Thursday, April 30, 2020

POET KALAMEGAM




              காளமேகத்தோடு  கொஞ்ச நேரம்.   J.K. SIVAN


நான்  தமிழ் பண்டிதன் அல்ல, ஆங்கில மேதாவி அல்ல, சமஸ்க்ரித வித்துவான் அல்ல.. ஒரு சாதாரண ரசிகன். எனக்கு பிடித்ததை நான்  தேடிப்பிடித்ததை,  ரசித்ததை உங்களோடு பகிர்ந்து கொள்பவன். அப்படி பகிரும்போது உங்களோடு நான் மீண்டும் மகிழ்கிறேன். என்னிடம் பெரிதாக எதிர்பார்ப்பு  இருக்க வேண்டாம்.

நிறைய நண்பர்களுக்கு காளமேகத்தைப் பிடித்திருக்கிறது , தமிழ் பாடல்கள் பிரிக்கிறது என்று அறிய ரொம்ப சந்தோஷம். எனக்கும்  காளமேகத்தை ப்பிடிக்கும். என்ன அறிவு, என்ன ஞானம், என்ன எழுத்து வன்மை, வண்மை !

அவரது நகைச்சுவையை இன்று கொஞ்சம் பரிமாறுகிறேன்.

இருபொருள் விளங்க சொல்வது சிலேடை எனப்படும். படிக்கும் போது மேலெழுந்தவாரியாக ஒன்று பொருள் படும். உன்னிப்பார்த்தால் மற்றோர் அருமையான உள் அர்த்தம் புலப்படும்.

இதைத் தமிழறியா அன்பருகளுக்குச் சொல்ல வாய்ப்பில்லை. அவர்களால் ரசிக்கமுடியாதே என்று வருத்தமாகத்தான் இருக்கிறது.ஷேஸ்பியரை தெலுங்கிலோ தமிழிலோ உருதுவிலோ  ரசிக்க முடியுமா. பாரதியை பஞ்சாபியில் நேபாளியில் அனுபவிக்கமுடியுமா. அந்தந்த மொழியில் உள்ள களஞ்சியங்களை அவரவர்கள் தான் ரசிக்க முடியும்.  மேலெழுந்தவாரியாக  அறிந்து கொள்ள மொழிபெயர்ப்பு   ஜூக் னு மாதிரி கூட   செய்ய முடியும்.   ''அங்கே நீ  அப்போ கார்லே  வந்தியா சொல்லு  மழையிலே அப்பாவோட?''  என்று படிக்கவோ கேட்கவோ எப்படி இருக்கும்?

15ம் நூற்றாண்டு கவிஞர், காளமேகம். ஆசுகவி, திட்டினால் பலிக்கும். சபித்தால் அவ்வளவு தான். காளமேகம் என்பதே பட்டப்பெயர். நிஜப்பெயர் வரதராஜன்.  காளமேகம் என்றால்  சூழ் கொண்ட  கருப்பு மேகங்கள் எப்படி மழையைக் கொட்டித் தீர்க்குமா அது போல் கவிதைகள் சரமாரியாக கொட்டும் ஞானஸ்தர்.

குறை கூறுவது போல் நிறை கூறுவது ''நிந்தா ஸ்துதி'' என்று வடமொழியில் உண்டு. புகழ்வது போல் இகழ்வது வஞ்சப்புகழ்ச்சி என்று ஒன்று கூட உண்டு. அது இதற்கு எதிர்மறையானது.

காளமேகம் ஒரு தடவை காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கருட சேவை உத்சவத்தில் கூட்டத்தில் நிற்கிறார். பக்தர்கள் வெள்ளமாக  தரிசிக்கிறார்கள்.  தெருவில் ஊர்வலம்.  கருடன் மீது பெருமாள் ஆரோகணித்து ஆனந்தமாக  ஆடிக்கொண்டே  நகர்கிறார்.  காளமேகம் பார்த்துக்கொண்டு சும்மா  இருப்பவரா? 

