Wednesday, April 8, 2020

JUST THINK




ஒரு நிமிஷம் யோசிக்கலாமா?  J K SIVAN


நாம்  பொதுவாகவே  அரக்க குணம் கொண்ட வர்கள் அல்ல.  மனிதர்கள்  ராக்ஷஸர்களை விட மேலானவர்கள். இருந்தாலும்   எறும்போ , கொசுவோ, கரப்போ, பூரானோ,  கடித்தால் , கண்ணில் பட்டால், கொல்ல தயங்குவ தில்லை. நாமாக அவற்றை தேடிப்போய்  கொல்வ தில்லை . அந்த அளவுக்கு காருண்யம் உள்ளவர்கள்.

கிருஷ்ணன் பக்தர்களை விட்டு  விடுவோம்.   கிருஷ்ணனை பிடிக்காமல் இருந்தால் அது வேறு விஷயம்.  ஆனால்  அவனை  தூஷிப்பது  கிருஷ்ணன் இருந்த காலத்திலிருந்தே  இருக்கிறது.  சிசுபாலன் ஒன்றா இரண்டா நூறு தடவை அல்லவா பலர் முன்னிலையில் கிருஷ்ணனை தூஷித்தான். பொறுமைக்கும் எல்லை உண்டல்லவா?  

' இதோ பார்  அத்தை, உனக்கேன் வீண் கவலை.    உன் மகன்  என்னதான் தப்பு பண்ணினாலும்   நூறு தடவை என்னை கேவலமாக அவமதித் தாலும்  நான் லக்ஷியம்  பண்ணமாட்டேன்  என்னால் அவனுக்கு ஒரு  ஆபத்தும் வராது. போதுமா,  சந்தோஷமாக நீ  போய்வா '' . 

கண்ணன்   பொடி  வைத்து பேசியது அவன் அத்தை, சிசுபாலன் தாய்க்கு புரிய வில்லை .அவன் தாய்க்கு கொடுத்த வாக்கின் படி  நூறாவது முறை தூஷித்த பிறகே,  சிசுபாலன் உயிர் பறி போனது.

 இப்போதும் கிருஷ்ணனை  தூஷிப்பவர்கள் சிசுபாலன் ரகம் அல்ல. அவர்கள்  கிருஷ்ணனை நிந்தித்து குறைந்த ஜென்மம் எடுத்து மீண்டும் அவனை அடைந்தவர்கள்,  ராவணன், ஹிரண்யன் என்று பிறவி எடுத்தவர்கள். 

இப்போது குலைப்பவர்கள்   அவர்கள்  கால் தூசிக்குக்கூட   சமானமாகாதவர்கள். நாய் குலைத்தால்  நாம் திருப்பி அதற்கு போட்டியாக  குலைக்கிறோமா?    அதை லக்ஷியம் பண்ணாமல் இருப்பதால் அதற்கு தன்னை எதிர்க்க மனிதர் களுக்கு பலம் இல்லை.பயம்  என்று அர்த்தம் புரிந்து கொள்வது தான் வேடிக்கை. 

 குளத்தில் குளித்துவிட்டு வந்த யானை  எதிரே  ஒரு  சேற்றில் உழன்று விட்டு வரும்  பன்றியை பார்த்து  விலகிப் போகிறது.  பன்றி தனது மனவியிடம் பெருமையாக  என்ன  சொல் கிறது?:
 ''பார்த்தாயா, கண்ணே,  யானைக்கு கூட  என்னைக் கண்டால் மரியாதை, பயம். என்னைக்கண்டதும் விலகிப்போகிறது''    

யானையைக் கேட்டால் அது என்ன சொல் லும்?'

'பன்றியை  என்  தும்பிக்கை தொட்டால், வீசி எறிந்தால் அதன் மேல்  உள்ள சேறு என் மீது அனாவசியமாக  ஒட்டிக் கொள்ளும். அதைத் தொடுவானேன், சேற்றை பூசிக் கொள்வா னேன்''  

ஹிந்துக்கள் தெளிவாக  புரிந்து கொள்ள வேண்டும்.  கிருஷ்ணனை  சாதாரணமான மனிதனாக  உருவகித்து அவன் செயல்களில் நாம் செய்யும் தவறுகளை திணிப்பது,  புகுத்துவது  அறிவின்மை.  நமக்கும் மேலே உள்ள அதீத கருணாசாகரம்  ஆண்  பெண் பேதமற்றது. குற்றமற்றது. குறையொன்று
மில்லாத கோவிந்தன் என்று பெயர் கொண்டவனை  இழிவாக பேசுவது   கேடுவரும் பின்னே  மதி கெட்டுவரும்  முன்னே  சமாச்சாரம்.   சில விஷயங்களை  காதில் போட்டுக்கொள்ளவே வேண்டாம்.   ஆனால் முடிந்தவரை மற்றவர்க்கு எடுத்துச் சொல்லுங்கள்.  ஏனென்றால்  இந்த மாதிரி துஷ் ப்ரச்சாரங்கள் வளர்வது விஷயம் தெரியாதவர்களை நம்ப வைப்பதன் மூலம்  ஆள் பிடிக்கும் வேலை. இவர்களை தண்டிக்க கிருஷ்ணன் வரவே வேண்டாம். நமது காலணி  ஒன்றே போதும்.                   

