Sunday, April 5, 2020

COIN STORY

என் கதை பிடிக்குதா? J K SIVAN

நான் யாரு என்பது முக்கியமில்லை ஸார் . என் பிரயாணம் உங்களுக்கு லட்டு மாதிரி இனிக்கும். என்னை மாதிரி அனுபவங்களை கொஞ்சம் ஞாபகம் வைத்துக்கொண்டு சொல்லியவர்கள் எத்தனை பேர்? பேத்தல் என்று யாராவது சொன்னீர்களானால் எனக்கு காது கேட்காது.

நான் பிறந்தது வடக்கே எங்கேயோ ஒரு ஊர்லே. தரைமேலே உங்கள் மாதிரி வீட்டில் இல்லை. பூமிக்கு கீழே. பிடிச்சு எடுத்து நெருப்பிலே போட்டு வா
ட்டி அடிச்சு... அப்பப்பா நான் பட்ட கஷ்டம் யாருக்குமே வேண்டாம். ஆனால் உங்களெப்போல் ஒருத்தர் இப்படி பண்ணினதாலே தான் எனக்கு பெரிய மதிப்பு. எல்லோரும் என்னை தேடினாங்க. விட மனசில்லாமே அவங்க கிட்டே இருந்து பிரிஞ்சேன். எத்தனை பேர் என்னை பார்த்தாங்க, நான் அவங்க கிட்டே இருந்தேன், -- இதை எல்லாம் சொல்லி மாளாது. கொஞ்சம் மட்டும் சொல்றேன்.

என் உடம்பு உங்க மாதிரி இல்லே. கை காலுல்லாம் கிடையாது.முன்னாலே பின்னாலே ரெண்டே பக்கம். . ஒருபக்கம் மொட்டைத்தலை வெள்ளைக்கார ராஜா. இன்னொரு பக்கம் சிங்காரம், பூவெல்லாம் வரைஞ்சு ஒண்ணு ன்னு எழுதி, நம்பர் போட்டு... அதுக்கு கீழே நான் பிறந்த வருஷம் . நான் பார்க்காத ஊரில்லை, ஆளில்லை.

ரயில்லே, கப்பல்லே, ஏரோபிளேன், நடந்து, மோட்டார், குதிரை வண்டி, ஒரு அழுக்கு கழுதை மேலே....பிரயாணம் செய்தவன். என் வயசு என்னன்னு நினைக்கிறீங்க. உங்க கொள்ளுத்தாத்தாவுக்கு எள்ளு தாத்தா வயசு.
எனக்கு ஜெயில் கூட ஒரு தப்பும் நான் பண்ணாமலேயே கிடைச்சுது. ஒரு கிழட்டு பயல், ரொம்ப நாள் என்னை ஒரு தகரடப்பாவில் அமுக்கி மூச்சு விடமுடியாமல் ஆறுவருஷம் இருட்டில அடைச்சு வச்சான்? ஆறு வருஷம் நான் சூரியனை பாக்கவே இல்லை. எப்படியோ ஒரு சின்னப்பையன், அவன் நல்லா இருக்கட்டும் ஒருநாள் அந்த டப்பாவிலிலிருந்து என்னை விடுதலை செஞ்சான்.

ஒரு நடு வயசு செட்டியார் என்னை பூட்டியே வச்சிருந்தார். என் போல நிறைய பேரை பார்த்தா பிடிச்சுய் வச்சிப்பார். தினமும் தடவி தடவி கொடுத்து வெளியே எடுத்து பார்ப்பார். எதுக்கு எங்களை சேக்கணும் . எண்ணணும் , ஆயிரம் ஆனதும் சாப்பிடப்போறாரா?

குப்பம்மா பேரனுக்கு ஜுரம் . ஆஸ்பத்திரில சேக்கறதுக்கு, மருந்து வாங்கறதுக்கு நான் தான் வெள்ளக்கார டாக்டரம்மா, மருந்துக்கடை எல்லாம் போனேன்.

ஆடு வாங்க என்னை ஒருத்தன் உபயோகப் படுத்தினான். அடப்பாவி அதை வெட்டின பூசாரி வீட்டுக்கு போய் அவன் பொண்டாட்டி என்னை பிடிச்சு குதிரை வண்டிக்காரன் கிட்டே கொடுத்து ரெண்டு பட்டணம் போனேன்.

