Friday, January 17, 2020

LIFE LESSON




இது  சாம்புவுக்கு மட்டுமா   !! J K SIVAN

'' இன்னிக்கு  லீவு.  நல்லபடியாக  பொழுது போகணும்.   ஒரு  சில விஷயங்கள்  நல்லதாக சொல்லுங்கள் சார். ரொம்ப தூரம் நடந்து வந்தேன் இடம் தெரியவில்லை.     உங்கள் வீட்டிற்கு   வரும்   வழியெல்லாம் உடைத்து வைத்திருக்கிறது முனிசிபாலிடி'' என்றான்  சாம்பமூர்த்தி எனும் சாம்பு.  பல வருஷங்க ளாக  எண்ணெய் என்னைப் பார்க்காத பழைய நண்பன்.  ஒரு காலத்தில்  ரெண்டு பெரும்  சைக்கிளில்  கோடம்பாக்கத் திலிருந்து  திருவல்லிக்கேணி வரை சேர்ந்து போவோம். 

 ''சாம்பு,  உனக்கு ஒரு சில எளிய வார்த்தைகள் சொல்லட்டுமா?   பாதை எப்படி இருந்தால் என்ன. போய்ச் சேரும் இடம் மனதிற்கு மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தால் பாதையின் கஷ்டங்கள் மறந்து போய்விடுமே.  அது போலவே  பாதை எவ்வளவு சுகமாக இருந்தாலும் என்ன பிரயோசனம் போய் சேரும் இடம் அவ்வளவு விரும்பத் தக்கதாக இல்லாவிட்டால்.  -  இது வாழ்க்கையில் புரிந்து கொள்ளவேண்டிய ஒரு வாக்கியம்.

 ''சார்  கடவுள்   ஏன் நாம் கூப்பிடும் போது வரவில்லை?''

''அது அப்படியில்லை சாம்பு.  தப்பாக புரிந்து கொண்டிருக்கிறாய்.  கூப்பிடும்போது வரமாட்டேன் என்கிறாரே என்று சொல்வது தப்பு. அவர் எப்போதும் குறித்த நேரத்தில் தான் வருபவர். நாம் தான் அவசரப்பட்டு அவரை எதிரே அறியும் முன் தேடுகிறோம். பக்குவம் வந்தால்,   தானே  நம் கண்ணில் தென்படுவார்.

 ஒன்று தெரியுமா உனக்கு?   உன் சிரிப்புக்கு பின்னால் உள்ள  சோகத்தையும், உன் கோபத்திற்கு காரணமான அன்பையும்,  எல்லாவற்றிற்கும் மேலாக  உன்  மௌனத்திற்கு பின்னால்  இருக்கும் காரணத்தையும் பார்ப்பவர்,  காரணம்
 தெரிந்தவர்  அவர் ஒருவரே.   அவரை உணரவேண்டும் .நம்பவேண்டும்.

 ''அழகால் தானே சார்  அடிமையாகிறான் மனுஷன்?''

''  ஏன் அப்படி சொல்கிறாய்  சாம்பு,  அழகாக  உள்ளவை  எல்லாமே நல்லதல்ல. நல்லவை எப்படி இருந்தாலும் எப்போதும் அழகானவை தான். அதை தான் உணர்ந்து கொள்ளவேண்டும் !  

 ''சாம்பு,  எப்போதாவது உனக்கு  ஒரு  சந்தர்ப்பம் நீ எதிர்பார்க்கும்போதோ /எதிர்பாராத போதோ  கிடைத்தால் அதை நழுவ விடாதே. கெட்டியாக பிடித்துக்கொள் . இன்னொன்று  அதை விட பெரிதாக வரும் என்று ஏமாறாதே.  வராமலும் போகலாம். அல்லது வந்தால் உன் எண்ணத்தில் இடி விழ  செய்வதாகவும் அமையலாம்''.

''இதெல்லாம் வெறும் கனவு சார் "!

''சாம்பு. கனவுகள் நீ  தூங்கும்போது வருபவை அல்ல. வேறு கனவுகளும் இருக்கின்றன.  அவை  உன்னை தூங்க விடாமல் செய்து  உன் எண்ணம் நிறைவேற உன்னை உழைக்கச் செய்பவை . விழித்துக்கொண்டு இருக்கும்போது நாம்  காணும் கனவுகள். மனோரதங்கள்.''

''வெளிப்பூச்சில் மயங்காதே.  வெளிவேஷம் போடுபவர்கள் நிறைய பேர் உன்னை சுற்றி.  நல்லவர் போல் நடிப்பவர்கள்.  இதய சுத்தம் உள்ளவர்களும்  இருக்கிறார்கள், அவர்களைத்  தேடு.  உனக்காக  பிரார்த்திக்கும் உதடுகளை விட  உனக்காக உதவ  நீட்டிய கரங்கள் மேன்மையானவை என்பதை புரிந்துகொள். '' .

''அப்படியென்றால் யார் எதைச்சொன்னாலும் கேட்ககூடாதா  தாத்தா சார்?''