 பல காலமாக  ஒரு வேடிக்கையை  பார்த்து வருகிறோமே.    ஒரு  கட்சி.  ஒரே கட்சி. பலமானது.  அது தான் தாய்.  அதன் தலைவர்கள் நம்மால் போற்றப் பட்டவர்கள். அவர்களை தெய்வங்கள் போல் மதித்து வந்தோம். ஒவ்வொருவராக அவர்கள் மறைய புதிய தலைகள் தோன்றின.   தங்களுக்குள்  ஆதாயத்துக்காக  சுயநலத்தால் அந்த கூட்டம்  விரிசல் விட்டு உடைந்தது.   ஒருவர் மேல் ஒருவர்  த்வேஷத்தால் என்று வேண்டு மானால் சொல்லலாம்,   பிடிக்க வில்லை என்றால், பேசாமல்  அந்த கட்சியில் இருந்து விலகி வீட்டில் மூன்று வேளை சாப்பிட்டுக் கொண்டு சும்மா  இருக்கவேண்டியது தானே.  வேறு புதிதாக  ஒரு கட்சி,  கொடி , ஒரு சில  கூஜாக்கள்,  புது பெயர் அதற்கு தானே  தன்னிகரில்லாத தலைவன்.    அதுவும்  துண்டாகி,  புதிதாக இன்னும் பல முளைத்து   இன்னும் பல  கொடிகள் , தலைவர்கள் , அவர்கள் பின்னே  ஆதாயம் தேடி அலையும்  சில அசடுகள்.    கடைசியில்  நாட்டின் அமைதியை ஒட்டுமொத்தமாக  கெடுத்து, புரட்சி பண்ணுகிறேன் பேர்வழி என்று புரளி பண்ணி, நேரம், காலம் எல்லாம் வீணாகி மக்கள்   குழம்புகிறது தான்  மிச்சம். 

''ஒன்று பட்டால் உண்டு வாழ்வு அன்றேல் அனைவருக்கும் உண்டு  தாழ்வு''  புத்தகத்தில் தான் இருக்கிறது. அது எழுந்து வெளியே  வர வேண்டும். ஒவ்வொரு மனத்திலும்  புக வேண்டும்.   

எத்தனையோ பேர் நமது நாட்டையே குறை கூறுபவர்கள், இழிவாக பேசுபவர்கள் இன்னும் கூட  இருக்கிறார்களே.  பெற்ற  தாயை இழிவு படுத்தும் ரகம் இவர்கள்.  பார்ப்பதே பாபம். அப்புறம் தானே அவர்கள்  வாதத்தை,  பேச்சை கேட்பது.   நம்மைப் பற்றி  மற்ற நாட்டவர் இகழ்வது கூட   உறைக்காதவர்கள்.

இவர்கள்.  ஒற்றுமை ஏன் குலைகிறது என்றால் உட்பூசல், பொறாமை ஜாதி மத த்வேஷத்தால்  நிகழ்வது.  குறை சொல்வது.  சேற்றை வாரி ஒருவர் மீது ஒருவர் பூசிக் கொள்வது.

இவர்கள் யாருமே நமக்கு  தேவையில்லை.  யார் உண்மையிலேயே தேசப் பற்றும், மனதில் உண்மையாக மக்களுக்கு உழைப்பதில் ஆர்வம்.  கடமையை  ஒரு  பிழைக்கும் வழியாக கொள்ளாத ஆத்மா  கண்ணில் பட்டால் ஒருவன் இருந்தால் கூட போதும்.  அவனை அடையாளம் கண்டு  கொண்டு  நம்புவோம்.  

கங்கை யமுனை புனித நதிகள்,  அவற்றை நாமே  பாழ் படுத்துகிறோம், ஒவ்வொரு நாளும் பல 'டன்'கள்  கழிவுப் பொருள்கள், அதில் கலக்க காரணமாக இருக்கிறோம். அதை ஒரு வழியாக சுத்தப்படுத்த ஒரு முயற்சி நடந்து வருகிறது. அதற்கு ஒத்துழைப்போம். அதே போல் நம்மை வழி நடத்துவதிலும்  கழிவு களை ஒதுக்கி அப்புறப் படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக   முந்தைய  சுத்தத்தை  மீண்டும் பெறுவோம்  அதற்கு மேல் சொல்வதிற்கில்லை.

