Wednesday, April 22, 2020

ZERO SIVAN





                                                     
            அடர்ந்த காட்டில் ஒரு  அக்னீஸ்வரர் 
                                     J K  SIVAN 

சொன்ன நேரத்தில்  எதிர்பார்த்தது நடந்தால் அது அதிசயம்  இல்லை, ஆச்சர்யம் என்று வேண்டுமானால் சொல்லலாம். ஏனென்றால் சொன்னபடி எதுவும்  யாரும் செய்வதில்லை, நடப்பதில்லை.

நினைப்பதெல்லாம்  நடந்துவிட்டால்  தெய்வம்  ஏதுமில்லை  --  இப்போது தானே  சில நாளைக்கு முன்பு பாடி பார்த்தேன். நமது  இந்து நம்பிக்கையில்  தானாகவே  இயற்கையாக  தோன்றும்  தெய்வம்  சிவன்  ஒருவன்  தான்.  ஸ்வயம்பு  என்ற  வார்த்தை அதிகமாக  சம்பந்தப்பட்டது  சிவலிங்கம் ஒன்றில்  தான்.  எத்தனையோ  புராணங்கள், பாடல்கள் ஸ்தோத்ரங்கள்,  சிவனை   ''தான்  தோன்றியாக''   (ஸ்வயம்பு லிங்கமாக)  புகழ்கின்றன.

ரொம்ப காலமெல்லாம் இல்லை.  சில  வருஷங்கள்  முன்பு  தான்  நிகழ்ந்த இந்த  அதிசயம்  உங்களில்  பல பேருக்கில்லாவிட்டாலும்  சில பேருக்காவது  தெரிந்திருக்கலாம்.  தெரியாதவர்கள் இப்போது தெரிந்து கொள்ளவும்.

ஆவணி  சிவனுக்கேற்ற  மாதம்.  2004 ல் ஒரு நாள்  பிரேம் சுப்பா  என்ற ஒரு  மரம்  வெட்டுபவன்  வீட்டை விட்டு  காலையில்  காப்பி சாப்பிட்டுவிட்டு எத்தனையோ கவலையோடு வழக்கம்போல   காட்டில்  மரம் வெட்ட  புறப்பட்டான். ஒரு  ஆஜானுபாகு மரம்  நேற்றே  பார்த்து வைத்து விட்டான்.  அதை  இன்று  வீழ்த்தப்போகிறான். மரம் அவன் எதிர்பார்த்து  கீழே  சாயவேண்டிய  இடத்தில்  சாயாது ஏன்  சற்று தள்ளியே  சாய்ந்து விழுந்தது? அந்த அனுபவஸ்தன் அப்போது தான்  கவனித்தான் அது விழும் என்று  எதிர்பார்த்த இடத்தில் ஒரு  பெரிய கல்!  ஆச்சர்யத்தோடு அருகில் சென்று பார்த்தபோது  தான்  அது கல்  இல்லை,    சிவலிங்கம்  என்று  தோன்றியதே .
இப்படித்தானே   இமயமலையில் பனி படர்ந்த பகுதியில் ஒரு குகையில் அமர்நாத் பனி லிங்கம்  கண்டுபிடிக்கப்பட்டு  எண்ணற்ற  சிவ பக்தர்களை  இன்றும் மகிழ்விக்கிறது.   மரம் வெட்டி  ஓடினான். தான் கண்ட  அதிசயத்தை  ஊருக்குள் எங்கும் பரப்பினான்.   செய்தி  காட்டுத் தீயாக  பரவியது.

ஊரில்  பண்டிதர்கள் பழைய புராண பக்கங்களைப் புரட்டினார்கள்.  சிவபுராணத்தில் (1893ல்  வெளியான 17வது பதிப்பு) 2005ல் மறுபதிப்பு,  அதில் 5வது  அத்தியாயத்தில்    அவர்கள் தேடிய  விஷயம் கண்ணில் பட்டது.

''ஒரு   உயரமான சிவலிங்கம்,  லிங்காலயம் என்ற  இடத்தில் உருவாகும், அந்த  பிரதேசமே  அருணாசலம் என்று பெயர் பெரும்'' என்று  இருக்கிறதே  என்று  பிலு பிலு வென  செய்தி பரப்பினார்கள்.

