Saturday, January 4, 2020

THIRUVEMBAVAI



திருவெம்பாவை.  J K   SIVAN 

                             20
   தென்னாடுடைய சிவனே   போற்றி 

அன்பர்களே  திருவெம்பாவை  20 பாடல்களும் இன்றுடன் நிறைவே பெற்றாலும்  மார்கழி முழுதும்  சிவனை தொடர்ந்து பாடி போற்ற  அடுத்ததாக  நமக்கு கிடைத்தவர் இன்னும் பத்து நாட்களுக்கு  நடராஜ பத்து. அற்புதமான  பாடல்கள். ஏற்கனவே  நான் எழுதியிருந்தாலும்  மீண்டும் எழுதுகிறேன்.

20. போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

இதற்கு அர்த்தமே தேவையல்ல. இறைவனைப் போற்றி பாடும் வார்த்தைகள் ஒவ்வொரு உள்ளத்திலும் ஊறுகின்றதே. அதை இன்னொருவர் எதற்கு சொல்லவேண்டிய தேவை. பொன்னார் மேனியனே, மின்னார் செஞ்சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவா, மன்னே , மாமணியே, உள்ளங்கவர் கள்வா. என்றும் எம்முள்ளே இருப்பாய் ஈஸா.

 மணமாகாத கன்னிப்பெண்கள் காத்யாயினி விரதம் இருந்து , அதிகாலையில் ஒருவரை ஒருவர எழுப்பி, ஒன்றாகக் கூடிக்கொண்டு நீர்த்துறை சென்று நீராடித் தமக்கு இறையன்பு மிக்கவரே கணவராக வாய்க்க வேண்டும் என்று இறைவனை நோக்கிப் பாடியும் வணங்கும் நிகழ்வு  தான்  திரும்வெம்பாவை  திருப்பாவை இரண்டிலும்.


ஒரு பழைய நினைவு குறுக்கிடுகிறது.   அந்தகாலம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதினால், அது விருவிருப்பாக உள்ளதாகவும் சுவையானதாகவும் இருப்பதாக நேரிலும், போனிலும், கடிதங்களிலும் நண்பர்கள் தெரிவிப்பதற்கு எனது ஒரே பதில் ''சுவையான தின்பண்டம் அலுமினிய தட்டில் வைத்தாலும் சுவையாகவே இருக்கும் '' என்பதே.   ஆகவே என் சாதாரண  திறமையற்ற, எழுத்திலும் கோடா  சிறந்த விஷயங்கள் நன்றாக தான் தெரியும், இனிக்கும்.
எனது எழுத்தில் எந்த விசேஷமுமில்லை. நான் கையாளும் சமாச்சாரத்தில் அப்படி அற்புதமான ருசி உள்ளது. எனவே நான் எழுதியும் கூட விரும்பப்படுகிறது.

 நம் முன்னோர்கள் வாழ்ந்த காலம், அவர்கள் அனுபவித்தது எல்லாமே யார் சொன்னாலும் இனிக்கத்தான் செய்யும். இது ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்தமான திருப்தியளிக்கும் பிரத்தியேக சொத்து. சிலர் நினைப்பதில்லை. நினைக்கக்கூட நேரமில்லை! சிலர் நினைக்கிறோம் என்பது தான் வித்தியாசம்.



''சோழநாடு சோறுடைத்து'' என்றாள் ஔவை. ''சோறு தரும் நாடு, துணி தரும் குப்பை'' என்றார் பட்டினத்தார். ஊரெல்லாம் அட்டசோறு நமதே'' என்றார் மணி வாசகர். நாம் பிறந்த மண் அவ்வளவு வளமுள்ள பூமி. நமது முன்னோருக்கு அதை பற்றி நினைக்க, பாடுபட்டு அதன் மேன்மையைப் பெருக்க நேரமும் ஆர்வமும் இருந்தது.

ஸப்தஸ்தானம் என்ற ஏழு ஊர்களும் விழாக்கோலம் பூண்டு இருக்கும். எவரைப் பார்த்தாலும் அதில் ஒரு விதத்தில் ஈடுபட்டிருப்பார்கள். எங்கெங்கோ இருந்தாலும் மக்கள் அந்த ஏழு ஊர்களுக்கும் வருவார்கள். வண்டிகள் மாடுகள் பூட்டி பல ஊர்களிலிருந்து ஜனங்களை கொண்டு சேர்க்கும்.  பலர்  கூட்டமாக   நடந்தே வருவார்கள்.  திருவையாரைபற்றி சொல்லவே வேண்டாம். அத்தனை பேர்களுக்கும் குழுமி இருப்பார்கள். வெயில் பற்றி துளியும் லக்ஷியம் இல்லை.   அதுவும் சித்திரை மாதம் வெய்யில் கேட்கவேண்டுமா? (நமது இப்போதைய ஏப்ரல் மே சம்மர் வெய்யில் ) சப்தஸ்தான ஊர்வலம் பகல் பன்னிரண்டு மணிக்கு படபடைக்கும் வெயிலில் கண்டியூர் வந்து சேரும். கண்டியூரைச் சுற்றி அப்போதெல்லாம் அநேக சோலைவனங்கள். பந்தல்கள் போட்டு வைத்திருப்பார்கள். பந்தல் மேல் நீர் தெளித்துக்கொண்டே இருப்பார்கள். பந்தலில் இடம் போதாமல் கூட்டம் நெரிசல். அடியும் பொடியுமாக வெயிலில் கால் கொப்புளிக்க கூட்டத்தில் சிலர் ஆலயத்துள் புகுவார்கள்.

