Saturday, January 11, 2020

NATARAJA PATHTHU



 நடராஜ பத்து                      J. K    SIVAN 
              
                5.   கால் மாறி ஆடிய காலகாலன்

ஹே, பரமசிவனே, உன்னிடம் ஒரு விஷயம் சொல்லலாமென்று ஓடி ஓடி வருகிறேன். அதற்குள் நீ மோன நிலையை அடைந்து விடுகிறாய்.

ஆயிரம் தடவை கதறுகிறேன். காது கேட்டும் கேளாத செவியனாகிவிடுகிறாயே, தோடுடைய செவியனே.

நமது மகன் ஒன்றுமே தெரியாதவனாக இருக்கிறானே என்ற கவலையே துளியும் இல்லாத பொறுப்பற்ற
அப்பாக்காரன் நீ ஒருவன் தானோ? 


நான் தான் உன் பொற்பாதம் தவிர எனக்கு வேறொன்றும் கதியே  இல்லை என்று உன் பாதத்தை 'சிக்' கெனப் பிடித்தும் உனக்கென்னவோ தெரியவில்லை, மனத்தை இரும்பாக்கிக் கொண்டுவிட்டாய்.

நீ ஒன்றும் பிள்ளை குட்டி இல்லாத மலடு, அதனால் பிள்ளை மனம் அறியாதவன் என்று சொல்லமுடியாதே .
உண்மையிலேயே நீ பிள்ளை குட்டிக் காரன் தான். ! ஒரு அழகிய ஆறு முக பிள்ளையும் (முருகன்) ஒரு 'குட்டி' (யானை) யும் பிள்ளைகளாக கொண்டவனாயிற்றே.

சிவனே, உனக்கு தெரியாத மாயையோ ஜாலமோ ஏதப்பா?    நான் வேண்டுமானால் ஒன்று மறியாதவன். பித்தன் பேயன் என்று பேர் எடுத்தாலும், நீ அப்படி இல்லையே. சகல வேத சாஸ்திரமும்   நீயே  ஆனவன். உபதேசிப்பவன். கல்லால மரத்தினடியில் மௌனமாகவே ஞானம் போதித்த குருவல்லவா நீ. இந்த பாரினில் மௌன குருவாக போதித்தவன்   வேறெவராவது உண்டா?  நீ ஒருவன் தானே.

என்ன காரணத்திற்காக மேலே ஏழு,  கீழே ஏழு,  உலகம் நீ படைத்தாய்?. அங்கே வாழுமுயிர் மேல் அக்கறை இல்லையா? என் கேள்விக்கென்ன பதில்? நீ அதை சொல்லாமல் உன்னை நான் விடுவேனோ,  உமா மகேசா. சிதம்பர நடேசா?.

இடது பதம் தூக்கி எல்லோரும் பார்த்திருக்கிறார்கள். கால் மாற்றி வலது பதம் தூக்கியதை வெள்ளி அம்பலத்தில் மதுரையில் கவனித்தவர் எத்தனை பேர்?. இதோ இந்த  என்  படத்தில் அதை தெரிந்து கொள்ளட்டுமே. அதை ஒரு வரி கதையாக சொன்னால் தானே தெரியாதவர்களுக்கும் புரியும். 
ஆகவே சொல்கிறேன்:

மதுரையின் ராஜா ராஜ சேகர பாண்டியன் தீவிர சிவ பக்தன். ஆய கலைகள் 64-ல் நாட்டியக் கலை தவிர ஏனைய 63 கலைகளில் தேர்ச்சி பெற்றிருந்ததால் நாட்டியக் கலையைக் கற்ற போது நடராஜர் சிலை வடிவம் கொண்டது போல் வலது கால் ஊன்றி இடது கால் உயர்த்தி ஆடினான் . அப்போது ஒரு எண்ணம் தோன்றியது ராஜசேகர பாண்டியனுக்கு.

''ஆஹா. ஒரு காலைத் தூக்கி நின்று கொஞ்ச நேரம் ஆடும்போது எனக்கு அது எவ்வளவு வலிக்கிறது. கஷ்டமாக இருக்கிறதே. பாவம் இந்த பரமசிவன், யுகயுகமாக வலது காலை மட்டுமே ஊன்றி ஒரு காலில் நின்று ஆடும் சிவனுக்கு எவ்வளவு வலிக்கும்?.   தாங்க முடியவில்லை  பாண்டியனுக்கு. பரமசிவனுக்கு பக்தியோடு ஒரு வேண்டுகோள் விடுத்தான்.

''பரமசிவா, போதும் நீ வலதுகாலில் நின்று ஆடியது, கொஞ்சம் உன் காலை மாற்றி நின்று என் மன வருத்தத்தை தீர்க்கிறாயா?

சிவன் பதிலே சொல்லாததால் பாண்டியன் வாளை உருவினான்

"சிவா, நீ கால் மாற்றி நிற்காவிட்டால் இந்த வாளால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன்"

சிவன் சிரித்தவாறு பாண்டியனின் பக்தியை மெச்சி மதுரை வெள்ளியம்பலத்தில் தனது கால் மாற்றி ஆடினான். சேக்கிழார் இதை திருவிளையாடற் புராணத்தில் பாடியிருக்கிறார். இப்போது படத்தை பாருங்கள். இடது காலை ஊன்றி வலது பதம் தூக்கி ஆடும் நடராஜனை.

மேலே சொன்ன  விஷயத்தை  நடராஜ
பத்து ஐந்தாம் பதிகத்தை அழகான ஒரு பாடலில் அமைத்தால்? அது ஒருவரால் தான் முடிந்தது. அவரைப் பற்றி கடைசியில் தான் சொல்லப்போகிறேன். அந்த நடராஜ பத்து பாடலின் எளிய புரிகிற தமிழையும் அதன் பக்தியில் தோய்ந்த அர்த்தத்தையும் முதலில் ரசிப்போம்.

''நொந்து வந்தேனென்று ஆயிரம் சொல்லியும் செவியென்ன மந்தமுண்டோ
நுட்பநெறி அறியாத பிள்ளையைப் பெற்றபின் நோக்காத தந்தையுண்டோ
சந்ததமுன் தஞ்சம் என்றடியைப் பிடித்தபின் தளராத நெஞ்சமுண்டோ
தந்திமுகன் அறு முகன் இருபிள்ளை இல்லையோ தந்தை நீ மலடுதானோ,
விந்தையும் ஜாலமும் உன்னிடமிருக்குதே வினையொன்றும் அறிகிலேனே,
வேதமும் சாஸ்திரமும் உன்னையே புகழுதே வேடிக்கை இதுவல்லவோ
இந்த உலகீரேழும் ஏனளித்தாய் சொல்லு இனி உன்னை விடுவதில்லை
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

மீண்டும்  எழுதுகிறேன்.   வாரியார்  ஸ்வாமிகள்  சொல்வாரே  அந்த சொல்  காதில் ஒலிக்கிறது.   எம் சிவ பிரானை வணங்கி  அவன் ''பாத  கமலங்களை''  போற்றினால்  போதும், நமது   ''பாதக  மலங்கள்  எல்லாம்  விலகும்'' 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...