Wednesday, January 22, 2020

HANUMAN PRABHAAVAM




ஆஞ்சநேய ப்ரபாவம்... J.K. SIVAN ..

மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது என்று கேள்விப் பட்டிருக்கிறோமே. அப்படி யாரையாவது பார்க்கவேண்டும் என்றால் அவசியம் நீங்கள் மதுராந்தகம் போகவேண்டும். ஏரி காத்த ராமரை தரிசித்துவிட்டு காலாற கொஞ்சம் நெரிசலாக வியாபாரம் நிகழும் கடை வீதிகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நடந்து வந்தால் ஒரு அற்புத மனிதரை தரிசிக்கலாம். அவரது வீட்டில் பல லக்ஷம், ஏன் கோடிக்கணக்கான ராம நாமங்களை பிரதிஷ்டை செய்த ஒரு தியான மண்டபம் இருக்கிறது.

ஒரு ஞாயிற்றுக்கிழமை சுந்தர காண்ட பாராயணம் மதுராந்தகத்தில்  மேலே சொன்ன  இல்லத்தில் நடைபெற்றது. நான்  திருவையாறு முதலான  சப்தஸ்தான க்ஷேத்ரங்கள்,  அஷ்ட வீரட்டான க்ஷேத்ராடனம் முடித்துக் கொண்டு சென்னைக்கு  நண்பர்  ஸ்ரீ அரும்பாக்கம் ஸ்ரீனிவாசனும் மதுராந்தகத்தில் நுழைந்தோம். எனக்கு நான் மேலே குறிப்பிட்ட அற்புத மனிதர் என்னுடைய  மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய  நல்ல நண்பர்,  திருமால் கவிச்செல்வர் கைங்கர்ய சீமான், பல விருதுகளுக்கு சொந்தக்காரர்   உ.வே. ஸ்ரீ  S . ரகுவீர பட்டாச்சாரியாரை தரிசிக்க விருப்பம் தோன்றியதால் அவர் வீட்டைத்  தேடிச்  சென்றேன் .
ஆச்சர்யமாக  நாங்கள் சென்றபோது  ஸ்ரீ பட்டாச்சார்யருக்கு  பிறந்த நாள்.  எப்படி கொண்டாடினார் தெரியுமா?  ரொம்ப விளம்பரம் இல்லாமல் சில நண்பர்கள் சிஷ்யர்களை வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக ஏழு நாட்கள் சுந்தர காண்ட பாராயணம் பண்ணிக்கொண்டிருந்தார். ராமாயணத்தை மானுட உருவகப்படுத்தி அதற்கு இதயம் என்று ஒன்றை வைத்தால் அதன் பெயர் தான் சுந்தரகாண்டம். அது பற்றியே ஒரு லக்ஷம் பக்கம் எழுதலாம். அப்படியும் அதன் அருமை பெருமை முழுமை பெறாது.  எப்படி  இந்த மகத்தான  நாளில் அவரை தரிசிக்க வேண்டும்  என்று காலை,  அல்ல,  காரை  அவர் வீட்டுக்கு இழுத்து சென்றது மனசு. 
நான் நங்கநல்லூர் காரன். எங்க ஊர் ஆதி வ்யாதிஹர பக்தாஞ்சநேயர் உலகப் பிரசித்தி பெற்ற 32 அடி  உயரர். அவரை நங்கநல்லூருக்கு கொண்டு  வந்து   நிற்க வைத்த  ஸ்ரீ ரமணி அண்ணாவை மறந்தால் ஆஞ்சநேயரை மறந்தமாதிரி.  காரண கர்த்தா அல்லவா.   ஆஞ்சநேயர், ராமாயணம் என்றால் எனக்கு  தனி ஈடுபாடுக்கு காரணம்  என்  அம்மா  வம்சமே ராமாயணத்தால் பிறந்து வளர்ந்து வாழ்ந்த குடும்பம்.