இது இப்படியாகும் என்று  என்  கொள்ளுக்கு கொள்ளு தாத்தா  ராமஸ்வாமி பாரதிகளுக்கு  தெரியும். அனுபவட்டவர் என்பதால் முன்னாடியே மனைவி காமாக்ஷியோடும் 4 வயது மகன் பட்டாபிராமனுடனும் திருவையாறு கோவிலுக்குள் தமது ஊர்க்காரர்களோடு  முன்னாடியே வந்து காத்துக்கொண்டிருப்பார்.

''ஹர ஹர மகாதேவா, பஞ்சநதீசா, ஜப்பேசா'' என்ற மனங்கனிந்த சப்தம் ஒரு புறம். ஜால்ரா, தம்பூரா, கஞ்சிரா,டோலக், மிருதங்கம், மேளம், நாதஸ்வரம் குழுக்கள் ஒரு புறம். கை தட்டிக்கொண்டு பஜனை பாடுவோர்கள் ஒரு பக்கம். இனிமையான தேவாரம், திருவாசகம் பதிகங்கள் பாடிக்கொண்டுவரும் பக்தர்கள் சேவார்த்திகள் புடைசூழ நந்தியம் பெருமான் பல்லக்கில் அழகாக  ஆடி  கோலாகலமாக வருவார். பல்லக்கின் அலங்காரம் கண்ணைப் பறிக்கும். அதை தூக்கிக்கொண்டு ஆடி வரும் அழகு பார்ப்போரையும் சேர்ந்து ஆடவைக்கும். வாத்ய சப்தங்கள் அதற்கேற்ப  ஒலிக்க , நேரம் போவதே   தெரியாது.    பக்தர்கள் புடை சூழ ஈஸ்வரன் அம்பாள் பல்லக்கு பின் தொடர உமேசன் தரிசனம் கிடைக்கும். ஆனந்தக்கண்ணீர் வழிந்தோட பக்தர்கள் புளகாங்கிதமடைவார்கள். பல்லக்குகளின் மேல் பூக்கள் அலங்கரித்த வண்ணக் குடை,

''என்ன அற்புத காட்சி. காணக்கிடைக்காத அறிய வாய்ப்பு.

''காமாக்ஷி, பார்க்கிறாயா?  உனக்கு சுவாமி  நன்றாக தெரியறதா? நந்திகேஸ்வரர் தம்பதி பல்லக்கு பார்த்தாயா? அம்பாள் சமேதராக எப்படி ப்ரணதார்த்திஹரர் ஆடி ஆனந்தமாக அசைந்து நடனமாடி வருகிறார் பார்த்தாயா? வெயிலையும் கால் சுடுவதையும் கொஞ்சமும் லட்சியம் பண்ணாமல் இந்த பல்லக்கு தாங்கிகள் அற்புதமாக எப்படியெல்லாம் அசைந்து நடனம் ஆடிக்கொண்டு வருகிறார்களே இவர்களுக்கு நவ நிதியம் கொடுத்தாலும் ஈடாகுமா?
சந்தனக்குழம்பை வாரி வீசலாமா அவர்கள் மேல் ?
பன்னீரை குடம் குடமாக ஊற்றினால் எத்தனை சந்தோஷமாக இருக்கும் ?
அவர்கள் எல்லோருக்கும் அருகில் போய்  ரெண்டு கைகளாலும் விசிறியால் விசிறலாமா ?
ஏதோ செய்யவேண்டும் போல இருக்கிறதே. என்னத்தை  செய்வதென்றே தோண வில்லையே?
இந்த கொடூர வெயிலில் அவர்களுக்கு ஒவ்வொரு ஊரிலும் நிறைய தனவான்கள் என்னென்னவோ   உபச்சாரம்  சிஸ்ருஷை செய்கிறார்கள்? ஐயோ, நாம் துர்பாக்ய சாலிகள், ஏழைகள் ஒரு  கைங்கர்யமும்  செய்ய வழியில்லையே? '' என அங்கலாய்த்தார் ராமசாமி பாரதிகள்.

சிவபுண்ணியம் என்று முடியும் ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.பாடுகிறார் ராமஸ்வாமி பாரதிகள்
உரக்க பாடுகிறார். அதன் பொருளில் லயித்து சிவனோடு இணைகிறார். கண்கள் பணிக்கிறது. தாரை தாரையாக ஆனந்த கண்ணீர் கன்னத்தில் வழிகிறது.

