Saturday, April 18, 2020

PESUM DEIVAM



பேசும் தெய்வம்  J K SIVAN

 ''பலம் வேண்டுமா?   இதோ  ஒரு  உபாயம்''.

எந்த  பீம  புஷ்டி , சிட்டுக்குருவி  லேகிய மும்  தேவையில்லை.   நமக்கு தெரிந்த ஒரு சின்ன ஸ்லோகம்,  ''அஞ்சனா  நந்தனம், வீரம்  ஜானகி சோக நாசனம்... அதோடு  ''ஆபதாம்  அபஹர்த்தாராம்.''...  இதில்  சில சில  வார்த்தைகள்  அர்த்தம்  பார்ப்போம்.  இதை  உங்களுக்கு  தெரியப்படுத்தும் ஒலி பெருக்கி நான். ஒலித்தது மஹா பெரியவா....
பலம்  தேவையானால்   ஸ்ரீராமசந்த்ர மூர்த்தியைத்தான்  நினைக்கவேண்டும்.  “நிர்பல் கே பல் ராம்”.''ஆபதாம் அபஹர்த்தாரம்” என  ராமரை  ஸ்தோத்ரம் பண்ணுகிறோம்  என்ன அர்த்தம்? ஆபத்து வந்து சாய்கிற ஸமயத்தில் யார் வந்து தாங்கிக்கொண்டு பலம் தர முடியும்? ராமன் தான்.
  “அக்ரத ப்ருஷ்டதச்சைவ பார்ச்வதச்ச மஹாபலௌ” — அருமையான வாக்கியம். அதாவது, நமக்கு முன்னேயும் பின்னேயும் இரண்டு பக்கங்களிலும் நம்மைச் சூழ்ந்து கொண்டு ஸதா  நம்மை ரக்ஷிக்கிற மஹா பலவான் யார்?   ராமன் தான்.   நமக்குத் துளி ஆபத்து வருகிறதென்றாலும், அம்பை விடுவத ற்கு ஸித்தமாகக் கோதண் டத்தின் நாண்  கயிற்றைக் காதுவரை இழுத்த படி நம்மை காப்பதற்கு கூடவே  இருக்கி றான்.  அவனை விட்டு விலகாத லக்ஷ்மணனும்   கூடவே  இருப்பான் — “ஆகர்ண பூர்ண தந்வாநௌ ரக்ஷேதாம் ராம லக்ஷ்மணௌ”.
 ஆனால் இப்படிப்பட்ட புருஷ ஸ்ரேஷ்டர்  ''வீரராகவன், விஜயராகவன்''  என்றே பேர் பெற்ற மஹா வீர  ராமர்  தனக்கு   ஆஞ்ஜநேயர் பக்க  பலமாக இருந்த தால் தான் அவதார கார்யத்தைப் பண்ண முடிந்தது என காட்டுகிறார் ராம அவதாரத்தில்.

ராமர்  ''மநுஷ வேஷம் '  ப்ரமாதமாக  போட்டவர்.  ஸீதையை ராவணன் கொண்டு போய் எங்கே வைத்திருக் கிறான் என்று தெரியாத மாதிரியே நடித்தார். சொல்லி முடியாத  கஷ்டங்கள்,  துக்கங்கள் பட்டார். . அப்போது  சீதை இருக்கிற இடத்தைக் கண்டுபிடித்துச் சொல்லி அவருக்கு உத்ஸாஹமும், தெம்பும், பலமும் தந்தது யார் என்றால் ஆஞ்ஜநேய ஸ்வாமிதான்.

ஸீதையைப் பிரிந்து ராமர் பட்ட துக்கத் தைவிட  ராமரைப்  பிரிந்து ஸீதை பட்ட துக்கம் கோடி மடங்கு..''அவள் இல்லை யே  எனும் கஷ்டம், எங்கே  என்ன பாடு,  கஷ்டம் படுகிறாளோ  என்ற துக்கம்.... இது தான் ராமருக்கு.   

