Saturday, January 25, 2020

LALITHA SAHASRANAMAM







ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் - .(771-784 ) - J.K. SIVAN 148 दुराराध्या दुराधर्षा पाटली-कुसुम -प्रिया । महती मेरुनिलया मन्दार-कुसुम -प्रिया ॥ १४८॥ Dhuraradhya Dhuradharsha Patali kusuma priya Mahathi Meru nilaya Mandhara kusuma priya துராராத்யா, துராதர்ஷா, பாடலீ குஸுமப்ரியா | மஹதீ, மேருனிலயா, மம்தார குஸுமப்ரியா || 148 || वीराराध्या विराड्रूपा विरजा विश्वतोमुखी । प्रत्यग्रूपा पराकाशा प्राणदा प्राणरूपिणी ॥ १४९॥ Veeraradhya Virad Roopa Viraja Viswathomukhi Prathyg roopa Parakasa Pranadha Prana வீராராத்யா, விராட்ரூபா, விரஜா, விஶ்வதோமுகீ | ப்ரத்யக்ரூபா, பராகாஶா, ப்ராணதா, ப்ராணரூபிணீ || 149 || லலிதா ஸஹஸ்ரநாமம் - (750- 784 ) அர்த்தம் *771* துராராத்யா, दुराराध्या - அம்பாள் ஸ்ரீ லலிதாவை அடைவதென்பது அவ்வளவு சுலபமில்லை. அவளருளை அடையும் வழிமுறை கடினமானது. உழைப்பு மிக்கது. மனக்கட்டுப்பாடு மிக மிக அவசியம். மனதோடு ஐம்புலன்களின் அடக்கமும் அத்தியாவசியம். சௌந்தர்ய லஹரியில் ஆதி சங்கரர் ( 95)“ அம்மா, புலனடக்கம் இன்றி உன் திருவடி நிழலில் நெருங்குவது என்பதே குதிரைக்கொம்பு'' என்கிறார். *772* துராதர்ஷா दुराधर्षा - அம்பாளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பதே முடியாத தொன்று. தூய பக்திக்கு மட்டுமே கட்டுப்படுபவள். கீதையில் கிருஷ்ணன் புரிகிறமாதிரி சொல்கிறானே (IX.26) “எவனொருவன் ஒரு சாதாரண சிறிய இலை , பூ இதழ், சிறிது ஜலம் ,மனத்தில் பக்தியோடு எனக்கு அர்ப்பணிக்கிறானோ, நான் அந்த தன்னலமற்ற பக்தன் எதிரில் தோன்றுபவன். அவன் மனநிறைவோடு அளிப்பதை விருப்பதோடு ஏற்பவன். '' அம்பாளை தனிமையில் பிரார்த்திக்க வேண்டும். ஆத்மானந்தம் தான் ஸ்ரீ லலிதாம்பிகை. துர்வாசமஹரிஷி தனது ஸ்ரீ சக்திமஹிமா ஸ்தோத்ரத்தில் (53) ''யார் பிராணாயாமத்தில் தியானம் செயது அவளை வழிபடுகிறானோ அவனே லலிதாம்பிகையாக ஆகிவிடுகிறான்''. *773* பாடலீ குஸுமப்ரியா |पाटली-कुसुम-प्रिया பாடலி என்பது சிவப்பு வெளுப்பு நிறத்தில் பவளமல்லி போன்ற மலர். சிவப்பு சக்தியையும் வெள்ளை சிவனையும் குறிப்பது. *774* மஹதீ, महती