Thursday, August 10, 2017

திருநாகைக் காரோணம்

யாத்ரா விபரம் J.K SIVAN






திருநாகைக் காரோணம்

ரொம்ப நாளாகி விட்டது யாத்திரை பற்றி எழுதி. எங்களது சப்த விடங்க க்ஷேத்ர யாத்திரையில் அடுத்து நாங்கள் தரிசித்தது நாகப்பட்டினம் காயாரோஹண ஸ்வாமி ஆலயத்தில் அருள் பாலிக்கும் விடங்கரை.

திருநள்ளாறில் ஒரு இரவு யாத்ரி பவனில் தங்கி மறுநாள் காலை கண்ணுக்கு குளிர்ச்சியான இரு மருங்கிலும் பச்சை பசேல் என்ற வயல்கள் சூழ்ந்த ரெண்டு பக்க மரங்கள் அடர்ந்த சாலையில் ஸ்ரீனிவாசன் காரை செலுத்தினார்.

திருநள்ளாறுக்கும் நாகப்பட்டினத்துக்கும் 18 கி.மீ. தூரம்.
காவிரி தென்கரை சிவாலயங்களில் இது 82வது ஆலயம். ஆயிரமாயிரம் வருஷத்துக்கு முந்தைய இந்த பழைய சிவன் கோவிலை இன்னும் பழசாகவே வைத்துக்கொண்டிருக்கிறார்களே ஏன்? யாருக்கும் அதை கவனிக்க கொஞ்சம் செலவழித்து புதுப்பிக்க நேரமோ மனமோ இல்லையா. நான் அரசு, அதிகாரிகளை பற்றி நினைக்கவே இல்லை.

சிவன் இங்கே காயாரோஹணேஸ்வரர். காயம் என்றால் உடம்பு ஆரோகணம் என்றால் எழுதல். ஸ்வயம்பு என்ற அர்த்தம் கொடுக்கிறது. இன்னொரு கதை, புண்டரிக ரிஷி தவமிருந்தபோது சிவன் அவர் உடலில் புகுந்து முக்தி அளித்தார் என்பது. காரோணம் என்று இலக்கியங்களில் வருவது. இங்குள்ள விஷ்ணு ஓணத்தான் என்று போற்றப்படுபவர். அம்பாள் நீலாயதாக்ஷி. நீல கண்களை உடையவள். வெள்ளைக்காரி அல்ல. எதிரே சமுத்திரத்தை பார்த்து கொண்டு தனது ஆதிக்கத்தில் வைத்துக்கண்டிருப்பவள். ஞாபகம் வரவில்லையே. எப்போது புயல் என்றாலும் முதலில் அடிபடும் பெயர் நாகபட்டணம் தானே.

ஆறாவது நூற்றாண்டு சோழன் பல்லவன் யாரோ கட்டிய அற்புத ஆலயம். பஸ் ரயில் கார் எதுவும் தேடாமல் நடந்தே இங்கு அப்பர் சுந்தரர் சம்பந்தர் வந்திருக்கிறார்கள். பாடியும் இருக்கிறார்கள். லக்கோலிஸ வகுப்பு குஜராத்தியர்கள் கட்டியது இது. இதே போல் காஞ்சிபுரத்தில் நிர்மாணித்திருக்கிறார்கள்

இங்குள்ள விடங்கர், தியாகராஜர், நீலக்கல்லினால் ( ruby) ஆனவர். சுந்தர விடங்கர். இங்கு சிவன் ஆடியது விலத்தி நடனம்.பரவதரங்க நடனம். அலைபோல் அசைந்து ஆடும் நடனம். முசுகுந்தன் திருவாரூரை தவிர மற்ற ஆறு இடங்களில் இந்திரன் கொடுத்த விடங்கர்களை பிரதிஷ்டை செய்ததில் இங்கே ஒன்று.

ஒரு விஷயம் தெரியுமா. அம்பாள் இங்கே கன்னியாக தவம் இருந்தபோது சிவன் நந்தியை கூப்பிட்டு ''நந்திகேசா, நீ நீலாயதாக்ஷிக்கு துணையாக நாகபட்டணத்தில் போய் இரு'' என்று சொல்ல ''உங்களை பார்க்காமல் இருக்கமுடியாதே'' என்று நந்தி தயங்க,

''சரி என்னையும் பார், அவளையும் பார்த்துக் கொள் '' என்று சிவன் சொல்ல, இங்கே நந்தி தலையை வளைத்து அழகாக காயாரோஹணரை பார்க்கும் அழகு திவ்யம். அங்கொரு கண்ணும் இங்கொரு கண்ணுமாக நந்தி அம்பாளையும் சிவனையும் பார்த்துக் கொண்டிருப்பதால் ''இரட்டை பார்வை ''நந்திக்கு இங்கே.

ஒரு வழக்கம் கேள்விப்பட்டபோது ஆச்சர்யமாக இருந்தது. இந்த பகுதியில் எவரேனும் இறந்தால் காயாரோகணேஸ்வரர் அணிந்த மாலை, வஸ்திரம் அந்த பாக்யசாலியின் உடலுக்கு சாற்றப்படுகிறதாம். மீன்பிடிக்கும் குலத்தை சார்ந்த அதிபத்த நாயனார் காயாரோகணேஸ்வரின் திருவடிகளில் முக்தி அடைந்ததால் இந்த வழக்கம். அறுபத்து மூன்று நாயன்மாரில் ஒருவரான அதிபத்தரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது. அவரைப்பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் எழுத விருப்பம்.

இந்த ஆலயத்தில் நாகாபரண விக்னேஸ்வரர் இருக்கிறார். இன்னொரு விஷயம் வழக்கமான நாய் வாகனத்தை விட்டு சிம்ம வாகனத்தில் பைரவர் இங்கே காட்சி தருகிறார். எல்லாவற்றுக்கும் பின்னால் சுவாரஸ்யமான கதைகள் இருக்கிறது. சொல்ல வாழ்நாள் போதாது எனக்கு.

நாகை புயல் மழை வெள்ள கடல் கொந்தளிப்பை கட்டுப்பாட்டுக்குள் காயாரோகணேஸ்வரர் வைத்திருப்பதை இந்த பட்டினம் சிவ ராஜதானி என்ற பெயரும் கொண்டது.

பன்னிரு கரம் கொண்ட ஆறுமுகன் இங்கேஅருணகிரியின் திருப்புகழில் களித்து அருள்பாலிக்கிறார்.

இங்கு மாம்பழம் புளிக்கிறதாம். கசக்கிறதாம், இனிக்கிறதாம். தென்கிழக்கு பிரகாரத்திலிருந்து பார்த்தல் மாமரம் நந்திபோல் உருவம் அளிக்கிறதாம். நான் பார்க்கவில்லை. அப்புறம் தான் தெரிந்து கொண்டேன். The temple is open from 6.00 a.m. to 12.30 p.m. and from 5.00 p.m. and 9.30 p.m. +91- 4365 - 242 844, 98945 01319, 93666 72737.



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...