Thursday, August 24, 2017

'' திருக்கள்ளில்'' கோவில் தெரியுமா ?











யாத்ரா விபரம் 
     

                  '' திருக்கள்ளில்''  கோவில் தெரியுமா ?

போனஸ் என்பது வருஷத்துக்கு ஒருதடவையோ  கால வரம்பு கடந்து எப்போதோ ஒரு முறையோ  கொடுக்கப்படும் ஒரு லாபம். 


எனக்கு அடிக்கடி இந்த மாதிரி போனஸ் தருகிறார்  நண்பர் அரும்பாக்கம் ஸ்ரீனிவாசன்.  இன்று விடியற்காலை நானும் என் மற்றொரு நண்பர் திரு சித்தானந்தமும் ஸ்ரீனிவாசன் தம்பதிகளோடு  ஒரு குட்டி புனித யாத்திரை அவரது காரில் பயணம் செய்தோம்.

விடியற்காலையில்  சென்னை சாலைகளில் பிரயாணம் செய்வது நிம்மதியாக இருக்கும். அதிக ஜன, வண்டிகளின் நடமாட்டம் குறைவு.  வேகமாக போகமுடிகிறது.

புழல் வழியாக பெரியபாளையம் சாலையில் சென்றால்சென்னையிலிருந்து  40 கி.மீ.  தூரத்தில் ஊத்துக்கோட்டை பகுதியில், ஆந்திராவுக்கு அருகில்   திருக்கண்டலம் என்ற  யாருக்கும் தெரியாத ஒரு ரகசிய ஊர்  இருக்கிறது.  276  பாடல் பெற்ற  சிவ ஸ்தலங்களில் ஒன்றான இதை அவ்வளவு சீக்கிரமாக கண்டு பிடிக்க முடியவில்லை. கன்னிகைப்பேர்  என்கிற  ஊருக்கு நிறைய பஸ் வசதி இருக்கிறது. அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் ''திருக்கள்ளில்''  என்ற  பாடல் பெற்ற  இந்த ஸ்தலம் திருக்கண்டலமாக  இப்போது மாறி  இருக்கிறது. 


ஆயிரம் ஆண்டுக்கும் மேலான இந்த  சோழர் கால கோவில்  மிகச் சிதிலமடைந்து சமீபத்தில் புனருத்தாரணம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு புராணப் பெயர்  திருக்கள்ளில் கள்ளம். எங்கும் ஒரே கள்ளிச்செடிகள் இருந்த காடு. வஜ்ரவனம்  என்று  வடமொழியில் பெயர்.  இந்த  ஆலயத்தில் 106  வயதான ஒரு அர்ச்சகர் வெகுகாலம் பூஜைகள் செய்து பராமரித்து வந்தவர் கைலாச பதவி பெற்று  அவரால் வளர்த்து நியமிக்கப்பட்ட ஒரு வாரிசு  அர்ச்சகர்  இறைபணி   செய்து வருகிறார்.  எங்களைத்தவிர யாருமே இல்லை.  அதிகம் பேர் வருவதில்லை என்கிறபோது மனம் உடைகிறது. 

சிவனுக்கு இங்கே  சிவானந்தேஸ்வரர் என்று பெயர். அம்பாள் ஆனந்தவல்லி. சம்பந்தர் வந்த காலத்தில் எங்கும் கள்ளிச்செடி சூழ்ந்திருந்தது. இந்த ஆலய ஸ்தல விருக்ஷம் கள்ளி.  திருவாலங்காட்டில்  சிவனை தரிசித்து விட்டு காளஹஸ்தி சிவனை தரிசிக்க நடந்த  சம்பந்தர் இந்த மார்க்கமாக வந்தபோது  தனது  பூஜா விக்ரஹ  பெட்டியை கரையில் வைத்து விட்டு அருகே குசஸ்தல ஆற்றில் ஸ்நானம் செய்துவிட்டு வெளியே வந்து பார்த்தால்  பெட்டியை காணோம்.  அது தான் திருக்கள்ளில் சிவானந்தேஸ்வரனால் எடுத்துச் செல்லப்பட்டு விட்டதே.

