Saturday, April 4, 2020

ONE LINE STORIES



குட்டியூண்டு கதைகள் J K SIVAN

சத்தியமா சொன்னா, இப்போ தான் எனக்கு நிறைய படிக்க, எழுத, பாட, டைம் கிடைக்கிறது. வெளியே போற வேலை சில வாரங்களாக நின்று போய் விட்டது. இதுவும் எனக்கு போறலை . ரெண்டு மூணு மணி நேரம் தான் தூக்கம். பல நாளாக விட்டுப்போன விஷயங்கள் ஒண்ணு ஒண்ணா தொட முடிகிறது. ரொம்ப பேருக்கு பொழுது போகவே இல்லையாம். சிலர் அதிலே படிக்க ஆசை இருந்தால் இப்போ நல்ல நேரம். டிவி பார்க்க பயமாக இருக்கிறது. விஷம், விலைவாசி போல கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜுரம் மாதிரி அதிகரித்துக்கொண்டே போகிறதே.
படிக்க பல விஷயங்கள். சிலர் வேதாந்தம், பக்தி, தத்துவம் ஆங்கிலத்தில்,தமிழில் என்று படிப்பார்கள். சிலர் கவிதைகள் தேட, மற்றவர்கள் பெரும்பாலும் கதை ரசிகர்கள். கதைகளிலும் பல ரகம். துப்பறியும், மர்ம கொலை குத்து வெட்டு ரத்தத்தோடு பக்கங்கள் நனைந்த கதைகள், பேய் பிசாசு முதுகு தண்டில் ஜிலீர் என்று நடுங்கவைக்கும் கதைகள், காதல் கதைகள் , சரித்திர கதைகள் வாள் வீச்சு யானை குதிரைகளோடு, கோவில், குளம், தரிசனம், அசரீரி புராண , யாத்திரை கதைகள், நூறுவயது வாழ்வது, ராத்ரி வடை சுடுவது, பொங்கலுக்கு பச்சைமிளகாய் தொட்டுக்கொண்டு சாப்பிடுவது போன்ற ரசமான உணவு சம்பந்த கதைகள்..... சிலது நீண்ட தொடர்கதைகள். சிலது சிறுகதைகள்.. சிலது புரியும் சிலது புரியவே புரியாது... பெண்கள் சம்பந்தப்பட்ட அம்மாமி அத்தை, பாட்டி சித்தி, கதைகள்...இன்னும் என்னென்னவோ அவரவர் ருசிக்கு தக்கபடி.
கதையின் நோக்கம், ஒரு உணர்ச்சியை கிளப்பி விடுவது, நான் இங்கே கொஞ்சம் வித்யாசமாக ஒரு சில வரிகளில் வெவ்வேறு உணர்வுகள் கொண்ட கதைகள் கொடுத்திருக்கிறேன். யாருக்கெல்லாம் பிடிக்கிறது என்று சொல்லவும்?
++
பெரிய ஆபிஸ் வளாகத்தில் ஏழாவது மாடி லிப்ட்டில் (LIFT ) இருந்து இறங்கி வேகமாக நடந்த ராமாச்சாரி ஈரத் தரையில் கால் வழுக்கி விழும்போது யாரோ அவனை பிடித்து மண்டை கருங்கல் தரையில் சிதறி உடையாமல் காப்பாற்றியதால், நன்றியோடு திரும்பிப்பார்த்தபோது சக்கர நாற்காலியில் அமர்ந்து அவனைப் பிடித்துக்கொண்ட கோபாலசாமி, ''நன்றியெல்லாம் வேண்டாம், இப்படி விழுந்துதான் மூணு வருஷம் முன்னால் என் முதுகு உடைந்து இந்த வண்டியில் நான். அதனால் இந்த அவஸ்தை எனக்கு தெரியும் '' என்றான்.
+ + ''அதெல்லாம் வேண்டாம்டா, பேசாமல் தைரியமாக முயற்சி செய், வெற்றி பெறுவாய். கற்றுக் குட்டிகள் தான் ஓஹோ என்று உலகம் பூரா தெரியும் கூகுள், ஆப்பிள் போல பெரிய நிறுவனங்களை ஆரம்பித்தவர்கள், ரொம்ப நிறைய படித்த, விஷயானுபவம் தெரிந்தவர்கள் கட்டிய பெரிய கப்பல் டைட்டானிக் முதல் யாத்திரையிலேயே...... ++ குருவே நீங்கள் பெரிய அனுபவசாலி,எண்பது வயதானவர், உங்கள் வெற்றிக்கு 3 ரஹஸ்யங்கள் சொல்லுங்களேன்... சிரித்துக்கொண்டே அவர் சொன்னார்: யாரும் படிக்காததை படி, சிந்திக்காததை சிந்தி, செய்யாததை செய்..... ++ ''பாட்டி நீ படிக்காதவள் , நான் மனோதத்துவ ஆராய்ச்சியில் முதுகலை பட்டம் இன்று பெறப் போகிறேன் உன்னைக் கேட்கிறேன் சொல் ''வாழ்க்கையில் வெற்றி பற்றி சொல்'' என்றபோது அவள் வெற்றிலை இடிப்பதை நிறுத்தி ''பேரா, வாழ்க்கையில் எது வெற்றி என்றால், நீ திரும்பி பார்க்கிறபோது எதெல்லாம் ஞாபகம் வந்து உன்னை சிரிக்க வைக்கிறதோ அது '' என்றாள் . +++ நான் சூர்தாஸ் போல் பிறவிக்குருடன், என்றாலும் எட்டுவயதில் கிரிக்கெட் விளையாட ஆசையால் ''அப்பா நான் கிரிக்கெட் ஆடமுடியுமா?"" என்றபோது ''ஏன் முடியாது, முயன்று பாரேன்''என்றாரே