சீதைக்கோ,  மேற்சொன்னதைத்  தவிர  ராவண ராக்ஷஸ ராஜ்யத்தில்  அந்த காமுகனால் சிறைப்  பட்டது, சுற்றி  அரக்கிகள் கொடுத்த மஹா  கஷ்டம் வேறு  அபவாதம்  வேறு  சேர்ந்தது.

 ‘அபலா’ என்று  ஸ்திரீகளுக்கு பேர்.  ஸாக்ஷாத் ஜகன் மாதாவான மஹா லக்ஷ்மி ஸீதையாக வந்து அபலையிலும் அபலையாக அசோகவனத்தில் படாத கஷ்டப்பட்டு, அந்தக் கஷ்டத்துக்கு முடிவு ப்ராணனை விடுவதுதான் என்று கழுத்தில் சுருக்குப் போட்டுக்கொள்ளும்  நேரம் '' டக்''  என்று அவள் முன் தோன்றி உத்ஸாஹத்தை, தெம்பை, பலத்தைத் தந்தது — ஆஞ்ஜநேயர்தான்.

அடேயப்பா , ஆஞ்சநேயரின்  செயல்கள் ஒன்றில்லை, இரண்டில்லை. அதில் சிகரம் எது வென்றால்  இந்த லோகம் முழுவதற்கும் ஸ்ரீயைத் தரும், ஸெளபாக்யம்  தந்து அநுக்ரஹிக்கும்  மஹா லக்ஷ்மி  தாயார் மனம் குலைந்து மட்கி இருந்த போது காய்ந்த பயிருக்கு மழையாக  சீதைக்கு  உயிரும் உத்ஸா ஹமும் தந்தது தான் “ஜானகீ சோக நாசநம்”  அர்த்தம்  இப்போது புரிகிறதா? 

''அஞ்ஜனா  நந்தனம் வீரம் ஜானகீ சோக நாசனம்''  . அஞ்ஜனை ஒரு வாநர ஸ்த்ரீ. அவள் புத்ரனாக  பிறந்து ஆனந்தம்  கொடுத்தவர்  ஆஞ்சநேயர்.  எந்தப் பிள்ளையும்   அவன் என்ன துஷ்டத்தனம் செய்தாலும்  அம்மாவுக்கு மாத்திரம் ஆனந்தம் தருகிறவன்.   அவ்வளவு செல்லம்.  ஆகவே  தான்  அஞ்சனைக் கு  ‘நந்தனன்’.   தசரத நந்தனன், தேவகி நந்தனன் மாதிரி அஞ்ஜனா நந்தனன்.
ஆஞ்சநேயர்  தன் அம்மா  அஞ்சனைக்கு மட்டும் அல்ல. லோக ஜனனிக்கு,  இந்த உலகம் உள்ளளவும் வரப்போகிற அத்தனை அம்மாக்களுக்கும்  ஐடியலாக இருக்கும் ஸீதம்மாவுக்கு மகத்தான சோகம் ஏற்பட்டபோது அதைப் போக்கி னாரே, அதற்குத்தான் நாம் அவருக்கு நமஸ்காரம் பண்ணிக் கொண்டே யிருக்கணும்.
ஸீதைக்குள் சோகாக்னி ஜ்வாலை விட்டுக் கொணடு  அவளுடைய ஜீவனை வற்றப் பண்ணியது . ராவணன் ஹநுமார் வாலில் நெருப்பு வைத்ததாகச் சொல்கிறார்களே, உண்மையில் அந்த நெருப்பால் அவர் லங்கா தஹனம் செய்யவில்லை.  அந்த நெருப்புக் குள்ளேயே இன்னொரு நெருப்பை அவர் சேர்த்துக்கொண்டு இதனால்தான் ஊரை எரித்தார். ராவணன் வைத்த  நெருப் புக்குள்ளே   இருந்த  இன்னொரு நெருப்புஸீதையின் சோகாக்னி.    
''ய: சோக வந்ஹிம் ஜநகாத் மஜாயா: ஆதாய தேநைவ ததாஹ லங்காம்''    “ஜநாகாத்மஜா” என்றால்  ஜனகன் பெண் ஜானகி. “சோக வந்ஹி” என்றால் துயரமாகிற  சோக அக்னி. அவள் இருந்தது அசோக வனம்; அவளுக்குள் இருந்தது சோக வந்ஹி!  “தேநைவ”   =  அதனாலேயே, இந்த சோகாக்னி யாலேயே;  “லங்காம் ததாஹ” =  லங்கையை எரித்தார்.