 சம்பந்தர் பெட்டியை தேடி அலைந்து  இங்கே கள்ளிச்செடிகளின் இடையே  ஒரு சிவலிங்கத்தின் அருகே தனது விபூதி பூஜா விக்ரஹ பெட்டியை கண்டுபிடித்து இது சிவனின் லீலை என்று அறிகிறார். உடனே  பிறக்கிறது  அற்புத தேவார  பாடல்கள் .      ஆலயசுவற்றில்  ''திருக்கள்ளில்''   என்று  வாசகம் அடங்கிய  சம்பந்தரின் தேவார பதிகங்கள் படிக்க வசதியாக இருக்கிறது. 
அவற்றை  கீழே கொடுத்திருக்கிறேன். 

''முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை
வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த
கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும்
உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.

ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான்
ஓடலாற் கலனில்லான் உறை பதியால்
காடலாற் கருதாத கள்ளில் மேயான்
பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.

எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண்
பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி
கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான்
பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும்
நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த
கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான்
நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.

விரையாலும் மலராலும் விழுமை குன்றா
உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக்
கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான்
அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.
நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல
வலனாய மழுவாளும் வேலும் வல்லான்
கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான்
மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.

பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங்
குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங்
கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான்
அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.

திருநீல மலரொண்கண் தேவி பாகம்
புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில்
கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும்
பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.

வரியாய மலரானும் வையந் தன்னை
உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங்
கரியானும் அறியாத கள்ளில் மேயான்
பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர்
பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள்
மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில்
தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.

திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு
பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல
முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப்
புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.''

இந்த புனித ஆலயம் அகஸ்தியர் பிருகு மஹரிஷிகளால் மட்டுமல்ல.   ராமரின் புத்திரர்கள் லவ குசர்கள் தரிசித்த  ஸ்தலமும் கூட.  அருகே உள்ள பிரபல  சிறுவாபுரி தான்  இந்த சிறுவர்கள் லவ குசன்  இருந்து பூஜித்த ஆலயம். பிருகு மகரிஷி  ஆயிரம் கள்ளிச்செடி மலர்களால் பூஜித்த சிவன் கோவில் இது.

சிவானந்தேஸ்வரர்  ஸ்வயம்பு லிங்கம்.கிழக்கு பார்த்த  ஐந்து நிலை ராஜகோபுரம் அழகாக வரவேற்கிறது.கஜ ப்ரஷ்ட விமானம். தமிழில் தூங்கானை மாடம்.   வெளியே  ஒரு புஷ்கரணி . இப்போது சீரமைத்து  வேலி போட்டு சுத்தமாக காட்சி அளிக்கிறது. இந்த ஆலயம் குசஸ்தல ஆற்றின் கரையில் அமைந்துள்ளது  (கொசுத்தலை  ஆறு  என்று  உள்ளூர் காரர்கள் சொல்லும்போது மனம் பதைக்கிறது . ஹாமில்டன் வாராவதி அம்பட்டன் வாராவதியானவதை விட மஹா மோசம்) 

இங்கு  சக்தி தக்ஷிணாமூர்த்தி அபூர்வமானவர். பிருகு மகரிஷிக்கு கௌரியோடு  காட்சி கொடுத்த சிவன். இடது கையில் அம்ருத கலசம் வேத சுவடிகள், பார்வதியாகிய சக்தியை அணைத்தபடி. அபூர்வ சிற்பம்.  இன்று குருவாரம். தட்சிணாமூர்த்தியின் அபூர்வ தரிசனம் கிட்டியதில் பெரு மகிழ்ச்சி.
கோவில் நேரம்   8.00 AM to 12.00 Noon and 05.00 PM to 8.00 PM.   ஆலய தொலைபேசி  +91-44 - 2762 9144, 099412 22814.

மேலும் சில கோவில்களை தரிசித்ததை அடுத்து சொல்கிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...