Tuesday, January 7, 2020

WEALTH



               நான்  தான்  கோடீஸ்வரன்   J K  SIVAN 

அவனுக்கென்னப்பா  கோடீஸ்வரன்.   பணத்திலேயே  புறளரவன்.  சந்தோஷத்துக்கென்ன  குறைச்சல்.  நினைச்சது  எல்லாம் நடக்கும்.  சொல்றதெல்லாம்  செய்ய முடியறது. எல்லாம்   பணம் பணம் பணம்..... நம்மள்லாம்  அப்படியா?

இது ரொம்ப  தப்பான  அபிப்ராயம். பணம் சந்தோஷத்தை தரவே தராது.  இருப்பதை விட இன்னும் கொஞ்சம்  அதிகமாக  தொல்லைகளை தருவது.  ரொம்ப ரொம்ப பெரிய  பணக்காரர்கள் வெளியிலும், சிறையிலும் மக்கள் மத்தியில் அவமானத்திலும் அவஸ்தைப்படுவதை  கேவலப்படுவதை  படிக்கிறோம் பார்க்கிறோம். அறிகிறோம்.  ரொம்ப உயரத்திலிருந்து விழுந்தால்  அடி  பலமாகத்தான் இருக்கும். 

ரொம்ப உயர்ந்த பதவி, அதிகாரத்தில் இருப்பவனுக்கும் இதே கதி. கொஞ்சம் கூட  நிம்மதி அவனுக்கு கிடைக்காது.  பேர் தான் 'பெத்த' பேர்.   வருமானம் அதிகம் இருப்பவனுக்கு தான்  தூக்கம் போகிறது. 

ஆகவே  தான் நண்பர்களே,  பணத்தை  விட  பெரிய செல்வம் ஒன்று இருக்கிறது. அது நம் அனைவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது.  அது நம்முள் இருந்தாலும் நாம் அறிவதில்லை.
எல்லாம் நன்மைக்கே, நடப்பதெல்லாம்  நல்லதற்கே  என்று   பாசிட்டிவாக  ''positive '' ஆக இருக்கும் திடமான  மனது, துணிவு  தான்  சிறந்த செல்வம்.  அவர்கள்  உலகத்தை  சந்தோஷமாக பார்ப்பதால்,  உலகம்  அமோகமாக எங்கு நோக்கினும் சந்தோஷத்தையே அவர்களுக்கு தருகிறது.  முன் கை  நீண்டால் தானே  முழங்கை நீளும்.

சோகமாக அழுபவனுக்கு  உலகமே  ஒரு  சோக மேடையாக தான்  தன்னை அவனுக்கு  காட்டிக் கொள்கிறது. துன்பம் நிறைந்ததாக, கருணை அற்றதாக  உலகம்  அவனுக்கு தோன்றுகிறது.  சே. என்ன உலகமடா இது என்று வெறுக்கிறான்.   மனது தான்  காரணம்.

அதேபோல் மறக்காமல் சொல்லவேண்டியது.   வியாதியற்ற  தேகம்.   அதனால் தான் நம் முன்னோர்கள்  நோயற்ற வாழ்வே  குறைவற்ற செல்வம்  என்று சொல்லிவிட்டு போயிருக்கிறார்கள்.  அனுபவம் பேசுகிறது.
சர்க்கரை போன்ற  நோய்கள் நல்ல உணவை சாப்பிட விடுவதில்லை.  கலர் கலராக மாத்திரை  நிறைந்த  பெட்டியை எங்கும் சுமக்கிறான்.  தன்னைத் தானே  ஊசியால்   ரெண்டு வேளை யை குத்திக் கொள்கிறான். 

இன்னொரு  இணையில்லாத செல்வம்  நட்பு.  எனக்கு நிறைய  நண்பர்கள்  இந்த முகநூல் மூலம் கிருஷ்ணன் தந்திருப்பது எனக்கு குறைவில்லாத செல்வம்.    செய்வன திருந்த செய்  என்று சொல்லியது போல்,  எந்த காரியத்தையும்  '' கிருஷ்ணா  உன்னால் நான் இதை நன்றாக  செய்தேன்''  என்று சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷம் இருக்கிறதே  அது பாங்கில் நமது கணக்கில் உள்ள பெரும் தொகை.   நட்பு வட்டாரம்  பெரிதாக பெரிதாக  விஸ்தரிக்க   அதனால் பெரும்  மகிழ்ச்சிக்கு ஈடே இல்லை. 

உன்னிடம் உள்ளதை பிறரோடு பங்கிட்டுக் கொள்  எனும் குணம் இன்னொரு  செல்வம். அதனால்  எல்லோரும் அவரவர்களிடம் இருப்பதை உன்னோடு பங்கிட்டு கொள்கிறார்கள்.  என்னிடம் ஏன் இப்படி மேலும்  மேலும் செல்வம் சேர்கிறது! 
எத்தனை  கோடி செல்வம்  வைத்தாய்   என்   இறைவா,  கிருஷ்ணா  உனக்கு எப்படி நன்றி சொல்வேன் என்ற  உணர்வு நம்முள் இருந்தால் போதும்,   நாம் தான் சிறந்த  செல்வந்தர்கள்.   வரியே கட்டவேண்டாம்.


No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...