Saturday, January 4, 2020

THIRUK KOLOOR PEN PILLAI



திருக் கோளூர்  பெண்பிள்ளை வார்த்தைகள்        J K   SIVAN  

                          

  37  அவன் உரைக்கப் பெற்றேனோ திருக்கச்சியார் போலே

                                                     
ஏமாற்றம்   துன்பத்தை தருகிறது.   கிடைக்கக்கூடாத ஒரு சந்தர்ப்பம், விதி வசத்தால்  கைக்கு எட்டியது வாய்க் கெட்டவில்லை என்கிற மாதிரி நடந்துவிட்டதே.   சிறந்த வைணவ ஆச்சார்யர் யமுனாச்சாரியாரை தரிசிக்க அவரே  வாய்ப்பு  அருளியபோதும்,  ஸ்ரீரங்கத்தை அடைந்தபோது சில மணிநேரங்களுக்கு முன்பாகவே  துரதிர்ஷ்ட வசமாக  ஆச்சார்யர்  விண்ணுலகெய்திவிட்டார்.  அடுத்தடுத்து நடந்த  சம்பவங்கள் மனதில் திரைக்காட்சியாக ஓடியது.  எல்லாம் முடிந்து,  ராமானுஜர் ஸ்ரீரங்கத்திலிருந்து காஞ்சிபுரத்திற்கு நடந்து வந்து கொண்டிருந்தார்.  ''யமுனாச்சார்யர் பூதவுடல், அவரது விரல்கள் மடங்கி இருந்தது. அவரது மனதில் இருந்த நிறைவேறாத  விருப்பங்கள்,  அதை நிறைவேற்றுபவதாக தான் செய்த சத்தியப்பிரமாணம், திருப்தியடைந்த ஆச்சர்யனின் விரல்கள் மீண்டும் நீண்டது, அவரது அந்திமக்ரியை,   ரங்கநாதன்  ஆலய நிர்வாக கைங்கர்ய தொடர்ச்சி ஏற்பாடுகள்''  எல்லாம் ராமானுஜர்  நடக்கும்போது நினைவில் வந்து   இனி  தான்  செய்ய வேண்டியதை அறிவுறுத்தியது.

காஞ்சிக்கு திரும்பியதும்  நேராக தனது குரு திருக்கச்சி நம்பியிடம் சென்று நிகழ்ந்ததைக் கூறினார்.  திருக்கச்சி நம்பிகள்  பற்றி  ஒரு சில வார்த்தைகள்   இங்கே சொல்லிவிடுகிறேன். 

சென்னை அருகேயுள்ள  பூனமல்லீ என்று நாம் அறியும்  பூவிருந்தவல்லி கிராமத்தில்  1009ம்  ஆண்டு  ஒரு  வணிகர் குலத்தில்  பிறந்தவர்  கஜேந்திர தாசன் என்பவர்.  வாணிபத்தில்  நாட்டமில்லாமல்  காஞ்சிபுரத்துக்கு தினமும் நடந்து வரதராஜப் பெருமாளுக்கு திருவாலவட்ட கைங்கரியம் எனும் விசிறியால் விசிறுகின்ற சேவை செய்வதில் காலத்தை கழித்தவர்.   வயதானதால்  தினமும் காஞ்சிக்கு சென்று   ஆலவட்ட கைங்கர்யம் செய்யா இயலாதபோது வருந்தினார்.  வரதராஜனுக்கு தெரியாதா?  பக்தனை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடுவானா?   

''நீ  கஷ்டப்பட்டுக்கொண்டு என்னை இனிமேல் தினமும் காஞ்சிபுரத்துக்கு வந்து சேவை செய்யவேண்டாமப்பா. நானே  உன் வீட்டுக்கு வருகிறேன்  என்று காட்சி அளித்து அவரது வீட்டிலேயே  விசிறி சேவை ஏற்றுக்கொண்டார்.    அந்த இடம் இப்போது ஒரு வரதராஜபெருமாள் ஆலயமாக  ஒரு புண்ய ஸ்தலமாக   ஆகிவிட்டது. பூவிருந்தவல்லி பஸ் நிலையம் அருகே  திருக்கச்சி நம்பிகளுக்கு  வரதராஜன் காட்சி அளித்து அவரது வீட்டில் குடிகொண்ட இடம் தான் இக்கோவில்.  நான்  ஒரு சில முறைகள் சென்று 
 தரிசித்திருக்கிறேன். நீங்களும் முடிந்தபோது செல்லுங்கள். "தேவராஜ அஷ்டகம்" எனும் வடமொழியில் ஒரு நூலை  இயற்றியவர்  திருக்கச்சிநம்பிகள். ஆவார்.தேவப்பெருமாளுக்கு திருவாலவட்டம் வீசும் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கும்  போது  தேவப்பெருமாள் பெருந்தேவித் தாயார்  தெய்வ தம்பதிகளுடன் பேசும் சக்தி அவருக்கு  உண்டு.  

திருக்கச்சி நம்பிகளையே  குருவாக பின் பற்றி  இனி உய்யலாம் என்று கருதி ராமானுஜர்   அவரை அணுகி  தண்டன் ஸமர்ப்பித்தார்.