''நல்லகாலம் நல்லதோர் தலத்து
இல்லை என்னாது ஈசன் அடியவர்க்கு
ஒல்லும் வகையால் உண்பன நல்கியே,
புல்லும் பூசையன்றோ சிவ புண்ணியம்''

காமாக்ஷி கண்ணீர் வடிக்கிறாள். ''நாம் என்ன செய்வோம் ? ஏழை பிராமண குடும்பம். பொருளற்ற பாவிகள். ஈஸ்வரன் அதிகமாக ஈயவில்லையே. இந்த வருஷ விளைச்சல் கூட மந்தமா போச்சு. நமக்கே காணாதே. என்ன செய்வோம்?''

''காமாக்ஷி, செல்வம் புண்யத்தால் வருவது. கலங்காதே.''

''நாதா, நீங்கள் அடிக்கடி சொல்வீர்களே, குங்கிலியக்கலய நாயனார் தனது பாரியாளின் திருமாங்கல்யத்தை கொடுத்து தர்மம் பண்ணினார் என்று'' (நேற்று தான் குங்கிலியக்கலய நாயனார் கதையை எழுதினேன்) அதுபோல, என்னுடைய திருமாங்கல்யத்தையும் நீங்கள் விற்று எதாவது பழமோ, மோரோ, வாங்கிக் கொடுத்து ஈஸ்வரார்ப்பணமாக தர்மம் செய்து அதை கண்ணால் பார்ப்போமா?'

இதோ இப்பவே கழற்றிக்கொடுக்கிறேன். ஒரு மஞ்சள் கிழங்கை மஞ்சள் கயிற்றில் சுத்தி நூலை கழுத்திலே கட்டிவிடுங்கோ அது தான் மாங்கல்யம். அது போதும் எனக்கு . நீங்கள் அடிக்கடி பாடுவேளே ''நினைத்ததை உடனே செய்ய வேண்டும். நில்லாத உடலை நிலையென்று நம்பாதே, பொல்லாத நமன் வாய்க்கு இரையாகப் போவீரே '' அப்படின்னு. அதாலே, இப்பவே ஏதாவது செய்வோமே. அடுத்த வருஷம் இருக்கோமோ இல்லையோ''என்றாள் காமாக்ஷி.

'காமாக்ஷி நீ சொல்றது சரியானது தான். நல்ல யோசனை. ஆனால் இந்த சந்தடியில் எங்கு கொடுப்பது. எங்கு விற்பது நகையை? இந்த கும்பலில் நுழைந்தால் மீண்டும் திரும்பி இங்கேயே வருவது எப்படி. கை கால்களை கூட சுவாதீனமாக நீட்ட மடக்க முடியல்லியே . பிச்சைக்காரனுக்கு பொழைச்சு கிடந்தா (பிக்ஷாடனர் சிவ பெருமான் அருளில் என்று அர்த்தம் கொள்ளவேண்டும்) அடுத்த வருஷம் சப்தஸ்தான உத்சவத்தில் இந்த ஊரிலேயே, இங்கேயே பக்தகோடிகளுக்கு ஏதேனும் அற்பமாக நம்மாலான தர்ம கைங்கர்யம் செய்யாமல் இருப்பது இல்லை. இது பிரணதார்த்தி ஹரன் மேல் சத்தியம். எப்பாடு பட்டாவது நடத்திவிடுவோம் என்று இருவரும் தீர்மானம் செய்துகொண்டார்கள். ஊருக்கு திரும்பினார்கள்.

அந்த வருஷம் மழை, காலத்தில் பெய்தது, நாத்து நடவுகள் கிரமமாக விளைந்து, மாசி பங்குனியில் அறுப்புக்கு ரெடியானது. தலை அறுப்பில் முதல் தர சம்பா நெல் ரெண்டு கலம் அடித்து தூத்தி, உலர்த்தி, தனியாக தர்மத்துக்கு என்று ஒதுக்கி வைத்தார்கள்.

நெல்லைப் புழுக்கி உலர்த்தி, உலக்கையால் குத்தி, அரிசியாக்கி, அதைப் பொரித்து, அரைத்து மாவாக்கி ரெண்டு சாக்கு நிறைய கட்டி வைத்தார்கள். இந்த மாவுக்கு பெயர் தான் சத்துமா. இது யாகத்தில் உபயோகிப்பார்கள். ஆவணி அவிட்டம் ஹோமத்தில் இதை ஹோமம் பண்ணி பிரசாதமாக கொடுப்பது வழக்கம். இன்றும் சிலர் இவ்வாறு செய்து வருகிறார்கள்.

காபி டீ தெரியாத காலம். அப்போது இந்த சத்துமா நீர் சிறந்த பானமாக குடிப்பார்கள். சிறிது உப்பு போட்டு மோரில் கலக்கினால் அம்ருதம் போல பருகுவார்கள். வரும் விருந்தாளிகளும் இதையே எதிர்பார்ப்பார்கள். பசியும் களைப்பும் காணாமல் போகும். எல்லோர் வீட்டிலும் அக்காலத்தில் இது இருந்தது. பரிசுத்த உணவு.   பல  காலை  வேளைகளில்   ராகி  கோதுமை சத்துமா  கஞ்சி குடிக்கும்போது  முன்னோர்  நினைவு வருகிறது.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...