புருஷனும் பிரகிருதியின் கலப்பது தான் மஹத் என்பது. ஆத்மா தான் புருஷன். ப்ரக்ருதி என்பது இயற்கை. ஆத்மா எத்தனையோ ஜீவகளாகவும் ப்ரக்ருதி ஒன்றாகவும் பரிணமிக்கிறது. ப்ரக்ருதி எனும் எங்கும் நிறைந்த இயற்கை முக்குணங்களாக தோன்றுகிறது. சத்வ, ரஜோ காமோ குணங்களாக. அம்பாளே பௌருஷனாகவும் ப்ரக்ருதியாகவும் தன்னை காட்டிக்கொள்கிறாள். இந்த கலவை தான் புத்தி. பெரிதில்லை எல்லாம் மிகப்பெரியது. மஹதியான அம்பாளின்றி சிவன் இல்லை. *775* மேரு நிலயா मेरु-निलया - மேருவில் வாசம் செய்பவள். ஜம்புத்வீபத்தின் மத்தியில் இருப்பது. மனித தேகத்தில் முதுகெலும்பு தண்டுவடம் தான் மேரு. அதில் தான் குண்டலினி சக்தியாக அம்பாள் வெளிப்படுகிறாள். *776* மந்தார குஸுமப்ரியா मन्दार-कुसुम-प्रिया மந்தார மலர்களால் அர்ச்சிக்கப்படும்போது அம்பாள் மகிழ்கிறாள். ஸ்வர்கத்தில் இருக்கும் ஐந்து மரங்களில் ஒன்று மந்தார புஷ்ப மரம். *777* வீராராத்யா वीराराध्या அம்பாள் வீரர்களில் தலை சிறந்த வீராங்கனை. வீரன் என்றால் இங்கு ஆத்ம ஞானம் கொண்டவன், அகம்பாவம் அற்றவன், பயமரியாதவன். புலன்களை வென்றவன். இப்படிப் பட்டவர்களால் வணங்கப்படுபவள் அம்பாள். *778* விராட்ரூபா विराड्-रूपा விராட் என்பது விழிப்பு உணர்வில் ஆத்மா தேகத்தோடு தன்னை அடையாளப் படுத்திக் கொள்வது. இந்த உணர்வு தான் சிறியதில் சிறிது, பெரியதில் பெரிது. சிறியது என்பதை ஒரு ஜீவனின் தனி உணர்வு என்று பெரியது என்பதை பிரபஞ்சத்தின் உணர்வு என்றும் புரிந்து கொள்வோம்.
பெரியதின் ஒரு சிறு பாகம் தான் சிறியது இங்கு. மாயை எங்கும் சூழ்ந்துள்ளது. பெரிதான ரூபம் தான் விராட்ஸ்வரூபம். ஆதிசங்கரர் எழுதிய பஞ்சிகரணம் அத்வைத சித்தாந்தத்தை விளக்குகிறது. அதில் விராட் என்பது பஞ்ச பூதங்களும் அவற்றின் விளைவுகளும் தான் என்று சொல்கிறார். *779* விரஜா, विरजा ரஜஸ் இல்லாமல் இருப்பது தான் விரஜா . ரஜஸ் என்றால் பரிசுத்தமற்றது. ஆகவே விரஜா என்கிற நாமம் அம்பாள் ஸ்ரீ லலிதா பரிசுத்த மானவள் அப்பழுக்கற்றவள் என்று கூறுகிறது. மஹாநாராயண உபநிஷத் (65.1) ''அஹம் விரஜா , விபாப்மா'' - நான் பாபங்கள் உணர்ச்சிகளிலிருந்து விடுபட்டவன் - என்கிறது. அதனால் தான் சன்யாசியாகுமுன்னே விரஜ ஹோமம் செய்வார்கள். விரஜன் ப்ரம்மமாகிறான்.