ஒரு பையன் என்னை கிணத்துல போட்டுட்டு அடி வாங்கினான் பாவம். நல்லவேளை ஒரு மாசம் கூட ஆகலே கிணத்திலே வெயில்காலம் தண்ணி இல்லன்னு கவுண்டர் ஒருத்தர் உள்ளே இறங்கி என்னை வெளியே மண்ணோடு சேறோடு எடுத்து போட்டார். என்னைப் பாக்கலே.

நாயைப் பிடிச்சுக்கிட்டு ஒரு மாமா வந்தப்போ அவர் கண்ணுலே பட்டேன் . என்னை தொடரது க்கு முன்னாடி அங்கேயும் இங்கேயும் யாராவது பாக்கறாங்களா என்று ஏன் பார்க்கணும்?

பள்ளிக்கூடத்திலே பாலசுப்ரமணியை படிக்க வச்சாங்களே அப்போ என்னை ஒரு அழகான சுருக்கு பையிலே போட்டு அந்த பையன் கையாலே ஒரு வாத்தியாருக்கு கொடுத்தாங்க. வாத்யார் வரதாச்சாரி, கிழவர்,. நல்லவர். அப்படியே கொண்டுபோய் என்னை ராமர் படத்துக்கு கீழே காலடிலே வச்சார். முதல் முதல்லே அவர் தான் என்னை கடவுள் கிட்டே கொண்டு போய் சேர்த்தது.

வீட்டுக்காரன் வந்து கத்தினான் பாக்கி வாடகை தரலேன்னு. அவர் வீட்டு மாமி அழுதுகிட்டே என்னை ராமர் கிட்டேருந்து மீட்டு ஜோசப் கையிலே கொடுத்தது. ஜோசப் கோழி வளர்க்கிறவரு. சர்ச்லே கிருஸ்மஸ் பண்டிகையும். அதுக்கு செலவுக்குனு பாதிரியார் கிட்டே என்னை கொடுத்துட்டார்.


பாதிரியார் நீள சட்டை போடுவாரு. அதிலே ஒரு பாக்கெட் அதிலே போட்டுக்கிட்டாரு என்னை. அவர் துரதிஷ்டமோ என் நல்லகாலமோ நான் அதிலிருந்து ஒரு ஓட்டை வழியாக ஒரு சாயங்காலம் கீழே குதிச்சுட்டேன். அவருக்கு தெரியாது. சார்ச்லே போய் ஜான் என்கிற பையனை தொமே தொமே ன்னு ''ஏண்டா திருடினே'' ன்னு அடிச்சாரு. '' நான் திருடலே, பாக்கலே , எடுக்கலே ஏசு மேலே சத்தியமா''... முதுகிலே பதினைஞ்சு ஆதி சவுக்கு கொம்பிலே. வாங்கினான். நான் எங்கே பார்த்தேன் தெரியுமா, வாசலுக்கு வெளியே மல்லிப்பூ செடிக்கு கீழே....அதை ஒட்டி தான் பாதிரியார் ரூம்.

ஒரு ஐந்து வயசு பொண்ணு மல்லிப்பூ பறிக்க பத்து நாள் கழிச்சு வந்தது.. ஒரு பூ கீழே என் கிட்டே விழுந்து. பூவோட என்னையும் எடுத்து அம்மா கிட்டே கொடுத்துட்டுது. அந்த அம்மா வேக வேகமாக பூவை கீழே போட்டுட்டு குழந்தையையும் என்னையும் தூக்கிக்கிட்டு ஊட்டுக்கு ஓடிச்சு

''வழிலே நம்ம குழந்தை ரோஸ் மேரிக்கு கிடைச்சுது. போய் நல்ல வளையல் ஜோடி வாங்கி வாங்க ன்னு புருசன் ஜார்ஜ் கிட்டே கொடுத்ததை, அந்த படுபாவி குடிகாரன் திருச்சினாப் பள்ளிலே ஒரு சாராயக்கடைலே யே கொடுத்து நிறைய குடிச்சான். வீட்டுக்கு வந்து வளையல் எங்கே ன்னு கேட்டா வழியிலே யாரோ திருடிட்டாங்க ன்னான்.

சாராயக்கடைக்காரன் கடைக்கு பெயிண்ட் அடிச்சான். அதுக்கு நான் பெயிண்ட் கடைக்கு போனேன். கடைக்கார சாயபு,மெக்காவுக்கு யாரோ போறாங்கன்னு என்னை ஒரு பாய் அம்மா வீட்டிலே கொடுத்துட்டான். கொஞ்ச நாள் அங்கே அவங்க பாஷை கேட்டுக்கிட்டு இருந்தேனா கவுச்சு, மீனு சுடர நாற்றம் வயிற்றை குமட்டும்.