ஸ்ரீ  பட்டாச்சாரியார் மதுராந்தகத்தில் தனது  இல்லத்தில்  இப்பப்பட்ட ஆஞ்சநேயரின் ப்ரபாவத்தை வெளிப்படுத்தும் சுந்தரகாண்டத்தை சப்தாகமாக ஏழுநாட்கள் பாராயணம் செய்து அனைவருக்கும் ஸ்ரீ ஆஞ்சநேய, ஸ்ரீ ராம பிரசாதங்களை திருப்தியாக அளித்துக் கொண்டிருந்தார்
 ''அடடா  நீங்கள் வந்தது ரொம்ப சந்தோஷம். ஸ்ரீ ராமன் தான் உங்களை இங்கே  வரவழைத்தான் என்று முகமலர்ச்சியோடு வரவேற்றார். நாங்களும் பாராயணத்தில் சேர்ந்து கொண்டோம். என்னையும் சில வார்த்தைகள் சுந்தரகாண்டத்தை பற்றி பேசச்சொன்னார். ஆஞ்சநேயனை நினைக்க போற்ற கிடைத்த சந்தர்ப்பத்தை யாராவது வீணாக்குவார்களா?மனதிருப்தியுடன் ஸ்ரீ ராமாஞ்சனேய ப்ரசாதத்துடன் வயிறும், மனதும் நிறைந்து திரும்பியாதை நினைவு  கொள்கிறேன்.  அதற்கு முன் ஒரு  அருமையான  சம்பவத்தை சொல்கிறேன். 
இதை  துணுக்கு செய்தியாக கூட  ஏற்கலாம்.   இருப்பினும்  சில துணுக்குகள் பிரம்மாண்டமான உண்மைகளை தன்னுள் அடக்கிக்கொண்டு  பார்ப்பதற்கு   குள்ளமான அகஸ்தியராகத் தோன்றலாம். அப்படிப்பட்ட ஒரு பலம் வாய்ந்த  துணுக்கு இது.   கற்பனையாக இருந்தாலும்  எப்படி நம்பிக்கை மனிதனை ஆதியோடந்தமாக மாற்றும் சக்தி வாய்ந்தது என்பது இதன் மூலம் நிதர்சனம்.

பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதரைத் தெரியாத ஆன்மீகவாதி உண்டா? என் சிறு வயதில் தியாகராயநகர் சிவ விஷ்ணு ஆலயத்தில் மாலை 6.30 மணிக்கு எத்தனை சாயங்காலங்கள் அவரது கணீரென்ற குரலைக் கேட்டிருக்கிறேன். கட்டை குட்டையாக கழுத்து நிறைய ருத்ராக்ஷர மாலைகள். நெற்றி நிறைய காதோடு காதாக விபூதி பட்டை. மேலே ஒரு உத்தரீயம். ரெண்டு ரெண்டரை மணிநேரம் ஆடாமல் அசையாமல் மேடையில் அமர்ந்து உபந்நியாசம். கைகள் மட்டும் அசையும். எதிரே சில நாள் ராஜாஜி அமர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார். பிரபல தொழிலதிபர்  ரவால் கிருஷ்ணய்யர் இன்னும் மற்றும் என்னென்னவோ பெரிய பெரிய பேர்கள் சொல்வார்கள் அவர்கள் எல்லாம் ஏற்பாடு  இப்படி உபன்யாச நிகழ்ச்சிகளை  ஏற்பாடு  பண்ணுவார்கள்.

தனக்கே உரித்தான தினுசில் ''தாபிஞ்சஸ் தமகத்விஷே.....'' என்று தியான ஸ்லோகங்களைச் சொல்ல ஆரம்பித்தால் எப்போது காலக்ஷேபம் முடிந்தது என்றே தெரியாது. எல்லோருமே தேவலோகத்தில் இருப்போமே. இப்படித்தான் அவரது ராமாயண, குருவாயூரப்பன் சரித்திர காலக்ஷேபங்கள் நிறைய கேட்டிருக்கிறேன். என் சின்ன வயசு அதிர்ஷ்டம் என்று தான் இதை சொல்வேன். இப்போது உதவுகிறது. அதால்
என் பிறவி உண்மையிலேயே பயனுள்ளதாக மாறியது என்று தைரியமாகச் சொல்ல முடியும்.

