Saturday, April 18, 2020

ATHITHI UPACHARAM



\சேஷுவின் அதிதி உபசாரம்... J K SIVAN

உத்யோகத்துக்கு போன நாட்களில் ஞாயிறு வரப்பிரசாதம். சந்தோஷமாக வரவேற்று நிதானமாக வேண்டியதை எல்லாம் செய்வோம். சாப்பிட்டு தூங்குவோம். இப்போது ஒவ்வொருநாளும் ஞாயிறு. சாப்பிட்டு தூங்கி டிவியில் இன்று எத்தனை கேஸ், எங்கெங்கேயெல்லாம், ஏன் இப்படி பிசாசாக பரவுகிறது?? டெல்லி எத்தனை இங்கே?? இதெல்லாம் பார்க்கிறோம். கொஞ்சம் ரிலாக்ஸா ஒரு கதை சொன்னால் என்ன?
இதோ ஆரம்பிக்கிறேன்.
ரொம்ப வயசான தம்பதிகள் ராமசேஷு, அம்புலு மாமி. வயஸானா பேச ஒரு ஆள் சதா வேண்டும். அப்போது தான் பாசம், நெருக்கம் எல்லாமே அதிகமாகி, ஒண்ணு இல்லேன்னா இன்னொண்ணு சாப்பிடாது. தூங்காது. எங்கே, அந்த இன்னொண்ணு என்று தேடும்.
ராமசேஷு கோழி கூவுவதற்கு முன்பே எழுந்து குளித்து ஜபம் பண்ணி வாக்கிங் போவார். அதுக்குள்ளே மாமி குளித்து விளக்கேற்றி பூஜை பண்ணி காபி போட்டு ரெண்டுபேரும் சாப்பிட்ட பிறகு தான் சூரியன் லேட்டாக கிழக்கே கிளம்புவான். ஒரு நாளைக்கு கூட அவர்களோடு சூரியன் காப்பி சாப்பிட்டதில்லை. . சேஷுக்கு சின்ன வயதிலிருந்தே சாமி பூஜை பக்தி எல்லாம் ஈடுபாடு அதிகம். வீட்டிலே பாராயணம், கோவிலுக்கு ரெண்டு வேளை போறது. கோவில்லேயும் வீட்டிலேயும் பஜனை. எல்லோரையும் கூப்பிட்டு சாப்பாடு கூப்பாடு. இதெல்லாம் மாமிக்கு அறவே பிடிக்காது. அவளாலே அத்தனை பேருக்கும் சமைக்க முடியலை.

சமீபத்திலே ராமசேஷுக்கு ஒரு புது பழக்கம். வழியிலே யாராவது கொஞ்சம் ஆன்மீக மாக , காணப்பட்டால் அது தான், சாமியார்கள், தாடிக்காரர்கள், காவி வஸ்திரம் -- எவராக இருந்தாலும் வீட்டுக்கு வாங்கோ உபசாரம் பண்ணி போஜனம் செய்விக்க வேண்டும் என்று தோன்றியது. அவர்களெல்லாருமே பகவான் என்று மனதில் பட்டது. அவர்களை உபசரித்து போஜனம் அளிப்பது தனது கடமை என எண்ணம்.
ஒருநாளைக்கு ரெண்டு பேராவது மினிமம். ஆரம்பத்தில் மாமி எப்படியோ சமாளித்தாள். நாளாக நாளாக கூட்டம் அதிகமாய் விட்டதே . மாமி என்றுமே நாஸ்திகை அல்ல. பாவம் அவளால் முடியவில்லை.
“ இதோ பாருங்கோ. பஜனை, பூஜை, பாட்டு, பாராயணம், நைவேத்யம் என்றால் பரவாயில்லை. இருக்கிற கொஞ்சம் சேமிப்பையும் தானம் தர்மம் என்று வாரி வழங்கி தினமும் ஒரு கூட்டத்துக்கு அன்னதானம் பண்ண முடியாது. அவர்கள் எங்காவது போய் உங்களை மாதிரி உழைச்சு சாப்பிடட்டும். இப்படியே நடந்ததுன்னா நாமும் தினமும் எங்கேயாவது அன்னதானத்துக்கு கை ஏந்தணும். யாரு அழைச்சு ஒருவேளை சாப்பாடு போடுவா.''

