Tuesday, January 14, 2020

ANGER



துர்வாசனாக மாறாதே J K SIVAN கோபப்படாத மனிதன் யாராவது ஒருவன் உண்டா?
''சே நான் அவசரப்பட்டு விட்டேன். உணர்ச்சி வசப்பட்டு கோபால் கிட்டே கத்தி இருக்கக்கூடாது. கோபப்பட்டிருக்க கூடாது.'' பின்னால் இப்படி வருந்து வதால் என்ன பயன்? சிந்தின பால் குடம் ஏறுமா?

''சினம் காக்க, ஆறுவது சினம்'' என்று மூணாம் க்ளாஸ் லே இருந்து படித்தும் புத்திக்கு எட்டவில்லையே. கோபம் ஏன் வருகிறது? அதை எப்படி அடக்குவது? அதை அடக்கி மிஸ்டர் கூல் ஆக இருப்பவன் எவ்வளவு பாக்கியசாலி. கோபம் இல்லாமை எப்படி உடம்பை பாதுகாக்கும். நோய் அணுகாமல் காக்கும் தெரியுமா ?
ஆசை, கோபம், அறியாமை, கர்வம், பொறாமை ஆஹா இதெல்லாம் ஐந்து தலை நாகங்கள்.அதில் கோபம் தலைவன்.
சிடு சிடுவென மூஞ்சி, சிரிப்பே இல்லாத நரசிம்மராவ் முகம், இதெல்லாம் எவரையும் நம்மிடம் வராமல் விரட்டி விடும். நாம் தனித்து விடப்படுவோம். அதுவே தண்டனை. எவனும் நம்மோடு பேசமாட்டான். மனிதன் சமூக மிருகம்.. அவனை கழற்றி விட்டால் உற்சாகம், சக்தி எல்லாம் குன்றிப் போய்விடுவான். தனிமை அவனை கொன்றுவிடும்.

கோபம் தூக்கத்தை கெடுக்கும். உள்ளே கோபம், வெறி இருந்தால் எப்படி எங்கே எவன் தூங்குவான்?-- மூளை மறுநாள் எதிலும் ஆழ்ந்து ஈடுபடாதே . கான்சென்ட்ரேஷன் எனும் கவனம் செய்யும் சக்தியை கோபம் தின்றுவிடும். மனதில் அமைதி இருந்தால் தானே அது எதிலாவது ஈடுபடும்.?

சாப்பாடு சரியாக உள்ளே போகாது. கோபம் பசியை தின்று விடும். இல்லை அளவுக்கு மீறி திங்க வைத்து உபாதையை கொண்டுவரும். சரியாக சிந்திக்க முடியாமல் மேலும் தவறுகள் நிகழும். செய்வன திருந்த செய்ய இயலாது. எதற்கெடுத்தாலும் சிள் புள் என்று விழுவோம், வள்ளென்று கடிப்போம், காரணமில்லாமல் திட்டுவோம். அதனால் நட்பு , சொந்தம் பந்தம் எல்லாமே தூர விலகிவிடும்.

கோபம் நரகத்தில் கொண்டுபோய் தள்ளும் நம்மை என்பது நிச்சயம். நீண்ட வாழ்நாள் சுருங்கிவிடும். ஆகவே யாரிடமும் கோபமே கூடாது.

கோபத்தின் தாய் அஹங்காரம். மண்டை கனம் . இதை சரியான புரிதல் மூலம் வழிக்கு கொண்டுவரலாம். ஆத்திரம், ஏமாற்றம், பொறாமை ஆகியவை கோபத்தை கிளப்பி விடுபவை. எதிர்பார்த்தது நடக்கவில்லை என்றால் ஏமாற்றம் வருகிறது. சுயநலம் இதற்கு முக்கிய காரணம். மற்றவர்களை மதிக்கும் தன்மை, பொறுமை, இருந்தால் இதை தவிர்க்கலாம். எதிலும் திருப்தி அடையும் குணம் வலுப்படவேண்டும். அதிருப்தி சந்தோஷத்தை தொலைத்துவிடுகிறது. அவசரம் எதிலும் வேண்டாம். ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்களே. எது நடக்கவேண்டுமோ அது நடந்தே தீரும். பொறுமையோடு எதையும் எதிர்கொள்ளும் பழக்கம் வரவேண்டும்.