ஒருநாள் அந்த வீடு பத்திக்கிச்சி. எல்லாத் தையும் எடுத்து டப் டப் ன்னு வெளியே வீசினபோது நான் உருண்டு கிட்டே போய் ஒரு பள்ளத்துலே விழுந்திட்டேன். கொஞ்ச நாள்லே நல்லா மழை பெஞ்சிது. கீழே மறுபடியும் மண்ணிலே தூங்கினேன். எத்தனை மாசம் வருஷம்னு தெரியலே.

பள்ளிக்கூடம் கட்ட அந்த இடத்தை எல்லாம் தோண்டினப்போ சித்தாள் கந்தசாமி தான் என்னை முதல்லே பார்த்து எடுத்தான். ''முதலாளி இது கிடைச்சுது'

பாலு ரெட்டி பணக்காரன். என்னைப்போல் ரொம்ப பேரு அவன் கிட்டே. அப்போ ரொம்ப சிமெண்ட் கிடையாது. காரை சுண்ணாம்புலே தான் கட்டிடம் கட்டுவாங்க. சுண்ணாம்பு வாங்க சௌகர்யம் என்று என்னை தூக்கிக் கொண்டு குதிரை மேலே ஏறி வந்தான்.

வரும்போது காட்டுப்பாதையில் அவனை மடக்கி கொள்ளைக்கூட்டம் ஒண்ணு அவன்கிட்டே இருந்து என்னை பிரிச்சுடுத்து.
வெள்ளைக்கார போலீஸை மட்டமா நினைக்காதீங்க.

அந்த கொள்ளைக்கார நரிக்குறவன் நாகுவை பிடிச்சு அடிச்சு என்னை அவன் கிட்டே இருந்து எடுத்து பார்த்தாங்க. என்னென்னமோ இங்கிலீஷ்லே பேசிட்டு என்னைக் கொண்டு போய் மன்றோ கிட்டே கொடுத்துட்டாங்க. அவ்வளவு தான். நான் ரொம்ப பெருமை பட்டேன். அவரு என்ன செய்தார் தெரியுமா?

அப்போ திருப்பதி வெங்கடேச பெருமாள் மேலே ரொம்ப பக்தி மன்ரோ துரைக்கு. கோவில்லே நிறைய வேலை செய்யணும் அதுக்கு நான் உபயோகம் படுவேன்னுட்டு ராகவாச்சாரி பட்டரை கூப்பிட்டு பொங்கலுக்கு நெய் வாங்க என்னை அனுப்பிச்சாரு.

ஆந்திராவில் ஒரு கிராமம். நிறைய பசு மாடு. அதை ஒரு நாயுடு கவனிச்சிக்கிட்டு பால் தயிர் வெண்ணை நெய்யின்னு விப்பாரு . திருப்பதி கோவிலுக்குன்னா காசு வாங்க மாட்டாரு. வருஷம் ஒரு தடவை சடை தாடி எல்லாம் வளர்த்துக்கிட்டு ''திருப்பதி ஏடு கொண்டல வாடா '' ன்னு உளுந்து புரண்டு மொட்டை போட்டு முடி இறக்குவாரு.

திருப்பதி வெங்கடேசன் உண்டில்லே என்னை கொண்டு போட்டாரு. கோவில் காரங்க என்னைப் போல நிறைய பேரை பிரிச்சு எண்ணி மூட்டை கட்டி மன்ரோ ஆளுங்க வந்து தூக்கிட்டு போய்ட்டாங்க. நான் மறுபடியும் மன்ரோ கிட்ட.

அப்போ கடல் கடந்து கப்பல்லே ஒரு வெள்ளையா செவத்த ஆளு வந்திருந்தார். ராஜா ஆளு. அவர் என்னை பார்த்துட்டு ''அட''ன்னு எடுத்து வச்சிக்கிட்டாரா? அவரோட கப்பல்லே வெளிதேசம் போய்ட்டேன்.

கொஞ்ச நாள் கழிச்சு என்னை மறுபடியும் உருக்கிட்டாங்க நான் அப்புறம் வேறே . என் ஒரு பக்கம் வேறே முகம், வேறே நம்பர்... அதெல் லாம் இன்னும் சொல்லிக்கிட்டே போனா முடிவேது....அப்பறம் தட்டாயிட்டேன், ஒரு தடவை கூஜா, அப்புறம் ஒரு பொண்ணு காலிலே கொலுசு...... ????

ஒரு எட்வர்ட் vii காலத்து வெள்ளி ரூபாய் இதெல்லாம் வாய் திறந்து பேசியது...

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...