அதே போல் பதினெட்டு வயதில் ''காலேஜ் படிப்பு முடிந்து நான் டாக்டர் ஆவேனா?'' என்று கேட்டபோதும் அப்பா ''ஏண்டா கோபு முடியாது, நீ கஷ்டப்பட்டு முயன்று பாரேன்''என்று சொன்னதை இன்று நினைத்துப்பார்க்கும் நான் இன்று ''ஒரு பெரிய மனோதத்துவ டாக்டர்'' காரணம் அப்பா சொன்னபடி,,,,நான் முயன்று பார்த்ததால் ... +++ அமெரிக்காவில் தீயணைப்பு இலாகாவில் வேலை தொடர்ந்து மூன்று நாள் வேலை செய்த களைப்பில் வீடு திரும்பு முன் பக்கத்தில் உள்ள ஒரு பெரிய மளிகைக்கடையில் ராபர்ட் ஜான் அவசியமான சில சாமான் வாங்கும்போது ஒரு பெண் ஓடிவந்து அவனை இறுக்கி கட்டி அணைத்தாள், கண்ணில் நீர், யார் இவள், என்று புரியாமல் கைகளில் சாமான் பைகளோடு ராபர்ட் திகைக்க, ''11 செப்டம்பர் 2001ல் நீங்க தான் என்னை WTC எரியும் கட்டிடத்திலிருந்து காப்பாற்றி தூக்கிக்கொண்டு வெளியே ஜாக்கிரதையாக சேர்த்தவர்....உங்கள் உருவம், சட்டையில் உங்கள் பேர் போட்டோ, பார்த்ததும் ஞாபகம் வந்தது'' என்றாள் . ++ சோனி என் செல்லம், தெருவில் என்னோடு ஓடிவந்த போது வேகமாக வந்த ஒரு கார் அதன் மேல் ஏறி நசுக்க, அதைத் தூக்கி தெரு ஓரமாக போட்டு அருகில் அமர்ந்து அழுதேன்...என் கண்ணீரை நாக்கால் நக்கி துடைத்துவிட்டு என் நாய் சோனி மூச்சை விட்டது.. +++ காலை 7 மணி , உடம்பு சரியில்லை, வேலைக்கு போயாக வேண்டும்... காசில்லை, மாலை மூன்று மணிக்கு முதலாளி கூப்பிட்டு '' ராமுடு, நாளை முதல் உனக்கு இங்கே வேலை இல்லை. வரவேண்டாம்...''.. மழையில் .. என் கார் சக்கரத்தில் ஒரு ஆணி.. புஸ் என்று வண்டி நிற்க, ஸ்டெப்னி கழற்றி மாற்றலாம் என்றால் அதிலும் காற்றே இல்லை.... என்னசெய்வது என்று விழிக்கும்போது ஒரு பெரிய BMW கார் அருகில் வந்து நிற்க, அதில் இருந்த வழுக்கை தலையர் சிரித்துக்கொண்டே ''வா உள்ளே'' என்கிறார்..பேசிக்கொண்டே ராமுவை அவன் வீட்டில் இறக்கினார்...நாளை முதல் அவர் கம்பெனியில் ராமுவுக்கு மேனேஜர் வேலை.. டபுள் சம்பளம் ..... ++ கு ஞ்சுமணி ஆஸ்பத்திரி யில் ஒரு படுக்கையில் சீனுவின் அம்மா சாகக்கிடக்கிறாள், ராஜு, அவன் அப்பா, , மூன்று அண்ணா தம்பி, ரெண்டு அக்காக்கள், படுக்கை யை சுற்றி சோகமாக நிற்க அம்மா மெதுவாக திக்கி திணறி பேசியது : “ என் மேலே இத்தனை பாசமா உங்கள் எல்லோருக்கும். இது மாதிரி அடிக்கடி கூடி இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் '' ++ கோபாலசாமி 76 வயதில் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரியில் மூச்சை விட்டபோது அவர் மகன் பாலு நெற்றியில் முத்தமிட்ட ஐந்தாவது வினாடி அவன் கடைசியாக அப்பாவுக்கு முத்தமிட்டது ஐந்தாவது வயதில் என்று ஞாபகம் வந்தது... ++ சாமிநாதன் எதற்கெடுத்தாலும் ஒரு வியாதி சொல்பவன் ஒருநாள் ஒரு வீட்டில் 27வயது ராஜம்மா புற்றுநோயாளி, நாட்களை எண்ணுபவள் , தனது ரெண்டு வயது குழந்தை விளையாடி, விஷமம் பண்ணுவதை ஆனந்தமாக பார்த்து ரசிப்பதை, சிரிப்பதை, பார்த்தவன் ''இனி நான் வியாதி கொண்டாடமாட்டேன், ஒவ்வொரு நிமிஷமும் வாழ்க்கையை கொண்டாடி மகிழ்வேன்'' என்று தலையில் குட்டிக்கொண்டான்..
++
குப்புசாமி இடது காலில் மாவுக்கட்டு பிளாஸ்திரி எலும்பு முறிவுக்காக போட்டிருந்ததால் கீழே விழுந்த புத்தகத்தை எடுக்க அவஸ்தைப்படுவதை பார்த்த இருகையாலும் இளம்பிள்ளை வாதத்தில் சூம்பிய சக்கர நாற்காலி பையன் கோபு புத்தகப்பையை , எடுத்து கொடுத்து, பள்ளிக்கூடம் வரை கூடவே வந்தவன், ''கவலைப்படாதே சீக்கிரம் குணமாகிவிடுவாய்'' என்று முதுகில் தட்டி ஊக்குவிக்கிறான்...
++

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...