Sunday, April 26, 2020

MEERA



அம்மா  வாக்கு பலித்தது   J K SIVAN

எங்கும்  வனம்  வனாந்திரம்.  காட்டுப் பாதை வழியாக தான் பயணம். பகலிலே தான்  போவார்கள். ஒரு பல்லக்கு மெதுவாக  போய்க்  விற்பவர்கள். கொண்டிருக்கிறது.  மதுராபுரி  கொஞ்சம்  ஜன நடமாட்டம் மிகுந்த பட்டணம் எனலாம். சுற்று வட்டாரங்களில் எல்லாம்  பால் வெண்ணை, தயிர் நெய்  தான் வியாபாரம்.  தின்பண்டங்கள் விற்பவர்கள்..

பல்லக்கு  பிருந்தாவனம் நோக்கி போகிறது. அதில் ஒரு சிறு பெண். புது மணப்பெண்.  அக்காலத்தில் ஏழு வயதிலேயே கல்யாணம் பண்ணிவிடுவார்களே. மாமியார் வீடு போகிறாள் அந்த பெண். மதுராபுரி யிலிருந்து பிரிந்தாவனத்துக்கு.

அவள் கணவன் ஒரு சிறு பையன் பத்து வயது.  பிருந்தாவனத்தில்  அவனும்  கிருஷ்ணனைப் போலவே  பசுக்களை மேய்ப்பவன்.  பராமரிப் பவன்.

பெண்ணின் தாய்  மணமான அந்த சிறு பெண்ணுக்கு  நிறைய புத்திமதி சொல்லி அனுப்புகிறாள். அதில் முக்கியமான ஒன்று:

''கண்ணம்மா,  நீ  பிருந்தாவனத்தில் ஜாக்கிரதையாக இருக்கவேண்டுமடி.   நான் கேள்விப்பட்டவரை அந்த ஊரில் ஒரு பொல்லாத  குறும்புக்காரன், ரொம்ப சேட்டை பண்ணுபவன் இருக்கிறானாம். அவனால் தொந்தரவு இல்லாத  வீடே  இல்லையாம். வெண்ணை பால் எல்லாம் திருடு போய்விடுமாம். உறியில் இருக்கும் பானைகளை கூட உடைத்து விடுகிறானாம். என்னிடத்தில்  நிறையபேர் சொல்லி இருக்கிறார்கள்.  நீ உன் வீட்டில் ரொம்ப ஜாக்கிரதையாக பால் தயிர் வெண்ணை சட்டிகளை  பாதுகாக்கவேண்டும்.  இதை விட எனக்கு கவலை தருவது என்னவென்றால் அந்த பையன் செய்யும் விஷமங்களை விட அவன் வசீகரம் எல்லோரையும் அவனுக்கு அடிமை யாக்கி விடுமாம். நிறைய கோபி மார்கள் அவன் அழகில் மயங்கி அவனை செல்லமாக கொஞ்சுவார்களாம். விளையாடுவார்க ளாம்.  விஷமம் பண்ண அனுமதிக் கிறார்க ளாம்.

உன் கணவனுக்கு அந்த ஊரில் இருப்பதால் நிச்சயம்  கிருஷ்ணனை தெரிந்திருக்கலாம். ஆகவே  அவன் உன் வீட்டுக்கு வந்துவிடப் போகிறான். வந்தாலும்  அவனை  நீ முகம் கொடுத்து  பார்க்கவே  பார்க்காதே. பார்த்தால் தானே அவன் வசீகரம் உன்னை அடிமை யாக்கும், அவனோடு பேசாதே, பழகாதே . அவன் சாதாரண மானவன்  இல்லையாம். ஏதோ ஒரு சக்தி அவனுள் இருக்கிறதாம்.  எனக்கு சொல்ல தெரியவில்லை. நீ ஜாக்கிர தையாக இரு.''

அந்த பெண்ணுக்கு கிருஷ்ணனைப் பற்றி பயம் பிடித்துக் கொண்டுவிட்டது.  பகல் முடிந்து  மாலை சூரியன் மேற்கே  இறங்குகிறான்.  இன்னும்  20 கிலோ மீட்டர்  இருக்கும்போல  இருக்கிறது  பிரிந்தா வனத்துக்கு.   பல்லக்கு  மெதுவாக  காட்டுப்பாதையில் பிருந்தாவனம் போய்க்கொண்டிருக்கிறது.

இடி இடித்தது. பயங்கரமான தொடர் இடி. காற்று பலமாக வீசியது. பல்லக்கு தூ்க்கு பவர்கள் வேகமாக நடந்தார்கள். உள்ளே அந்த பெண் கண்களில் பயம்.  மின்னல் கண்ணை பறித்தது.  சற்று நேரத்தில்  ஜோ வென்று மழை கொட்டத் தொடங்கியது. அதை லக்ஷியம் பண்ணாமல் பல்லக்கை தூக்கி நடந்தார்கள். ஒரு பாறைப் பகுதி,
எதிரே ஒரு அபூர்வ காட்சி.
கண்ணுக்கெட்டிய தூரத்தில்  கோவர்தன மலை தெரிகிறது. இருபுறமும்  பாறைகள் நெடிதுயர்ந்த ஒரு மலைப்பகுதி. அதன் நடுவே பல்லக்கு குறுக்கு வழியாக  போகிறது.