ஒரு  அதிசயத்தோடு  இன்னொரு அதிசயமும்  கூடியது எப்படி என்றால்  அந்த  சிவலிங்கம்  இன்று உள்ள கிராமத்தின் பெயர்  '' ஜீரோ'' .இப்படி  ஒரு பெயரா?  வாஸ்தவம்.   பொருத்தமானதும் கூட  என்று தானே  தோன்றுகிறது.     ஜீரோ என்றால்  பூஜ்யம்.  பூஜ்யத்துக்குள்ளே  ஒரு  ராஜ்ஜியம்  அமைத்துக்கொண்டு  புரியாமலே  இருப்பான்  ஒருவன். புரிந்துகொண்டால்  அவன் தான்  இறைவன்  அல்லவா?  அந்த லிங்கத்துக்கு  தற்போது பெயர்  சித்தேஸ்வர்நாத். அக்னி லிங்கம்.   24 அடி உயரம்,  22 அடி அகலம். வடக்கே  பார்த்த லிங்கம்.  காலடியில்  கங்கை  ஓடுகிறது.

சிவனடியார்கள் பலர்   நாடுவது பனிரெண்டு  ஜோதி லிங்கங்களை.  அவற்றை  சௌராஷ்டிரா தேசத்தில் சோம நாதனாகவும் , ஸ்ரீ சைலத்தில்  மல்லிகார்ஜுனனாகவும்,  அவந்தியில்  மஹா  காளேஸ்வரனாகவும்,  காவேரியும் நர்மதையும் கலக்கும்  மந்த திரிபுராவில்  ஓங்காரேஸ்வரனாகவும் , வைத்ய நாதனாகவும் , சதாங்க நகரவாசி  நாக நாதனாகவும், பனிமலையில் கேதார நாதனாகவும், கோதாவரி நதி தீரவாசி  த்ரயம்ப கேஸ்வரனாகவும்,  சேது சமீப  ராமநாதனாகவும்,  டாகினி  என்கிற  ராக்ஷசர்களும்  வழிபடும்  பீம சங்கரனாகவும், காசி க்ஷேத்ரத்தில்  விஸ்வநாத னாகவும்  சகல  பாபங்களையும்  அழித்து,  எல்லையிலா  பரிபூர்ண  ஆனந்தத்தை  அருளும்  சிவபெருமானே,  உன்னை  சொல்லாத நாள் எல்லாம்  வீணாகிறது.

இந்த நேரத்தில்   அருள்பாவில் ஆனந்தமாக  ஜோதிமணியாக  உருவகித்து  வள்ளலார் பாடிய  ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது .

ஜோதி மணியே அகண் டானந்த  சைதன்ய
     சுத்தமணியே   அரிய  நல்
துரிய மணியே துரியமும்  கடந்து அப்பால்
    துலங்கும்  மணியே  உயர்ந்த
ஜாதி  மணியே  சைவ சமய மணியே
    சச்சிதானந்த மணியே
சகஜ நிலை  காட்டி வினை ஓட்டி   அருள் நீட்டி
    உயர்  சமரச  சுபாவ மணியே,
நீதிமணியே,  நிர்விகல்ப மணியே  அன்பர்
   நினைவில் அமர்  கடவுள் மணியே
நிர்மல ச்வேம்ப்ரகாசம் குலவும் அத்வைத
   நித்ய  ஆனந்த மணியே
ஆதிமணியே,  எழில் அனாதிமணியே எனக்கு
   அன்புதரும் இன்பமணியே,
அற்புத சிதாகாச ஞான  அம்பலமாடும்
  ஆனந்த நடனமணியே


 கம்பீரமான ஸ்வயம்பு சித்தேஸ்வர லிங்கத்தை பணியுங்கள். நாம் எங்கே நேரே அங்கெல்லாம் போக முடியும். படத்தில் வேண்டுமானால் பார்க்க கண்ணுக்கு சக்தி இன்னும் இருக்கிறது.

  உள்ளே போய் தேடி  வள்ளலாரின் அருட் பா புத்தகத்தை தூசி தட்டி தேடி எடுத்து ஏதேனும் ஒரு சில பக்கம் .  கொஞ்சம்  நேரம்  ஒதுக்கி வள்ளலாரைப்  படியுங்கள்.  காசு கொடுக்காமலே  இருந்த  இடத்திலிருந்தே ஆனந்த  மாக  ஆனந்த இன்பலோகத்துக்கு  பறக்கலாம்.  சிவனை உணரலாம். வள்ளலார் எழுத்து எளிமையும் அதே நேரம் பக்தி தோய்ந்த சக்தி வாய்ந்ததும் கூட. 



No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...