Tuesday, April 7, 2020

ORU ARPUDHA GNANI





ஒரு அற்புத ஞானி  J K SIVAN
சேஷாத்திரி ஸ்வாமிகள் 
                                                                             

   வாயு  ஓடறதுடா !

கொட்டையூர் மகாலிங்க சுவாமி என்பவர் பாக்கியசாலி என்று கண்ணை மூடிக்கொண்டே சொல்லலாம். எப்படி  என்று கேட்கிறீர்களே  சொல்லாமல் விடுவேனா?
ஒருநாள் திருவண்ணாமலை சாது சத்திரத்தில் காலை வேளையில் சேஷாத்திரி ஸ்வாமிகளை தரிசிக்கும் பாக்யம் மட்டுமா  அவருக்கு
 கிடைத்தது.  ஸ்வாமிகளோடு  பேச ஒரு சந்தர்ப்பமும் கூட அல்லவோ கிடைத்தது. ஸ்வாமிகளை பார்ப்பதே  சிரமம். பார்த்தாலும் அவர் விரட்டாமல் அடிக்க வராமல் இருக்க வேண்டும் அப்படியும் அவரோடு அருகில் இருந்தால்  அவர் கவனம் பக்தர் மீது இருக்காது.  அதையும் மீறி அவர்  பேசுகிறார் என்றால்  எஞ்ச ஜென்மத்தில் செய்த  புண்யம் தான். 
ஸ்வாம கள் பின்னாலேயே சென்று  எப்போதும்  விடாமல் அவரை  தரிசிப்பவர்களில்  மஹாலிங்க ஸ்வாமியும் ஒருவர். . 
அன்று ஸ்வாமிகளை பார்த்ததும்  திடீரென்று ஏதோ கேட்கவேண்டும் போல் தோன்றியது.

 ''ஏன் சுவாமிகளே, எப்போது பார்த்தாலும், சதா சர்வ காலமும், ஒரு இடத்தில் நின்று தங்காமல், இங்கேயும் அங்கேயும் ஓடிக்கொண்டே இருக்கிறீர்கள்?''

''என்னடா கேக்கறே நீ? என்று சிரித்துக் கொண்டே தலை அசைத்த ஸ்வாமிகள் ''நானா ஓடறேன். வாயு, வாயுடா ஓடறது'' என்ற பதில் வந்தது.

கொட்டையூரரருக்கு  ஸ்வாமிகள்  சொன்னது ஏதாவது புரிந்ததோ புரியலையோ தெரியாது. சுவாமி தந்தி பாஷையில் சொன்னது:
 ''நான் ஓடறதுமில்லை, நிக்கறதுமில்லை. இதோ இந்த தேகம் தான் ஓடறது. ஆனா அது ஓடறது என்கிற எண்ணமே கிடையாதே. ஓடறதும் நிக்கிறதும் அசையறதும் ப்ராணனுடைய சேஷ்டை. அந்த பிராணன் ஒரு வாயு. எல்லா அசைவுக்கும் பிராணன்/பிராணவாயு தானே காரணம். பிராணவாயு நின்னுபோனா எல்லாமே நின்னு போகும்'' 

 இதையல்லவோ உணர்த்தியிருக்கிறார்  ஸ்வாமிகள். 

இதை உணர்வதும் பிராணனை கட்டுப்பாட்டில் வைப்பதும் ஜீவன் முக்தனாலே முடியும். ''கர்மண்ய கர்மய: பச்யேத்'' என்று கீதையில் கிருஷ்ணன் சொல்றது (4-18) இதை தான். உபநிஷதுகளும் இதை தான் கொஞ்சம் வேறமாதிரி சொல்றது.

நல்ல பாம்பு சட்டை உறிக்குமே பார்த்திருக்கிறீர்களா. புற்றின் மேல் நீளமாக கிடக்கும். காற்றில் அசையும். நான்  சின்ன வயசிலே  கோடம்பாக்கம் லயோலா காலேஜ் லே ஒரு மலைப்பாம்பு கூண்டு இருக்கும். அது கிட்டே  வெளியே போட்டிருப்பார்கள். நீளமாக  மலைப்பாம்பு மாதிரியே  இருக்கும் அது உரித்த சட்டை.  அதாவது கழற்றிய மேல் தோல். பார்க்கவே  பயமாக இருக்கும். 
 அதுமாதிரி தான் ஜீவன் முக்தனுடைய சரீரம்.   ப்ராணவாயுவினால் அங்கேயும் இங்கேயும் ஓடறது. ஆத்மா என்பவன் நிஷ் க்ரியன். இதை தான் ஒரு வார்த்தையிலே  சேஷாத்திரி சுவாமிகள்  தன்னுடைய பாணியில்  சொல்கிறார்.