*780* விஶ்வதோமுகீ विश्वतो-मुखी - நாலா பக்கங்கள் மட்டும் அல்ல மேலும் கீழும் கூட அவள் முகம் காண்கிறது. எல்லா முகங்களுமே அவள் முகம் தான் என்கிறது ஸ்வேதாஸ்வதர உபநிஷத் (III.3) எங்கும் நிறை பரப்ரம் மத்தை அல்லவா இது குறிக்கிறது. அம்பாள் ப்ரம்மஸ் வரூபிணி.

*781* ப்ரத்யக்ரூபா, प्रत्यग्-रूपा உள்நோக்கி சிந்திப்பவர்களுக்கு அவள் புரிவாள் தெரிவாள்.. அவளை உள்ளே தான் காணமுடியும். அது தான் ஆத்ம விசாரம், அதன் பயனாக விளையும் ஆத்மஞானம். ஆத்மானுபவம். மனதை புலன்களின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்து உள்நோக்கி செலுத்தினால் அம்பாள் தெரிகிறாள்.

உள்ளும் வெளியிலும் உள்ள பிரம்மத்தை எதற்கு உள்நோக்கி உணரவேண்டும் என்று கேட்கலாம். கதோபநிஷத் இதை விளக்குகிறது. (II.iii.9) “தம்பி ப்ரம்மம் வெளியிலிருந்தாலும் உன்னால் காணமுடியாது. அதற்கு நீ உள்நோக்கி பார்வையை செலுத்தி உன் மனதை கட்டுப்படுத்தி மனதை நிஸ்சலமாக வைத்துக்கொள்ளவேண்டியது அவசியம். ஏகாக்ரமாக மனம் அவளையே நினைத்து தியானிக்க வேண்டும் அப்போது தான் உள்ளும் வெளியிலும் தெரிவாள். ” *782* பராகாஶா, पराकाशा அம்பாள் தான் மிக உன்னத உயர்ந்த ஆகாசம். பிரம்மத்தை குறிக்கும் ஒரு சொல் பராகாசம். இதற்கு மூன்று காரணம் சொல்லலாம். ஆகாசம் நீண்டு விரிந்த எல்லையற்றது. ரெண்டாவது அதன் பரிசுத்தம், விளக்கமுடியாத நிலை மூன்றாம் காரணம். அதன் புரிபடாத நுணுக்கமான ரஹஸ்யம் உஷ்ணமும் குளிரான மழையும் ஆகாசத்தில் இருந்து தான் பிறக்கிறது. அம்பாள் தான் பராகாச ப்ரம்மம். இணையற்றது. பூமியின் எல்லை ஆகாசம். அதிலிருந்து தான் எதுவுமே பிறக்கிறது கடைசியில் போய் சேருகிறது. ஆகாசம் தான் உருவமும் நாமமும் பெறும் வஸ்துக்களின் தாய். ப்ரம்மத்திலிருந்து தான் எல்லாம் உண்டாகிறது. அதிலே அடங்குகிறது.

ப்ருகு மகரிஷி சதானந்தம் தாம் ப்ரம்மம் என்கிறார். சகலத்திற்கும் அது உற்பத்தி ஸ்தானம். உற்பத்தி யான தெல்லாம் சதானந்தத்த்திலேயே திளைத்து சதானந்தத்திலேயே மறைகிறது.

அம்பாளின் இந்த ஒரு நாமம் மேற்கண்ட தத்துவத்தை எல்லாம் விளக்குகிறது. உண்மையிலேயே லலிதா சஹஸ்ர நாமம் உபநிஷத சாரம். மந்திர அக்ஷரம். *783* ப்ராணதா, प्राणदा பிராண சக்தியை நமக்கு அளிப்பவள் அம்பாள் ஸ்ரீ லலிதை. ஆகாசத்தை போலவே பிராணனும் அறியமுடியாதது. நுண்ணியது. வெளியே எப்படி சூர்யாதி கிரஹங் களையும், மழை முதலானவற்றையும் அம்பாள் நிர்வகிக்கிறாளோ, அப்படியே நம்முள் இருக்கும் பிராணனையும் அவளே நிர்ணயிக்கிறாள்.