மற்றவன் ஏன் நம்மை கோபித்தான், ஏசினான், குறை கண்டுபிடித்தான்? என்று ஒரு கணம் யோசித்தால், நம்மை பாதித்தது அவனது கோபக்குரலா? சப்தமா? அல்லது அதில் பொதிந்திருந்த உண்மையா? என விளங்கும்.
நம்மை எவனோ ஜப்பான் மொழி, பாபிலோனியன் மொழியில் எகிப்து மொழியில் கேலி செய்தால் நமக்கு தெரியுமா, மொழி தெரியாததால் தானே நம் கோபம் தடைபட்டது. அது போல் தெரிந்த மொழியில் நம்மை பாதிக்கும் சொற்களையும் லக்ஷியம் செய்யாத மனோதிடம் வேண்டும்.

வார்த்தையை விட அதன் உட் பொருள் தான் நம் அமைதியை தீண்டியது. நம்மை நிலைகுலைய செய்தது. தியானம் செய்வது இந்த குறையை போக்கிவிடும்.

மனதில் உறுதி வேண்டும் என்று பாரதியார் பாடிய உறுதி கிடைக்கும். பல்வலி தலை வலி நோவு நம்மை வாட்டும்போது கோபமா வருகிறது? ஆகவே உடல் ரீதியாக கோபம் இல்லை. நம்மை ஒருவன் கொம்பால் பலமாக அடிக்கிறான். அடித்தது கொம்பு தான். ஆனால் அதன் மீது கோபம் நமக்கு இல்லை. அடித்தவன் மேல் தான். அவன் அடிக்கவில்லை, அவன் வீசிய கொம்பு தான் அடித்தது. ஆகவே கோபம் எதனால் உண்டாகிறது என்பதை ஆராயவேண்டும் தவிர கோபித்தவன் மேல் அல்ல. எங்கே நம்முடைய தப்பு நடந்தது. இருக்கிறது. அது தான் மற்றவனின் கோபத்தை நம் மேல் ஏவி விட்டது என்பது புரியும். ''அடப்பாவி உன் கோபத்தால் அனாவசியமாக மற்றவன் மேல் பகை கொண்டு நட்பை இழந்து விட்டாயே'' என்று வருத்தப்பட வைக்கும் .

நாம் தான் பாதிக்கு மேல் மற்றவன் கோபத்துக்கு காரணம். ஒருவன் மேல் கோபப்படுவதால் என்ன பயன். ஏதாவது லாபம் வந்து சேர்கிறது என்றால் ஸரி என்று ஒப்புக்கொள்ளலாம். கோபித்தவன் மேலே சொன்ன நஷ்டத்தை தான் அடைகிறான். கோபம் மற்றவன் கோபத்தையும் பற்றவைத்தால் ரெண்டு பக்கமும் தீ விபத்து தான்.

அகழ்வாரை தாங்கும் நிலம் போலே என்கிறார் வள்ளுவர். ஒருவன் மண்ணின் மேல் நின்றுகொண்டே மண்ணை ஆழமாக தோண்டுகிறான் . மண் எந்த கோபமும் படவில்லை. தன்னை தோண்டி துன்புறுத்திய வனையும் தாங்கிக் கொண்டு தான் நிற்கிறது. மரமும் அப்படித்தான். தன்னை வெட்டுபவனுக்கும் நிழல் கொடுக்கிறது. எங்கும் ஓடவில்லை. தன்னை முழுமையாக எதிர்ப்பில்லாமல் வெட்ட கொடுக்கிறது

உன்னை வார்த்தையால், செயலால் கோபிப்பவன் மேல் நமது கோபம் வேண்டாம். மறப்போம். மன்னிப்போம்.
நல்ல காரியங்கள் செய்யும்போது கூட அவை தக்க பலனை தராத காரணம். சரியான தக்க நேரம் இல்லாததால். பொருத்தமான நேரத்தில் தகுந்த செயலை, வார்த்தையை உபயோ கித்தால் நல்ல பலன் தரும். எத்தனை முறை நாம் பொறுமை காத்திருக் கிறோம்?? எண்ணிப்பாருங்கள். எவ்வளவு பொறுமை இன்மை நம்மிடம் உள்ளது என்று புரியும்.

எதிலும் பாசிட்டிவாக நோக்கம் வேண்டும். பிறர் வார்த்தைகள் நமது நன்மைக்காக தான் சொல்லப்பட்டது என்ற மதிப்பு அவர்களிடம் இருக்க வேண்டும். கோபம் வராது. எல்லாம் நமது கர்மவினைப்பயனால் தான் ஏற்படுகிறது என்று எண்ணும் போது பிறர் மேல் கோபம் வராது. மனது அமைதியுறும்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...