அதோ தெரிகிறதே  கோவர்தன மலை. பாறைகள் காற்றில் பெயர்ந்து கீழே விழுகிறது. மலைப்பாதையில் பல்லக்கு செல்கிறது. எப்படியோ  பாறைகளிலிருந்து தப்பியவாறு  பல்லக்கை சுமக்கிறார்கள். அந்தபெண் எதிரே பார்க்கிறாள்.  நிறைய பேர் அந்த கோவர்தன மலையை நோக்கி ஓடுகிறார்கள். மழை நிற்கவில்லை அதிகமாகிறது. எங்கும் ஜலப்ரளயமா?

ஆடு  மாடு மனிதர்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும்  அந்த பெரிய  கோவர்தன மலையை நோக்கி  நகர்கிறார்கள்.  பல்லக்கின் அருகிலும் எதிரிலும் பாறைகள்பெயர்ந்து மேலிருந்து கீழே வேகமாக விழுகிறது. ஒரு பெரிய  பாறை பல்லக்கை நோக்கி உருண்டு வருவதைப் பார்த்த பல்லக்கு தூக்கிகள் பல்லக்கை தொப் பென்று கீழே  போட்டுவிட்டு உயிர் தப்ப கோவர்தன மலையை நோக்கி ஓடும் ஜனங்களோடு சேர்ந்து கொள்கிறார்கள்.

அங்கே என்ன விசேஷம்?.  அந்த பெண்  அதிர்ந்து போய் வெளியே தலை நீட்டி பார்க்கிறாள்? ஒரு அழகான  சிறுவன் கோவர்தன மலை அருகே நிற்கிறான்.  குனிந்து தனது இடது சுண்டு விரலால் அந்த மலையை தரையிலிருந்து பெயர்க்கிறான். அதை எப்படி அலாக்காக அவனால் தூக்க முடிகிறது. அட.  அவனது இடது கை  சுண்டுவிரல் மேல் அந்த பெரிய மலை நிற்கிறதே. அந்த மலை இப்போது பெரிய குடையாகி விட்டதோ? அதன் நிழலில், மறைவில், மழையிலிருந்து தப்ப எல்லோரும் போய் நிற்கிறார்கள்.

யாருக்கு தெரியும்  இந்த  மழையின் புயலின் சீற்றம்  இந்திரனின் கோபம் என்று?  . கிருஷ் ணன் எனும் யாதவ சிறுவனை ஒடுக்க, அவன் அனுப்பிய  வாயு  வருணன் லீலைகள். அதை அந்த கிருஷ்ணன் அறிவான். இந்திரன் எண்ணத்தை முறியடிக்க மக்களை வருண னின் சீற்றத்தில் இருந்து காப்பாற்ற கோவர்தன மலையையே  குடையாக்கி நிற்கிறான்....

தரையில் போடப்பட்ட பல்லக்கில் இருந்து இறங்கி வந்த அந்த பெண் தானும் கோவர்தன மலையை நோக்கி ஓடுகிறாள். அவள் கண்கள் அந்த சிறுவனின் கண்களை சந்தித்தன.

ஆஹா  என்ன தேஜஸ். என்ன பலம், என்ன கம்பீரம், எவ்வளவு தார்மீகம் அவனுக்கு  மலையை சுண்டுவிரலால் தூக்கும் அதிசயம் அவள் அவனை தெய்வமாக பார்க்கிறாள். இவன் மனிதனில்லை.  தெய்வம் தான்.  அவனை நோக்கி இரு கைகளும் தானாகவே கூப்புகிறது. அந்த நேரம் பார்த்து ஒரு பெரும் பாறை உருண்டு வந்து அவள் மேல் விழுந்து அவளை தரையோடு தரையாக நசுக்குகிறது.அவள் கண்கள்  ஒரு பளிச்சிடும் மின்னலில் ஒளி இழக்கிறது.  பேரிடி அவள் இதயத்தை நிறுத்துகிறது.  இதோ  அவள் மூச்சு பிரியப் போகிறது. அந்த நேரத்திலும்  அந்த பெண்  ''தெய்வமே கோவர்தன கிரிதாரி  உன்னை  பார்க்காமல் அருகே வந்து தரிசிக்காமல் நான் போகிறேன். என்றாவது உன்னை அடை வேனா?''

''இறக்கு முன் நீ என்ன நினைக்கிறாயோ உனது அந்த கடைசி ஆசை  நிறைவேறும். உன் எண்ணமாக நீ  அடுத்த பிறவியில்  மாறி விடுவாய்'' என்று கிருஷ்ணன் கீதையில்  சொன்னது நினைவிருந்தால் அது அந்த பெண் வாழ்வில் நடந்தது.

பல ஆண்டுகள் கழித்து  மேவார் நாட்டு ராணி மீரா பாய் கிரிதாரியை நினைவு கொள்கிறாள். பழைய பந்தம் தொடர் கிறது.  முன்பிறை ஞாபகம் வருகி றது......அவள்  அம்மா சொன்னது நியாயம் தான்.  இவன் ஆள் மயக்கி. கிரிதர கோபாலா. உனக்கு நான் அடிமை....

மீரா  கிருஷ்ணனை தேடி சென்றாள்.   அவன் இருந்த இடங்களில் பிருந்தாவனம், மதுரை, கோகுலம் என்று வ்ரஜபூமியில் தேடி பழைய ஞாபகத்தை நினைவாக் கினாள் .  அவனையே கடைசியில் துவாரகையில் அடைந்தாள்.
கிரிதர  கோபாலா.....மீராவால்  இனிமையாக பாடமுடியவில்லை... பக்தி  பரவசம் குரலை அமுக்கியது.  MSS ஐ தனக்காக பாட சொன்னாள். அந்த பாடல் இன்னும் ஒலிக்கிறது... கேளுங்கள்.... யூ  ட்யூப்  லிங்க்    https://youtu.be/UllBnLtWEDE

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...