*784* ப்ராணரூபிணீ ī प्राण-रूपिणी ஜீவர்களின் தேகத்தில் ப்ராணனாக இருப்பவளே அம்பாள் தான். அதிகமாக பொங்கி வழிந்தால் தானே பங்கிட முடியும். அம்பாளே எல்லையற்ற அபரிமிதமான பிராணனாக இருப்பதால் எல்லா ஜீவன்களிலும் தானே பிராணனாக இருக்கிறாள்.
சக்தி பீடம்: கடீல் துர்கா பரமேஸ்வரி ஆலயம்

தென் கர்நாடகாவில் மங்களூரிலிருந்து 29 கி.மீ. தூரளத்தில் கடீல் எனும் ஒரு சக்தி பீடம் உள்ளது. இயற்கை வளம் கொழிக்கும் வளமான பூமி சூழ்ந்த க்ஷேத்ரம்.

துர்க்கை சும்ப நிசும்ப அசுரர்களைவ வதம் செய்தபோது அவர்களது மந்திரி அருணாசுரன் என்பவன் உயிர் தப்பி ஓடிவிட்டான். ராக்ஷர்கள் தலைவனாக அவன் மீண்டும் ரிஷிகளை முனிவர்களை வதைக்க ஆரம்பித்தான். யாகங்களை யஞங்களை தடை செய்தான். யாகங்கள் நடக்காமல் மழை கிடையாதே. வறட்சி பஞ்சம். தேவர்கள் முறையிட்டார்கள். பஞ்சம் தீர மஹரிஷி ஜாபாலி ஒரு யாகம் துவங்கினார். தேவேந்திரனை அணுகி யாகத்திற்கு தேவையான பொருள்களை தர காமதேனுவை அனுப்ப செய்தார். காமதேனு வேறு எங்கோ சென்றிருந் ததால் அதன் மகள் நந்தினியை வேண்டுமானால் அணுகி அழைத்துப் போங்கள் என்றான் தேவேந்திரன்.

''நந்தினி நீயாவது ஹோமதேனு வாக வந்து உதவு'' என்ற ஜாபாலியிடம்
''பூமியில் எதுவுமே சரியில்லை என்னால் அங்கே வரமுடியாது'' என்றது.
'' இந்தா பிடி சாபம். இனி பூமியில் நீ ஒரு நதியாக பிறக்க கடவது'' என்று சபித்தார் ஜாபாலி. .
''ஐயோ எதற்கு இந்த சாபம் எனக்கு என்னை மன்னியுங்கள்'' என்று கெஞ்சியது நந்தினி.
''நீ ஆதிசக்தியை வணங்கு சாப விமோசனம் பெறுவாய் என்று சொல்லிவிட்டு போய்விட்டார் ஜாபாலி.

நந்தினி அம்பாளை தியானித்து தவமிருந்து அம்பாள் தோன்றினாள் ''நந்தினி ரிஷி சாபம் தவிர்க்க முடியாதது. நீ நதியாக பூமியில் தோன்று நான் உன் மகளாக வந்து உன் சாபம் நீங்க உதவுகிறேன்'' என்றாள் அம்பாள்.

கனககிரியில் பிறந்த ஒரு நதியாக நந்தினி பிறந்தது. இதற்குள் அருணா சுரன் பிரமமாவை வேண்டி திரி மூர்த்திகளாலும் தனக்கு மரணம் நேராமல் வரம் பெற்றான். காயந்திரி மந்த்ர சக்தியை சரஸ்வதியிடம் பெற்றான். இனி அவனை எவராலும் வெல்ல முடியாது. தேவர்களை வென்று இந்திர லோகத்தை கைப்பற்றி னான். தேவர்கள் எல்லோரும் ஆதி சக்தியை வணங்கி '' நீ தானம்மா எங்களுக்கு கதி'' என்று சரணடைந் தார்கள். அம்பாள் சொல்லிவிட்டாள் . ''அருணாசுரன் காயத்திரி மந்திரம் சொன்னால் என்னால் உதவ முடியாது. அவன் அதைச் சொல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன்'' என்றாள் .
''என்ன செய்வது என்று தெரியவில் லையே'' என வருந்தினார்கள் தேவர்கள்.

