Wednesday, April 22, 2020

THIRUPPALLAANDU

திருப்பல்லாண்டு J K SIVAN
பெரியாழ்வார்
                                     
 2      பல்லாண்டு பலகோடி நூறாயிரம் 

பெரியாழ்வார் மாதிரி ஒருவர்  இருக்க  வேண்டுமானால்  அவர்  பெயர்  விஷ்ணு சித்தராக இருந்தால் மட்டும் போதாது. சித்தம் எந்நேரமும் நாராயணன் மேலே  நிலைத்து இருக்கவேண்டும்.  எல்லா ஆழ்வார்கள் சித்தம் அப்படி இருந்தாலும் அவர்கள் அனைவருமே   விஷ்ணு சித்தரையே  ''பெரிய'' ஆழ்வார் என்று ஏகமனதாக  ஏற்றுக்கொண்டார்கள்.  அவரால்   மட்டும்   தான்   ''நம் கவலை தீர்க்கும் காருண்யனை பற்றி''  எங்கே  அவனுக்கு கண்பட்டுவிடுமோ என்று கவலைப்பட முடிந்தது.  நீ நீடூழி வாழ்க என்று வாழ்த்திப்  பாட முடிந்தது.   தாயினும் சாலப்  பரிவோடு  நாராயணனை நினைக்க  முடிந்தது.   பெண்ணைக்  கொடுத்த மாமனார் அல்லவா?  அரங்கன் எனும் ரங்கமன்னார் மேல் பாசம்  அளவு கடந்து இருக்காதா?

(3) வாழாட் பட்டுநின் றீருள்ளீ ரேல்வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட் பட்டுநின் றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழா ளாகப் படைபொரு தானுக்குப் பல்லாண்டு கூறுதமே  

 கல்யாணம் போன்ற  சுப விழாக்களில் முளைப்பயிறு  வளர்த்து பாலிகை தெளிப்பது வழக்கம். திருமுளைத்திருநாள்  விசேஷம்.   அங்குரார்ப்பணம்.  மண்ணை உண்ட வாயனுக்கு, மண்ணை ஓரடியால் அளந்தவனுக்கு, கைங்கர்யம் செய்வதில், பலனெதிர்பாராத செய்த பணியில் விளையும் அவனருள் பெற,  தம்மையே அவனுக்கு உடல் பொருள் ஆவியாக  ஈந்து  இன்பம் பெற,  இங்கே  கூடுங்கள்.  வெறும் சோற்றுக்கு மட்டும் வருவோர்க்கு இங்கே இடமில்லை.  இங்கே பல தலைமுறையாக  அவனைச் சரணடைவோர் மட்டுமே குழுமி,   இலங்கைக்கு நடந்து  பத்து தலை ராவணன் அவனைச் சார்ந்த அரக்கர்களை அழித்த ராமனாகிய  அந்த நாராயணனுக்கு பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் ஆண்டு வாழ்க  என்று  மனமார  பாடுகிறோம். பாடிக்கொண்டே இருப்போம். நீவிரும்  சேர்ந்து  கொள்ளுங்கள்.

ஏடுநிலத்தில் இடுவதன் முன்னம் வந்து எங்கள் குழாம் புகுந்து*
கூடுமனமுடையீர் வரம்பொழி வந்தொல்லைக் கூடுமினோ*
நாடுநகரமும் நன்கறிய நமோநாராயணா வென்று*
பாடுமனமுடைப் பத்தருள்ளீர்! வந்து பல்லாணடு கூறுமினே. (4)
 திரு மூலர் சொன்ன மாதிரி  ஈசனோடாயினும்   ஆசை அறுமின் என்று  எதிலும் ஈடுபாடு இல்லாமல்  ஆத்மானுபவம் ஒன்றில் மட்டும் பற்று கொண்டவர்களை  கைவல்யம் பெற்றவர்கள் என்கிறோம். நாம் அப்படி ஆக பல ஜென்மங்களுக்கு அப்புறம் முடியலாம். உடம்பை தூக்கிக்கொண்டு போய்  சுடுமுன்னே, இங்கே ஓடிவா, எங்களோடு சேர்ந்துகொள், ஆத்மாவை புரிந்து தெரிந்துகொள், அதை உணர். நாடும் நகரமும் பட்டி தொட்டி எங்கேயும்  நமோ நாராயணாய எட்டெழுத்து மந்திரம் புரியட்டும்.  அது புரிந்தவனால் மட்டுமே  நாராயணா  நீ  நீடூழி வாழ்க என நெஞ்சார  வாழ்த்த முடியும்.

