Friday, January 10, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக்கோளூர் பெண் பிள்ளை  வார்த்தைகள் - J K SIVAN

40  ''அடி''  (திருவடி)  வாங்கினேனோ
கொங்கிற்பிராட்டியைப் போலே

தீவிர சைவ  பற்று  கொண்ட சோழமன்னன்  காதுகளில்   யாரோ   ராமானுஜன்  என்பவர் வைணவ மதத்தை வேகமாக    எங்கும் பரப்பிக்கொண்டு வருகிறார்  என்ற சேதி  அனலாக பாய்ந்ததும்,  ''உடனே  அவரைப்  பிடித்துக்கொண்டு வாருங்கள் ''  என்று  ஆணையிட  குதிரை வீரர்கள் பறந்தார்கள்.    விஷயம்  காற்றில்  வேகமாக   சென்று  கூரத்தாழ்வான்  காதிலும்  விழ  உடனே   எப்படியோ ராமானுஜரை  தப்ப  வைத்து  அவர்  சில  பக்தர்களுடன் சோழ   ராஜ்ய எல்லை கடைந்து நீலகிரி  பக்கம்  காட்டில்  செல்கிறார்.வேடர்கள் சிலர்  களைப்பாக, பசியோடு நடந்த ராமானுஜருக்கு  ஆகாரம்  கிடைக்க ஏற்பாடு  செயகிறார்கள்.
''சாமிக்கு எங்கேடா ஆகாரம்? என்றான் ஒருவன்
''தலைவர் நல்லான் தான் சொல்லியிருக்கிறாரே ஒரு மாமி இருக்காங்களே அங்கே கூட்டிட்டு போங்க ன்னு''
'' யாரை சொல்றே?  யாருடா அந்த  மாமி''
'கொங்கில் பிராட்டி என்று சொல்வாங்களே அந்த மாமி வீட்டுக்கு.   இங்கே  தான்   பக்கத்தில  எங்கோ இருக்காங்க''
சற்று நேரத்தில் அந்த வேடுவர் களோடு கொங்கில் பிராட்டி என்பவரின் கிருஹத்திற்கு ஸ்ரீராமாநுஜரை  அழைத் துச் சென்றனர். ராமானுஜரையும் கூட வந்த வைணவர்களையும் வரவேற்று வணங்கினாள் அந்த பெண்மணி.

“வைணவர்களே , நீங்கள்  இங்கே  வந்தது என்  பாக்யம்.  உங்கள் அனைவ ருக்குமே  சுடச்சுட  உணவை   உடனே தயார் செய்து அளிக்கிறேன். அடியேனது குடிசையில் இளைப்பாறி இனிதாக அமுது செய்ய வேணும்” என்று கூறினாள்.