உடனே ஒரு பாடல் பிறக்கிறது.   '' ஆஹா   இந்த  வரதராஜ  பெருமாள் ரொம்ப ரொம்ப   நல்லவர் தான் . இன்றைய நாளும் நல்ல நாள் தான்.  திருநாள்  தான். அதனால் தான்  ஸ்வாமியை அலங்கரித்து ஊர்வலம் வருகிறார்கள்..  ஆனால் இந்த பெருமாள் சும்மாயிருக்காமல் ஏதோ சேட்டை பண்ணி இருப்பதால் தான் ....., அய்யய்யோ ஓடி வாருங்கள், இதைப் பாருங்கள் ஒரு பெரிய பருந்து அவரைத் தூக்கிக் கொண்டு போகிறதே!! இத்தனை பேர் இருக்கிறீர்களே வந்து அவரை காப்பாற்றவேண்டாமா?  கருட வாஹனம் பெரிதாக அலங்கரித்து அதன் மேல் பெருமாள் ஆரோகணித்து நகர்வதை தான் சொல்கிறார்.  யாருக்காவது கருடன் மேல் வரதராஜ பெருமாளை பார்க்கும்போது கருடன் கடத்திப் போவதை போல்  நினைக்க தோன்றுமா? அது தான் காளமேகம்.  என்ன அழகு தமிழ் பாருங்கள்.

''பெருமாளும் நல்ல பெருமாள்! அவர்தம்
திருநாளும் நல்ல திருநாள்!--பெருமாள்
இருந்திடத்தில் சும்மா இராமையால், ஐயோ!
பருந்தெடுத்துப் போகிறதே பார்!

இன்னொன்று சொல்லி நிறுத்துகிறேன்.   அந்தக்காலத்தில் ஹோட்டல் கிடையாது. யார் வீட்டிலாவது அதிதி விருந்தாளியாக  சாப்பிட வேண்டும். இல்லை யென்றால்  இலவச சாத்திரங்கள் ஊர்களில் இருக்கும்.  யாத்ரீகள் தங்க  பசியாற  இந்த சத்திரங்களில்  உணவு தருவார்கள். 

காளமேகம்  நல்ல பசி, வயிற்றைக் கிள்ள நாகப்பட்டினம்  வந்து சேர்ந்தார். எல்லாம் நடை தான் 


வழியில் யாரிடமோ கேட்டு  ஒரு   தர்ம அன்ன  சத்திரம் இருப்பதை தெரிந்துகொண்டு வந்தார்.  அந்தக் கால ராஜாக்கள் தர்மவான்கள் ஏற்பாடு. இந்த மாதிரி சத்திரங்கள்  எல்லாம். அந்த சத்திரம் நடத்திய வருண குல காத்தான் என்பவன்  கொஞ்சம்  தமிழ் ஆர்வம் கொண்டவன்.   வந்த யாத்திரிகர்  காளமேகப்புலவர்  என்று   அறிந்து அவரிடம் பேசுகிறான்.  ரொம்ப சந்தோஷம் அவனுக்கு. அவரது கவிதையும் புலமையும் பிரசித்தமாயிற்றே. மதிய உணவு  தீர தீர  மேலே மேலே சாதம் வடித்து வருபவர்களுக்கு போடுவார்கள். முன்பாகவே வடித்து வைத்து வீணாக்க மாட்டார்கள். ஆகவே  காளமேகம் மற்றும் யாரோ சிலர்   வந்ததால் சாதம் தயாராகிறது.  அது முடிகிறவரை பேச்சு கொடுக்கிறான்.

''ஐயா  பு லவரே ஒரு கவிதை சொல்லுமே நான் கேட்க ஆவலாக இருக்கிறேன்''   என்றான் காத்தான். .

பசியிலும்   காளமேகத்துக்கு  நகைச்சுவை.  மணி மூன்று நாலு  ஆகுமோ? இன்னும் எத்தனைமணி காத்திருக்கணுமோ இலையில் சோறு விழ? அவர்கள் மெதுவாக வேலை செய்வதைப்பார்த்து ஒரு ஹாஸ்ய கவிதை. காத்தானைப்பார்த்து பசியோடு சிரித்தார். தொண்டையைக் கனைத்தார். புறப்பட்டது ஒரு கவிதை.

''அடே காத்தான், உன் சத்திரத்தில் பகல் போஜனத்துக்கு, சாயந்திரம் தான் அரிசியே வரும். அதைக் களைந்து நீ உலையில் போட்டு அது வேக, இரவு வந்து அனைவரும் குறட்டை விட்டு தூங்கும் நேரமாகிவிடும். ஒரு கரண்டி சாதம் என் இலையில் விழ மறுநாள் காலை சூரிய உதயம் தொடங்கிவிடும்'' நல்ல இன்ஸ்டன்ட் சர்வீஸ் அப்பா உன் சத்திரத்தில்'' என்ற பொருள் பட ஒரு கவிதை இதோ:

''கத்துகடல் சூழ்  நாகைக் காத்தான் சத்திரத்தில்
அத்தமிக்கும் போதில் அரிசி வரும்; குத்தி
உலையில் இட ஊர் அடங்கும்; ஓர் அகப்பை அன்னம்
இலையில் இட வெள்ளி எழும்''.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...