Tuesday, April 28, 2020

PESUM DEIVAM



பேசும் தெய்வம் J K SIVAN
3ம் பாகம்

ரெண்டு பூனை கதை
எனக்கு ஒரு மன திருப்தி. தற்பெருமை கர்வம் ரகத்தை சேர்ந்த டம்பம் இல்லை. உண்மையாகவே ஆத்ம திருப்தியுடன் ஒரு காரியம் பிறர் சந்தோஷமாக இருக்க நாம் செய்தால் நமக்கு கிடைக்குமே ஓர் வித சந்தோஷம். அதுலே வர பெருமை தான் அது.. ஆமாம். நான் பாண்டு ரங்கன் 100 கதையை தமிழிலும் இங்கிலீஷிலும் , மஹா பெரியவா பக்தர்கள் அனுபவித்ததை ஆனந்தா னுபவத்தை பிறரிடமிருந்து கேட்டு, படித்து குழந்தைகளுக்கு எழுதிய போது அடைந்த சந்தோஷத்தை விளக்க உங்களை ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன்.. ஆகாசத்தில் பறந்த அனுபவம் உண்டா?... ஆம் நான் ஆகாசத்தில் தான் பறந்தேன்.

என் புத்தகங்கள் எதற்கும் விலை போடவில்லை, நன்கொடையில் வரும் பணத்தில் அச்சடித்து விநியோகம்.. இன்னும் 40 புத்தகங்கள் போல அச்சேராததற்கும் அதுவே காரணம். அதை ஏன் இப்போ நினைச்சு பார்க்கிறேன். ஒரு முக்கிய காரணம் இருக்கு. சொல்றேன்.
மராத்தி பக்தர் கோரா கும்பர் வழக்கம் போல் பாண்டுரங்கன் மேல் பாடிக் கொண்டே சட்டி பானைகளை செய்து வெயிலில் காய வைத்து நெருப்பில் அவற்றை சுட்டு பதமாக்க தயாராகி விட்டாரே பார்த்தீர்களா இல்லையா? எல்லா மண் பானைகளையும் சூளை கோட்டை அடுப்புக்குள் வரிசையாக அடுக்கி வைத்து விட்டார், வாய் விட்டலன் மேல் பாடிக் கொண்டே இருந்தது. சூளையை நன்றாக அதிக வெப்பத்தில், சூட்டில், வேக வைப்பதற்காக மூடிவிட்டார். உள்ளே அனலில் மண் பாண்டங்கள் உஷ்ணத்தில் உறுதியாகும். இன்னும் மூன்று நாள் கழித்து தான் சூளை சூடு அடங்கி பிரிக்கப்படும். பானைகள் வெளியே எடுக்கப்படும். அவர் மனைவி வந்தாள். அவர் சூளையை சுற்றி ஆடிக்கொண்டே அதை பாண்டு ரங்கனாக பாவித்து பாடிக் கொண்டி ருந்தார்.அவர்கள் வளர்க்கும் பூனை ஓடிவந்து கத்திக்கொண்டே அந்த சூளையை அணுகியது. சுற்றி சுற்றி வந்தது. கத்தல் ஓயவில்லை. எரியும் சூளையை பார்த்து கத்திக்கொண்டே சுற்றிவந்து. கோரா மனைவி இதைபார்த்துவிட்டு
''கோரா, பூனைக்குட்டிகளை எங்கே விட்டீர்கள்? அம்மா பூனை தேடுகிறதே ''

''பூனைக்குட்டிகளா? எங்கே? நான் பார்க்கவே இல்லையே''
''என்ன கோரா இது, ஒரு வாயகல மண் சட்டியில் அல்லவோ நான் மூன்று பூனைக்குட்டிகளை இங்கே பார்த்தேன். எங்கே அந்த சட்டி?''
'' ஐயோ நான் எந்த பானை சட்டியும் தனியாக எடுத்து வைக்கவில்லையே. எல்லா சட்டியையும் பானைகளையும் நெருப்பு மூட்டத்தில் உள்ளே சூளையில் வைத்து விட்டு சூளையை மூடி விட்டே னே.''
''அடப்பாவி மனுஷா என்ன காரியம் செய்தீர். கண் திறக்காத மூன்று பால் குடிக்கும் குட்டிகளை நெருப்பில் பானைகுள் வைத்து கொன்று விட்டீர் களே. இதோ தாய்ப்பூனை கதறு கிறதே.என்ன பாவம் செய்தீரய்யா நீர்?'' உமது பாண்டுரங்கனையே கேளும். அவனை நினைத்து தானே பூனைக் குட்டிகளைக் கூட கவனிக்காமல் பானையோடு உள்ளே வைத்தீர். இந்த தாய்ப்பானையின் அழுகைக்கு சோகத்திற்கு என்ன பதில்? அவன் காப்பாற்றுவானா இப்போது?''
''ஐயோ, மஹாபாவி நான் ஒரு பாவமு மறியாத சிறு பூனைக்குட்டிகளை கொன்று விட்டேனே. பாண்டுரங்கா, நீ தான் அருளவேண்டும். என் பாவத்திற்கு தண்டனை கொடு. இந்த தாய் பூனையின் சோகத்தை எப்படி தீர்ப்பேன்?. அநியாயமாக பாவம் மூன்று சிறு பூனைக்குட்டிகளை கொன்று விட்டேனே. ' கோரா கதறினார்.
மூன்று நாளும் தாய்ப் பூனை சூளையை விட்டு நகரவே இல்லை. சுற்றி சுற்றி வந்து உள்ளே பார்த்து கத்திக் கொண்டே இருந்தது. சாப்பிடவே இல்லை. கோராவும் இரவும் பகலுமாக பாண்டுரங் கனையே வேண்டிக் கொண்டிரு ந்தார்; கண்களில் நீர் வற்றவே இல்லை;