''அப்பனே  ஏன் அவசரப்படுகிறாய்?   பிறர் எது சொன்னாலும் கேள். யோசி. உனக்கு பொருத்தமானது உன் முடிவுகளே.  நன்றாக  யோசித்து முடிவெடு.  அதன் படி நட. முன் வைத்த காலை பின் வைக்காதே.

''காலம்  என்று ஒவ்வொருவருக்கும் ஒன்று தனியாக வரும். போகும்.  உனக்கு  நல்ல வேளை அமைந்துவிட்டால் நீ  செய்த தவறுகள் கூட   கேலியாக  ஏற்றுக் கொள்ளப்படும்.  அதே சமயம் உனக்கு நேரம் நன்றாக இல்லையென்றால்,  நீ சாதாரணமாக சொன்ன கேலிகள் கூட உனக்கு வினையாக மாறிவிடும். ஜாக்கிரதை.

'' இது எல்லாம் நமது புத்தியால்,  கெட்டிக்காரத் தனத்தால் விளைவது தானே சார். ''

''நாம்  எப்போதும் ''அதை செய்து  விடுவோம், இதை ஜமாய்த்து விடுவோம்'' என்று மார் தட்டுவோம். நமது  எண்ணமும் செயலும்   தான் சரியானது என்று நம்புகிறோம்.  ஆனால் உலகம் நீ இதுவரை  என்ன செய்தாய்  என்பதை வைத்தே உன் திறமையை, சாமர்த்தியத்தை எடை போடுகிறது.''
மற்றவரை குறைத்து மதிப்பிடுவதின் மூலம், குறை காண்பதன் மூலம், நீ  உன் குணத்தை புரிந்து கொள்ள வைக்கிறாய்.  உன்னைப்பற்றிய மதிப்பீடு குறைகிறது.

''என்ன  சார் இது?   நாம் எப்படி தான் வாழவேண்டும்?

''சிரி.  அழுகையே தெரியாதவன் போல் சிரித்துக் கொண்டே இரு.   விளையாடு . தோல்வியே  அறியாதவன் போல் ஜெயிப்பவன் போல விளையாடு. நேசி. யாரையும் நோகாமல் செய்தவனாக நேசி.  நாளை  என்பதே இல்லாதவனாக என்றும் இன்றே தான் போல வாழ கற்றுக் கொள். உன் சந்தோஷத்துக்கு அப்போது எதுவும் ஈடு இணை அல்ல.''

''வாழ்க்கையில் எப்படி வெற்றி பெறுவது சார்? குறுக்கு வழி ஏதாவது?''

''ரெண்டு விஷயம் சாம்பு.    ஒன்றுமே  உன்னிடம் இல்லையென்றால் நீ எப்படி சமாளிக்கிறாய் என்பது ஒரு விஷயம். உன்னிடம் எல்லாமே இருக்கிறது, ஏதும் குறையில்லை என்றபோது நீ எப்படி சமாளிக்கிறாய் என்பது மற்றது.  இந்த  ரெண்டுக்குள் தான் நீ வாழ்கிறாய். இரண்டையும்  சமமாக ஏற்று  நிலையாக வாழ்பவன் வெற்றி பெற்றவன்.

 ''  ஏன் சார்,   நிறைய பேர் இதை சிந்திப்பதில்லையா?  இப்படி சிந்திப்பதில்
லையா?''

''' ஏன் இல்லை?  நிறையபேர்  இப்படி சிந்திப்பவர்கள் தான்.   ஆனால் முக்கால்வாசி  பேர்  அடுத்தவன் எப்படி நம்மால் முடியாததை எல்லாம் செயகிறான் என்று தூக்கமில்லாமல் சிந்திப்பவர்கள். அதை விட்டு,   மற்றவன் செய்யமுடியாத எதை நாம் செய்ய முடியும் என்று சிந்திப்பவன் தான் கடைசியில்  வெற்றிசாலி .
''இதற்கு எல்லாம்  எது ஆதாரமாக ஒருவன்  தெரிந்து கொள்ளவேண்டும்?''

''பெரிய விஷயம் ஒன்றுமில்லை.  கர்வம் வேண்டாம். ''தான்''  ''நான்''  என்ற எண்ணம் விலகவேண்டும்.  செஸ் விளையாடுகிறோம்  அதில்   ராஜா, ராணி, யானை, கோட்டை, குதிரை, பிஷப், காலாள்  என்று காய்கள் உண்டு அல்லவா. ஆட்டம் ஆடும்போது தான் அவை வெவ்வேறு மதிப்புடையவை. சக்தி கொண்டவை.. ஆட்டம் முடிந்தபின் எல்லாமே மரப்பெட்டிக்குள் ஒன்றாக விழும் மரக்கட்டை கள். ராஜா எங்கே , சேவகன் எங்கே அப்போது?  கர்வம் கூடாது தம்பி. இது தான்  செஸ்  எனும் சதுரங்க கட்டைகள் சொல்லிக்கொடுக்கும்  பாடம்.''



''மறுபடியும் வருகிறேன் சார்  ஒருநாள்''  என்று  சாம்பு  எழுந்து சென்றுவிட்டதால்  இது மேலே  தொடரவில்லை. 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...