சேஷுவின் தலை மட்டும் ஆமாம் என்று ஆடியதே தவிர மனம் அடுத்த அன்ன தானத்திற்கு ஆள் பிடிப்பதில் இருந்தது. மாமிக்கு அவர் நிலை புரிந்தது. இந்த ஆளை நம்பி பிரயோஜனம் இல்லை. தானே ஏதாவது செய்து ஆகவேண்டும் என தீர்மானித்தாள் . எப்படி இந்த இக்கட்டிலிருந்து மீள்வது?

நடுத்தர குடும்பங்களில் மனைவிகள் அதி புத்திசாலிகள். சிறந்த நிர்வாகிகள். குடும்ப வருமானம் தெரிந்து எப்படியோ நிதி நிலைமைக்கு ஏற்ப காலட்சேபம் நடத்த வல்லவர்கள். நமது நிதி மந்திரிகள் அவர்களிடம் நிதி நிலை வரவு செலவு திட்டங்களுக்கு ஆலோசனை பிச்சை வாங்கவேண்டும்.

தினமும் தேசாந்திரிகள், தாடிகள், மொட்டைகள், காவிகள் அநேகர் வந்து சாப்பிட்டு போய்க்கொண்டே இருந்தனர். இங்கே இலவச உணவு உபசாரத்தோடு என்ற செய்தி காற்றில் பரவி நாளுக்கு நாள் நிறைய தலைகள் வாய்கள் வயிறுகள் கூடிவிடாதா?

அன்று கோவிலில் விசேஷம். மந்திர கோஷம், பஜனை, நேரம் கடந்து உச்சி வேளை தாண்டி பிற்பகல் மெதுவாக ஊர்ந்து வந்தது. காலையில் ராமசேஷு யாரையோ தெருவில் பார்த்து மத்யானம் சாப்பிட வாங்கோ என்று கூப்பிட்டிருந்தார் போல் இருக்கிறது. அந்த பக்தர் வீடு தேடி வந்து விட்டார். அவர் வந்த நேரம் மாமா தான் கோவிலில் இருந்ததால் மாமி வரவேற்றாள். அதிதி கடவுளுக்கு சமானம் என்று அவளுக்கு தெரியும். மாமா வந்த பிறகு தான் போஜனம். எனவே மாமி அந்த பக்தரோடு பேச்சு கொடுத்தாள் .

''நீங்கள் எல்லோருமே எங்காத்து மாமாவின் வெளி வேஷத்தை மட்டும் கண்டு மயங்குகிறீர்கள். அவருக்கு ஒரு வினோத பழக்கம். இங்கு யார் போஜனத்துக்கு வந்தாலும் அதோ பாருங்கள் அந்த புளிய மரம் , அதன் கிளையில் தொங்குகிறதே தாம்பு கயிறு, பக்கத்தில் சாத்தி வைத்திருக்கிறாரே சாதுவாக ஒரு மூங்கில் பிரம்பு. ஹும் .... எப்படி என்னத்தை சொல்றது ?...''
''எதுக்கு இதெல்லாம்?''
'' எப்படி சொல்வேன் போங்கள். யார் வந்தாலும் நிறைய போஜனம் அளித்த பிறகு வந்தவரை அந்த புளிய மரத்தில் தாம்புக்கயிற்றால் கட்டி பளார் பளார் என்று மூங்கில் பிரம்பால் பத்து சாத்து சாத்திவிட்டு அனுப்புகிறார். சிலருக்கு ரத்தம் கூட பீரிட்டு வருகிறது. ஓடுகிறார்கள். உள்ளூர எனக்கு இது ரொம்ப வருத்தம். வெளியில் சொன்னால் அவமானம் என்று இதை யாரும் சொல்வதில்லை என்பதால் ஒருவருக்கும் தெரியாது. தெரிஞ்சவா மறுபடியும் வரமாட்டா.... என்ன செய்வது? எனக்கு இது என்ன சாஸ்திரம் என்று புரியவில்லை. தினமும் வருவோர்க்கெல்லாம் இங்கே இந்த உபசாரம் நடக்கிறதே. உங்களுக்கு சாஸ்திரமெல்லாம் தெரியும் என்றீர்களே இது பற்றி ஏதாவது சாஸ்திரம் சம்ப்ரதாயம் தெரியுமா?''.