தீக்ஷிதர் சிரஞ்சீவி. அவர் தொகுத்த ஜயமங்கள ஸ்தோத்ரம் புத்தகம் பூஜை அறையில் இல்லாத வீடே கிடையாது எனலாம். கதைக்கு வருவோமா?

ஒரு முதியவர், பிரம்மஸ்ரீ அனந்தராம தீட்சிதரின் சுந்தரகாண்டம் பிரவசனத்தை கேட்டு பக்தியோடு அவரை வணங்கி ஆசி கேட்டபோது தீட்சிதர் தான் எழுதிய சுந்தர காண்டம் புத்தகத்தை அந்த முதியவரிடம் தந்து ''இதைப் பாராயணம் பண்ணிண்டு வாங்கோ '' என்று ஆசிர்வதித்தார்.

முதியவர் அன்று முதல் தினமும் புத்தகத்தை பூஜை அறையில் வைத்துக்கொண்டு சுந்தரகாண்டத்தை விடாமல் பாராயணம் பண்ணி வந்தார். ஒரு சில நாள் கழித்து அந்த வீட்டில் ஒரு நாள்  என்ன  நடந்தது தெரியுமா?.

முதியவர் எங்கோ  பக்கத்தில் ஒரு ஊருக்கு கோவிலுக்குச் சென்றிருந்தார். அவர் மகனும் மருமகளும் வேறொரு இடத்தில் ஒரு கல்யாண விருந்துக்குப் போயிருந்ததால்   அவருடைய 10 வயது  பேரன்  மட்டுமே வீட்டில்  தனியாக பாடம்  படித்துக்கொண்டு இருந்தான்.   கதவு  டொக் டொக்  என்று தட்டப்பட்டதால், பேரன்  கதவை திறந்த போது    யாரோ ஒரு ஆசாமி. 
'யார் நீங்கள் என்ன வேண்டும்?''''வீட்டில் யார் இருக்காங்க?''
''யாரும் இல்லையே, தாத்தா வெளியே கோவிலுக்கு போயிருக்கார்""
வேறே யாரும் இல்லையா ?''
''நான் மட்டும் தான். அப்பா அம்மா எங்கோ ஒரு கல்யாணத்துக்கு போயிருக்கா''. இன்னும் கொஞ்சநேரத்தில் வந்துடுவா''
"பையா,  நான் உங்கப்பாவின் நெருங்கிய சிநேகிதன். அர்ஜண்டா உள்ளே அலமாரியை திறந்து எல்லா பணத்தையும் நகையும் ஒரு பையில் போட்டு எடுத்துகொண்டு உன்னையும் கையோட கூட்டிவரச் சொன்னார். உங்கம்மாவுக்கு   போன இடத்திலே  திடீர்னு   உடம்பு சரியில்லையாம். அவசரமாம். சீக்கிரம் கிளம்பு" என்றான்.

முட்டாள் பையனும் அவ்வாறே வீட்டில் இருந்த எல்லா பணத்தையும் நகையும் எடுத்து  ஒரு பையில் போட்டுக்கொடு  கதவை தாழ்ப்பாள் போட்டுவிட்டு அந்த ஆசாமியுடன் கிளம்பினான். ஆசாமி பையனுடன் ஒரு ரயிலில் ஏறிவிட்டான்.  மத்தியானம் பையனுடைய அப்பா அம்மா வீடு திரும்பியபோது பையனையோ வீட்டில் பணமோ நகையோ ஒன்றும் காணாமல் தவித்தனர். என்ன செய்வது?   எங்கே போனான், என்ன ஆச்சு? ஒன்றும் புரியவில்லை. 

