Monday, January 6, 2020

NATARAJA PATHTHU



    நடராஜ பத்து   J K  SIVAN 

                                                               
                                        1. பித்தா பிறைசூடி....

நீ ஒருவனே ஆதி யோகி. பெயரற்றவன். பெற்றோரற்றவன். யோகத்தின் உரு. மௌனத்தில் எல்லாமே பேசினவன். ஆதிமனிதன் அறிந்த முதல் ஆதி யோகி. ஒன்றா இரண்டா எவ்வளவோ ஆயிரம் ஆண்டுகள் முன்பே ஞானத்தின் கரை கண்டவன். பனி மலையில் அக்னியாக ஒளிர்பவன். கைலாசமலையைப் பார்க்கிறேன். எங்கும் பனி வெண்ணிறமாக போர்த்தியிருக்க பொன்னார் மேனியாக, அதன் கண்ணைப் பறிக்கும் பொன்னிற கலசம். யார் கொடுத்த, அடித்த நிறமோ வர்ணமோ? வேறு யார் நீயே தான் . அசைவற்ற நீயே அகில அண்ட பகிரண்டத்தின் அசைவுக்கு காரணம்.

ஒரு முறை கோயம்பத்தூர் போனவன் நண்பர் ஒருவர் அழைத்துப்போய் காட்டியதால் உன்னைக் கண்டு பிரமித்தேன். 112 ஆதி உயரம். ஆழ்ந்த அமைதியான முகத்தில் ஞான ஒளியா ? தலையில் சூடிய சந்திரஒளியா. கங்கை அலையலையாக அளகபாரத்தில் பெருகி மடிந்து வடிந்து கீழே உருள்கிறாளா? பின்னால் நீல, கருநீல, வெள்ளிங்கிரி மலைகள். வடக்கே நீ இருக்கும் கைலாஸத்தின் நிழலா அடையாளமா இது?

ஞானம் வேண்டிய முனிவர்களுக்கு அசையாமல் மௌனமாக கல்லால  மரத்தின் கீழே மௌனமாகவே உபதேசம் செய்ய உன்னால் மட்டுமே முடியும்!

நான் போன நேரம் மதியம் பன்னிரண்டு மணி உச்சி வெயில். அது தெரியவேயில்லை எனக்கு. பன்னீர் தெளிப்பது போல் பிசு பிசுவென்று குளிர் காற்றில் உடல் நனைக்கும் மழைத் துளிகள் நின்று போய் விட்டது. உன்னை சுற்றி வலம் வந்தேன். பக்க வாட்டில் உன் சிரம், பின்னால் சென்றால் தெரியும் சதுரம் சதுரமாக இரும்பு தகடுகள் சூட்டில் பற்றவைத்து ஓட்டபட்டு (welding ) கரும் சாயம் தீட்டப்பட்டவை. மோட்டார்
கார்களை நிறுத்தி வைக்க ஒரு இடம். அதை கடந்து சற்று முன்னே நகர்ந்தால் உன்னை நெருங்க முடிகிறது.

கரிய உருவில் மார்பளவு உயரத்தில் மலை  அடிவாரத்திலே, சற்றே தலை நிமிர்த்தி வானத்தை நோக்கி யோகத்தில் கண்மூடி, கருநாகம் உன் சிரத்தருகே படம் எடுத்து ''நீயும் என்னைப் படம் எடு'' என்றது. கூட வந்தவர் உயர்ந்த பதவியில் ஒய்வு பெற்ற ஒரு அதிகாரி. அவர் வீட்டில் தான் தங்கி இருந்தேன். என்னையும் உன்னையும் அவர் தான் படம் எடுத்தார்.

உன்னோடு நானும் படமானேன். பெயரளவில் தான் நீயும் நானும் சிவன். நீ எங்கேயும் உள்ளவன். நான் எங்கே என்று எனக்கே தெரியாதவன்!.

அசைவற்ற நீயே ஆடலரசனுமாக இருக்கிறாயே. நடராஜா.உன்னைப் பற்றி பத்து அருமையான பாடல்களை ஒருவர் பாடியிருக்கிறார். அவை ''நடராஜ பத்து ''என்று என் மனத்தை கொள்ளை கொண்டு விட்டனவே. ஒன்று ஒன்றாக சொல்கிறேனே. எழுதும்போதே மனத்தைப் போல் கையும் இனிக்கிறதே.

ஒவ்வொரு பாடலின் கடைசி வரி, பாசத்தை கொட்டுகிறதே. நெஞ்சை விட்டு நீங்கவில்லையே! என்ன நேர்த்தி! எளிமை! ''ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே'' எப்படி  முனுசாமி முதலியாரால்
இவ்வளவு பிரகாசமாக எளிமையாக அர்த்தம் பொதிந்த தமிழ் எழுத முடிந்தது. எனக்கு வரவில்லையே. எப்படி வரும். அவர்  ஞானி, நான் அஞ்ஞானி.

எண்ணற்ற பக்தர்கள் சிவனை வணங்கி வாழ்த்தி பாடியுள்ளனர் என்பது தெரியுமல்லவா. அவர்களின் சில
பாடல்களை நாம் என்றும் மறவாமல் நம் மனதில் இருத்தி, நிறுத்தி, சுவைத்து, பாடுகிறோமே அதற்கு என்ன காரணம்?

தமிழை அழகாக எழுதுவதின் மூலம் பக்தி உணர்வைக் கொண்டு வர முடியுமா? எளிதாக  
எழுதினாலும்
 என்றும் அப்படியே நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் எழுத்துக்கு வலிமை உண்டே!

சிலர் தனக்கு வேண்டியதை பணிவோடு கேட்பார்கள். சிலர் உரிமையோடு அதட்டிக் கேட்பார்கள். ரெண்டும் சிவனுக்கு பிடிக்கும். இதில் ரெண்டாம் வகையில் அமைந்த ஒரு பாட்டுத் தொகுப்பு. ருசியை நீங்களே படித்து அனுபவியுங்கள். நான் எதற்கு விளக்க வேண்டும் அதுவே தானாகவே அருமையாக புரிகிறதே!

பாடல் : 1

மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ, மறை நான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ, மண்டலம் இரண்டேழும் நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ, பிறவும் நீ, ஒருவன் நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ, பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ, போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ, இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகள் ஈன்ற அப்பனே,  என் குறைகள் யார்க்கு உரைப்பேன்?
ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே

அடுத்த ஜென்மத்தில் முதலியாரின்  சிஷ்யனாக  பிறக்க விருப்பம்.
 

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...