நான்காம் நாள் காலை உஷ்ணம் வெளியேறி சூளையை பிரித்தார்----; பயந்துகொண்டே---- பூனைக்குட்டிகளின் கருகிய உடலை எப்படி கண்கொண்டு பார்ப்பது.? சாம்பல் தான் தேறும்? ஒவ்வொரு சட்டியாக சிவப்பு, கருப்பு திட்டுகளுடன் வெளியே வந்தது. 'ஐயோ, அந்த வாயகன்ற சட்டி.??.... கை நடுங்கியது. அதை உள்ளே பார்க்காமல் வெளியே எடுத்தார். உள்ளே பார்க்க மனம் இடம் கொடுக்கவில்லை. பூனை அருகிலேயே நின்றவாறு கத்திக் கொண்டே இருந்தது; அதோ வாயகன்ற சட்டி அதன் மேல் இன்னொரு சட்டியோடு மூடி போட்டது மாதிரி வெளியே வந்தது; பூனையின் கண்கள் அதையே பார்த்துக் கொண்டிருந்தன; அதை இறக்கிய மறு கணமே தாய்ப் பூனை பாய்ந்து சென்று அந்த சட்டியை உருட்டியது ;

உள்ளே.....
மூன்று பூனைக்குட்டிகள் சுகமாக தூங்கிக் கொண்டிருந்தன; தாய்ப்பூனை குட்டிகளை ஒவ்வொன்றாக தூக்கி எங்கோ கொண்டு போய் வைத்துவிட்டு வந்தது; இது எப்படி சாத்தியம்;? களிமண் பானைகளும் சட்டி களும் சிவந்து கருகிய உஷ்ணத்தில் அந்த சிறு பால் மணம் மாறாத கண் திறக்காத பூனைக் குட்டிகள் எப்படி உயிர் வாழ்ந்தன.; அதுவும் நாலு நாளாக.... பாண்டுரங்கன் அருள் இருந்தால் எந்த நெருப்பு எந்த பூனை குட்டியை நெருங்கும்?. வீடே அதிர்ந்து போகும் படியாக ''விட்டலா பாண்டுரங்கா, பண்டரிநாதா'' என்ற குரல் அந்த குயத்தெரு பூரா எதிரொலிக்க கேட்டது. ஆம் கோராவின் ஆனந்த நன்றிக்குரல் அல்லவா? அவன் பெயரைதவிர தேங்க்ஸ் என்றா ஆங்கிலத்திலா கோரா சொல்வார்?..
அப்படிச்சொன்னால் அது நன்றியா? ஏதாவது அதற்கு தான் அர்த்தம் உண்டா?
' அது அப்போ. இது இப்போ.
இந்த ஆச்சர்யம் காஞ்சி மடத்தில். கார்த்திகை குளிர் ஆரம்பித்து காஞ்சி மடத்தில் இன்னும் கொஞ்சநேரத்தில் பொழுது விடியப்போறதே. மகா பெரியவா ஸ்நானனத்துக்கு வெந்நீர் போடணும்; எந்த நிமிஷமும் வந்து நிப்பாரே. ராமமூர்த்தி ஐயர் கோட்டை அடுப்பை மூட்ட விறகுகள் கொண்டு வந்து வைத்து வெந்நீர் அண்டா வில் ஜலம் நிரப்பியாகிவிட்டது. அதை தூக்கி அடுப்பு மேல் வைத்து அடுப்பை பத்தவைக்க வேண்டியது தான் பாக்கி. எழுந்தார்.