‘ஆஞ்ஜநேயருக்கு வாலில்  வைத்த  நெருப்பு சீதையின் அனுகிரஹ த்தால்  அவரை  சுடவில்லை.  ஆனால் ஊரை யெல்லாம் எரிக்கிற பெரிய சக்தி சீதையின்  சோக அக்னி அதோடு சேர்ந்ததால் விளைந்தது. 

ஆஞ்ஜநேயர் வாலில் நெருப்பு வைக்க ணும் என்ற எண்ணம் ராவணனுக்கு   ஏன் வந்தது?  
அவனுக்கு அந்த எண்ணம்  தோணும்  ஸமயத்தில் ஸீதை  இனிமேலும்  சோகாக்னியில் வாடினால் ப்ரபஞ்சமே தாங்காது என்ற கட்டம் , நிலைமை வந்துவிட்டது.   அந்த சோக அக்னி   எப்படி  வெளிப்பட்டு  செலவாகும்?   யாரால்  அந்த சோக அக்னியை   வெளியிலே  கொண்டு  விட்டுவிட முடியும்?   ஆஞ்ஜநேய ஸ்வாமியைத் தவிர  வேறு யாரால்  முடியும்?   நெருப்பை  காற்று தானே  பரப்புகிறது. ஆஞ்சநேயர்  வாயு புத்ரன் அல்லவா?  ஆஞ்சநேயரைத்  தண்டிக்க  வாலில்  நெருப்பு வைக்கணும் என்று ராவணனுக்குத் தோன்றினதே   ஈஸ்வர ஸங்கல்பத்தால் தான். 
ஆஞ்ஜநேயர் ஜநகாத்மஜாவின் சோக வந்ஹியை வாங்கிக் கொண்டே லங்கையை  ஜம்மென்று தஹனம் செய்தார்.  அந்த நெருப்பு   ஸாதுக்களை, ஸஜ்ஜனங்களைக் கஷ்டப்படுத்தாமல் துஷ்டர்களை மட்டும் தண்டிக்கும் படி  செய்தார்.  சீதையின்  சோக  அக்னி என்பதால்  அவளுடைய பதிக்குப் பரம ப்ரியராக, பக்கபலமாக இருந்த  ஆஞ்சநேயரை  சுடுமா?  அவருக்கு மாத்திரம் அந்த  சோக அக்னி  ஜில்லென்று இருந்தது.

ராமருக்கு ஆஞ்ஜநேயர் செய்த மஹா உபகாரம் ஸீதை இருக்குமிடத்தைக் கண்டு பிடித்துச் சொன்னது. ஸீதைக்கு அவர் செய்த மஹா உபகாரம் ராமர் எப்படியும் வந்து அவளை மீட்டுக் கொண்டு போவார் என்று அவள் உயிரைவிட இருந்த ஸமயத்தில் சொன்னது. இவ்வாறு இரண்டு பேரும்  தமக்கு  பலமே போனாற்போல இருந்த போது பலம் தந்தவர்  ஆஞ்ச நேயர்.  ஆமாம்   இந்த இரண்டையும் அவர்  எதன் பலத்தில் பண்ணினார்?

''ஜெய்ராம்  சீதாராம் ''   என்ற  நாம  பலத்தினால் தான் .  நமக்கு பலம் வேண்டும் என்றால்ஏன்  ஸ்ரீ  ராமநாமம் சொல்ல வேண்டும் என்று புரிகிறதா? 
இன்னொரு விஷயம்.     ஸமுத்ரத்தைத் தாண்டிப் போனதால்  தானே  ஆஞ்சநேய ரால்  ஸீதையைக் கண்டு பிடிக்க முடிந்தது.   எப்படித் தாண்டினார்? அதே  ரகசியம் தான்  “ஜெயராம்  சீதாராம் ''  நாம சக்தி.