வெளியே  போயிருந்த தாத்தாவும் வீடு திரும்பி  விஷயம் தெரிந்து  கதறினார். ''ஐயோ தெய்வமே, குழந்தை என்ன ஆனான்?'' .கவலை அவரைத் தின்றது. கண்களில் தாரை தாரையாக கண்ணீர் ப்ரவாஹம். என்ன செய்வது என்றே அவருக்குத் தோன்றவில்லை. நேராக பூஜை அறைக்கு சென்றார். அவர் கண்ணெதிரே அனந்தராம  தீக்ஷிதர்  கொடுத்த  சுந்தர காண்ட புத்தகம் தெரிந்தது. நமஸ்காரம் பண்ணிவிட்டு அமர்ந்தார்.

“ஆஞ்சநேயா, ஆபத் பாந்தவா, நீயே கதி” என்று துடித்துக் கதறி  சுந்தரகாண்டம் புத்தகத்தை இரவு பூரா பாராயணம் பண்ணினார். அங்கேயே சுருண்டு பூஜை அறையில் விழுந்தார்.  பையனைப்பற்றி ஒரு விஷயமும் தெரியவில்லை. வீட்டில் எவரும்  தூங்கவில்லை. வீடு கண்ணீரால் நிரம்பி பொங்கி வழிந்தது.  நேரம் ஓடியது.

பொழுது விடிந்தது.

கதவு தட்டும் ஓசை கேட்டு பையனின் அம்மா  கதவை திறந்தாள்.  வாசலில் பையன் வந்து நின்றான்.  தனியாக இல்லை. அவனோடு  யாரோ ஒரு பெரிய மனிதர். பார்ப்பதற்கு ரயில்வே அதிகாரி வெள்ளை பேண்ட் கோட்  சீருடையில் இருந்தார்.

பையன் கையில் ஒரு பை. அதில் அவன் எடுத்துச் சென்ற  எல்லா பணமும் நகையும்!!! தாத்தாவுக்கும் பையனின் பெற்றோர்க்கும் ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. பேச்சே வரவில்லை.  எதற்கு இதெல்லாம் எடுத்துக் கொண்டு போனான்  எங்கே போனான்.  ஏன் ஏன் ஏன்?

தாத்தா  கேட்கு முன்பே பையன் நடந்ததை விவரிக்கிறான்:  "தாத்தா ,   என்னை எங்கோ ரயிலில் அழைத்துக்கொண்டு போன அந்த ஆள் பத்தி எனக்கு ஒரு மாதிரி சந்தேகம் வந்தது.  சாயந்திரம் ராத்த்ரி அவன் "நீயும் படுத்து தூங்கு என்று சொல்லிவிட்டு ரயிலில் கீழே படுத்து தூங்கினான். எனக்கு யாரோ வந்து   ''உடனே அந்த பணம் நகை எல்லாம் எடுத்துண்டு அடுத்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்கிப் போ. ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே போய் உடனே சொல்லு. அப்படி முடியாவிட்டால் யாராவது ஒரு போலிஸ்காரர் கண்லே பட்டால் அவர் கிட்டே போய் நடந்ததை சொல்லு. உடனே இதைச் செய்''    என்று கட்டளை இடற மாதிரி தோணித்து.

கொஞ்ச நிமிஷத்தில் ஒரு ஸ்டேஷன் வந்தது. ரயில் நின்றது. என்னை அழைச்சுண்டு வந்த ஆள் மயக்கம் வந்தவன் மாதிரி நன்றாக அசந்து தூங்கிக்கொண்டு இருந்தான். அவன் தலைமாட்டில் என் பை இருந்ததால், அதை அவன்கிட்டயிருந்து மெதுவாக நகர்த்தி பையை எடுத்துண்டு ரயிலை விட் டு இறங்கி ஸ்டேஷன் மாஸ்டர் எங்கிருக்கார் என்று கேட்டுகொண்டு போனபோது எதிரே இவரே வந்தார்.