“கருணை நிறைந்த தாயே! உனது இனிய வார்த்தையாலேயே நாங்கள் திருப்தியடைந்தோம்; எங்களுக்கு உணவு வேண்டாம்” என்று வைணவர்கள் கூற, கொங்கில் பிராட்டி சிரித்துக் கொண்டே கைகூப்பி நின்று
“வைணவர்களே   நீங்கள் துளியும் சந்தேகப்பட வேண்டாம். அடியேன் யதிராஜருடைய சிஷ்யை; ஸ்ரீராமாநுஜருடைய ஸம்பந்தம் அடியேனுக்கு உண்டு'' என்றாள் பிராட்டி.
''அட ஆச்சர்யமாக இருக்கிறதே எப்படி? எங்கே? சொல்லுங்கள் என்று ராமானுஜர் சிஷ்யர்கள் கேட்க   அவள்  சொல்கிறாள்:
இந்த  ஊரில்  ஒரு  சமயம்  மழை இல்லாமல்  கொடிய  பஞ்சம்.  நான்  என்  கணவரோடு ஸ்ரீரங்கம்  .சென்றேன்.   ஒரு   வீட்டின் மாடியில் குடியிருந்த  போது ராமானுஜர்    தினமும் வீடுகளில் பிக்ஷை எடுப்பதைப் பார்ப்பேன்  ஒரு சாதாரண துறவியாக இருந்த போதும், வேத வேதாந்தங்களில் கரை கண்ட வித்வான்களாலும், அரசர்களாலும், மற்ற நிறைய பெரியவர்களாலும்  மதிக்கப்படுபவர்  என்று   அறிந்து   மகிழ்ந்தேன்.
ஒரு  நாள் அவரிடம்  ''தேவரீர் பிக்ஷையெடுத்து தினமும் காலக்ஷேபம் செய்கிறீர். ஆனாலும்  ராஜாதி ராஜாக்கள்  பண்டிதர்களாலும் படித்தவர்களாலும், வேத வேதாந்திகளாலும் ஸ்ரீரங்கராஜனைப் போலே வணங்கப்படுகிறீர்களே.  இதன் காரணம் என்ன ?” என்று கேட்டேன்.
‘அம்மா,  பகவத் விஷயமுள்ள ஸாரமான மந்த்ரம் ஒன்றை நான் எல்லோருக்கும் உபதேசித்திருக்கிறேன். அதில்  அடைந்த   திருப்தியால்  இருக்கலாம்''’
‘ஆச்சார்யாரே , எனக்கும்  தாங்கள்  அந்த  மந்த்ரத்தை உபதேசிப்பீர்களா ?''
'' ஆஹா''   என்றவர்  த்வயத்தை நன்கு அர்த்தத்தோடு  எனக்கு  உபதேசித்து,  தனது பாதுகைகளையும் எனக்கு அருளினார். என்னுடைய ஆனந்தத்துக்கு  அளவே  இல்லை.  ஆஹா , என்ன   பாக்யம்  செய்தேனோ''  என்று   இங்கே திரும்பி வந்தேன்.  அப்போது  என்    மனதில் இந்த அபூர்வமான ஆசார்யரை மறுபடியும்  எப்போது காண்போம் ” என்று  எண்ணினேன்.  பக்தி மேலிட்டு கண்ணீர்   பெருகியது'' என்றாள்  கொங்கில் பிராட்டி.
ஆகவே    நீங்கள்  கவலைப்பட வேண்டாம்  நான்  பரிசுத்த  வைணவ பெண்.  உங்களுக்கு  உணவு தயாரித்து  தர அருகதை உள்ளவள்.
எதிரே  நிற்பவர்  தான்  ராமானுஜர் என்று  அவளுக்கு  தெரியவில்லை.  காவி   உடையில்லாமல்   சாதாரண வெள்ளை  வேட்டி யில்  சோழனிடமிருந்து தப்பி வந்தவர் அல்லவா?     அவரோடு  இருந்த வைணவர்கள் அதிசயித்தார்கள்.
ராமானுஜரும்   புன்புறுவலோடு  அவர்களிடம்  'கொங்கில் பிராட்டி உத்தமப் பெண். அவள் உணவு தயார் செய்யட்டும் '' என்று சொல்லி  சில   சிஷ்யர்களை  கூப்பிட்டு   “அவள் எப்படிச் சமைக்கிறாள் என்பதை நீங்கள் கவனத்தோடு பார்த்து வந்து சொல்லுங்கள்'' என்கிறார். .