'' யமுனாச்சாரியாரின்  விருப்பங்களை நிறைவேற்றுவது எப்படி என்று  சற்று கலக்கமாக இருப்பதால் தங்களை நேரில் வந்து தண்டனை சமர்ப்பித்து வணங்கி  உங்கள் அறிவுரையை நாட மனதில் தோன்றியது''   என்கிறார்  ராமானுஜர். 

“ ஸ்வாமி நீங்கள் சாக்ஷாத்   காஞ்சி ஸ்ரீ வரதராஜனிடம் நேரடியாக உரையாடும் பெருமை வாய்ந்தவராயிற்றே, என் மனத்துள் உள்ள எண்ணங்கள் கிலேசங்கள் சிலவற்றைப் பற்றி எம் பெருமானிடம் கூறி அவரது அறிவுரை பெற்றுத் தர வேண்டும். நான் எப்படி குருநாதரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்று வரதராஜப் பெருமாளின் ஆணையை எனக்கு அருள வேண்டும்” என்று வேண்டிக் கொண்டார் ராமானுஜர். 

'' அப்பனே, உனக்காக நான் கட்டாயம் இன்றே பேரருளாளனிடம் விண்ணப்பஞ் செய்கிறேன்'' என்று வரதராஜனிடம் வேண்டினார் நம்பி.

அன்றே  வரதராஜன் சந்நிதியில் நின்ற  நம்பிகள்  ராமானுஜரின் கடமை உணர்ச்சியை எடுத்துச் சொல்லி   பகவானே  நீயே  வழி காட்டவேண்டும்  என்று சமர்ப்பித்தார்.   வரதராஜனும் பதில் சொன்னார்.
தெய்வம் பேசும்.  எல்லோரிடமும், ஆமாம்  நம்மோடும் பேசும். நாம் கடவுளோடு பேசுகிறோம் என்ற அமைதியான உறுதியான மனம், பக்தி, நம்பிக்கை, பணிவு   வேண்டும்.  நாம்  கடவுள் நம்மோடு பேசுவார் என்று உணர்வதில்லை.  ஆகவேதான்   அவரது மெல்லிய குரல் நமக்கு கேட்பதில்லை.   வரதராஜன் நம்பிகளுக்கு பதிலளித்தான்.

“நம்பி,     ராமானுஜரின்   மனதில்  உள்ள   சுமையை நான்  அறிவேன்.  அவரது  கடமைக்கு  நான் கூறும்  அறிவுரை  வழிமுறை என்ன இன்று இவற்றை  நீ அவரிடம் எடுத்துச் சொல்:

(1) நானே பரம்பொருள் என்று  ராமானுஜன் அறிவான். அதை வலியுறுத்து.,
(2) இறைவன் ஜீவர்களிடத்திலிருந்து வேறு பட்டவன்.
(3) உய்யும்  உபாயமும் ப்ரபத்தி ஒன்றே.
(4) ப்ரபன்னர்களின் இறுதிக் காலத்தில் நானே அவர்களைப் பற்றி நினைப்பதால் அந்திமஸ்ம்ருதி அவசியமன்று.
(5) ப்ரபன்னர்களுக்கு சரீரம் முடியும் போது மோக்ஷம் நிச்சயம்.
(6) பெரிய நம்பியை ஆசார்யராக ஏற்று  ராமானுஜன்  வழிநடந்து  ஆசார்யனின்  உபதேசம் பெறட்டும்.  

நம்பிகளுக்கு  வரதராஜன் கூறியது தெளிவாக புரிந்தது.  நேராக ராமானுஜரை சென்றடைந்தார். 

'' ராமானுஜா ,  நீ   பாக்யசாலி என்பதில்  எள்ளளவும்  எனக்கு ஐயமில்லை.  நீ கேட்டுக்கொண்டபடியே  நான் வரதராஜனிடத்தில் உன் மனதில் உள்ள க்லேசத்தை எடுத்து அவனையே  வழி காட்டும்படி வேண்டினேன்.  ரத்தினச்சுருக்கமாக  வரதராஜனின்  ஆறு வார்த்தைகள்  உன் மனதில்  தெளிவை ஏற்படுத்தி உன்னை மேற்கொண்டு அதன்படி  நடக்க உதவட்டும் என்று மேலே சொன்னதை கூறினார் திருக்கச்சிநம்பிகள். 
அப்புறம் நடந்ததெல்லாம்  சரித்திரம் சொல்கிறது.

திருக்கோளூர்  பெண்மணிக்கு  இதெல்லாம் உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரியும். ஆகவே தான் அவள்  ராமானுஜரிடம்  கேட்கிறாள் ''  சுவாமி  உங்கள் குருவான திருக்கச்சி நம்பிகள் போல் நான்  என்ன வைகுண்டவாசன்  ஸ்ரீ  நாராயணனுடன்   நேருக்கு நேர்  உரையாடும் அருளைப் பெற்றவளா?  நான் எவ்விதத்தில் திருக்  கோளூரில் வாசம் செய்ய தகுதி பெற்றவள்? என்று  கேட்கிறாள்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...