வந்தவர் அதிர்ந்து போனார். முகம் கருத்தது. உடல் குப் என்று வியர்த்தது. பசி மறந்தது .
''மாமி ஒரு லோட்டா தண்ணீர் கிடைக்குமா?''
மாமி உள்ளே சென்று திரும்புவதற்குள் அவர் அங்கே இல்லை.
அவர் வெளியே போன சில நிமிஷங்களில் சேஷு வந்தார். கோவிலில் விசேஷம் என்பதால் நிறைய பேருக்கு அங்கேயே அன்று போஜனம். ஆகவே வீட்டுக்கு கூட்டிவர ஆளில்லை.
''இன்னிக்கு யாருமே வரவில்லையா அம்புலு? காலம்பற ஒருத்தரை பார்த்து வரச்சொன்னேனே ?'
''யாரோ ஒருத்தர் வந்தாரே. உங்களுக்காக காத்திருந்தார். அதோ அந்த புளியமரம், கயிறு, மூங்கில் கொம்பு அதுகளையே உற்று பார்த்துக்கொண்டே இருந்தவர் வெடுக்கென்று எழுந்து போய் விட்டார். இப்போதான் போனார். வழியிலே பார்க்கலையா அவரை?''

''பார்த்ததா ஞாபகம் இல்லையே ? ஏன் போய்ட்டார்?''
'' சொல்ல மறந்துட்டேனே. அவர் அந்த மூங்கில் பிரம்பையும் கயிறையும் தர முடியுமா என்று கேட்டார். நான் அது கன்னுக்குட்டியை கட்டறத்துக்கு வேணுமே , விஷமம் பண்ணும் கொம்பை கிட்டே கொண்டு போனா சொன்னதை கேட்கும். தரமுடியாது'' என்றேன். அதனாலே கோவிச்சுண்டு கூட போயிருக்கலாம்.
மாமாவுக்கு கோபம் வந்தது. ''சீ. நீயும் ஒரு பொம்பளையா? பாவம், ஒருவர் பக்தர் எதுக்காகவோ ஒரு சாதாரண கயிறும் கொம்பும் கேட்டிருக்கார். நீ இல்லை என்று சொல்லிட்டியே. பாவி. பகவானின் சாபத்துக்கு நாம் ஆளாகி விட்டோமே. வழியிலே வரும்போது ஒருத்தரை பார்த்தேனே. என்னை பார்த்ததும் வேகமாக நடந்தார். அவர் தானோ, கோபமோ?'. இதோ நானே போறேன். கூப்பிட்டுண்டு வரேன் இல்லேன்னா பாவம் அவர் கேட்டதை எல்லாம் கொடுத்துட்டு வரேன்
கையில் கொம்பையும் கயிறையும் எடுத்துக்கொண்டு ராம சேஷு படுவேகமாக ஓடினார். எப்படியாவது அந்த பக்தரை பிடித்து அவர் கேட்டதைக் கொடுக்க வேண்டும் என்று மனதில் பட்டது. தூரத்தில் அவரை ஒரு மரத்தடியில் பார்த்து விட்டார்.

'''சுவாமி வாங்கோ. இந்தாங்கோ, இது உங்களுக்கு தான் கொண்டு வந்திருக்கேன். நில்லுங்கோ. வாங்கிக் கொள்ளுங்கோ''
அந்த அதிதி வேகமாக ஓடிவரும் ராமசேஷுவை தூரத்திலேயே பார்த்துவிட்டார். ''ஆஹா மயிரிழையில் தப்பியதாக அல்லவோ நினத்தேன். ஆனால் ஆபத்து தொடர்ந்து அல்லவோ வருகிறது. இன்றைய தடி ஆராதனைக்கு நாம் தான் என்று முடிவெடுத்துவிட்டாரா. நானா இளைத்தவன்'' என்று அவர் ஓடியது போல் எந்த சூறாவளியும் கூட வேகமாக வீசியதில்லை. ஊரெல்லாம் போகும் இடத்தில் சேஷு மாமா உபச்சாரம் பற்றி சொல்லிக்கொண்டே போனார். ஊரெல்லாம் சேதி பரவியது.
ராம சேஷு ஏன் இப்போதெல்லாம் அன்ன தானத்துக்கு ஆள் கிடைப்பதில்லை என்று தலையை சொரிந்து கொண்டிருக்கிறார். பார்த்தால் பாவம் காரணத்தை புரியும்படியாக அவருக்கு சொல்லுங்கள்'.
இது ஒரு அந்தநாளைய மலையாள பழங் கதையை ஆதாரமாக கொண்டது. அதற்கு கொஞ்சம் கண் மூக்கு காது வாய் வைத்து தந்திருக்கிறேன் அவ்வளவு தான். பொழுது நம் எல்லோருக்கும் போகவேண்டாமா?

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...