திருச்சியை சேர்ந்த ருக்மணி அம்மாளுக்கு ஸ்வாமிகள் ப்ரத்யக்ஷ தெய்வம். தினமும் மூக பஞ்சசதியில் ஆர்யா சதகத்தை பாராயணம் பண்ணுபவள். சாது சத்திரத்தில் ஸ்வாமிகளை பார்த்தாள். வணங்கினாள். அந்த நேரம் மேலே சொன்ன சதகத்தில் 10-15 ஸ்லோகங்களை சொல்லிக்கொண்டே வந்தாள். தேவியை ஸ்தோத்ரம் பண்ணினாள். ஸ்வாமிகள் காதில் இந்த ஸ்தோத்திரங்கள் விழுந்தது. ஓடிவந்தார். ஆனந்தத்துடன் ருக்மிணி அம்மாளை அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டார். அவள் மூர்ச்சித்து கீழே விழுந்தாள்.

அப்போது சுவாமி பக்கத்திலிருந்த மாணிக்க சாமி உள்ளே ஓடி ஜலம் கொண்டுவர சென்றார். அதற்குள் சுவாமி அம்மாளின் இரு கண்களையும்   விரலால் தொட்டார். மூர்ச்சை தெளிந்தது. எழுந்து தரையில் உட்கார்ந்தாள். எதிரே ஸ்வாமி மேடையில் உயரமாக உட்கார்ந்தார். அவரது இரு பாதங்களையும் எடுத்து தன் தலைமேல் வைத்துக் கொண்டாள். அப்போது ஸ்வாமிகள் பேசினார்:

'' இதோ பார். ராமன். அவனுடைய திருவடி. ரெண்டையும் பஜித்தால் முக்தி. மறந்துட மாட்டியே''

இதற்கு என்ன அர்த்தம்?  ''ஞானித் வாத்மைவமே மதம்'' என்று கீதையில் வருமே அதுபோல் ஆத்ம ஞானியாகிய ஸ்வாமிகள் ஸ்ரீ ராமன். அவரது திருவடிகளே பவ சாகரத்தை கடக்க உதவும் கப்பல். இந்த மாதிரி ஆத்ம ஞானியை பஜிப்பதாலும் அவரது திருவடிகளை த்யானிப்பதாலும் முக்தி கிடைக்கும் என்பதில் சந்தேகம் ஏது?

ஒரு குட்டையில் எருமையை அணைத்துக் கொண்டு ஸ்வாமிகள் அதை உபாசித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அநேகர் கேலி செய்தார்கள். உடலெல்லாம் சேறு. நாற்றம்.

''என்ன சுவாமி இது எருமையைபோய் தொட்டுண்டு '' என்று  பக்தர்  குழுமணி நாராயண சுவாமி அய்யர்  ஒரு நாள் கேட்டபோது ஸ்வாமிகள் 

''என்ன சொல்றே? எருமையா? எருமையாடா இது? சரியா
பார். ப்ரம்மம் என்று சொல்லு'' என்கிறார்.

அதேபோல் எங்கோ கோபமாக போய்க்கொண்டிருந்த வேங்கடசாமி நாயுடுவை கை தட்டி கூப்பிட்டதும்  நாயுடு  பிரமித்து கைகட்டி நிற்கிறார்.

'' கோபத்தை உடு. யாராவது அடிச்சா திருப்பி அடிக்காதே. கூடாது. பல பல தெய்வங்களை விட்டுடு. ஒண்ணையே நம்பு. ஆபத்துக்கு ஓடிவரும். உதவும்''

நாயுடு  கோபமாக இருந்தாரா? யார் மேல் கோபம்? பல தெய்வங்களை நம்பினவரா?  அவருக்கு அந்த சந்தர்ப்பத்தில்  இப்படி ஒரு  உபதேசம்  தேவையாக இருந்ததா?  எல்லாம்  ஸ்வாமிகள் மட்டுமே அறிவார்.

நண்பர்களே  இன்னும் எத்தனையோ சொல்லலாம். கடல் போல் விரிந்து கிடக்கிறது ஸ்வாமிகளின் மஹாத்ம்யயம். எழுத எனக்கு சக்தி இல்லையே என்ன செய்வது? 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...