5 .  அண்டக்குலத்துக் கதிபதியாகி அசுரர் இராக்கதரை*
இண்டைக்குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் றனக்கு*
தொண்டைக்குலத்தில் உள்ளீர்!வந்தடி தொழுது ஆயிரநாமம் சொல்லி*
பண்டைக்குலத்தைத் தவிர்ந்து பல்லாணடு பல்லாயிரத்தாண்டென்மின. (5)


பெரியாழ்வார் உரக்க சொல்கிறார்:  இந்த  பிரபஞ்சத்தில் எண்ணற்ற பிரிவுகள், கூட்டங்கள் இருக்கிறது அவை அத்தனைக்கும் தலைவன் ஒருவன். தீமை செய்யும் ராக்ஷஸர்களை அடியோடு இரக்கமில்லாமல் அழித்து உதவிய, நமது இந்திரியங்களாகிய  ராக்ஷஸர்களின்  பிடியிலிருந்து  நீங்கி, ஜிதேந்திரியனான  பரமாத்மனுக்கு அடிமை  ஆகவேண்டுமானால்  எங்களோடு வந்து சேருங்கள்.   நாம்  ஒன்று கூடி அவன் தாமரைத் திருப்பாதங்களில் வீழ்வோம்.   நா  மணக்க அவன் ஆயிரநாமங்களை சொல்வோம். பிறவித்துன்பத்தில் இருந்து மீள்வோம். நன்றியோடு அவனுக்கு கரம் கூப்பி  நீ  நீடூழி பல கோடி நூறாயிரம் ஆண்டுகள் வாழ்க என்று போற்றுவோம்.

6. எந்தை தந்தை தந்தை தந்தை தம்மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி*
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம்* திருவோணத்திரு விழவில்
அந்தியம் போதில் அரியுருவாகி அரியை யழித்தவனை*
பந்தனை தீரப் பல்லாணடு பல்லாயிரத்தாண் டென்று பாடுதுமே. (6)


நான் சொல்லப்போவதை கேட்குமுன் பக்கத்தில் ஏதாவது சுவற்றை, தூணைப் பிடித்துக் கொள்ளவும் . வாழையடி வாழையாக நான் தொடர்ந்து பிறந்தவன்.  நான், என் அப்பன்,  என் அப்பனுக்கு அப்பன், என் தாத்தாவின் அப்பன், பாட்டன் பூட்டன், முப்பாட்டன், கொள்ளுப்பாட்டன், எள்ளுப்பாட்டன்,அவர்களின் அப்பன் கள்,..அடேயப்பா ஏழேழு தலைமுறை..எல்லோரும் அவனுக்கே  ஆளானோம். அடிமையானோம். அவன் யார்  நினைவிருக்கிறதா?  ஒரு திருவோணம் அன்று,  அந்தி நேரத்தில், இரவும் பகலும் இல்லாத ரெண்டும்      கெட்டான் அந்தி  நேரத்தில், மனிஷனு மில்லை, மிருகமுமில்லை, நரசிங்கம் ஆக வந்து,  எந்த  ஆயுதமுமில்லாமல் , நகத்தால் கீறி ஒரு சொட்டு ரத்தம் சிந்தாமல்,  பலம் பொருந்திய  ஒரு பெரிய, இறவா வரம் பெற்ற  ராக்ஷஸனைக்  கொன்றவன். எதற்காக? நேர்மை, நியாயம், பக்தி வளர... அவனை நாம் எல்லோரும் சேர்ந்து நீ  பலகோடி நூறு ஆயிரம் ஆண்டு வாழ்க என்று வாழ்த்திப் பாடுவோம் வாருங்கள்.


7. தீயிற்பொழிகின்ற செஞ்சுடராழி திகழ்திருச் சக்கரத்தின்*
கோயிற்பொறியாலே ஒற்றுண்டு நின்று குடிகுடி ஆட்செய்கின்றோம்*
மாயப்பொருபடை வாணனை ஆயிரம்தோளும் பொழிகுருதி
பாய*சுழற்றிய ஆழிவல்லானுக்குப் பல்லாண்டு கூறுதுமே. (7)


கிருஷ்ணா,  நீ  என்ன செய்தாய் என்று உனக்கு மறந்து போயிருக்கலாம்.  நினைவுபடுத்துகிறேன்.  உன் கையில் இருக்கிறதே,  அக்னி சூரியன் எல்லாம் விட  சிவந்த உஷ்ணமான  வட்ட ஒளி  மிகுந்த சுதர்சன சக்ரம் அதால்  ரத்தம் சொட்டி  ஆறாக ஓட,  கொடிய  சக்தி வாய்ந்த பாணாசுரனின் ஆயிரம் கரங்களை கொய்தாயே,  அந்த  சக்ரத்தை   பெருமையோடு நாங்கள் உடலில் சின்னமாக  முத்திரை பதித்துக்கொண்டு தலை முறை தலைமுறையாக உனக்கே யாம் அடிமையாக நீ  நீண்டகாலம்  பலகோடி நூறாயிரம்  ஆண்டுகள் எம் தலைவனாக  வாழ்க  என்று போற்றுகிறோம்.




மற்ற  ஐந்து பாசுரங்கள்  அடுத்த பதிவில்  தோன்றி  நிறைவுபெறும்  

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...