ஸீதை ப்ராணனை விட இருந்த  போது  எப்படிக் காப்பாற்றினார்?  “அம்மா தாயே, உயிரை விடாதே!” என்று காலில் விழுந்து  கெஞ்சினால்   கேட்பாளா? தடுக்க  முடியுமா?   ''இதுவும் ராக்ஷஸ மாயை; ராவணன் செய்கிற சூது’ என்றுதானே நினைப்பாள் ? மாரீச மான்  ''ஹா  லக்ஷணா  ஹா  சீதா''   என்று ராமர் குரலில்  கத்திய அநுபவம் போதாதா?  ஆஞ்சநேயருக்கு  இது தெரியாதா?  (பரம சுத்த ப்ரம்மசர்யத்தால் ஸ்படிகம் மாதிரி ஆன அவருடைய மனஸில் யார் நினைப் பதும் பளிச்சென்று தெரிந்து விடும்.) .ஸீதை  ப்ராணத்யாகம் பண்ணும் நேரம்  சட்டென்று  ஆஞ்சனேயர்  என்ன செய்தார்?  “ஜெயராம் சீதாராம் ''  என்று சொல்லிராமாயணக் கதையை மெதுவாக ஆரம்பித்தார். 
நாம்  “ராம நாமம் ” சொன்னாலே பலம் என்றபோது,  அதுவும் ஆஞ்ஜநேய சுவாமி  வாயால் சொன்னால், எந்த மாயையும் ஓடி விடாதா? சீதையின் சோக வந்ஹியை  ராமநாமத்தால் சமனம் செய்தார். இப்படி  அவளுக்கு அம்ருதத் தைத்  தந்தவருக்கு அக்னியே ஜில்லென் றிருக்க  சீதை  அனுக்ரஹிக்க மாட்டாளா? 
ஆஞ்ஜநேயரால் தான்  காப்பாற்றப் பட்டது போல் ராமரும் சீதையும்  சொன் னார்கள்.  ஸீதையின் ப்ராணனை ரக்ஷித்தது .  தனது  ப்ரியமான லக்ஷ்ம ணன் மூர்ச்சையாய் விழுந்த போது ஸஞ்ஜீவி கொண்டு வந்து அவனை எழுப்பினது எல்லாம்  நினைத்து    ஆஞ்ச நேயருக்கு  தீராத  நன்றிக்கடன் பட்டிருப்பதாக ராமர் எப்பவும்  சொல் வார். 
“ஆஞ்ஜநேயருக்கு எப்படி என்ன ப்ரத்யுபகாரம் பண்ணலாம்?   ராமரும் சீதையும் யோசித்தார்கள்.  ராமர் திரும்பி அயோத்தி வந்து  பட்டாபிஷேகம் ஆனது. ராமர் பல பேருக்குப்  பரிசுகள்  தரும்போது ஒரு முக்தாஹாரத்தை ஸீதைக்குப் போட்டார். அவள் அதைக் கழற்றிக் கையில்  எடுத்து   எல்லோரை யும்  பார்த்து  ராமரை  அர்த்த புஷ்டி யோடு நோக்கினாள் . ரெண்டு பேரும்  பரிபூர்ண ஐகமத்யம் [ஒரே சித்தம்] கொண்ட தம்பதி.  இருவர்  மனசிலும் ஒரே எண்ணம்.   ஆஞ்ச நேயரை அந்தப் பெரிய ஸதஸிலே கொண்டாட  திட்டம். .

