, உறங்கி, உடுத்து, ஊர் சுற்றுவது தவிர ''உள்ளேயும்'' ஏதோ இருக்கிறது என்று முதலில் உணர்வது.

2. உடலை சுத்தமாக வைப்பதுடன், உள்ளேயும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று முதலில் நினைப்பது. பிறகு அதை நிறைவேற்ற கொஞ்சம் கொஞ்சமாக பாடு படுவது. அதற்கு கட்டுப்பாடுகள் தேவை. மெள்ளமாக அவற்றை கடைப் பிடிக்கவேண்டும்.

3. உணர்ச்சிகளை அவை போன போக்கில் விடாமல் 'எஜமானனாக' நமது அதிகாரத்தை பிரயோகிக்க வேண்டும். ஓடும் குதிரைகளை இழுத்துப் பிடிக்கவேண்டும். கிருஷ்ணன் தேரில் இதனால் தான் ஐந்து குதிரைகளா?

4. மனதை நல்ல வஸ்துக்களால் நிரப்ப வேண்டும். அன்பு, சமமாக எல்லாவற்றையும் , எவரையும் ஏற்றுக்கொள்ளல், கருணை, சேவை என்று தான் நாம் இதுவரை தொடாதவை நிறைய உள்ளதே.

5. அவன் ஒருவன் தான் எல்லாவற்றையும் கவனித்து நமது செயல்கள், சொற்கள், எண்ணங்களின் காரணன் என்று புரிதல்.

6. எல்லா செயல்களும், சொற்களும் எண்ணங்களும் அவன் வசம் ஒப்புவித்தாகி விட்டதால் இனி பாக்கி என்ன இருக்கிறது. நாமே தான் அவனாகி விட்டோமே .

நான் மேலே சொன்னதெல்லாம் கர்ம யோகம், பக்தியோகம், ஞானயோகம் என்று உபநிஷத், வேத ஸ்லோகங்கள் மேற்கோள் காட்டி எழுதியிருந்தால் உங்களில் ஒருவராவது இதை படிப்பீர்களா? புஜங்க ராவ் கதை என்று ஒரு கதையாக சொன்னால் எப்படி உள்ளே போகிறது விஷயம்!!!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...