Thursday, January 9, 2020

NATARAJA PATHTHU




நடராஜ பத்து -     J.K. SIVAN

                                   4 .  ஈசனேசிவகாமி நேசனே

வம்பு சூனியமல்ல வைப்பல்ல மாரணம் தம்பனம் வசியமல்ல
பாதாள அஞ்சனம் பரகாய பிரவேசம் அதுவல்ல ஜாலமல்ல
அம்பு குண்டுகள் விலக மொழியு மந்திரமல்ல ஆகாய குளிகையல்ல
அன்போடு செய்கின்ற வாதமோடிகளல்ல அரிய மோகனமுமல்ல
கும்பமுனி மச்சமுனி சட்டமுனி பிரமரிஷி கொங்கணர் புலிப்பாணியும்
கோரக்கர் வள்ளுவர் போகமுனி இவரெலாம் கூறிடும் வைத்தியமல்ல
என்மனது உன்னடி விட்டு விலகாது நிலைநிற்கவே உளது கூறவருவாய்
ஈசனேசிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

''இதோ பார்  என் அப்பனே, என் உள்ளங் கவர் கள்வன் சிவபெருமானே, நான் உன்னை அடைய என்ன வழி? என் மனதை அங்கே இங்கே போகாமல் உன் திருவடி ஒன்றின் மீதே நிலைத்திருக்கச் செய்ய என்ன உபாயம்? அதை எனக்கு சொல்கிறாயா சுப்பனுக்கு அப்பனே?

முன்னாடியே ஒன்று சொல்லிவிடுகிறேன். எனக்கு எது பிடிக்கும் பிடிக்காது என்று உனக்கு தெரிய வேண்டாமா?.

எனக்கு இந்த வம்பு வாடிக்கை விவகாரங்கள், சூனியம் வைப்பது, ஏவல், பில்லி, மாயம் மந்திரம் வசியம், மை வித்தைகள், கூடு விட்டு கூடு பாயும் தந்திரம், ஜாலம், மோடி மஸ்தான் வேலைகள் எதிலும் விருப்பமோ, ஈடுபாடோ, ஆர்வமோ, ஏன் நம்பிக்கை கூட அவ்வளவாக கிடையாது. இந்த மாய ஜால வித்தைக்கார்களின், மந்திரவாதிகளின் மாத்திரை, குளிகை, மருந்து மாயமும் எனக்கு அவசியமே இல்லை.

சகல நோயும் வராமல் காக்கும் நீ, வைத்யநாதன் இருக்கும் போது எனக்கு எந்த நோய்க்கும் எவர் மருந்தும் வேண்டாம்.

பதினெட்டு சித்தர்கள் சொன்ன ரகசிய வழிகள் தேவை அல்ல, அதெல்லாம் என்னைப்போல ரொம்ப சாதாரணனுக்கு எதற்கு? வேண்டாமப்பா. எந்த வைத்தியமும் எவரிடமிருந்தும் எனக்கு தேவையே இல்லை. நான் அதை தேடவில்லை. ஒன்றே ஒன்று மட்டும்..... அதைத் தானே மேலே கேட்டிருக்கிறேன்.

'' என்  ஆனந்த நடேசா, ஒரு ரகசியத்தை எனக்கு  நீ  விளக்குகிறாயா? நான் என்றும் அனவரதமும் உன்னை விடாது நினைந்து உன் திருவடி ஒன்றின் மேலேயே என் மனம் நிலைத்து இருக்க அருள்புரியவேண்டும். அதற்கு ஈடு இணை எதுவுமே இல்லை.

எப்படி அப்பா ஒரே நேர் கோட்டில் நீ காலஹஸ்தீஸ்வரனாக, மஹா காளேஸ்வரனாக, ஏகாம்பரேஸ்வரனாக, சிதம்பரேசனாக, ராமேஸ்வரனாக, கேதார நாதனாக, ஜம்புகேஸ்வரனாக, அண்ணாமலையானாக கோயில் கொண்டு இருக்கிறாய்?. யாரோ பார்த்து அளந்து நீ இந்த எட்டு இடத்திலும் சர்வ சக்திமானாக ஒரே நேர் கோட்டில் கோவில் கொண்டு அமைந்திருப்பதை படம் போட்டு காட்டி இருக்கிறார்களே? என்னென்னவோ ஆச்சர்யங்கள் புரிபடாமல் இருக்கிறதே. ஆச்சரியத்தில் பிளந்த வாய் எப்பது மூடுவேன் என்பதே தெரிய வில்லையே.

ஏதோ ஒரு கணக்கு நீ வைத்திருக்கிறாய் அய்யனே. இல்லாவிட்டால் எட்டு கோவில்கள் எப்படி ஒரே நேர்கோட்டில் இந்தியாவில் அமைந்திருக்க   முடியும். அதுவும் வெவ்வேறு கால கட்டத்தில்.
இதைக் கூறாமல் நீ பேசாதிருப்பது நன்றா? நீயே சொல்,

நீ கும்பகோணம் அருகில்  கோனேரிராஜபுரம் உமாமகேஸ்வரன் ஆலயத்தில் நடராஜனாக இருக்கும் அழகைப் பார்த்து வியந்தேன். கூடவே ஒரு கொசுறு செய்தியும் கிடைத்து புல்லரிக்க  வைத்தது. அதை விபரமாக தனியாக எழுதுகிறேன்.

No comments:

Post a Comment

GHANTASALA SONG

 கண்டசாலா  விருந்து  ஒன்று.  #நங்கநல்லூர்_J_K_SIVAN   ''தண்ணொளி வெண்ணிலவோ''   என்ற  அருமையான   கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ் கணீ...