''பேசாமல் நீங்கள் ப்ரஹஸ்பதியை அவனிடம் அனுப்பி அவன் கவனத்தை கலைக்க செய்யுங்கள் . அந்த நேரத்தில் நான் அவனை வதம் செய்கிறேன்'' என்றாள் சக்தி.

பிரஹஸ்பதி அருணாசுரனை அணுகி அவனை புகழ்ந்து தள்ளினார். அவனுக்கு கர்வம் வந்துவிட்டது. தன்னைத்தவிர எந்த தெய்வமும் இல்லை என மயங்கி னான். அம்பாள் அவனது அரண்மனை நந்தவனத்தில் ஏழையாக பெண்ணாக, மோஹினி அவதாரம் எடுத்து நிற்கிறாள். சண்ட பிரசண்டர்கள் எனும் அவன் மந்திரிகள் மோகினியை நந்தவனத்தில் பார்த்ததை அருணாசுரனிடம் சொல்ல, அவள் அழகில் மயங்கிய அசுரன் என்னை கல்யாணம் பண்ணிக்கொள்'' என்கிறான்.

''ஆமாம் உன் அழகுக்கு நான் வேண்டுமா உனக்கு? நீ ஒரு பேடி. ஒரு பெண் உன் அரசர்கள் சும்ப நிசும்ப ர்களோடு சண்டை போடும்போது உயிர் தப்பி ஓடிய கோழை, உனக்கு கல்யா ணம் வேறா? ஒரு பெண்ணிடம் உனக்கு அவ்வளவு பயம். நீ எல்லாம் ஒரு வீரனா? தூ '' என்று நிந்திக்கிறாள்.

கோபமாக அவளைத் தாக்க வருகிறான். அவள் ஒரு பாறையின் பின் ஒளிகிறாள். தனது வாளால் பாறையை நொறுக் குகிறான். லக்ஷக்கணக்கான தேனீக்கள் விஷ வண்டுகள் அதன் அடியிலிருந்து புறப்பட்டு அவனை கொட்டுகின்றன. ''
தேவர்களாலும், மனிதர்களாலும், தெய்வங்களாலும், நாலுகால் ரெண்டு கால் பிராணிகளாலும் எனக்கு மரணம் சம்பவிக்க கூடாது'' என்று வரம் பெற்றதால் தேனீக்கள் வண்டுகள் உருவில் அம்பாள் அவனை கொல்கிறாள். வண்டுகளுக்கு ப்ரமரம் என்று பெயர். ஒரு பெரிய வண்டாக ப்ரமரமாக அம்பாள் அவனை தாக்கி கொல்கிறாள். அம்பாள் பிரம்மராம்பிகா என்று பெயர் பெறுகிறாள்.
ஜாபாலி யாகம் வளர்த்து தேவர்களை ப்ரீதி செய்கிறார். தேவியை வேண்டுகிறார். அம்பாள் நந்தினி நதியாக ஓடும் ஆறிலிருந்து சிவலிங்கமாக தோன்றி அதிலிருந்து துர்கா பரமேஸ்வரியாக காட்சி தருகிறாள்.
கடி என்றால் நடு கனககிரியிலிருந்து தோன்றிய நதி ப்ரவஞ்சே எனும் இடத்தில் கடலில் கலக்கும் வரை உள்ள நீளத்தில் நடுவே அவதரித்ததால் அம்பாள் தோன்றி இடம் கடி +இல்லா (தோன்றிய இடம்) காட்டில் ஆகிவிட்டது. ஆலயத்தை சுற்றி நதி ஓடுகிறது அற்புதமான சூழல். எல்லோரும் கர்நாடகா சென்றால் தரிசிக்கவேண்டிய அம்பாள் கடீல் துர்க்கா பரமேஸ்வரி.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...