''யார் நீ?  எங்கே  ஓடறே ?''   என்றார். அழுதேன். அவர் என்னை தலையை தடவிக் கொடுத்தார். ''வாடா பையா பயப்படாதே. என்கிட்டே என்ன விஷயம் சொல்லு, நான் பாத்துக்கிறேன்'' என்றார். நடந்ததை எல்லாம் சொன்னேன்.”

பையன் இதுவரை சொன்னதை கேட்டுக்  கொண்டிருந்த கூட வந்த ரயில்வே அதிகாரி இனி  பேசுவார்:

"இந்த பையன் சொன்னதை கேட்டு அவன் உண்மை தான் சொல்றான் என்று எனக்கு மனதில் பட்டது. தவிர அவன் கையில் ஒரு பை.   அதை பிரிச்சு உள்ளே பார்த்தால் விலையுயர்ந்த நகையும் பணமும் வேறு இருப்பதால்  எதுக்கு  இதெல்லாம் இந்த சின்னப்பையன்  தூக்கிக்கொண்டு வருகிறான்  என்று சந்தேகமாக இருந்து.  அவன் கிட்ட அட்ரெஸ் வாங்கிண்டு நேரா இங்கே ஜாக்ரதையாக கொண்டு வந்து சேர்க்கவேண்டுமே என்று கவலையால்   நானே  கூட  அழைச்சுண்டு வந்தேன். சார் நான்  போகணும்.   எனக்கு நிறைய வேலை இருக்கிறது'' என்கிறார் அவர் . 
சார்  உங்களுக்கு  எப்படி  நன்றி சொல்றதுன்னே  தெரியல  என்றாள்  அம்மா. 
''அம்மா நல்லவேளை இந்த பையன்  உடனே எங்க கிட்டே ஓடிவந்து சொன்னதால்  எங்கள் ரயில்வே போலீஸ் அவன்  இருந்த  ரயில் பெட்டிக்குள் நுழைந்து அந்த திருட்டு ஆசாமியை தூக்கத்தில் இருந்து எழுப்பி உடம்பு பூரா நல்ல ''சாப்பாடு நிறைய'' போட்டு கைது செய்துட்டாங்க"

தாத்தாவுக்கு தனது காதுகளை நம்ப முடியவில்லை.   ஆஹா  இரவு பூரா சுந்தர காண்டம் படித்ததின்

 பலனல்லவா இது?

உணர்ச்சி பொங்க அந்த அதிகாரியை வணங்கி உணவு உண்ணும்படி  அந்தவீட்டில் எல்லோரும்உபசரித்தனர். 
''இல்லே சார்,   இந்த  ஊரிலேயே   எனக்கு  ஒரு நெருங்கிய  உறவினர் இருக்கிறார்.  ரொம்ப நாளா  அவரை சந்திக்காததால் அங்கே   போய்  தலையைக் காட்டிவிட்டு நான்  வேலைக்கு போகணும். தலைக்கு மேலே வேலை இருக்கு'' .  அவசரப்பட்டார்.

''சத்தே  இருங்கோ''
தாத்தா நன்றி பெருக்குடன் பூஜை அறைக்குள் ஓடி ''ஆஞ்சநேயா எல்லாம் உன் கருணை'' என்று நமஸ்காரம் செய்து விட்டு கொஞ்சம் பிரசாதம் கொண்டு வந்து ரயில்வே அதிகாரியிடம் வழங்கினார்.

''ரொம்ப  சந்தோஷம் ஸார் .சிரித்துக்கொண்டே எனக்கும் இஷ்ட தெய்வம் ராமன் தான் என்றார்  பிரசாதம் பெற்றுக்கொண்ட அந்த அதிகாரி .

"பகவான்  கிருபை சார்.   உங்கள் பெயர் என்ன" என்று தாத்தா கேட்டார்.


" அனுமந்தராவ்".

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...