ஸீ

தையின்  பார்வை புரிந்து ராமர்  “பராக்ரமம், புத்தி, பணி எல்லாம் எவனுக்குப் பூர்ணமாக இருக்கிறதோ, அவனுக்கே கொடு” என்றார். பாராட்டிதழ் (‘ஸைடேஷன்’) படித்தவுடன் ‘அவார்ட்’ கொடுக்கிற மாதிரி, பேரைச் சொல்லா மலே ராமர் இப்படிச் சொன்னவுடன் ஸீதை மாலையை ஆஞ்ஜநேயருக்கு  போட்டாள்.  ராமர்  ஹநுமானுக்கு கொடு என்று சொல்லவே இல்லை. பல உசந்த யோக்யதாம்சங்களைச் சொல்லி அவற்றை உடையவனுக்கு அவார்ட் கொடுத்தால் பொருத்தம்   என்று  பார்வையால் உணர்த்தினார்.  ராமர் பட்டாபி ஷேகத்தில்  இப்படி  இருவரும் சேர்ந்து ஒருமனதாக எவருக்கும் பரிசளிக்க  வில்லை.  சீதை  ஆஞ்சநேயர் கழுத்தில் போட்ட  அந்த மாலை   ஒரு  பெரிய மலைக்கு மேலே  பூர்ண சந்திரனின் ஒளி பிம்பத்தில் ஒரு மேகம் படிந்தது போல்  இருந்ததாம். 
முதல் முதலாக  ஆஞ்சநேயரை ரிச்யமுக பர்வதத்தில்  பார்க்கும்போதே   இவரால் தான்  ராமாயணம் இனி நடக்கும் என்று ராமர்  அறிவார். அந்நேரம்    அனுமன்  துணை இருந்தும்  ஸுக்ரீவன்  மனை வியை  இழந்து வாலியிடம் கஷ்டப் பட்டுக்கொண்டிருந்தான். ராமர் நல்லவர், சக்தி உள்ளவர் என்று தெரிந்து  அவர் துணையால் வாலியை ஜயிக்க ஹநுமாரை தூதனுப்பி னான்.    ராமருக்கு  நன்றாகவே  தெரியும்  தனக்கு பக்க பலமாக இருக்கப் போவது இந்த ஹநுமார்  தான் என்று.  ஈச்வரனாகயிருந்து பூர்வத்தில் பண்ணின ஸங்கல்பம்தானே இப்படி  ராமாயண நாடகம்.  ராமன்  ஆஞ்ச நேயரை பார்த்த மாத்திரத்திலேயே   அவர்  தம்மைப் பற்றி விசாரித்த தினுஸிலேயே    எடை போட்டுவிட்டார்.   இவன்  “நவ வ்யாகரண பண்டிதன், சொல்லின் செல்வன்”  என்று.  
 “லக்ஷ்மணா, ஏதோ வாக்குவன்மை படைத்தவன்  ஹனுமான் தான் என்று நினைத்துவிடாதே! இவன் ஸர்வ வல்லமையும் படைத்தவன். இந்த லோகம் ஒரு தேர் என்றால் அதற்கு அச்சாக இருக்கிற  அச்சாணி இவன். ''“ஆணியிவ்வுலகுக் கெல்லாம்….. பின்னர்க் காணுதி மெய்ம்மை” என்று கம்பர்  வாக்கில் இது அருமை.
ஒரு ரிஷி சாபத்தால் ஹநுமார் தம் பலத்தை மறந்திருந்தார்.  அதனால்  தான்  ஸுக்ரீவன் ராஜ்யம், தாரம் எல்லாம்  இழந்தபோதும்  உதவ இயல வில்லை.  ஜாம்பவான் இவர் பலத்தை இவருக்கு நினைவூட்டி ரிஷி சாபம் விலகியது.   அப்புறம் ஹநுமார்  ஸாகர தரணம், கடலை தாண்டியது.  லங்கா தஹனம் எல்லாம் நடக்கப் போகிறது என்று ராமருக்கு தெரியும். “பின்னர் காணுதி மெய்ம்மை”‘இவனுடைய மஹா ப்ரபாவத்தால் லோகமாகிய தேரையே நடத்திக்கொண்டு போகக் கூடியவன் என்கிற உண்மையை நீயே பின்னால் பார்ப்பாய்’ என்று லக்ஷ்மணனிடம் சொல்கிறார். .
ராமாயணம்  ஒரு உலகம். — ஸப்த காண்டமுடைய ஸப்த லோகம்!  இந்த   ராமாயணத் தேர் ஓடாமல் நின்று போகிற ஸந்தர்ப்பம் — ஸீதை  அபகரிக் கப்பட்டு எங்கே இருக்கிறாள்  என தெரியாமல் ராமர்  திரிந்த கட்டம்.  ஆஞ்ஜநேயரைப் பார்த்தவுடன் அவரை  தேருக்கு அச்சாணியாக  முடுக்கிக் கொண்டுவிட்டார்! உடனே சர சர வென்று தேர் ஓட ஆரம்பிக்கிறது! பஹுகாலம் ஓய்ந்து  ஒளிந்த  ஸுக்ரீவன் வாலியிடம் சண்டை இடுவது. வாலிவதம். வானரர்கள் சீதையைத் தேடுவது.  ஹனுமார் கண்டு பிடிப்பது, ஸேது பந்தனம், ராம ராவண யுத்தம், என்று ராமாயணத் தேர்   கிடுகிடுவென்று ஓட ஆரம்பித்துவிடுகிறது! இதில் பெரும்  பங்கு ஹநுமாருக்குத்தான்!

