Saturday, January 18, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர்  பெண்பிள்ளை வார்த்தைகள்   J K SIVAN   


   42  மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே

ஸ்ரீமத்  பாகவதம்  8  வது காண்டத்தில்  ஒரு கதை கஜேந்திர மோட்சம்.


இந்திரத்யும்னன் என்கிற  ராஜா விஷ்ணு பக்தன். ஒரு சமயம் அவன் விஷ்ணு வழிபாட்டில் தன்னை மறந்து ஆழ்ந்திருந்த போது அவனைக் காண வந்த துர்வாச முனிவரை  கண்டுகொள்ளவில்லை. தன்னை அவமதித்தான் என கோபம் கொண்ட துர்வாசர்  ’முனிவர்களை மதிக்கத் தெரியாத நீ யானையாகப் பிறப்பாய்’ எனச் சாபம்  இட்டார்.  இந்த  சாபத்தை இட்டவர் அகஸ்தியர்  என்று சில நூல்கள் சொல்கிறது. . எப்படி யார் சாபம் இட்டாலும் காலை முதலை காலை  பிடித்ததால் ராஜா அவஸ்தைப்பட்டது உண்மை.  முனிவரிடம் மன்னிப்பு வேண்டிய  ராஜாவிடம்   ரிஷி  ‘திருமால் மேல் பக்தி கொண்ட  நீ  கஜேந்திரன் என்ற  யானைகளுக்கு அரசனாகப் பிறந்து, திருமால் மூலமாக சாப விமோசனம் அடைவாய்’ என்று கூறினார்.

ஆகவே,  திரி கூடமலையில்  யானை கூட்டத்தின் தலைவனான  கஜேந்திரன் வழக்கம்போல்  ஸ்ரீமன் நாராயணனை  வழிபட  தாமரைப்பூ  எடுக்க  குளத்தில் இறங்கினான். மற்ற யானைகளும் அவனோடு இறங்கின.

அந்த  குளத்தில்   வெகுகாலமாக  வாழும் ஒரு முதலை கஜேந்திரனின் கால்களை பற்றியது. முதலையின் வாயில் அகப்பட்ட கால்களுடன் உயிருக்கு போராடிய கஜேந்திரனை மற்ற யானைகளால்   காப்பாற்ற  முடியவில்லை.  முயன்றவரை  போராடிய  கஜேந்திரன்  யானை,  தும்பிக்கையில் தாமரை மலரோடு   விண்ணை நோக்கி ஆதிமூலமே என பெருமாளை நோக்கிச் சரணாகதி செய்தது.   தன்னை அழைத்த பக்தனின் துன்பம் பக்கம்   ஸ்ரீமந்  நாராயணன்  தனது சக்ராயுதத்தால் முதலையின் தலையை துண்டித்து யானையை விடுவித்து மோட்சம் அளித்தார். 

முதலை  முன் பிறவியில் ஒரு  கந்தர்வன். அவன் கூஹூ என்ற  ஒரு ராக்ஷஸன் என்று வேறு ஒரு கதை கூறுகிறது.  கூஹு  குளத்தில் குளிக்க வருவோரையெல்லாம் காலைப் பிடித்து நீருக்குள் இழுப்பதை வாடிக்கையாக  கொண்டிருந்தான். ஒரு நாள் அங்கு வந்த அகத்தியர் காலையும் நீருக்குள் இழுத்தான்.  அவர் ''நீ  முதலையாக பிறப்பாய்''  என சாபமிட்டு  முதலையானான்.
 
தேவலா  என்கிற முனிவர் காலை இழுத்தான்  என்று இன்னொரு புராணம் சொன்னாலும்  காலை இழுத்து  கஷ்டத்தில் மாட்டிக் கொண்ட விஷயம் மாறவில்லை.  
.
''மகரிஷி  என் விளையாட்டு தனத்தால் செய்த தவறை மன்னித்து எனக்கு சாப விமோச்சனம் அருளவேண்டும் என்று கூஹு வோ,  கந்தர்வனோ  மன்றாடியபோது    ''கஜேந்திரன் என்ற  யானையின்  கால்களை  நீ பிடிக்க நேரிடும். அப்போது விஷ்ணுவால் சாப விமோசனம் பெறுவாய்'' என்றார் ரிஷி.  

கஜேந்திர மோக்ஷம்  நடந்த இடம்  கஜேந்திர வரதப் பெருமாள் கோவில்.  தஞ்ஜாவூர் ஜில்லா வில்  கபிஸ்தலம் என்னும் ஊரில்  உள்ளது.  108 திவ்யதேசங்களுள் ஒன்று. கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தூரம்.   ஆலயம்  5 அடுக்கு இராஜகோபுரம் கொண்டது.  கஜேந்திர வரதப் பெருமாள் இன்னொரு பெயர் ஆதிமூலம்.  புஜங்க சயனத்தில் கிழக்கு நோக்கிய பெருமாள். தாயாருக்கு அழகான பெயர் ரமாமணிவல்லி தாயார், இன்னொரு பெயர் பொற்றாமரையாள். 

கபி என்றால் குரங்கு.  இங்கே  ஆஞ்சநேயர் தவமிருந்தார் என்பதால் கபி ஸ்தலம் என பெயர். 

இந்த  கதையின் சாராம்சம்  ஸம்ஸார சாகர த்தின் முதலைப் பிடியில் இருந்து  விடுபட  விஷ்ணுவை சரணாகதி அடையவேண்டும் என்பதே.   கஜேந்திரன் நாராயணனை ஆதிமூலமே என்று வேண்டிய  ஸ்தோத்ரம் தான்  விஷ்ணு சஹஸ்ரநாமத்தில்  கஜேந்திர ஸ்துதி.  முதல் சுலோகம். .
 நாம் இந்த கதையை  எத்தனையோ  ஆண்டுகளுக்கு பிறகு படிக்கிறோம். இன்னும் ஸம்ஸார  முதலையின் பிடியிலிருந்து விடுபட முயற்சிக்கவில்லை.    ஆதிமூலத்தையும் கூப்பிடவில்லை.    

ஆனால் திருக்கோளூர் பெண்பிள்ளை கெட்டிக்காரி அல்லவா?  அவளுக்கு இந்த விஷயங்கள் பூரா அத்துப்படி.  

ஸ்ரீ ராமாநுஜாசார்யா  பிரபு:  நான்  என்ன கஜேந்திரன் போல், ஸ்ரீமன் நாராயணனே அனைத்திற்கும் ஆதிமூலம் என்பதை உணர்ந்து, அவரை அழைத்து, அவரின் கருணையில் திளைத்தேனோ?” எந்த விதத்தில் நான் இந்த புண்ய ஸ்தலம் திருக்கோளூரில்  வசிக்க  தகுதியானவள்  சொல்லுங்கள் ? ''என கேட்கிறாளே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...