Friday, April 24, 2020

THE KING OF 14 YRS




பதினாலு வருஷ ராஜா.... J K SIVAN

எப்போதோ நடக்கவேண்டிய இந்த அற்புதமான பட்டாபிஷேகம் பதினான்கு வருஷங்களுக்கு பிறகு அயோத்தியில் கோலாகலமாக நடக்கப்போகிறது.
பதினான்கு வருஷங்கள் காத்திருந்தான் அந்த வயோதிக செருப்பு தைக்கும் தொழிலாளி. பதினான்கு வருஷங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் அவன் மனதில் மீண்டும் திரையிட்டது.
அவனுக்கு ராமன் மேல் கொள்ளை பிரியம். வீரன், அழகன், கம்பீரன், நீலவண்ணன் ராமன் இன்னும் ஒரு சில தினங்களில் சக்ரவர்த்தி தசரதனால் யுவராஜா என்று பட்டாபிஷேகம் செய்யப்பட இருக்கிறான். அவனுக்கு எல்லோரும் இப்போதே கூட்டம் கூட்டமாக வந்து பரிசுகள் அளிக்கிறார்கள். பரிசுகள் ஒரு மலைபோல் குவிகிறது. பொன்னும் பொருளும், பீதாம்பரம், யானை, குதிரைகள் தேர்கள் என்னென்னவோ பரிசுகள்.
''என்னால் என்ன கொடுக்க முடியும். நான் செருப்பு தொழிலாளி''
நல்ல அற்புதமான மணமிகுந்த சந்தன குமிழ் வைத்து மிருதுவான காலை அலங்கரிக்க, ஒரு ஜோடி பாதுகையை . மூன்று நான்கு நாட்களில் தயார் செய்தான். அதை எடுத்துக்கொண்டு மறுநாள் காலை அரண்மனை வாசலில் நின்றான். ஒரு ரிஷிகள் கூட்டம் உள்ளே சென்றது. ஒருவர் பார்வை அவன் மேல் பட்டது. அவரை வணங்கினான்.
''என்னப்பா ஏதோ சொல்ல விரும்புகிறாய் போல் இருக்கிறதே?''
''மகரிஷி, நான் ராம பிரியன், ராமனுக்கு என்று பிரத்யேகமாக ஒரு ஜோடி பாதுகை செய்து கொண்டு வந்திருக்கிறேன். ராமனுக்கு பரிசளிக்க ஆசையாக இருக்கிறது.... எப்படி உள்ளே போவது. அனுமதி கிடைக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது''
ராமன் எல்லோருக்கும் சொந்தமப்பா. நீ என்னோடு வா. நான் தரிசிக்கும்போது உனக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டுகிறேன்.
வரிசையாக உள்ளே அனைவரும் சென்றார்கள். ராமனை வாழ்த்தி வணங்கினார்கள். ரிஷிகளை லக்ஷ்மணன் வரவேற்றான். அவனிடத்தில் தன்னருகே இருக்கும் தொழிலாளி கொண்டுவந்த பரிசை பற்றி ரிஷி சொல்கிறார். அவன் ராமனிடத்தில் செல்கிறான்.
சற்று நேரத்தில் ஒரு சேவகன் வந்து கூட்டத்தில்உரக்க கூவினான்.
''ஆத்ம பந்து என்பது யார் . யுவராஜா அழைக்கிறார்''
ரிஷி அருகே நின்ற செருப்பு தொழிலாளி சந்தோஷத்தோடு சேவகன் பின்னே ஓடுகிறான்.
ராமர் அவனைப் பார்த்து புன்னகைக்கிறார். ''எனக்கு பரிசா கொண்டுவந்தாய்? காட்டு. ''
ஆத்மபந்து பொட்டலத்தை பிரித்து புத்தம் புது ஜோடி பாதுகையை அவர் காலடியில் வைக்கிறான்.
''என் கால் அள
வு உனக்கு எங்கே கிடைத்தது?''
''ரெண்டு மூன்று நாளாக நீங்கள் சரயுவில் ஸ்னானம் செய்ய செல்லும்போது நானும் அங்கே சென்றேன். உங்கள் காலடி ஈர மண்ணில் பதிந்திருக்கும். அதை அளவெடுத்து வந்து தயார் செய்தேன் ''
''பலே ''
ராமர் அவன் அளித்த பாதுகையை காலில் அணிகிறார். அவனுக்கு பரிசுகள் நிறைய அளித்து சந்தோஷமாக திரும்புகிறான்.
சில தினங்களில் ராமர் பட்டாபிஷேகம் நின்றது. ராமர் 14 வருஷம் காட்டுக்கு செல்கிறார். போகும்போது ஒரு க்ஷணம் அவர் எண்ணம் ஆத்ம பந்து அளித்த பாதுகை மேல் செல்கிறது. அதை அணிந்து செல்கிறார்.
பின்னர் நடந்தது தான் உங்களுக்கு தெரியுமே. பரதன் ராமரை சந்திக்கிறான். நாடு திரும்பி அயோத்தி மன்னனாக பொறுப்பேற்க வேண்டுகிறான். தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று அவனை சமாதானப்படுத்தி அவன் வறுபுறுத்தலால் தனது பாதுகையை அவனிடம் அளிக்கிறார். பதினான்கு வருஷங்கள் ஆத்மபந்து வின் பாதுகை ராஜ்யத்தை ஆண்டது.
இதோ ராமர் திரும்பி வந்துவிட்டார். இனி அவரே ஆளப்போகிறார் அவரை பதினான்கு வருஷங்கள் கழித்து சந்திக்கப்போகிறேன்.... என்று ஆத்மபந்து மகிழ்கிறான். ராமரே எல்லோருக்கும் ஆத்ம பந்து தானே....

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...