நமது இந்து சனாதன  தர்மத்திலும் இது போல் நடந்தது வாஸ்தவம்.  ஒரு நல்ல  சனாதன தர்மத்தை பிளவு படுத்தி புதிய சில ஆன்மீக வாதிகள் புறப்பட்டு  அவர்கள் வெகுகாலம் இங்கே காலூன்றி நிற்க முடியவில்லை என்று சரித்திரத்தில் சில பக்கங்கள் நினைவூட் டுகிறது.
புத்தர்  யார்?..
இந்து சனாதன தர்மம்  க்ஷீண  கதியில்  இருந்தபோது   அதில் இருந்த  சில, ( யாரும்  அலட்சியமாயிருந்த சமயம்)   உயரிய  கோட்பாடுகளை  எடுத்து  புதிதாக  காட்டி   தாய்  கட்சியிலிருந்து  இப்போது பல  புதுப் புது  கட்சிகள் கொடியோடு  பிறக்கின்றதே  அதுபோல் பரப்பப் பட்ட ஒரு  கோட்பாடு.  அதை  பௌத்தம்  ஜைனம்   என்று பெயரிட்டு நிறைய பேர்  அதில்  பாய்ந்தார்கள்
 புத்தருக்கும்  மற்ற  குருமார்களுக்கும்  என்ன  வித்யாசம்?
 மற்ற பெரியோர்கள்  தன்னை  உயர்த்திக் கொள்ள ஞானம்  அடைய, மோக்ஷம் தேடி தவம்  இருந்தவர்கள்.  புத்தர்  மட்டுமே  உலகில்  எல்லாருடைய  துன்பங்களும்  அழிய  என்ன  வழி  என்று  தன்னை வருத்தி தவம்  இருந்தவர்.   எனக்கு  புத்தரை  இதனால்  ரொம்ப  பிடிக்கும்.  புத்தரிடம் சுயநலமே இல்லை. அது ஒன்றே அவரை நினைக்க வைக்கிறது. 

ஒரு  அமெரிக்கருக்கு  புத்தர்  கிழ  வயதில்  இயற்கை  மரணம் அடைந்தது   வருத்தம்.   கொல்லப்பட்டிருந்தால், பேசாமல்  சிலுவையில்  அறையப்பட்டிருந்தால்  எவ்வளவு  பேரம் புகழும்   பெற்றிருப்பார்? என்று வருந்தினார்.    பிறர்  புகழ ஒரு  கொலையா? கொலையால் புகழா?   பாரத  தேசத்தில்  இந்த  எண்ணம்  மனதில் எவருக்குமே  இருந்ததில்லை.  தேச மெங்கும்  சுற்றி  விக்ரஹ  வழிபாடை இகழ்ந்து,  கடவுளே  இல்லை என்று சொல்லி  அலைந்து  80 வயது  இருந்தார்.  யாரும்  புத்தரைக்  கொல்ல வில்லையே.  பாதிக்குமேல்  இந்துக்கள் பௌத்த மதத்தில்  சேர  பண்ணினாரே.

புத்தர்  என்ன சொன்னாலும்  வேதங்கள்  சொல்லும்  அந்த  பகவான்  எங்கு மிருக்கிறார்  என்று  இந்துக்களை  மீண்டும் வேறு திசை செல்லாமல்  நிலை நிறுத்த  தான் சங்கரர் சரியான  நேரத்தில்  தோன்றினார். அவரைப் போல்  நமது  வேதங்களின்  உபநிஷதுக்களின்  சாரத்தை  எடுத்துச்  சொல்ல  எவருமில்லாத  காலம்.  சரியான  சமயம்.

புத்தர் என்கிற பேட்ஸ்மேன்  செட்டில் ஆகி  செஞ்சரி நோக்கி  செல்லும்போது  தான்  ஸ்பின்னர் சங்கரன்  வந்தார்.  சீக்கிரம்  அவுட் ஆனார்  பேட்ஸ்மேன்.  

புத்தர்  கடவுள்  இல்லை  என்றார்.  வேதங்களை எதிர்த்தார். யாகம் ஹோமம்  எல்லாமே  ஹிம்சை சம்பந்தப்பட்டது. அஹிம்சை  தான்  தெய்வம்  என்றார். உபநிஷதங்களின்  உயரத்துக்கு  உலகைக்  கொண்டு  செல்ல முயன்றார். தோற்றார்.  அகலக்கால்  இது.

