Sunday, August 6, 2017

கந்தன்குடி குமரன்

யாத்ரா விபரம்

கந்தன்குடி குமரன் - J.K. SIVAN

தமிழ் கடவுள் கந்தன் குமரன் இல்லாத தலமே தமிழகத்தில் இல்லை. அவற்றுள் ஒன்பது ஸ்தலங்கள் முருக பக்தர்களால் வெகுவாக வழிபடும் க்ஷேத்திரங்கள். அறுபடை வீடுகள் திருப்பரங்குன்றம், திருத்தணி, திருச்செந்தூர், திருவாவினன்குடி, திருவேரகம், பழமுதிர்சோலை. மற்ற சில முக்கிய முருக ஸ்தலங்கள் வடபழனி, மருதமலை, மயிலம், வள்ளிமலை, விராலிமலை, குன்றக்குடி, இலஞ்சி, வயலூர், திருப்போரூர், திருவிடைக்கழி, சிக்கல், எட்டுக்குடி, என்கண், கந்தன்குடி ஆகியவை. கந்தன்குடிக்கு தென்காடு, மதுவனம், என்ற பெயரும் உண்டு. மிக விஸ்தாரமான கோவில்.

திருவாரூர் ஜில்லாவில், நன்னிலம் வட்டத்தில், பேரளம் அருகே கந்தன் குடி இருக்கிறது. நாங்கள் திருநள்ளாரிலிருந்து சற்று ஓய்வெடுத்து நாலுமணிக்கு கிளம்பி ஒரு மணிநேரத்துக்குள் அம்பகரத்தூர் சென்று அருகே உள்ள இந்த க்ஷேத்ரம் சென்றோம். மயிலாடுதுறையிலிருந்தும்,காரைக்கால், திருநள்ளாரிலிருந்தும் செல்ல பஸ் வசதி இருக்கிறது.

நிறைய குளங்கள், வயல்கள் சூழ்ந்த இடத்தில் நடுவே இருக்கிறது நூலாற்றின் வடகரையில் கந்தன்குடி கிழக்கே பார்த்து இருக்கிறது. நுழைந்த உடன் பெரிய மண்டபம்.உயர கொடிமரம். தல விருக்ஷம் பன்னீர். அருகே சென்றாலே கம்மென்ற வாசனை. தனிச்சன்னதியில் ஐராவதேஸ்வரர். வடக்கே விசாலாக்ஷி. கிழக்கே பைரவர். தனி சந்நிதியில் தெய்வானை தெற்கு பார்த்து கந்தனை மணாளனாக பெற தவமிருக்கிறாள்.

மூலவர் சுப்பிரமணியர் வள்ளி தெய்வானை சமேதர். சுப்பிரமணியம் என்றாலே சு+ப்ரம்மம்+ந்யம் அதாவது இன்பத்தை இயல்பாக கொண்ட சிவ பரம்பொருளிலிருந்து மாறாமல் இருப்பவன்.

கந்தன் என்றால் ஒன்றாக திறண்டவன் என்று ஒரு அர்த்தம். சிவனின் நெற்றிக்கண் பொறிகள் ஒன்றாக சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டாவன் ஆறுமுகனான சரவணபவன் ( ஓட்டல் ஞாபகம் வரவேண்டாம்). ஓம் சரவணபவ என்பது ஷடாக்ஷரம். ஆறெழுத்து மந்திரம்.

அம்பர் மாகாளி விசேஷமானவள். அம்பன், அவள் மகன் கந்தன் இங்கே குடிகொண்டதால் இது கந்தன்குடி . இந்த ஆலயம் புராதனமானது. ஆயிரம் வருஷங்கள் என்று சொல்கிறார்கள். இங்கும் ஒரு பசு புற்றில் தினமும் பால் சொறிந்து அந்த அற்புதத்தை ஆராய்ந்து அந்த பன்னீரை மரத்தடி புற்றைத்தோண்டி உள்ளே சுப்ரமணியன் வள்ளி தேவானை சமேதராக தோன்றினதாக ஐதீகம்.

2005ல் கும்பாபிஷேகம் நடந்த கோவில். கௌரீச குருக்கள் முருகனை அழகான அலங்கரித்து பிரசாதம் அளிக்கிறார். விவரங்கள் கேட்டால் நிதானமாக சொல்கிறார். மூலவர் கருணையாக அருள் பாலித்தாலும் சிடு சிடு வென்று விழும் அர்ச்சகர்கள் மத்தியில் சில கௌரீச குருக்கள்களும் இருப்பது நமது பாக்யம்.







No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...