"டொக்" ''டொக்'' யார் இந்த விடிகாலை நேரத்தில் கை சொடுக்குவது?

திரும்பிய அய்யர் தனது அறையிலிருந்து பெரியவா வெளியே வந்து நின்று தன்னை நோக்கி கை சொடுக்கியதை பார்த்தார்; பெரியவாளை நமஸ்கரித்து அருகே சென்றார்; பெரியவா எதுக்கு கூப்பிட்டார்?
''இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......எனக்கு வெந்நீர் வேணாம்...."

'பெரியவா, வெந்நீர் போடாமல் இருக்கலாம். ஆனால், அடுப்பு மூட்டாவிட்டால், நைவேத்யம் தயார் பண்ண முடியாதே!
"வெங்கட்ராமனை கூப்டு!.." ஸமையல் கார்யஸ்தர், திருவாரூர் வெங்கட்ரா மையர் வந்தார்.
"இரும்பு அடுப்பு இருக்கோன்னோ?.... அதப் பத்த வை! ஸ்வாமி நைவேத்யத்தை அதுல பண்ணு..."
பெரியவா உத்தரவை யாருமே மீற மாட்டார்களே; கோட்டை அடுப்புப் பக்கம் யாரும் போகவே யில்லை. கொஞ்சம் தள்ளி உக்ராண அறை வாஸலில் இரும்பு அடுப்பு பத்த வைக்கப்பட்டு ஸமையல் ஆரம்பித்தாகி விட்டது.
காலை ஏழு மணி இருக்கும்..... "மியாவ்" என்று ஒரு பூனையின் குரல் எங்கே இருந்து வந்தது.
"அடேய்! பூனை எங்கிருந்து கத்தறது பார்; வந்து நைவேத்யத்துல வாயை வெச்சுடப் போறது! ஷ்ஷ்ஷூ....ஷூ...!!! விரட்டுங்கோ போகட்டும் எங்கயாவது.''
விரட்டினார்களே தவிர எங்கேயிருந்து பூனை ஒளிந்துகொண்டு கத்தியது?? கண்ணில் படவே இல்லையே;
தேடினவர்கள் ராமமூர்த்தி அய்யர் நின்று கொண்டிருந்த கோட்டை அடுப்பு பக்கம் சென்றபோது மீண்டும் அதே பூனையின் ஈனஸ்வரம். ராமமூர்த்தி கோட்டை அடுப்பின் உள்ளே எட்டி பார்த்தபோது .... அதற்குள்
.... ஒரு தாய்ப்பூனை.... அதன் மேல், தாயின் உடல் கதகதப்பும், கோட்டை அடுப்பின் கதகதப்பும் சேர, தாயின் ஏறி இறங்கும் வயிற்றின் மேல் நாலு பூனைக் குட்டிகள்!!! இன்னும் கண்கூடத் திறக்காமல்!! சம்மட்டியால் அடித்தால் போல் ஆயிற்று அய்யருக்கு.

''இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம் ......எனக்கு வெந்நீர் வேணாம்...."
தெய்வத்தின் குரல் அய்யரின் காதில் மீண்டும் மீண்டும் எதிரொலிக்க அர்த்தம் புரிந்தது. அம்மா பூனை பிரசவித்து குட்டிகளோடு கோட்டை அடுப்புக்குள் முதல் நாள் கண கணப்புக்கு ஒண்டி அடைக்கலமாக இருந்தபோது அதை விரட்டி தனக்கு வெந்நீர் போட விடுவாரா பெரியவா;. அல்லது அய்யர் கவனிக் காமல் கட்டைகளை அடுக்கி அடுப்படி பத்த வைத்திருந்தால்.....??

''இன்னிக்கி அடுப்பு மூட்ட வேணாம்......எனக்கு வெந்நீர் வேணாம்...."

அதிகாலை பாதி இருட்டில், வெளிச்சமில்லாத பொழுதில், வயதான பெரியவாளுக்கு எப்படி கோட்டை அடுப்புக்குள் பூனை புதிதாக பிறந்த குட்டிகளோடு இருப்பது தெரிந்தது; அப்போது அது கத்தவே இல்லையே; தெய்வத்தின் தீர்மானங்களுக்கும், முடிவுகளுக்கும், செயல்களுக்கும் சாதாரண மனிதன் என்ன விளக்கம், அர்த்தம் சொல்ல முடியும்; எதற்கு ரெண்டு கைகள் கொடுத்திருக்கிறான்; தலைக்கு மேலே வைத்து மனம் நிறைய ''பகவானே'' என்று அடிவயிற்றிலிருந்து ''பகவானே '' என நீ வேண்டு. அது ஒன்றே போதும்;

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...