பிராட்டி ஸ்நானம் செய்து, அன்போடும் பக்தியோடும் ‘எம்பெருமானார் திருவடிகளே சரணம்’ என்று பிரார்த்தித்து    விட்டு     தன்னிடமிருந்த    ராமானுஜர்  பாதுகைகளை  வணங்கிவிட்டு  திருமஞ்சனம் செய்து சந்தனம், புஷ்பம் முதலான திரவியங்களைக் கொண்டு முறைப்படி திருவாராதனம் செய்த பின்  ஆசார்ய த்யானத்தில் ஈடுபட்டாள்.    ஆசார்யாரே,  உங்களை     தரிசிக்க முடியாவிட்டாலும்  சில   வைஷ்ணவர்கள் வந்திருப்பதால் அவர்களை  வணங்கி, பக்தியோடு    அவர்களுக்கு அமுது செய்து வைக்கும்  அருள்  புரிந்தீர்கள்  ''  என்று  ராமானுஜரின்  பாதுகையை  வணங்கினால்.   அனைவரையும்  போஜனம்  செய்ய    வாருங்கள் என்று  அழைத்தாள் .
சிஷ்யர்களிடமிருந்து விஷயம் எல்லாம் அறிந்த ராமானுஜர்  கொங்கில் பிராட்டியிடம்   அம்மா நீ சொன்ன அந்த ஸ்ரீ ராமானுஜரின் பாதுகைகளை என்னிடம் கொண்டுவா’ என்று சொன்னபோது பக்தியோடு திருவாராதனம் செய்யப்பட்ட அப்பாதுகைகளை அவள் தாங்கி  வந்தாள் .
''பேஷ். அம்மா உனக்கு ஸ்ரீ ராமானுஜரால் ஸ்ரீரங்கத்தில் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை என்னிடம் சொல்கிறாயா? என்று கேட்க பிராட்டியும் யதிராஜர் உபதேசித்த அம்மந்திரத்தை உரைத்தாள்.
“ ஸ்ரீ மந் நாராயணா ! பிராட்டி, இதோ இருக்கிறார்களே எண்ணற்ற வைஷ்ணவர்கள். இந்த கூட்டத்தில் உனக்கு மந்த்ரோபதேசம் செய்த அந்த ஆசார்யர் ராமானுஜர் கண்ணில் படுகிறாரா என்று பார்த்து சொல்கிறாயா?'' என்று கேட்கிறார் .
'' அ டாடா,  அப்படியா''   என்று    பார்த்துக் கொண்டே  வந்த  கொங்கில் பிராட்டி  ராமானுஜரின் அருகில் வந்தவள்  அவர்  திருவடிகளை தரிசித்து  “ ஆஹா என்ன பேரானந்தம். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லையே . இது கனவா நினைவா? இதோ இந்தத் திருவடிகள் என் குருநாதன் ஸ்ரீ ராமானுஜரின் தாமரைத் திருவடிகள் தான். அவருடையவை போல அழகாகக் காட்சியளிக் கின்றன. ஆனால் நான் பார்த்த அந்த குருநாதர் போல் இவர் இல்லையே. அந்தப்பெரியவருக்கு இருந்த த்ரிதண்ட காஷாயங்கள் இந்த பெரியவரிடம் காணப்பட வில்லையே? இவர் தான் அவரோ? அல்லது வேறு ஒருவரோ?    சுவாமி    'நீங்கள்   ஸ்ரீ ராமானுஜரா ?  என  தழுதழுத்த குரலில் கேட்டாள் பிராட்டி..
ஸ்ரீ இராமானுஜர்  கைகளை உயர்த்தி  அவளை  ஆசிர்வதித்து   '' அம்மா  அடியேன்  ராமானுஜன்   ஸ்ரீ ரங்கத்தில்  இருந்து  இங்கே வந்திருக்கிறேன். ஒரு காரணத்தினால் (த்ரிதண்டமில்லாமல்) வெள்ளை வஸ்த்ரம் உடுத்திருக்கிறேன்” என் கிறார் .
அதிர்ந்து போன கொங்கில் பிராட்டி. அப்படியே அவருடைய திருவடிகளில் விழுந்து  ஆனந்த  மேலிட்டு  விம்முகிறாள்.   ஸ்ரீ  ராமானுஜர் பற்றி   பேசும்போது கொங்கில் பிராட்டியும்  சாஸ்வதமாக  நினைக்கப்படுவாள்.
திருக்கோளூர் அம்மாளுக்கு   எதிரே  ராமானுஜர்  நிற்கும்போது  கொங்கில் பிராட்டி  ஸ்ரீரங்கத்தில் அவரை வணங்கி   நின்று அவருடைய  பாதுகையை வாங்க்கிக் கொண்ட  நினைவு வந்துவிட்டது.
“சுவாமி  நான்   என்ன  அந்த  அபூர்வ  பக்தை  கொங்கில்  பிராட்டி  போல  தங்களது திருப்  பாதுகைகளை வேண்டி பெற்றவளா ?  எப்படி சுவாமி  நான்  இந்த  திருக்கோளூரில்  வசிக்க  பொருத்தமானவள் ? சொல்லுங்கள் என  கேட்கிறாளே!

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...