ராமாயணத்தில்  பாதிக்குமேல்  கிஷ்கிந்தா காண்டத்தில் தான்  ஹனுமார் வருகிறார். கிடுகிடுவென்று  கதாநாயகருக்கும் மேலே என்பது போல் முக்யமாய் விடுகிறார்!  ஸுந்தர காண்டம் முழுக்க இவர் பிரதாபமும்,  லீலையுமே! ராமாயணத்தில் ஸர்வ கார்ய ஸித்தி என்று ஸகலராலும் பாராயணம் செய்யப்படுவது எது என்றால்  ஆஞ்சநேய ப்ராபவமான ஸுந்தர காண்டம்தான்! ராமாயணத் தேரை இனிமேல் நீயே கொண்டுபோ” என்று ராமர்  அதிகாரம் கொடுத்து விட்டார். தம்முடைய நாமாவை அவர் மூலம் வெளியிட்டே ஸீதை உயிரை காப்பாற்றினார். பரம ஸுலபமாக ஹனுமான் ஸமுத்ரத்தைத் தாண்டச் செய்தார். அணை கட்டிக்கொண்டு அதன்மேல் நடந்துதான் ஹனுமான் மேல் ஏறிக்கொண்டு   யுத்தம்.

“தாம் செய்வதெல்லாம் ராமர் போட்ட பிச்சையே! ஸீதாதேவியின் அநுக்ரஹ லேசமே!” என்றுதான் ஆஞ்ஜநேயர் நினைத்தார். ‘ஸாகர தரணமும், லங்கா தஹனமும் தான்  செய்த காரியமென்று லோகம் கொண்டாடு கிறதே! நிஜத்தில் ராமநாமம் - தாரக நாமமல்லவா அதை   நடத்தியது.  சீதையின் சோக அக்னி அல்லவோ  இலங்கையை எரித்தது.'' என்று ஹனுமார்  நினைத்தார். தங்கள் கார்யத்துக்கு நம்மையும் ப்ரயோஜனப்  படுத்திக் கொண்டார்களே என்று ஸீதா  ராமர்களிடம்  தீராத  நன்றிக்கடன் பட்டார் ஹனுமான்..

இது ராமாயணத்திலே நமக்கு ஒரு பெரிய பாடம்.
மஹாபலம் பொருந்தின ஆஞ்ஜநேயர்  தனது அந்த பலம் முழுதும்  ஸ்ரீ  ராமசந்திரமூர்த்தியின்  நாமம் என அறிந்து தனது பலத்தை விட  அதிகம் பணிவுடன், விநயத்துடன் இருந்தார். பலமும் பணிவும் ஸாதாரணமாக  ஒன்றுக்கொன்று  எதிரானது. இரண்டும் மாக்ஸிமம்  பலம் கொண்டவை. சேர்ந்தே இருக்காது. 
 நமக்கு பலமும் இல்லை; பணிவும் இல்லை.   ஆஞ்சநேயரைப் போல  நல்ல கார்யங்களை ஸாதிப்பதற்கான பலத்தை நமக்குத் தந்து, ஆனால் அந்த பலத்தினால் அஹங்காரப்படாமல் அது ராமனின் பிரஸாதமே என்று உணர்ந்து அதை ராமார்ப்பணமே செய்யும் புத்தியை நமக்கெல்லாம் அவர் அநுக்ரஹிக்க வேண்டும்''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...