புத்தரின்   மகத்வம்  தன்னை  அவர்  உயர்த்திக்கொள்ளவில்லை.  பௌத்த கொள்கைகளை  உயர்த்தினார்.  கடவுளுக்கு சமமாக  ஏற்றுக்கொள்ளப்பட்டார்.  அவரது  ஒரே  பிடிமானம்   எல்லோரிடமும் அன்பு, தன்னலமற்ற  நற்பண்பு. சத்யம்.   உலகில்,பிரபஞ்சத்தில்  மாயையை  விரட்டு.  எஞ்ஜி  நிற்பது சத்யம்  ஒன்றே  தான்  என்றவர். ஒரு எறும்புக்காக  கூட  உன்  உயிரையே  தியாகம்  செய் என்றவர்  அவர்  ஒருவர் தான். நல்லதே  நினை,  நல்லதே செய். உணர்ச்சிகளுக்கு  அடிமையாகாதே. நீயேதான்  அப்போது அந்த  கடவுள்  என்றார்.

எது அவர்  சொன்னாலும்  பௌத்தம்  பிறந்ததே வேதாந்த  உபநிஷத்துக்களில்  இருந்து  என்பதால் ''இந்த சரக்கு  ஏற்கனவே இங்கே  நிறைய  இருக்கு''  என்று  அது  இங்கே பிரபலமாகவில்லை. புது  மோகத்தில்  சில காலம் உலவியது.  இந்து தர்மம்  தெரியாத பரவாத   இடங்களில் கால்  ஊன்றியது.  அதிக  பட்சம் மார்க்  போட  நினைத்தால்  புத்தர்  இந்து சனாதன தர்மத்தின்  ஒரு சீர் திருத்த வாதி  எனலாம். அதற்கு  மேல்  இல்லை.

புத்தரின்  கொள்கைகள்  எதுவுமே  அவராக  சிருஷ்டிக்கவில்லை. அவர்  ஒரு  சிறந்த  வேதாந்தி.  வேதாந்தத்தை  அதன்  சாரத்தை,  கொஞ்சம் தூசு  தட்டி  புதிதாக  பண்ணிக் காட்டியவர். ஆண்  பெண் சமத்வம், ஜாதிமதம் இன்மை, விக்ரஹ ஆராதனை இன்மை  எல்லாம்  அவரது கோட்பாடுகள். அவர்  சொன்ன கர்மா   தான்  ஏற்கனவே  நாம்  அறிந்த ஆத்ம விசாரம்.  எதுவுமே  ஒன்றல்ல  அநேகம் என்று  அவர்  சொன்னது   நம்  வேதங்கள் முழங்கும்    ஏக  ஐக்கிய பாவத்தின்  (ஒன்றே  பலவாக  காண்கிறது) திரிபு.    
அவரைப்   பின்பற்றுபவர்கள் இதை  எல்லாம்  காற்றில் முழுமையாக பறக்கவிட்டு அவரையே  கடவுளாக்கி விட்டனர்.  அவர் உபதேசித்த  அஹிம்சை காற்றில் பறந்து பல  மிருகங்கள் பக்ஷிகள் இன்றும் அவர்களின்  ஆகாரமாக காணாமல் போகிறது.



''புத்தரே,   உமது  பிற  உயிர்  நலம்  பேணிய,  அனைத்தும்  அனைவரும்  சமம்,  எல்லாம்  உண்மையே என்ற  சீரிய கருணை  உள்ளம்  ஒன்றுக்கு  உலகமே  அடிமை. ஆனால் இது  எங்கள்  வேதத்தில்,   கீதையில்  மலிந்து  கிடக்கிறதே  . நடைமுறையில்  உம்மைப்போல்  இதை  கடைப்பிடிக்க  தான் இங்கு  யாரும்  இல்லை.  வேதத்தில்  இல்லாததா? ,  எத்தனை யோ  மஹ ரிஷிகள் உபநிஷதங்களில்  கூறாததா? அநேகர்   உபதேசித்திருக்கிறார்கள்  வாஸ்தவம்.    ஆனால்   புத்தரே,   உம்மைப் போல்  ஒரு  ஆட்டுக்குட்டிக்காக  உயிரைக்  கொடுக்கத் தான்  இங்கு  நிறைய பேர்  இல்லை. பிரசாரத்துக்கு  மட்டும்  அல்ல  கொள்கைகள்.  கடைப்பிடிக்க. என்று  சொல்லைச்   செயலாக்கி  வாழ்ந்து காட்டியவர்  நீங்கள்.    அதனால் தான் இன்னும்  உலகம் உங்களை  வியப்புடன்  பார்க்கிறது.  இந்த  பாரத  தேசத்தில்  அவ்வப்போது  பல புத்தர்கள்    தோன்றுவார்கள்.  நம்பிக்கை இருக்கிறது.   பகவானின் அவதாரங்கள்  இப்படித்தானே  தோன்றி உலகை  உய்வித்து வந்திருக்கிறது. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...